Wednesday, November 06, 2013

ஏன் தேசங்கள் தோற்கின்றன?

அமெரிக்கா 2008-ல் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. நிதி நிறுவனங்கள் வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன. சில நிறுவனங்கள் திவாலாயின. சில நிறுவனங்கள் இணையவேண்டி வந்தன. கிட்டத்தட்ட அனைத்து நிதி நிறுவனங்களுமே அரசிடம் சென்று பிச்சை கேட்டன. பங்குச்சந்தைகள் சரிந்தன. இனி இத்துடன் அமெரிக்காவின் சரிவு ஆரம்பம் என்றே பலரும் நினைத்தனர்.

ஆனால் அதே ஆண்டுதான் அமெரிக்கா மீண்டும் உயரக்கூடிய அளவு ஒரு தொழில்நுட்ப மாற்றம் நிகழத் தொடங்கியது.

பூமிக்கு அடியில் பெட்ரோலியம் இருப்பதுபோல எரிவாயுவும் உள்ளது. இதில் ஒருவகை, ‘ஷேல் கேஸ்’ எனப்படும் படிவப்பாறை எரிவாயு. மண்ணுக்கு அடியில் உள்ள, படல் படலாகப் பிய்யக்கூடிய ஷேல் எனப்படும் படிவப் பாறைக்கு மேலாக எரிவாயுச் சேகரிப்பு பல இடங்களில் உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் பெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலைச் செலுத்தி 2008-லிருந்தே இந்த எரிவாயுவை லாபகரமான முறையில் வெளியே எடுக்கத் தொடங்கின. நீரைப் பாய்ச்சி எரிவாயுவை வெளியே எடுக்கும் இந்தத் தொழில்நுட்பம் இன்றைய தேதியில் அமெரிக்காவிடம்தான் வலுவாக உள்ளது.

இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றம் நிகழ ஆரம்பித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்துவந்த அமெரிக்கா இப்போது ஷேல் எரிவாயு ஏராளமாகக் கிடைப்பதால் இப்பொருள்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா எங்கும் தொழிற்சாலைகள் அதிகமாக ஆகும் வாய்ப்புகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதனால் நிறையச் சம்பளம் தரக்கூடிய வேலைகள் அமெரிக்காவில் அதிகமாகும் என்று கணிக்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்முனைதலை ஊக்குவிக்கும் அரசு, லாபகரமான தொழில்களை நோக்கிக் குவியும் பணம் ஆகியவை காரணமாக, ஒரு நாட்டின் தலையெழுத்தே மாறப்போகிறது.

***

இந்தியாவிலும், குஜராத்தின் காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி, காவேரி, தாமோதர் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்த ஷேல் எரிவாயு பெருமளவு இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

சொந்தக் காலில் நின்று இந்த எரிவாயுவை எடுத்து நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் திறன் ஓ.என்.ஜி.சி, கெயில் போன்ற இந்திய அரசு நிறுவனங்களுக்குக் கிடையாது. அவை வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. மறுபக்கம் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக எரிவாயுவுக்கு அரசு அதிக விலை கொடுக்கத் தீர்மானித்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். இதில் உண்மையும் உள்ளது.

ஆக, எரிவாயு வெளியே வருவதற்குபதில் சர்ச்சைகள்தான் பற்றி எரிகின்றன.

இந்த எரிவாயுவால் இந்தியப் பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நாம் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்துகொண்டிருப்போம். கச்சா எண்ணெய் பேரல் என்ன விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்ன என்று பார்த்துக்கொண்டே இருப்போம். இரண்டு மூன்று நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை இரண்டொரு ரூபாய் ஏறிக்கொண்டே இருக்கும். என்றாவது ஒருநாள் ஒரு ரூபாய் குறையும். பிறகு மூன்று ரூபாய் அதிகரிக்கும்!

ஒரு வாயு. இரு நாடுகள். இரு வேறு பாதைகள்.

***

இதற்குக் காரணம் என்ன? இந்தியாவும் குடியாட்சி முறையைக் கொண்ட நாடு; அமெரிக்காவும் அப்படிப்பட்டது. இரு நாடுகளும் முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள். இந்தியா அவ்வப்போது சோஷலிசம் என்று பேசினாலும் இப்போதைக்கு அடிப்படையில் முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் ஒரு நாடுதான்.

காரணம், இந்தியப் பொருளாதார அமைப்புகளிலும் இந்திய அரசியல் அமைப்புகளிலும் உள்ள குறைபாடுகளே.

