Tuesday, December 10, 2013

தமிழ்ப் பாடத்திட்டம்

(எச்சரிக்கை: மிக நீண்ட பதிவு)

சென்ற வாரம், பேராசிரியர் அ.ராமசாமியின் அழைப்பின்பேரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை தமிழ்ப் பாடத்திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்த கருத்துரையாடல் தொடர்பாக தமிழகத்தின் பல பேராசிரியர்களை அவர் அழைத்திருந்தார். சுமார் 60+ பேராசிரியர்கள் வந்திருந்தனர். கூடவே, சில இதழாளர்களையும் பதிப்பாளர்களையும் அழைத்திருந்தார். நானும் ஆழி செந்தில்நாதனும் மட்டும்தான் சென்றிருந்தோம். நூலகராகப் பணிபுரியும் எழுத்தாளர் முருகேச பாண்டியனும் வந்திருந்தார்.

கல்லூரியில் தமிழ்ப் பாடத்திட்டம் என்பது எனக்கு அந்நியமானது. நான் கடைசியாகத் தமிழ் படித்தது 1980-களில், 12-ம் வகுப்புவரையில் மட்டுமே. எனவே நிறைய விஷயங்களைப் புதிதாகப் பரிச்சயம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. நான் புரிந்துகொண்டவற்றை, முடிந்தவரையில் சரியாக எழுத முயற்சி செய்திருக்கிறேன். தவறு ஏதேனும் கண்ணில் பட்டால் திருத்துங்கள்.

கருத்தரங்கின் முதல் நாள், மூன்று அமர்வுகள். முதல் அமர்வு ‘இருப்பும் நடப்பும்’. இரண்டாவது அமர்வு ‘மாற்றங்களும் தேவைகளும்’. மூன்றாவது அமர்வு ‘தமிழ் மொழிக் கல்வி பயன்படு மொழியாக ஆகவேண்டுமானால் என்ன மாற்றங்கள் தேவை?’.

நெல்லை எக்ஸ்பிரஸ் தாமதமாகப் போய்ச் சேர்ந்ததனால், முதல் அமர்வு பெரும்பாலும் முடியும் நேரத்தில்தான் அரங்குக்கே போய்ச் சேர்ந்தேன். மிகவும் காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. பேசுபவர்கள் சிலர், வெளிப்படையாகவே, இப்போதுள்ள பாடத்திட்டத்தின் குறைபாடுகள், பாடங்கள் உருவாக்குவதில் இருக்கும் குறைகள், புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் ஊழல் ஆகியவற்றை முன்வைத்துச் சாடினார்கள். அதற்குக் கடுமையான எதிர்வினையும் பிறரிடமிருந்து வந்துகொண்டிருந்தது. இவ்வளவு வெளிப்படையாக இவர்கள் பேசுவார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கல்விப் புலத்தில் உள்ள அனைவருக்குமே இவையெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். தகுதியற்ற பலரும் கல்வித் தளத்துக்குள் பேராசிரியர்களாக வந்துவிடுகிறார்கள். பாடத்திட்டக் குழுக்கள் உருவாக்கும் பாடத்திட்டம் காலத்துக்கு ஒவ்வாததாக இருக்கிறது. பாடப் புத்தகங்கள் சரியில்லை. புத்தகம் தேர்வு செய்யப்படுவதற்கு கையூட்டு தரப்படுகிறது. வகுப்பில் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் முறை சரியில்லை. படிக்கும் பெரும்பான்மை மாணவர்களுக்குத் தமிழ் பிடிப்பதில்லை. இத்யாதி, இத்யாதி. ஆனால் இவை குறித்து வெளிப்படையாக விவாதிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதால்தான் ஆச்சரியமே.

