Wednesday, November 27, 2013

சூரிய ஒளி மின்சாரம் - அப்டேட்

என் முந்தைய பதிவுக்கு இன்று வந்திருந்த ஒரு பின்னூட்டம் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

ஜூன் 2013-ல் சூரிய ஒளி மின்சார அமைப்பை என் வீட்டில் நிறுவினேன். இன்றுவரை பிரச்னை ஏதும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நடுவில் ஒருமுறை என் மகள் பல்ப்-வயர்-ஸ்விட்ச் மின் சர்க்யூட் ஒன்றை உருவாக்கி அதனை நேராக பிளக்கினுள் நுழைக்க, மொத்த மின் இணைப்பும் ட்ரிப் ஆகிப்போனது. அப்போது நான் விட்டில் இல்லை. ஏதோ பள்ளிக்கூடப் பரிசோதனையாம். யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் ரிஸ்க்கான ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறாள். அதன்பின், என் வீட்டில் சூரிய ஒளி மின் அமைப்பை நிறிவிய S & S Flow Engineering பொறியாளரைத் தொடர்புகொண்டு என் மனைவியே எந்தெந்த இடங்களில் இருக்கும் ட்ரிப்பரைச் சரி செய்வது என்று கேட்டு, சரி செய்துவிட்டார். மூன்று இடங்களில் ட்ரிப்பர் போட்டிருந்திருக்கின்றனர். அனைத்துமே ட்ரிப் ஆகியிருந்தன.

இதுவரை இரண்டு முழுக் கட்டணமும் ஓர் அரைக் கட்டணமும் கட்டியிருக்கிறேன். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை சுமார் ரூ. 8,000-9,000 சேமிப்பு வந்துள்ளது என்று கணிக்கிறேன். ஓர் ஆண்டு முழுதும் பயன்படுத்தினால்தான் சரியாகத் தெரியவரும். இதுவரை ஒரே ஒருமுறை சோலார் பேனல்களைச் சுத்தம் செய்திருக்கிறோம்.

ஒரு கிலோவாட் சூரிய மின் அமைப்பு என் முழுத் தேவைக்குப் போதாது. தெரிந்துதான், சோதனை அமைப்பாக இது போதும் என்று நிறுவியிருந்தேன். சில நாள்கள் வானம் வேகமூட்டமாக இருக்கும்போது குறைந்த அளவு ஃபோட்டான்கள் மட்டுமே பூமியை அடைவதால் மின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். அப்போது மெயின்ஸிலிருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். பேட்டரியில் மின்சாரத்தைச் சேமிப்பது என்பதே திறன் குறைவானது. உற்பத்தியாகும் ஒவ்வொரு சொட்டு மின்சாரமும் பயனாவதில்லை. வேஸ்டேஜ் இருக்கிறது. நான்கைந்து நாட்கள் நாம் வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பினால் அந்த நாள்களில் உற்பத்தியாகும் மின்சாரமெல்லாம் வீண்தான். சில நாட்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும். அன்று நாம் குறைவாகப் பயன்படுத்துவோம். மறுநாள் வானம் மேகமூட்டமாக இருக்கும். அன்றுதான் எல்லா அறைகளிலும் லைட், ஃபேன், டிவி என்று ஓடிக்கொண்டிருக்கும். ஔவையாரின் ‘இடும்பைகூர் என் வயிறே’ என்ற பாடலைத்தான் மேற்கோள் காட்டவேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, தன்னிறைவு என்ற நிலை இருப்பதால் திருப்தியாக இருக்கிறது.

இப்போது சென்னை தாண்டிய தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை இருப்பதாக அறிகிறேன். மத்திய அரசு ஏதோ தகிடுதத்தம் செய்கிறது என்பதுபோல் தமிழக முதல்வர் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். உண்மை அதுவல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாம் தயாரிப்பதில்லை. வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே நம் மாநிலத்தைக் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. யாராலெல்லாம் 1.5 லட்ச ரூபாயை முதலீடு செய்ய முடியுமோ அவர்கள் எல்லாம் தத்தம் வீட்டுக்கு ஒரு கிலோவாட் சூரிய மின் அமைப்பைப் பொருத்திக்கொள்வதுதான் ஒரே வழி. கடைசியாக ஒரு நிறுவனத்திடம் பேசியபோது 1.2 லட்சத்தில் செய்துவிடலாம் என்றார்கள். எனக்கு 1.7 லட்சம் ஆனது (மானியம் இல்லாமல்).