(அ) பெரும் வருமானத்துக்கான வாய்ப்பு உள்ளது என்றால் அமெரிக்க வென்ச்சர் முதலீடுகள் படுவேகமாக அங்கே பாயும். மக்களிடம் உள்ள படைப்புத் திறன் பெருமளவு ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தயாராகப் பல பொறியாளர்கள் முன்வருவார்கள். அவர்களுக்குத் தேவையான ஊக்கமும் முதலீடும் உடனே கிடைக்கும். தோல்வி அடைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றாலும் வெற்றி பெற 1% வாய்ப்பாவது இருக்கிறதே என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் களத்தில் இறங்குவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து இதனைப் பார்த்துக்கொண்டிருக்கும். பெரும் ஏகபோகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுமட்டும்தான் அதன் வேலை.

(ஆ) இந்தியா போலல்லாது, தன் நிலத்தின்கீழ் என்ன கிடைத்தாலும் அது அந்த நில உரிமையாளருக்குச் சொந்தம் என்பதுதான் அமெரிக்காவின் சட்டம். எனவே தனியார் நிறுவனங்கள், தனி நில உடைமையாளர்களிடம் நியாயமான சந்தைப் பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்குவார்கள். நிறைய ஸ்பெகுலேஷன் இருக்கும். சிலருக்கு அதிக லாபம், சிலருக்குக் குறைந்த லாபம். நல்ல விலை கிடைத்தால் நிலத்தை விற்கப் பலரும் தயாராக இருப்பார்கள்.

(இ) ஆனால் இந்தியாவில் நிலத்துக்கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் ஓர் அரசுக்கு மட்டுமே சொந்தம். உங்கள் வீட்டின் அடியில் வைரம் கிடைக்கிறது என்று தெரிந்தால் இந்திய அரசு உங்களைத் துரத்திவிட்டு (ஏதோ கொஞ்சம் பணம் கொடுப்பார்கள் - அதுவும் சந்தை மதிப்பல்ல) உங்கள் வீட்டை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொள்ளும். உங்களிடம் கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான விலை, லாபம் ஆகியவை பொதுவாகக் கிடைக்காது. உங்கள் நிலத்தை வாங்க முனையும் தனியார் நிறுவனங்கள் அரசு வழியாக அதனை அடைவதுதான் எளிது என்பதைப் புரிந்துகொண்டு, லஞ்சம், லாபியிங் ஆகிய வழிகளில் அதனைச் சாதித்துக்கொள்ள முனைவார்கள்.

(ஈ) நிலம் கையகப்படுத்துதலிலிருந்தே பிரச்னை. இதற்குமேல் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முதலீடு, லாபம் கிடைக்குமா என்று தெரியாததால் ஏற்படும் ரிஸ்க் என்று அனைத்தையும் பார்க்கும்போது பெரும்பாலான நிதி நிறுவனங்கள் தரையைத் தோண்டும் வேலைகளில் ஈடுபட மறுப்பார்கள்.  சிறு தொழில்முனைவோரால் இந்தத் துறையில் ஈடுபடவே முடியாது. அதைமீறி ஈடுபடுவோர், அரசியல்வாதிகளுடன் பிரத்யேகத் தொடர்பு வைத்திருக்கும் பெருமுதலாளிகளாக மட்டுமே இருப்பார்கள். நாளை அரசியல் பிரச்னை ஏற்பட்டால் அதனை எவ்வாறு சரிக்கட்ட முடியுமோ அப்படி சரிக்கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். (கரி அகழ்தல் விவகாரத்தையும் கார்னெட் மணல் அள்ளுதல் விவகாரத்தையும் கவனியுங்கள்.) இது நல்ல லாபகரமான விஷயமாக இருப்பதால், இந்திய அரசியல்வாதிகளுக்கும் இதை இப்படியே நீட்டிப்பதுதான் நல்லது என்று தோன்றும். எனவே சீர்திருத்தமே நிகழவே நிகழாது.

இதனால்தான் அமெரிக்காவில் எண்ணற்ற குட்டி குட்டி நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் ஷேல் வாயு ஃப்ராக்கிங்கில் வெற்றிகரமாக ஈடுபடும்போது இந்தியாவில் ஒரேயொரு ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி விஷயத்தைப் பிரச்னையாக்கிக்கொண்டிருக்கிறது.