மூன்றாவது அமர்வில், சில புள்ளிகளைத் தொட்டு நான் பேசினேன். எங்கள் பதிப்பகத்தில் எடிட்டோரியல் துறையில் வேலை செய்த/செய்யும் யாருமே தமிழ் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் கிடையாது. எனக்குத் தெரிந்து, இதழியலில் வேலை செய்யும் பெரும்பான்மை ஆட்கள் வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள். பல புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம். எங்கள் பதிப்பகத்துக்காக இவற்றைச் செய்துள்ள அனைவருமே தமிழல்லாது வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் என்று நினைக்கிறேன். ஆக, தமிழில் பட்டம் பெற்றோர், மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக அல்லது கல்லூரிகளில் பேராசிரியர்களாக மட்டும்தான் ஆகின்றார்கள்போல. ஆனால் நான் மேலே சொன்ன துறைகள் அனைத்தும் - இதழியல், மொழிபெயர்ப்பு, புத்தகமாக்குதல் போன்றவை - தமிழ் சார்ந்தவை. நல்ல தமிழ் தெரிந்தவர்களால் இந்தத் துறைகளுக்கு மேலும் மெருகூட்ட முடியும். திரைப்படம், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் ஆகியவற்றுக்கும் தமிழ் அறிந்தவர்கள் தேவை. திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுத படைப்புத் திறன் முக்கியம் என்றாலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்புகளைச் செப்பனிட தமிழறிந்த ஆட்கள் தேவை. அதேபோலத்தான் கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு ஆகிய துறைகள். தமிழ்த் துறை மாணவர்கள் இதழியல், எடிட்டிங், மொழிபெயர்ப்பு, கணினி மொழியியல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டால் தமிழ்ச் சமூகத்துக்குச் சிறந்த பணியாற்ற முடியும். நல்ல வேலைகளையும் பெற்று, நன்கு சம்பாதிக்கவும் முடியும். இப்படிப்பட்ட திறனுடன் மாணவர்களை உருவாக்க, பாடத்திட்டத்தில் மாறுதல்கள் தேவை. இதுதான் நான் பேசியதன் சாரம்.

ஆழி செந்தில்நாதன், மொழிபெயர்ப்பு குறித்து விரிவாகப் பேசினார். அவருடைய முழுப் பேச்சின் அச்சு வடிவத்தை என்னிடம் கொடுத்தார். அதை அவரே இணையத்தில் வெளியிடக்கூடும். தமிழ்ச் சந்தையின் பரப்பைப் புரிந்துகொண்டுள்ளதால் இன்று கூகிள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ் இடைமுகத்தைத் தர முனைந்துள்ளன; நாளை ஆங்கிலத்தில் உள்ள பலவற்றையும் தமிழில் தர அவர்கள் முன்வருவார்கள்; எனவே தமிழாக்கத்துக்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன; கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும் - இதுதான் அவருடைய பேச்சின் சாரம்.

***

இரண்டாம் நாள், மூன்று குழுக்களாகப் பிரிந்து, பாடத்திட்டங்கள் குறித்துக் கூடிப் பேசி, மூன்று அறிக்கைகள் தரவேண்டும் என்பதாக முடிவு செய்யப்பட்டது.

ஏன் மூன்று குழுக்கள்?

பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகள் தவிர்த்து, அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ‘பகுதி ஒன்று’ என்பது தமிழ் மொழிப் பாடமாக இருக்கிறது. இதில் நான்கு தாள்கள். இதற்கான பாடத்திட்டத்தை உருவாக்குவதுதான் முதல் குழுவின் வேலை.

இரண்டாவது குழு, பி.ஏ (தமிழ்) என்ற இளங்கலைப் படிப்புக்கான பாடத்திட்டம் குறித்து விவாதிக்கும்.

மூன்றாவது குழு, எம்.ஏ (தமிழ்) முதுகலைப் படிப்புக்கான பாடத்திட்டம் குறித்து விவாதிக்கும்.

‘பகுதி ஒன்று’ படிக்கும் மாணவர்கள்தான் எண்ணிக்கைப்படி அதிகம். ஆனால் அவர்கள் மேலோட்டமாகத்தான் படிக்க முடியும். அவர்களுக்கு என்ன பாடத்திட்டம் இருக்கவேண்டும் என்று விவாதிக்கும் குழுவில்தான் நான் இருந்தேன். எனவே பிற இரு குழுக்களும் விவாதித்தது என்ன என்பதை என்னால் அறிய முடியவில்லை. இறுதியாக ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து பேசும்போது, அவர்களது இறுதி வரைவு என்ன என்பது தெரியவந்தது.

