Monday, September 04, 2006

அப்புசாமி, சீதாப்பாட்டி

குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ஜ.ரா.சுந்தரேசன் என்னும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தாம் அப்புசாமியும் சீதாப்பாட்டியும்.

குமுதத்தில் தொடராக பல கதைகளை அப்புசாமி, சீதாப்பாட்டி பின்னியிருக்கிறார்கள். இவை புத்தகங்களாகவும் வந்துள்ளன.

சிறுவயதில் இந்தக் கதைகளைப் படித்து எவ்வளவோ முறை சந்தோஷப்பட்டுள்ளேன்.

கிழக்கு பதிப்பகம் அடுத்த வாரம் முதல் வரிசையாக மாதம் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களாக அப்புசாமி சீரிஸைக் கொண்டுவரும்.

முதல் புத்தகம் 'அப்புசாமியும் 1001 இரவுகளும்.'

புத்தகம் முழுக்கப் படங்களுடன், நல்ல தாளில், நல்ல அச்சில், சேமித்து மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்து 'குபீர் குபீர்' என்று சிரிக்கக்கூடிய வகையில் அப்புசாமி புத்தகங்கள் இருக்கும்.

இந்தப் புத்தகங்களை முழுக்க முழுக்கப் படக்கதைகளாகவும் (காமிக்ஸ்) கொண்டுவர விரும்புகிறோம். விரைவில்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள்

வெள்ளி மாலை செங்கை ஆழியானின் புத்தக வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன்.

விழா அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த அனைவரும் வந்திருந்தனர். ஆசிரியர் குணராசாவைத் தவிர. யாழ்ப்பாணத்தில் இப்பொழுது கடும் போர் நடந்துகொண்டிருக்கிறது. தரைவழிப்பாதை மூடப்பட்டுவிட்டது. கப்பல் வழியாக அந்நிய நாட்டவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் பழமலய் இருவரும் புத்தகத்தில் உள்ள கதைகளைப் பற்றியும் ஈழத்தமிழ் சொல்லாடலைப் பற்றியும் மட்டுமே பேசினர். எஸ்.ராமகிருஷ்ணன் ஈழ இலக்கியம் தமிழகத்தில் அதிகம் தெரியப்படாமல் இருப்பதைப் பற்றி வருத்தத்துடன் பேசினார். "ஜன்னலைத் திறந்து வைத்தால் கடல் தெரிகிறது. கடல் வழியாக ஈழத்தில் விளக்கு எரிவது தெரிகிறது. ஆனால் இங்கு மக்கள் மனத்தை மூடிவைத்துள்ளனரே" என்றார். செங்கை ஆழியானுடைய தொகுப்பைப் பொருத்தவரையில் ராமகிருஷ்ணன் கூரிய விமரிசனத்தை முன்வைத்தார். "செ.யோகநாதன், செங்கை ஆழியான் போன்றவர்கள் வாழ்க்கை மீதான அவதானிப்புகளை வைக்கிறார்களே ஒழிய, அதன்மீதான விமரிசனங்களை வைப்பதில்லை. கூர்மையான அவதானிப்புகளை வைப்பதோடு எழுத்தாளனின் பணி முடிந்துபோய்விடுகிறது என்று எண்ணுபவர்கள்" என்றார்.

பத்மாவதி விவேகானந்தன் அகடெமிகலாக எதோ பேசினார். தலித் இலக்கியத்தின் தந்தை டேனியல் என்றும் இலங்கையில் மூன்று பெரும் பிரிவாக - முற்போக்கு, நற்போக்கு, பொழுதுபோக்கு - இலக்கியம் உள்ளது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், முற்போக்கு இலக்கியம் என்றால் அது நற்போக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பினார். (இதற்கு பின்னால் எஸ்.பொ பதில் சொன்னார்.)

காந்தளகம் சச்சிதானந்தன் குணராசாவை நன்கு தெரிந்தவர். அவர் குணராசாவைப் பற்றிப் பேசினார். சிங்கள ஆட்சியாளர்கள்மீது ஈழத்தமிழ் மக்களுக்கு பெருத்த அதிருப்தி இருந்த நேரத்தில் குணராசா போன்றவர்கள் அரசு நிர்வாகச் சேவையில் இருந்தனர் என்றும் அதனால் மிகவும் கவனமாக கம்பியில் நடப்பதைப்போன்ற நிலையில் இருக்கவேண்டியிருந்தது என்றும் சொன்னார். குணராசா நிலவரை (map) நிபுணர் என்றும் இன்றும் இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது குணராசா வரைந்து கொடுத்த நிலவரை படங்களே என்றும் சொன்னார்.