அரசின் மானியம் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். (நானாவது இதைச் சொல்லவேண்டுமல்லவா?) நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாம், நமக்காக மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான். பொதுப் பிரச்னைகளுக்குத் தனித் தீர்வுகளை உருவாக்கிக்கொள்வதில் நாம் வல்லவர்கள். அதையே மின் உற்பத்திக்கும் நீட்டித்துக்கொள்வோம். சென்னையைவிட வெளி இடங்களில் இதனை வசதியாகச் செய்யலாம். ஏனெனில் சென்னையில் அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் அவரவர்க்குத் தேவையான கூரை கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் பிற நகரங்களில் தனி வீட்டில் வசிக்கும், கையில் காசு உள்ள மக்கள் இதனைச் செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தாத ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் எங்கோ ஒரு தொழிற்சாலைக்குப் போய்ச் சேரும். டீசல் ஜென்செட் மின்சாரத்தைவிட சூரிய ஒளி மின்சாரம் செலவு குறைந்தது, பொல்யூஷன் (பெரும்பாலும்) அற்றது.

இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு எழுதவும். பதில் சொல்கிறேன்.

12 comments:

  1. # பொல்யூஷன் (பெரும்பாலும்) அற்றது # என்று உடனே கூறிவிடமுடியாது. காரணம் அதில் உபயோகப்படுத்தும் பேட்டரி. ஒருவேளை Ongird -ஆக இருந்தால் பாதிப்பு இல்லை. இன்றைய தேதியில் எலக்ட்ரானிக் வேஸ்ட்டை என்னசெய்வது என்று தெரியாமல் உள்ளனர். மறுசுழற்சி செய்தாலும் அது இந்த உலகை மாசுபடுத்துகிறது. அதுபோல அளவுக்கு அதிகமான பேட்டரி புழக்கம் வந்தால் அது இன்னும் ஒரு பெரிய சவாலாக உருவெடுக்கும்.

    லாலு கொண்டு வந்தது போல் மண்குடுவையில் தேனீர் பருக வேண்டும் சட்டம். ஓர் உதாரணம். பாலிதீன் கவர் இரண்டாயிரம் வருடமானாலும் மட்காது. சுட்ட மண் 5ஆயிரம் வருடமானுலும் சிதையாது. பேட்டரியில் இருக்கும் சல்பர் ஆசிட் மண்ணின் தன்மையையும், நீரின் தன்மையையும் மாற்றிவிடும். ஆசிட் மழை என்பது சாதாரண நிகழ்வாகிவிடும்.

    இன்னும் அதிகபட்சமாக இரண்டு வருடங்களுக்குள் நீங்கள் சோலாரில் பொருத்தியிருக்கும் பேட்டரி வாழ்நாளை இழந்துவிடும். இப்போது உங்களுக்கு மிச்சமான பணத்தை போல் மூன்று மடங்கு பணத்தை மாற்று பேட்டரி விழுங்கிவிடும்.

    இன்னொன்று அரசு மானியத்தில் வாங்கினால் மட்டமான 100வாட்ஸ் பேனல் 20,000 ரூபாய்.
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வெளிமார்க்கெட்டில் வாங்கினால் தரமாக 100வாட்ஸ் பேனல் 11,000 ரூபாய். உங்களுக்கு கிடைப்பதோ மானியத்தை விட சலுகை.

    ஜப்பானில் உள்ளது போல் சோலார் முறையை Ongird - ஐ பொது பகிர்மான முறையில் அமைத்தால் சிறப்பாக இருக்கும். சுற்றுசூழல் பாதிப்பில்லை. ஒரே குறை சூரிய வெளிச்சம் இல்லையென்றால் மின்சாரம் இல்லை. அக்குறையை போக்க ongrid-ல் பல நகரங்களை இணைக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் பொதுவினியோக முறை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான். மான்யம் என்பது ஏமாற்று வேலைதான். சோலாரில் பயன்படுத்தப்படும் பேட்டரி ஐந்து ஆண்டுக்கும் மேல் வரும் என்கிறார்களே உண்மை இல்லையா...?

      Delete
    2. பேட்டரியில் இருப்பது நீர்த்த கந்தக அமிலமும் காரீயமும்தான். இவை மறுசுழற்சி செய்யத்தக்கவை. இவற்றால் சூழியல் கேடு ஏதுமில்லை.