***

நான் இதற்குமுன் கல்லூரிப் பாடத்திட்டம் குறித்த ஒரு சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். சென்னையில் உள்ள ஒரு தன்னாட்சிக் கல்லூரி, என்னை அழைத்திருந்தது. அங்கே என்ன நடந்தது என்று அப்போது எழுதியிருந்தேன்.

இந்த விவாதத்தின்போதும் என் கருத்துகளைக் கிட்டத்தட்ட இதுபோலவே எடுத்துவைத்தேன். சங்கத்தமிழ், இலக்கியக் கோட்பாடுகள் ஆகியவற்றை விடுத்து, உரைநடைத் தமிழ், கதைகள், நாடகம், திரைப்படம், விளம்பரத்துறை, ஊடகத்துறை, மொழிபெயர்ப்பு, கணினி மொழியியல் ஆகியவற்றைக் கொண்டுவந்து சுவாரஸ்யமாகப் பாடங்கள் இருக்குமாறு செய்யலாமே என்பது என் கருத்து. இந்தக் குழுவில் வெளியாள் நான் ஒருவன் மட்டும்தான். மைசூர் நடுவண் இந்திய மொழிகள் மையத்திலிருந்து ஒருவர் இருந்தார். ஒருசில விஷயங்கள் குறித்து தீவிரமாக மறுத்து/எதிர்த்து என் கருத்தை வைத்தேன். அதற்குக் கடுமையாக எதிர்ப்பு வந்தால், வேலை பாதிக்கக்கூடாது என்பதால் என் கருத்தைப் பின்வாங்கிக்கொள்வது என்பதுதான் என் முடிவு. மேலும் நான் சில விவாதப் பொருள்களை முன்வைப்பது கலகமாகத்தான் என்றும் யாரும் கோபித்துக்கொள்ளவேண்டாம் என்றும் முன்னதாகவே கேட்டுக்கொண்டேன்.

நான்கு தாள்களில், தமிழின் நீண்ட, நெடிய இலக்கிய, இலக்கண, பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சொல்லிவிடவேண்டும் என்ற கவலை பேராசிரியர்கள் அனைவரிடமும் இருந்தது. சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், பிரபந்த இலக்கியம், நவீன மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள்; இவைதவிர நவீன சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என அனைத்தையும் சொல்லித்தரவேண்டும்; அத்துடன் தமிழர் பண்பாடு குறித்தும் சொல்லித்தரவேண்டும் என்றனர். எனக்கோ, பிழையின்றி எழுதுதல், கட்டுரைகளை அமைத்தல், கணினிகளையும் கணினிபோன்ற கருவிகளையும் தமிழில் பயன்படுத்துதல், அவரவர் துறையில் இருக்கும் ஆங்கில விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதல், கணினித் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் மொழியியலைக் கற்றுக்கொண்டு கணினி மொழியியல் துறையைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைப் புகுத்தவேண்டும் என்ற ஆவல். இறுதியில் எல்லோருடைய விருப்பத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் இடம் கொடுக்கப்பட்டு, கீழ்க்கண்ட பாடத்திட்டம் முன்மொழியப்பட்டது. இது ஏற்கெனவே இருக்கும் ஒன்றிலிருந்து எந்த அளவு வேறுபட்டது என்பதை நான் அறியேன்.

இளநிலைப் பட்ட வகுப்பு, பகுதி 1

தாள் 1:

அலகு 1: சங்க இலக்கியம்
அலகு 2: இக்கால இலக்கியம்: சிறுகதைகள்
அலகு 3: இலக்கிய வரலாறு (சங்க இலக்கியம், சிறுகதைகள்)
அலகு 4: பயன்பாட்டுத் தமிழ்: நிர்வாகத் தமிழ்/ஆட்சித் தமிழ்
அலகு 5: மொழித் திறன்: வாக்கிய அமைப்பு, பத்தி அமைப்பு, பிழை நீக்கம்

தாள் 2:

அலகு 1: அற இலக்கியம், பக்தி இலக்கியம்
அலகு 2: இக்கால இலக்கியம்: நாவல்
அலகு 3: இலக்கிய வரலாறு (அற இலக்கியம், பக்தி இலக்கியம், நாவல்)
அலகு 4: பயன்பாட்டுத் தமிழ்: கணினித் தமிழ்
அலகு 5: மொழித்திறன்: கட்டுரை எழுதுதல்