ஒருமுறை கி.வா.ஜகனாதன் ஈழ இலக்கியங்களுக்கு அடிக்குறிப்பு கொடுக்கவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்து அது ஈழ எழுத்தாளர்களை மிகவும் வருத்தமுறச் செய்தது என்றார். ஈழத்தமிழ் என்று தனியான தமிழ் ஒன்றும் இல்லை. ஈழத்தவர் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் பழந்தமிழ் அகராதிகளில் உள்ள சொற்கள்தான் என்றும் தமிழகத் தமிழர்கள்தாம் அந்தச் சொற்களை மறந்துபோய்விட்டனர் என்றும் சொன்னார். ('நுளம்பி' போன்ற சில சொற்களைப் பற்றிப் பேசும்போது சொன்னது.)

சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள 'ஈழத்து பூதந்தேவனார்' பற்றியும் ஆங்காங்கே சில விவாதங்கள் எழுந்தன.

காலம் அதிகமாகிவிட்டபடியாலே வைகைச்செல்வி, நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் 2 நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

பா.ரவிக்குமார் ஒருவர்தான் அரசியலைப் பற்றிப் பேசினார். செஞ்சோலைத் தாக்குதல், இலங்கை அரசு NGO அமைப்பின் ஊழியர்களை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்துக் கொன்றது, வேலுப்பிள்ளை பிரபாகரன் எவ்வளவு சாமர்த்தியமானவர், பிபிசி ஆனந்தி பிரபாகரனின் பேட்டியின்போது தமிழ்ச்செல்வனின் சாதியைப் பற்றி அடிக்கோடிட்டது, அதற்கு பிரபாகரனின் கோபமான பதில், இப்பொழுது நடக்கும் சண்டை 'இறுதிப் போர்' என்று பலவற்றைப் பற்றிப் பேசினார்.

முடிவில் எஸ்.பொ பேசும்போது "நற்போக்கு இலக்கியம் = முற்போக்கு இலக்கியம் - (கைலாசபதி + சிவத்தம்பி)" என்ற சமன்பாட்டையும் (is equal to, bracket என்று இதே வடிவில் சொன்னார்), டேனியல் தலித் இலக்கியத்தின் தந்தை கிடையாது, அவர் முன்னிறுத்தும் சாதிக்கு எதிராகத்தான் பல போராட்டங்கள் நடந்தன என்றும் சொன்னார். (எனக்கு டேனியல் எழுத்திலும் யாழ்ப்பாண சாதிப் பிரச்னைகளிலும் எந்தப் பரிச்சயமும் இல்லை, அதனால் என்ன சொல்லப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் நான் இல்லை.)

பலருக்கும் நன்றி அறிவித்தலுடன் விழா முடிவுற்றது.

விழா நடக்கும்போதே நான் பெற்ற புத்தகத்திலிருந்து பல கதைகளைப் படித்து முடிந்துவிட்டேன். முடிந்தால் புத்தகம் பற்றிய என் கருத்துகளை வரும் நாள்களில் எழுதுகிறேன்.

Sunday, September 03, 2006

தலித் vs சூத்திரர்கள்

இப்பொழுது மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவர உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 27% கல்வித்துறை இட ஒதுக்கீட்டை 'உயர்சாதியினர்' பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஆச்சரியத்தை வரவழைப்பது சந்திர பன் பிரசாத் என்னும் தலித் அறிஞரின் எதிர்ப்பு. இதைப்பற்றி ஆங்கில வலைப்பதிவுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழில் இவற்றை அறியத்தரும் முயற்சியாக சில சுட்டிகள் மட்டும்.

1. சந்திர பன் பிரசாத்தின் நேர்முகம், அவுட்லுக் பத்திரிகையில் மார்ச் 2001-ல் வந்தது. அதில் பல விஷயங்களைப் பற்றிப் பேசும் பிரசாத், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டால் தலித்களுக்கு நன்மை இல்லாததோடு, தீமையும்கூட என்கிறார்.