      Delete
    3. முற்றிலும் சார்ஜ் ஆன 150 AH மின்கலமானது 3 பேன் 4 ட்யுப் (40 A கரண்டு எடுக்கும் வேளையில்) போடும்போது 3.5 மணி நேரம் (210 நிமிடம்) வரவேண்டும். ஆனால் மின்கலம் வழங்கும் கம்பெனி ப்ரவுச்சரில் 2 மணி நேரம் வருவதாகத்தான் போட்டிருப்பார்கள். இன்று மார்க்கெட்டில் இருக்கும் எந்த இன்வெர்ட்டரும் மின்கலத்தை முழுதாக சார்ஜ் பண்ண தகுதி வாய்ந்தது இல்லை. மின்கலத்தை பென்ச் சார்ஜ் என்று கடையில் வைத்து சார்ஜ் செய்த பிறகு மேல் குறிப்பிட்ட லோடை கொடுத்து பாருங்கள். சரியாக 3.5 மணி நேரம் வரும். அதுவே உங்கள் வீட்டில் இன்வெர்ட்டரை உபயோகப்படுத்தாமல் 5 நாட்கள் அதை சார்ஜ் பண்ணிய பிறகும் போட்டு போருங்கள் அதிக பட்சம் 2 -2.25 மணிநேரம்தான் (140 நிமிடம்) வரும். இதற்கு காரணம் இன்று வரும் பேட்டரியில் உபயோகப்படுத்தப்படும் பிளேட்கள் அதிக கனமாக பிளேட்கள். இவைகை சார்ஜ் செய்ய 16 வோல்ட் வரை தேவைப்படும். மார்க்கெட்டில் உள்ள அனைத்து இன்வெர்டர்களும் அதிகபட்சமாக 14 வோல்ட் வரை சார்ஜ் பண்ணும். ஆகவே இந்த இன்வெர்ட்டர்கள் ஒரு நாளும் பேட்டரியை தனது முழு கொள்ளவிற்கு சார்ஜ் செய்வதில்லை. 16 ஆயிரம் கொடுத்து பேட்டரி வாங்கினாலும் மேல் கூறிய காரணங்களுக்காக உங்களுக்கு கிடைக்க போகும் மின்கல கொள்ளளவு மதிப்பு வெறும் 10 ஆயிரம்தான். மேலும் ஐந்து வருடங்கள் என்பது வாங்கியவுடன் உங்களுக்கு 2 மணி நேரம் பேக்கப் தரும் பேட்டரி ஐந்தாவது வருடத்தில் 45 நிமிடங்கள் கூட பேக்கப் தராது.

      Delete
  2. கடைசியாக ஒரு நிறுவனத்திடம் பேசியபோது 1.2 லட்சத்தில் செய்துவிடலாம் என்றார்கள்...
    entha niruvanam sir?..

    ReplyDelete
    Replies
    1. 1.7 லட்சம் ஒரு கிலோவாட்டுக்கு என்பது சரியான விலை. இன்றைய விலையில் இதற்குக் கீழே செய்ய முயன்றால் நிச்சயம் செயல்பாட்டில் குறை இருக்கும். நா இந்த சேவையை செய்துகொண்டிருக்கிறேன். 1.7 என்பதே குறைந்தபட்ச விலைதான்.

      Delete
  3. //ஆனால் இதையெல்லாம் தாண்டி, தன்னிறைவு என்ற நிலை இருப்பதால் திருப்தியாக இருக்கிறது.// மேல் உள்ள வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கிறேன். பாராட்டுக்கள். தாங்கள் சோலார் பவர் வைத்து முழு நான்கு மாதங்கள் கழிந்துள்ளதாக வைத்துகொண்டால், தங்கள் முதலீடான 1.70 இலட்சத்திற்கு நான்கு மாத வங்கி வட்டி ரூ.5000. உபயோகடுத்தப்பட்டுள்ள பேட்டரி நான்கின் தேய்மானம் (ஒரு பேட்டரி நான்கு வருடங்கள் உழைக்கும் என்ற கணக்கில்) ரூ.3000. ஆக ஒட்டு மொத்தமாக இன்று வரை ஒரு இலாபமும் இல்லை. ஒரே ஒரு திருப்தி மின்சாரத்தை தாங்கள் உற்பத்தி செய்து மாநிலத்தின் ஒட்டு மொத்த மின்சாரத்தின் தேவையின் ஒரு பகுதியை குறைக்க உங்களது பங்கு அளிப்பை செய்கிறீர்கள் என்பதுதான். அதுதான் உங்கள் குறிக்கோள் என்று ஏற்கனவே நீங்கள் கூறிவிட்டதால் மேற்கூறிய கணக்குகள் அடிபட்டு போய்விடுகின்றன.