***

இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் "Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty" by Daron Acemoglu and James Robinson என்ற புத்தகம் இதுபோன்ற விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. 20%-தான் இதுவரை படித்துள்ளேன். ஆனால் இணையத்தில் இந்தப் புத்தகத்துக்கான விமரிசனங்கள், எதிர்வினைகள், எதிர்வினைக்கு ஆசிரியர்களின் எதிர்-எதிர்வினைகள் என்று அவற்றையெல்லாம் படிக்கவே நேரம் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட ஓர் எதிர்வினையில், நல்ல அரசியல் முறை (குடியாட்சி) இருந்தும் இந்தியா ஏன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது என்ற கேள்விக்கு அசிமோக்லு/ராபின்சன் இவ்வாறு பதில் அளிக்கிறார்கள்:
We go to pains in the book to emphasize that electoral democracy isn’t the same as inclusive political institutions. This becomes particularly binding when it comes to India. India has been democratic since its independence, but in the same way that regular elections since 1929 don’t make Mexico under PRI control an inclusive society, Congress-dominated democratic politics of India doesn’t make India inclusive. Perhaps it’s then no surprise that major economic reforms in India started when the Congress Party faced serious political competition. In fact, the quality of democracy in India remains very low. Politics has not only been  dominated by the Congress party but continues to be highly patrimonial, and as we have been discussing recently, this sort of patrimonialism militates against the provision of public goods. Recent research by Toke Aidt, Miriam Golden and Devesh Tiwari (“Incumbents and Criminals in the Indian National Legislature”) shows there are other very problematic aspects of the Indian democratic system: a quarter of the members of the Lok Sabha, the Indian legislature, have faced criminal charges, but alarmingly, such politicians are more likely to be re-elected than those without criminal charges, reflecting the fact that Indian democracy is far from being an inclusive ideal.
அதாவது:
  • இந்தியாவில் குடியாட்சி இருக்கிறது என்பதாலேயே அதன் அரசியல் அமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கியது என்று நினைத்துவிடக்கூடாது.
  • காங்கிரஸ் கட்சிக்குத் தீவிரமான போட்டி வந்ததால்தான் சில பொருளாதாரச் சீர்திருத்தங்களாவது நிகழ்ந்தன.
  • இப்போதைய இந்திய அரசியலில் குடும்ப உறுப்பினர்களுக்கே முன்னுரிமை கிடைக்கிறது.
  • குற்றம் புரிந்தவர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஆகவே இந்தியக் குடியாட்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இல்லை. இது மாறினால்தான், பொருளாதார அமைப்புகள் சீர்பெறும். அதற்குப் பிறகே, இந்தியப் பொருளாதாரத்தில் வேகமான மாற்றம் நடைபெறும்.

11 comments:

  1. இதற்கான மாற்றம் வெறும் அரசியல்வாதிகளிடம் மட்டும் ஏற்பட்டால் போதாது என்பது என் எண்ணம். மக்கள், பெருமுதலாளிகள், அறைந்து ஓட்டு போடும் மக்கள், ஆராயாமலே ஓட்டு போடும் மக்கள், அனைவருக்கும் ஏற்றாற்போல் இந்த செய்தியை புரியவைத்து, அப்புறம்தான் நிறைவேறும்.

    இதை வேறுகோணத்தில் பார்த்தாலும், முன்னேற்றம் தரக்கூடிய, முதலாளித்துவத்தை, அதற்கான சுதந்திரத்தையும் கட்டுபாடுகளையும் சரிவிகிதத்தில் கொள்கைகள் மூலமும் முறையான சட்டங்கள் மூலமும் ஆளக்கூடிய மத்திய அரசு அமைக்க முடிந்தால், ஒரு 50% வேலை பூர்த்தியாகும். மீதமுள்ள 50% வேலைகளை சீர்படுத்தப்பட்ட அரசு நிறுவனம் மூலம் சாதிக்க முடியும். பல சிறு நிறுவனங்களையும் பங்குபெறச்செய்து இதை சாதிக்கலாம்...ஏதோ என் அறிவிற்கு எட்டியது!