2. சந்திர பன் பிரசாத் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் மே 2006-ல் எழுதியது (என்று நினைக்கிறேன்.) இங்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியான இட ஒதுக்கீடு வேண்டும் (இது தமிழகம் போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது) என்கிறார். பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் இடங்களை முன்னேறிய, நில உடைமை சாதிகளே கைப்பற்றும் என்கிறார்.

3. சந்திர பன் பிரசாத் எங்கெல்லாம் தடுமாறுகிறார் என்பதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார் ஷிவம் விஜ், நேபாளத்திலிருந்து வெளியாகும் ஹிமால் பத்திரிகையில் - செப்டம்பர் 2006. [ஷிவம் விஜ்ஜின் வலைப்பதிவு.]

தமிழகத்தைப் பொருத்தவரையில் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி என்னென்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்று எங்காவது வெளியாகியுள்ளதா?

[பி.கு: சந்திர பன் பிரசாத் எழுதிய கட்டுரைகளில் சுட்டிகள், www.ambedkar.org தளத்திலிருந்து]

பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டாகச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் இங்கு தலித்களால் தலைவர் பதவியை ஏற்க முடிந்ததில்லை. (நாட்டார்மங்கலத்தில் முதல் ஐந்து வருடங்கள் 1996-2001 ஒரு தலித் பஞ்சாயத் தலைவர் இருந்தார். அடுத்த ஐந்து வருடங்கள் இங்கும் மற்ற மூன்று இடங்களைப் போலவே நடந்துள்ளது.)

இந்த நான்கு கிராமங்களிலும் தலித் மக்கள் (முக்கியமாக பள்ளர்கள்?) 10%-க்கும் குறைவானவர்கள். பெரும்பான்மை மக்கள் முக்குலத்தோர் சாதியான கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் அனைவருமே கள்ளர் இனத்தோரின் வயல்களில் வேலை செய்பவர்களாகவும் ஜீவிதத்துக்கு கள்ளர்களை நம்பி இருப்பவர்களாகவும் உள்ளனர்.

1996 முதற்கொண்டு இந்த கிராமங்களில் நடக்கும் தேர்தல், இடைத் தேர்தல்களின்போது

1. போட்டியிட விரும்பும் தலித்கள் மிரட்டப்பட்டுள்ளனர், தடுக்கப்பட்டுள்ளனர்.
2. கள்ளர்களிடம் வேலை செய்யும் தலித்கள் போட்டியில் இறக்கிவிடப்பட்டு ஜெயித்த ஒரு நாளைக்குள்ளாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
3. மர்மமான முறையில் போட்டியில் நின்ற ஒரு தலித் இறந்துள்ளார். (நரசிங்கம்)
4. அநியாயத்தை எதிர்க்கக்கூடிய சில தலித் குடும்பங்கள் கிராமத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் தலித்களுக்கு எப்படி பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒதுக்கிவைக்கலாம் என்று இங்குள்ள கள்ளர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். மேலும் பஞ்சாயத்து தலைவர்தான் ஊர்க்கோயில் அறங்காவலராகவும் இருக்கவேண்டும் என்ற ஓர் ஐதீகம் இருப்பதால் ஒரு தலித் கோயில் அறங்காவலராக இருப்பது 'தெய்வ குற்றம்' ஆகும் என்ற அபத்தமான கருத்தையும் ஊர் மக்கள் வலியுறுத்துகிறார்களாம்.

அரசியல்ரீதியாக இந்த நான்கு கிராமங்களிலும் இட ஒதுக்கீட்டை மாற்ற அரசு முயற்சி செய்யலாம் என்ற தகவல் கிடைத்ததால் பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவோம் என்று சொல்ல, இந்த நான்கு கிராமங்களிலும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று அரசு சென்ற வாரம் அறிவித்தது.

ஆனால் இன்னமும் பல அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பிரச்னையில் எவ்வாறு ஈடுபடுவது என்று புரியவில்லை. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்கள் கள்ளர்கள் என்பதால் இங்கு ஆதரவு பார்வர்ட் பிளாக், அஇஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்குத்தான். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியோருக்கு ஆதரவு மிகக்குறைவு.