    வீணாக செலவழிக்கும் மின்சாரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலயே தமிழகத்தில் பல மெகா வாட் மின்சாரத்தை மிச்ச படுத்தலாம். எனது யோசனைகள். (எப்போது ஒரு பொருளுக்கு சந்தையில் விலை அதிகமாக இருக்கும்போது அதன் உபயோகம் குறைவாகத்தான் இருக்கும்).

    1)வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 500 யுனிட் வரை தற்போதை விலையில் மின்சாரம். அதை தாண்டும்போது அனைத்து யுனிட்டிற்கு பிளாட் ரேட் ரூ.8
    2)மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தெரு எரியும் மொத்த தெரு விளக்குகளின் மின்சார உபயோகத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டு வரியுடன் மின்விளக்கு வரி (இவ்வாறு வசு+லிக்கப்படும் பணம் மின்;வாரியத்திற்கு அந்த நகராட்சியால் செலுத்தப்படவேண்டும்) அல்லது ஒரு நகர் இருந்தால் அங்கு இருக்கும் தெரு விளக்குகளின் உபயோகத்தை அந்;த நகரில் உள்ள அனைத்து வீடுகளின் மின் கணக்கில் சேர்க்கவேண்டும்.
    3)கமர்சியியல் காம்ப்ளக்ஸ் போன்றவைகளுக்கு சதுர அடியின் பேரில் மின்சாரத் தேவையை நிர்ணயம் செய்து அதற்கு மேல் செலவழிக்கும் ஒவ்வொரு யுனிட்டிற்கும் ரூ.15.
    4)விவசாய நிலத்தின் தண்ணீரின் தேவையானது சொட்டு நீர் பாசனத்தின் அடிப்படைக்கேற்ப (நெல் போன்ற விவசாய நிலத்தை தவிர்த்து) மின்சார அளவை நிர்ணயத்து அதற்கு மேல் உபயோகபடுத்தும் மின்சாரத்திற்கு குறைந்த பட்சமாக ஒரு யுனிட்டிற்கு ரூ.3 (பல இடங்களில் இலவச மின்சாரம் என்பதால் தொடர்ந்து மின்மோட்டார்கள் தேவைக்கு அதிகமாக இயங்கி வருகின்றது).
    5)இலவச மின்சாரம் இலக்கு நிர்ணயக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே வழங்கப்படவேண்டும்.
    6)மின்மீட்டர் இல்லாமல் யவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படக்கூடாது.
    7)நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சோடியம் விளக்குகள் தேவைப்படும் இடத்தில் 25அடி உயரம் கொண்டு சென்று அங்கு அமைக்கவேண்டும். எங்களது ஊரில் உள்ள சோடியம் விளக்குகள் 15 அடி உயரத்தில் அமைக்கபட்டிருப்பதால்; அதன் வெளிச்சம் ஸ்பாட் ஆக விழுந்து யாருக்கும் பயன்படாமல் போகிறது.
    8)மருத்துவமனை போன்றவைகளுக்கு தனி பீடர் லைன் கொடுத்து அனைத்து நேரத்திலும் மின்சாரம்.
    9)விவிளம்பர போர்டுகளுக்கு கமர்சியல்; கட்டணத்தைவிட இரண்டு மடங்கு விலையில் மின்சாரம் கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும்.
    10)இந்த அளவிற்கு மின் கட்டணம் இருந்தால் அரசு தாரளமாக வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யமுடியும். மேலும் பல தனியார் நிறுவனங்கள் மின்சார தாயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவார்கள். .
    11)ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் சோலார் பார்க் அமைத்து மின்சார வினியோகம்.
    12)இவ்வாறு கிடைக்க ஆரம்பிக்கும் நிதியிலிருந்து மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மின்திட்டங்கள் மற்றும் தனியாருடன் சேர்ந்து மின்திட்டங்கள்.

    மின்சாரத்தின் விலை அதிகமானலேயே 500 யுனிட்களுக்கு மேல் செலவு செய்கிறவர்கள் சோலார் மின்சாரத்திற்கு மாற ஆரம்பிப்பார்கள்.