    ReplyDelete
  2. //உங்கள் வீட்டின் அடியில் வைரம் கிடைக்கிறது என்று தெரிந்தால் இந்திய அரசு உங்களைத் துரத்திவிட்டு (ஏதோ கொஞ்சம் பணம் கொடுப்பார்கள் - அதுவும் சந்தை மதிப்பல்ல) உங்கள் வீட்டை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொள்ளும். உங்களிடம் கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான விலை, லாபம் ஆகியவை பொதுவாகக் கிடைக்காது. உங்கள் நிலத்தை வாங்க முனையும் தனியார் நிறுவனங்கள் அரசு வழியாக அதனை அடைவதுதான் எளிது என்பதைப் புரிந்துகொண்டு, லஞ்சம், லாபியிங் ஆகிய வழிகளில் அதனைச் சாதித்துக்கொள்ள முனைவார்கள்//
    அமெரிக்காவில் உள்ளதுபோல் நிலத்துக்கு அடியில் உள்ளது நில உடைமையாளருக்கே சொந்தம் என்று வந்தால் இந்தியாவில் என்ன ஆகும்? அரசு கொஞ்சம் பணத்தை விட்டெறிந்துவிட்டாவது பிடுங்கிக் கொள்ளும்.மாஃபியா அதையும் தராமல் பிடுங்கிக் கொள்ளும். ரியல் எஸ்டேட் மாஃபியா விஷயத்தில் ஏற்கெனவே நடக்கும் கதைதான் இதிலும் நடக்கும்.
    அமெரிக்காவில் சந்தைப் பொருளாதார சக்திகள் முழுதாக விலையைத் தீர்மானிக்கின்றன. 2008 பொருளாதார மந்தத்தின்போது வீடுகள் அடிமாட்டு விலைக்குச் சரிந்ததாகக் கேள்விப்பட்டோம். ஆனால் இங்கு? recession, recession என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டே இருக்கையிலும் விலை குறையவில்லை. அதிகரிக்கும் வேகம் மட்டுமே நின்றது.காரணம்,கருப்புப் பணம். ரியல் எஸ்டேட் முதலாளிகளின் அரசியல் மற்றும் கிரிமினல் பின்னணி. எனக்குத் தெரிந்த ஒரு பில்டர் 500 வீடுகள் கொண்ட குடியிருப்பொன்றை செங்கல்பட்டு அருகில் கட்டினார்.100க்கு மேல் விற்கவில்லை. அமெரிக்கா போல் சந்தை சக்திகள் இயங்கினால் விலை வீழ வேண்டுமல்லவா? நடக்கவில்லை. 400 வீடுகளைப் பூட்டியே வைத்திருந்தார். ஒழுங்காகத் தொழில் செய்பவராக இருந்தால் இந்த நட்டத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது, மனமும் வராது. கருப்புப் பணம் என்பதால்தான் இது சாத்தியமானது.
    புற்று நோய்போல் பொருளாதாரத்தை அரித்துக் கொண்டிருக்கிற கருப்புப் பண உருவாக்கத்தை முதலில் தடுக்க வேண்டும். இங்குதான் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் அரசியல்வாதிகள் - ரவுடிகள் தொடர்பு (குற்றப் பின்னணி அல்லது குற்றவாளிகளுடன் நெருக்கம்) கவலை அளிக்கிறது. ரவுடியிஸம் ஒழியாதவரை சந்தைப் பொருளாதாரமோ மந்தைப் பொருளாதாரமோ எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
    அரசு தப்பித்தவறி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் மனித உரிமையாளர்களும் சாதி, மதரீதியான பழிவாங்கல் என்று கூவுவதற்குப் பிரிவினையாளர்களும் இருக்கவே இருக்கிறார்கள். ஆக, அரசியலில் குற்றப்பின்னணியை ஒழிப்பதைவிட அத்தை மீசை முளைத்து சித்தப்பா ஆவது சுலபமாக நடக்கும் காரியம்.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை .
    ஆனால் பாஜக / விபி சிங் ஆட்சிகளிலும்
    காங்கிரஸ் முறை / காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கை தானே நடந்தது .
    வென்ச்சர் கேப்பிடல், எஸ் எம் ஈ குறித்து மோடி நிலைப்பாடு என்ன .
    புதிய தொழில் நுட்பம்/ இளம் மாணவர்களின் வணிக முயற்சிக்கு
    குஜராத் மாநில அரசு ஆதரவு எவ்வாறு இருக்கிறது.

    ReplyDelete
  4. india's biggest problem is population. any nation including america would not be able to handle a population of 130crores. most of india's best minds are thinking only about feeding, providing clothing,shelter and on how to meet the basic needs to the people. all our resources are also spent on this only.
    so how can we ever do R&D on shale gas extraction or find some new thing (like google) that will turn the world on its head? inspite of this doing something like sending a probe to mars is a great achievement.

    ReplyDelete
    Replies
    1. I totally agree this. Any body supports begetting more children for religious reasons is anti national.