தாள் 3:

அலகு 1: காப்பியங்கள்
அலகு 2: இக்கால இலக்கியம்: நாடகம், கட்டுரைத் தொகுப்பு
அலகு 3: இலக்கிய வரலாறு (காப்பியம், நாடகம், கட்டுரைகள்)
அலகு 4: பண்பாட்டுத் தமிழ்: தமிழர் பண்பாடு - சங்ககாலம்முதல் ஐரோப்பியர் வருகைவரை
அலகு 5: மொழித்திறன்: படைப்பாக்கம்

தாள் 4:

அலகு 1: பிரபந்த இலக்கியம்
அலகு 2: இக்கால இலக்கியம்: மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள்
அலகு 3: இலக்கிய வரலாறு (பிரபந்தம், கவிதைகள்)
அலகு 4: பண்பாட்டுத் தமிழ்: தமிழர் பண்பாடு - ஐரோப்பியர் வருகைக்குப் பின், இன்றுவரை
அலகு 5: மொழித்திறன்: மொழிபெயர்ப்பு

***

பி.ஏ (தமிழ்) பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்கள், பி.லிட் (தமிழ்) பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் உள்ளது என்றும் ஆனால் பி.ஏ (தமிழ்) திட்டத்தில் அது இல்லை என்றும் அதைப் புகுத்தவேண்டும் என்றும் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். ஆக, அவர்கள் முன்வைத்த பி.ஏ (தமிழ்) பாடங்களில் நன்னூல், தொல்காப்பியம் இரண்டும் இருந்தன. எம்.ஏ (தமிழ்) தாள்களிலும் தொல்காப்பியம், அனைத்து உரைகளுடன் இருந்தன.

பி.ஏ (தமிழ்) என்றாலுமே அங்கு சங்க இலக்கியத்தை ஆழ்ந்து கற்கவேண்டுமா, தொல்காப்பியத்தைக் கற்கவேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. முதலில் பொதுத்தமிழ் பகுதியிலேயே சங்க இலக்கியம் முதல் பிரபந்தம் வரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகியவையும் சேர்த்து இருக்கவேண்டுமா என்ற என் அடிப்படைக் கேள்வி அப்படியே உள்ளது. மேலும், ‘இலக்கிய வரலாறு’ என்ற விஷயம் பற்றியும் என் எதிர்ப்பைத் தெரிவித்தேன், சில அருமையான சிறுகதைகளைப் படிப்பது நல்ல விஷயம். ஆனால் சிறுகதை என்னும் கோட்பாடு பற்றியும், எது சிறுகதை, அதன் கூறுகள் என்னென்ன என்பதைக் கற்பதும் எந்த அளவுக்கு பொதுத்தமிழின் தேவை என்பதுதான் என் கேள்வி. ஆனால் என் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நான் மீண்டும் அமைதியானேன்.

இரண்டாம் நாள் இறுதியில் பேசும்போது என் கருத்துகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். தமிழர்களின் தொன்மையே ஒருவிதத்தில் அவர்கள் கழுத்தைச் சுற்றியுள்ள கருங்கல்லாக ஆகிவிட்டதோ என்ற என் எண்ணத்தைச் சொன்னேன். அந்த நீண்டகால வரலாற்றின் அனைத்துக் கூறுகளையும் எப்படியாவது மாணவர்களுக்குச் சொல்லித் தந்துவிடவேண்டும் என்ற பதற்றம் பேராசிரியர்களுக்கு இருக்கிறது. ‘சங்கத் தமிழில்’தான் ஆரம்பிக்கவேண்டும் என்று அவர்கள் அடம் பிடிப்பதும் இதனால்தான். இன்றைய தேவை என்று நான் பார்ப்பது தமிழைப் பிழையின்று எழுதுதல், தமிழில் உலக விஷயங்கள் அனைத்தையும் கொண்டுவருதல், நாம் எதைச் சொல்ல விரும்பினாலும் அதைத் தமிழில் சொல்லக்கூடிய நிலையை அடைதல், உலக அறிவு அனைத்தும் தமிழில் எழுத்துகளாக, புத்தகங்களாகக் கொண்டுவரப்படுதல், தமிழர்கள் தங்களுக்குள் பேச, எழுத தமிழைத் தடையின்றிப் பயன்படுத்துதல், பொது ஊடகங்களில் புழங்கும் தமிழ் பிழையின்றி இருத்தல் ஆகிய இவையே. இதற்குமேலாக, தமிழை விரும்பிப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் தமிழின் தொன்மையை, தமிழின் இலக்கியச் சுவையை, தமிழ் இலக்கணத்தின் மேன்மையை, தமிழர்தம் பண்பாட்டை உணர்ந்துகொண்டால் போதும். மேலும், பண்பாடு என்பதை வரலாற்றுப் பாடமாகத்தான் சொல்லித்தரவேண்டும்; தமிழ்ப் பாடமாக அல்ல என்பதும் என் கருத்து.