பார்வர்ட் பிளாக் தமிழகத்தைப் பொருத்தவரை முக்குலத்தோர் ஜாதிக்கட்சி. எனவே அவர்கள் தலித் ஆதரவு நிலையை எடுக்க மாட்டார்கள். திமுக, அஇஅதிமுக ஆகியவை சென்னையில் ஒருமாதிரியும் மதுரை மாவட்டத்தில் வேறுமாதிரியுமான நிலையைத்தான் எடுக்க முனைவார்கள்.

எனவே சென்ற சில வருடங்களில் நிகழ்ந்த கோமாளிக்கூத்தே வரும் வருடங்களிலும் தொடரும்.

இதனை ஒரேயடியாக மாற்ற முடியாது; இது கள்ளர் சாதியினர் மனம் சம்பந்தப்பட்டது என்றாலும் அரசு சிலவற்றைச் செய்யலாம்.

1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

மொத்தத்தில் economic embargo.

இந்தக் கஷ்டங்களிலிருந்து தலித்கள் தப்பிக்க அரசு அவர்களுக்கு மாதாமாதம் வாழ்வுக்குத் தேவையான உதவித்தொகை வழங்கும். அரசு இந்த கிராமங்களில் சிறப்புக் காவல்நிலையங்களை ஏற்படுத்தி, அதற்கு வெளி நகரங்களிலிருந்து காவலர்களை நியமித்து தலித்கள்மீது தாக்குதல் நடைபெறாவண்ணம் காப்பாற்றும்.

2. இந்த நான்கு பஞ்சாயத்துகளில் ஏதாவது ஒன்று தலித் ஒருவரை தலைவராகக் கொண்டு நடக்க ஏற்றுக்கொண்டால், அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகமான அளவு வசதிகள் செய்துதரப்படும். சாதாரணமாக ஒதுக்கப்படும் நிதி அளவு இரட்டிப்பாக்கப்படும். இங்கு வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் அரசு வேலைகளில் முன்னுரிமை முதற்கொண்டு பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இது வலிந்து செய்யப்படும் social re-engineering. ஆனால் இதைச் செய்யாமல் சென்னையில் கொடிபிடித்துப் போராடினால் யாருக்கும் பயன் கிடையாது. 'ஏதோ, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துவிட்டோம்' என்று கட்சிகள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு விழா எடுக்க மட்டுமே இந்த அடையாளப் போராட்டங்கள் உதவும்.

27 ஆகஸ்ட் 2006: Pappapatti, Keeripatti to stay reserved
29 ஆகஸ்ட் 2006: Parties welcome Government move
2 செப்டம்பர் 2006: தி ஹிந்துவில் ஒரு செய்தி அலசல் வந்திருந்தது. ஆனால் ஆன்லைனில் கண்டுபிடிக்க முடியவில்லை.

Friday, September 01, 2006

'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' நூல் வெளியீடு

இன்று மாலை (1-9-2006) 6.00 மணி அளவில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஈழ எழுத்தாளரான செங்கை ஆழியான் (டாக்டர் கே.குணராசா) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பாக 'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' என்னும் நூல், மித்ர வெளியீடாக வெளியிடப்பட உள்ளது.

நூலை கவிஞர் த. பழமலய் வெளியிட, நான் பெற்றுக்கொள்கிறேன்.

நிகழ்வுக்கு அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். ஆசிரியரைப் பற்றிய அறிமுகத்தை யாழூர் துரை வழங்குகிறார். 'மித்ர' எஸ்.பொ உரையாடுகிறார்.

புத்தகத்தின்மீதான ஆய்வுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன், பத்மாவதி விவேகானந்தன், பா.ரவிக்குமார், மணா, வைகைச்செல்வி, நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் படைக்கின்றனர். நூலாசிரியர் செங்கை ஆழியான் ஏற்புரை, பின்னர் நன்றியுரை என்று நீண்ட நிகழ்ச்சி.

ஆயிரமாயிரம் ஆண்டுகள்


செங்கை ஆழியானின் இரண்டு நூல்கள் இணையத்தில் நூலகம் எனுமிடத்தில் மின் நூல்களாகக் கிடைக்கின்றன. முற்றத்து ஒற்றைப் பனை | சித்திரா பௌர்ணமி