      Delete
  5. 1. // Perhaps it’s then no surprise that major economic reforms in India started when the Congress Party faced serious political competition?? - I think we need to question this - Though the Congress (PVN) party did not have a majority on its own in 1991, there was a political stable situation due to the Rajiv's death and people were not going to have another election soon. The national economic crisis, drop in foreign exchange reserve and the dissolution of Soviet Union made it necessary for the country to do economic reforms and not because of internal competitive politics.
    2. // Politics has not only been dominated by the Congress party but continues to be highly patrimonial, and as we have been discussing recently, this sort of patrimonialism militates against the provision of public goods. //

    Yes - Patrimonialism is an issue in Indian politics and coupled with "hereditary entitlement" is creating dynasty politics which in turn fosters crony capitalism. However, the argument "this sort of patrimonialism militates against the provision of public goods" is not valid entirely - e.g. if you see the success of PDS in Tamil Nadu, a major reason for that is the control Jayalalithaa and Karunanidhi have had over their party and Government which ensured there was no middle level leakage. "Inclusiveness" has different meanings as well :-)

    3. To establish a fully functional capitalistic society, we need to have a fully functional legal system with proper regulation, oversight and enforcement. Until such structures are put in place, we would not be able to have inclusiveness as well in our society.

    ReplyDelete
  6. @Rahman A country like China having a much higher population is handling things comparatively better than India though it is like a dictatorship. A benevolent authoritarian welfare state is the need of the hour.

    ReplyDelete
  7. first of all china is really big compared to india and their land can comfortably accommodate a 150 crore population. but still they have taken very proactive but not so people friendly measures that assures that their population will remain under control. apart from they also have the same problem of feeding a billion and more population. there have been reports that chinese are feeding their hens and sheeps with some industrial chemical to make it grow faster and bigger. even govt seems to have turned a blind eye to that.
    and as you said they are able to handle things better mainly because they are more of a dictatorship and they also dont have the trouble of keeping the nation united like india does because of its tremendous diversity.

    ReplyDelete
  8. On Oil Shale and Oil bearing Shale:
    Excerpts from http://www.theoildrum.com/node/9753

    The oil shale in the Green River looks like rock. Unlike the hydrocarbons in the tight oil formations, the oil shale (kerogen) consists of very heavy hydrocarbons that are solid. In that way, oil shale more resembles coal than oil. Oil shale is essentially oil that Mother Nature did not finish cooking, and thus to convert it into oil, heat has to be added. The energy requirements -- plus the fact that oil shale production requires a lot of water in a very dry environment -- have kept oil shale commercialization out of reach for over 100 years.

    ReplyDelete
  9. I read your blog at regular intervals, this is interesting one. Honestly never heard of this before, but just some quick thoughts - does this blog talks about pros & cons of the process, it seems to be one sided to me.

    http://www.forbes.com/sites/kensilverstein/2013/11/17/water-shortages-could-dry-up-shale-gas-craze/

    ReplyDelete
  10. இந்தியாவில் வங்கக் கடல் பகுதியில் மிக ஆழத்தில் மீதேன் வாயுப் படிவங்கள் -- கட்டி வடிவில் - இருக்கின்றன. இவை ஐஸ் கட்டி மாதிரி இருக்கும். நெருப்புக் குச்சியைக் கொண்டு பற்ற வைத்தால் எரியும். எரியும் ஐஸ் கட்டிகள் என்றும் சொல்லலாம். இவற்றை மேலே கொண்டு வந்து ப்யன்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. இந்த மீதேன் ஹைட்ரேட்ஸை மேலே கொண்டு வர வழி கண்டு பிடித்தால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க முடியும். அப்படியே மேலே கொண்டு வந்தால் மீதேன் கட்டிகள் வாயுவாக மாறி காற்றில் கலந்து பூமி சூடாகும் பிரச்சினையை மேலும் அதிகரித்து விடும் என்ற பிரச்சினை உள்ளது
    மீதேன் ஹைட்ரேட்ஸ்களை மேலே பாதுகாப்பாகக் கொண்டு வருவதில் அண்மையில் ஜப்பான் புதிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளதாக ஒரு தகவல் உண்டு.
    அமெரிக்காவின் ஷேல் காஸ் மாதிரியில் மீதேன் ஹைட்ரேட்ஸ் இந்தியாவில் பெரும் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
    ஆனால் இந்தியக் கடல்களுக்கு அடியில் உள்ள மீதேன் ஹைட்ரேட்ஸ் பற்றிய பல விஷய்ங்கள் மூடுமந்திரமாக உள்ள்ன

    ReplyDelete