***

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றின்கீழும் பல கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனக்கென பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்கிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் தத்தம் சொந்தப் பாடத்திட்டத்தை வைத்துக்கொள்கின்றன. ஒரு குழு சேர்ந்து ஒரு பாடத்திட்டத்தை அனைவர்மீதும் திணிக்க முடியாது. ஒற்றைப் பாடத்திட்டம் என்பது கல்லூரி அளவில் நல்லதும் அல்ல.

என்னைப் பொருத்தமட்டில் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டது எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. பாடத்திட்டங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து ஒரு மேலோட்டமான புரிதல் ஏற்பட்டது. மாற்றுக் கருத்துகளைக் கொஞ்சமாவது முன்வைக்க முடிந்தது. அதில் ஒரு சிலவற்றையாவது ஏதேனும் ஓரிரு கல்லூரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடும். தனிப்பட்ட முறையில் பல பேராசிரியர்களுடன் பேச முடிந்தது. இவர்கள் அனைவரையும் நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு தாம் கற்றுத்தரும் கல்வியில் கொஞ்சமாவது அதிருப்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. மாறும் உலகத்துக்கேற்ப பாடங்களை மாற்றவேண்டும், தம் மாணவர்களின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அவர்கள் பலரும் விரும்புவது தெரிந்தது. பாடத்திட்ட உருவாக்கம் மிகவும் கெட்டித்தட்டிப்போய் இறுகிக்கிடக்கிறது என்று பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

ஒவ்வொரு கல்லூரிக்குமே பாடத்திட்டத்தை ஏற்படுத்துவதில் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று நான் கருதுகிறேன். பாடம் நடத்தும் பேராசிரியர்தான், மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் பல குளறுபடிகள் ஏற்படலாம் என்ற பயம் பொதுவாகவே இருக்கிறது. அதனால்தான் பல்கலைக்கழகம் என்ற அமைப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி, மேலிருந்து கீழாக அனைத்துக் கல்லூரிகள்மீதும் திணிக்கவேண்டும் என்ற அமைப்பை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

உலகத்தரம், உலகத்தரம் என்று சொல்கிறோமேதவிர, உண்மையில் நாம் உருவாக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட லாயக்கற்றவர்களாக இருக்கின்றனர். அது பள்ளிக்கூட ஆசிரியர்களின் பிழை என்று சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துவிடுகிறார்கள் கல்லூரிப் பேராசிரியர்கள். ஒட்டுமொத்த கல்விப்புலக் குறைபாடு அது என்பதை நாம் உணர்ந்துகொண்டால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

என்னிடம் பதில்கள் ஏதும் இல்லை. ஓரத்திலிருந்து எட்டிப் பார்த்து, கல்விச் சூழலைப் புரிந்துகொள்ள முடியுமா என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்.

18 comments:

  1. Dear Badri,

    I have asked you in a previous post also. What do you think should Tamils in other states/countries should do to teach Tamil to their kids ?

    Thanks

    ReplyDelete
  2. Well said badri.. either academicians (good) try to impose too complicated / uninteresting papers at very early stage and make students loose intrest or academicians (bad) approach and teach even the most intresting papers in most un intersting way

    ReplyDelete
  3. Secondly... the best minds in school level seldom opt tamil in higher studies/ career.. quality of students opting for tamil in colleges is low and this creates lower quality academicians. .creating a cyclic effect..