    ஒரு மினி பெட்ரோல் ஜெனரேட்டர் கொண்டு மின்சாரம் தயாரிப்பதைவிட, தமிழக அரசு யுனிட் ரூ.10 என்று தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினால அதுவே குறைந்த விலையாக அமையும்.

    ReplyDelete
  4. En "Manaiviyehhhhhh" .... seri seidhu vittaalll...


    Paaliyal Balaadhkaaaram!!!

    ReplyDelete
  5. சூரிய மின்சாரம் மூலம் பய்ன் பெற முதலீடு அதிகம் தேவை என்பதை தங்கள் கட்டுரை தெளிவு படுத்துகிறது. அந்த அளவில் பணம் படைத்தவர்களால் தான் சூரிய மின்சாரத்துக்கு மாற முடியும்.
    தவிர, மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது அரசின் கடமையாகும். அரசினால் முடியாவிட்டால் தனியாரிடம் விடலாம்.
    மின் உற்பத்தி செய்வதில் கூட தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று ம்த்திய அரசு நீண்டகாலம் பிடிவாதமாக இருந்து இப்போது அனுமதிக்கிறது.
    பெரிய நிறுவனங்கள், பாக்டரிகள் ஆகியவற்றின் கட்டடங்களின் கூரை மீது சோலார் பேனல்களை அமைத்து அவை சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடுமே ஆனால் மின் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் யூனிட்க்கு எவ்வளவு செலவு என்ற் பார்த்தால் மின் வாரியத்திடமிருந்து வாங்க்வதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
    ஆகவே பெரிய நிறுவனங்கள் மின் வாரியத்துடன் போட்டுள்ள ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மின் வாரியத்திடமிருந்தே மின்சாரத்தைப் பெறுகின்றன. அவை சூரிய மின்சாரத்தின் பக்கம் வர மாட்டார்கள்
    சூரிய மின்சாரம் என்பது நீயே பாத்துக்கோ என்று அரசு அல்லது மின் வாரியம் கைகழுவி விடுகிற சமாச்சாரமே.
    தவிர, இந்தியாவில் -- தமிழகத்தில் மக்கள் அடர்த்தி அதிகம என்பதால் திறந்த்வெளி குறைவு. அமெரிக்கா போல பெரிய அளவில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு குறைவு.
    இதெல்லாம் ஒரு புறம் இருக்க நம்மால் ஆனதைச் செய்வோம் என்ற தங்களது மனப்பான்மையைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  6. இந்தவகை சூரியமின்சாரத்தால் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு தோராயமாக 11 - 12 ரூபாய் வரும். அரசு மின்சாரத்தைத்தவிர வேறு எந்தவகை மின்சாரத் தயாரிப்பையும் விடவும் இது மிகக் குறைவானது. டீசல் மூலம் தயாரித்தால் எரிபொருள் செலவே யூனிட்டுக்கு ரூபாய் 15க்கு மேலாகும்.

    ReplyDelete
  7. It is sad to see these comments about the solar energy generation and subsidy given by the government, it is true that there are few cases of misuse of subsidy, but we can't blame the entire solar developers.

    More over, the awareness level among the public about solar is poor, there is a wide spread misconception about the solar technology itself. I dont know How many of you know about the Tamilnadu Government's new solar scheme in the name of Chief Minister's Solar Roof top Scheme. Under this scheme, capital subsidy of 30% from MNRE and 20000 from the state government will be given to the persons who install solar roof top in their places, for more details and apply online, please see this link.

    http://www.teda.in/site/index/id/7740044757

    This is a unique system without battery and the excess energy generated will be exported to the grid, a net meter will be fixed in the place of solar generation and you can export up to 90% of your usage in a particular billing cycle. A government order has been published by the TNERC for the net metering guidelines, you can find this in the following link

    http://tnerc.tn.nic.in/Other%20Orders/2013/Order%20No.3%20of%202013%20dated%2013-11-2013.pdf

    In battery less/grid tied systems, the pay back or ROI is five years for the commercial sector in the prevailing tariff. it may be just a couple of years more in the case of domestic usage. There are more advantages and a few disadvantages in the grid tied systems. I will post it in due course.

    Thanks

    ReplyDelete
  8. It has been an year from your original post. How did it fare the change in weather? Just curious before I jumped two feet in...

    ReplyDelete