    ReplyDelete
  4. Thirdly... tamil is a langauge... no langauge will grow if its not creating better opportunities.. any thing thought in Bachelor's level should be more practical and career oriented .. keeping classical stuffs to masters and above

    ReplyDelete
  5. தமிழ் குறித்த பதிவில் வந்த,பின்னூட்டங்களோ ஆங்கிலத்தில். யாரால் தமிழை காக்க இயலும்..

    ReplyDelete
  6. முதலில் பொறியியல், மருத்துவம், சட்டம் படிப்பவர்களுக்குத் தமிழ்ப்பாடம் இல்லை. ஆங்கிலம்கூட 'இங்கிலீஷ் ஃபார் என்ஜினியர்ஸ்' அல்லது 'கம்யூனிகேஷன் இங்கிலீஷ்' என்ற முறையில்தான் இருக்கிறது. யாரும் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் பாடம் நடத்துவதில்லை.

    அப்படி இருக்க, கணிதமோ, உயிரியலோ, பொருளாதாரமோ படிப்பவர்களுக்கு தமிழ் மொழி கற்றுத்தரப்படுவதே தேவையில்லை (ஆங்கில பாடத்திலும் இலக்கியங்கள் கற்றுத்தருவது தேவையில்லை) என்பது என் கருத்து. மிஞ்சி மிஞ்சிப் போனால் எலக்டிவ்களாக விரும்பியவர்கள் படிக்கும் விதத்திலேயே இருக்க வேண்டும். அவற்றில் கூட எடிட்டிங், மொழிபெயர்ப்பு, கிரியேட்டிவ் ரைட்டிங் போன்றவை தனிப்பாடங்களாக இருக்க வேண்டும். 'சங்க இலக்கியம்' என்பதும் தனி எலக்டிவ் ஆக இருக்கலாம். போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் அதைப் பயில விரும்பும் பட்சத்தில் அந்தக் குறிப்பிட்ட கல்லூரி அதை ஆஃபர் பண்ணலாம் (அந்த செமஸ்டர் மட்டும்). கட்டாய பாடமாகத் தமிழ்மொழி தேவையே இல்லை. வேறு துறைக்காரர்கள் மேல் கட்டாயமாகத் திணித்து, அவர்கள் விதியே என்று படித்து மறப்பதால் தமிழ் வளர்ந்துவிடாது.

    (மேலும் மின் பொறியியல் அல்லது மெக்கானிகல் பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் தேவை என்றால், இயற்பியலோ கணிதமோ 3 ஆண்டுகளில் படித்துவிட முடியும் என்பதே அபத்தம். எல்லா இளங்கலைப் படிப்புகளும் 4 ஆண்டுகளாக ஆக்கப்படவேண்டும். பல எலக்டிவ்களைச் சேர்க்கவும் இதனால் சமயம் இருக்கும்.)

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. பொதுத்தமிழ் என்பது வெறும் நான்கு தாள்கள். இதில் விருப்பப்பாடம் என்பதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. அந்த நான்கு தாள்களில் என்ன இருக்கவேண்டும் என்பதைக் குறித்த விவாதம் வேறு. பி.ஏ தமிழ் படிப்போருக்கு என்னவெல்லாம் விருப்பப்பாடம் இருக்கவேண்டும் என்று பேசுவது வேறு.

      Delete
    2. பொதுத் தமிழே தேவையா? பொறியியல் மருத்துவம் போன்றவை போலவே எல்லா இளங்கலை (பிஏ தமிழ் தவிர்த்து!) படிப்புகளுக்குமே தமிழ் மொழிப் பாடமே (எந்த மொழிப்பாடமுமே, கம்யூனிகேஷன்- ஃபங்ஷனல் ஆங்கிலம் தவிர) (பகுதி 1 என அழைக்கப்படுவது) தேவையில்லை என்று நினைக்கிறேன்.

      சரவணன்

      Delete
    3. கிரேக்கரோம சட்டமுறையை, ஆங்கில ஆட்சி முறையில் ஏற்று இந்திய மொழிகளில் சட்டம் வேண்டாம் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம். நம் விஞ்ஞானம் பொறியியல் எல்லாம் ஐரோப்பிய பாடம் மட்டுமே. தமிழில் அறிவியல் ஆய்வுகள் நடந்ததாக தெரியவில்லை.

      சாமுவல் ஃபிஸ்க் கிரீன் என்ற அமெரிக்க மருத்துவர் 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தமிழர்கள் கற்க அன்றை மருத்துவ நூல்களை தமிழில் இயற்றினார். இன்று வரை இலங்கையும் தமிழ்நாடும் இவற்றை வைத்து மருத்துவ கல்லூரி நடத்துவதில்லை.

      Delete
    4. கிரேக்கரோம சட்டத்திற்கு தமிழும் தேவைதானா?

      சாமுவெல் ஃபிஸ்க் கிரீன் என்ற அமெரிக்க மருத்துவர் 19ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்களுக்காக அன்றைய எட்டு மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். இன்று வரை இலங்கையோ தமிழ்நாடோ அவற்றை வைத்து கல்லூரி நடத்தவில்லை.

      இந்து மதத்திலிருந்து தலித் மக்கள் விடுதலை பெறவும், வருமை நிலையிலிருந்து விடுதலை பெற்று சம்பாதிக்கவும் ஆங்கில கல்வி வேண்டும் என்று பலரின் எண்ணம். தமிழின் எதிர்காலம் என்ன? அது ஒரு பொழுதுபோக்கு மொழியாக நிலைக்குமா?

      Delete
  7. வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் தமிழில் மொழி பெயர்ப்பாளர்களாக,பதிப்பக துறையில் பணியாற்றுபவர்களாக இருப்பதால் என்ன பிரட்சினைகள் என்பதை சொல்லவில்லையே.
    எந்த படிப்பு,மொழியில் படித்தாலும் தனக்கு பிடித்த துறையில் ஒருவர் பணியாற்றுவதில் என்ன தவறு
    கல்வியோ ,கிரிக்கெட்டோ ,கால்பந்தோ எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் அனைவருக்கும் ஏறாது.தமிழில் மேல்படிப்பு படித்து விட்டு விவசாயமும் செய்யலாம்.பொறியாளர்,மருத்துவர் தமிழில் புத்தகங்களை எழுதலாம்,மொழிபெயர்க்கலாம்,நாடகங்கள் இயற்றலாம்,வசனங்கள் எழுதலாம்
    தமிழ் சிறுகதைகள் படிப்பு/நாடக வசனம்/கணினியும் தமிழும் என்றும் இளநிலை,முதுநிலை பட்டங்கள் வழங்கலாம்
    குறிப்பிட்ட மொழியை பற்றி மட்டும் உயர்கல்வி கற்பவர் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்து கொண்டு தான் வருகிறது.கல்வியின் அடிப்படை வேலைவாய்ப்பு என்ற நிலை இருக்கும் வரை எந்த மொழி கல்வியும் மாணவர்களை கவர்ந்து இழுக்காது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எதை விவாதிக்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. பாடத்திட்டம் குறித்து நான் எழுதியிருப்பது பற்றி நீங்கள் எழுப்பும் கேள்வி என்ன?

      Delete
    2. 1000 பேர் படித்த காலத்தில் போது 300 பேர் புரிந்து படிப்பார்கள்.அதில் சிலர் குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்குவார்கள் . ஒரு லட்சம் பேர் படிக்கும் போது 30000 பேர் புரிந்து படிப்பார்கள்.70000 பேர் எப்படியாவது பாசாக வேண்டுமே என்று பாசாவதை மட்டுமே நோக்கமாக கொண்டு படிப்பார்கள்.
      70000 பேர் புரிந்து கொள்ளாமல் வெறும் டிகிரி வாங்க மட்டும் படித்தவர்கள் என்பதால் இன்றைய நிலையை முன்பை விட மோசம் எனபது நியாயமான வாதமா
      கல்லூரி படிப்பு,உயர்கல்வியில் பாட திட்டங்களுக்கும் படிப்புக்கும் பெரிய அளவு தொடர்பு கிடையாது.
      தமிழ்நாட்டில் கல்வியின் நிலை மோசம் என்ற வாதம் நியாயமான ஒன்றாக தெரியவில்லை.

      Delete
  8. பத்ரி,

    நானும் 12ம் வகுப்புக்குப் பின் தமிழைக் கற்றவன் அல்ல என்பதால் தயவு செய்து பிழைகளை மன்னிக்க வேண்டுகிறேன். பொதுத் தமிழ் மாணவர்களுக்கு பிழையின்றி எழுதுதல், கணினித் தமிழ் போன்ற பாடங்கள் மட்டும் போதும் என்பதில் எனக்கு ஒப்புதல் உண்டு. ஆனால் இளங்கலை தமிழ் இலக்கியம் கற்க வரும் மாணவர்கள் சங்க இலக்கியம் பயில்வது தேவை என்றே தோன்றுகிறது. பொதுத் தமிழ் என்பது தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு ஒரு அவசியமான முன் தேவை. ஆயின், அது ஒரு முதல் படி மட்டுமே. ஒரு துறையில் இளங்கலை என்பது அகலப் பார்வை அளிக்க வேண்டும். பயில்பவர்கள் அத்துறையில் விருப்பமற்றவர்களாக இருப்பின், அவர்களுக்கான விருப்பமுள்ள துறையில் அவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். பாடத்திட்டத்தை எளிமைப் படுத்தும் முயற்சியில் அந்த அகலப் பார்வை தொலைந்து விடக்கூடாது. அவ்வகலப் பார்வை கிடைத்த பின், முதுகலையில் அவர்கள் ஆழப் பார்வை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விருப்பம் இருப்பின், ஆய்வு மேற்கொண்டு, அத்துறையை ஒரு படி முன்னகர்த்தலாம். இவற்றுக்கெல்லாம் அடித்தளமான அந்த அகலப் பார்வை இன்றியமையாதது என்றே தோன்றுகிறது.

    அன்புடன்,
    SK

    ReplyDelete
    Replies
    1. இளங்களை தமிழ் படிக்க வருவோர் சங்க இலக்கியம் படிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லையே? அவர்கள் சங்க இலக்கியத்தைப் படிக்கவேண்டும். ஆழ்ந்து கற்கவேண்டும். பொதுத்தமிழ் குறித்துதான் நான் அவ்வாறு சொன்னேன்.

      Delete
  9. தமிழைக் க்ற்றுத் தருவதில் வாக்கிய அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.சொந்தமாக சிந்தித்து ஒரு பக்க கட்டுரைகளை எழுத ஊக்குவிக்க வேண்டும்.தமிழ் எம். ஏ படித்த்தவர்களுக்கும் சரி, பாட சம்பந்தமல்லாத பொது விஷயம் பற்றி சொந்தமாக இரு பக்கங்கள் எழுதத் தெரிவதில்லை. எதுவாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே சொந்தமாகத் தமிழில் எழுவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் லகா ழ்கர ளகரப் பிழைகள் இல்லாமல் இருக்கும்.ஒற்றுப் பிழைகள் இல்லாதிருக்கும். அத்துடன் சிந்தனைத் திறனை வளர்க்கவும் அது உதவும்

    ReplyDelete
  10. மனோன்மணீயம் பல்கலையின் தமிழ் எம்.ஏ. தேர்வு பற்றி இன்று வநிதிருக்கும் சுவையான செய்தி-

    3ம் வகுப்பு தரத்தில் எம்.ஏ. வினாத்தாள்! - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் திகைப்பு

    ....உதாரணத்துக்கு பகுதி 1-ல் குயில் பாட்டின் ஆசிரியர் யார்? உமக்கு பாடமாக வந்துள்ள பாரதிதாசன் கவிதை நூலை எழுதுக என்று மிக சாதாரணமாக 30 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு 4 விடைகளையும் அளித்து, அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதச் சொல்லியிருந்தனர்.

    http://tamil.thehindu.com/general/education/3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5449206.ece?homepage=true

    சரவணன்

    ReplyDelete
  11. ஃபெய்ன்மன் கலிஃபோர்ணியாவில் பாடத்திட்ட கூட்டத்தில் நடந்தது போல் ஒரு பக்கம். லோக்பால் சட்டம் போட கட்சிகள் என்ன பேசியிருப்பார்கள் போல் மறு பக்கம். :-)

    ReplyDelete