வெள்ளி மாலை செங்கை ஆழியானின் புத்தக வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன்.
விழா அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த அனைவரும் வந்திருந்தனர். ஆசிரியர் குணராசாவைத் தவிர. யாழ்ப்பாணத்தில் இப்பொழுது கடும் போர் நடந்துகொண்டிருக்கிறது. தரைவழிப்பாதை மூடப்பட்டுவிட்டது. கப்பல் வழியாக அந்நிய நாட்டவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் பழமலய் இருவரும் புத்தகத்தில் உள்ள கதைகளைப் பற்றியும் ஈழத்தமிழ் சொல்லாடலைப் பற்றியும் மட்டுமே பேசினர். எஸ்.ராமகிருஷ்ணன் ஈழ இலக்கியம் தமிழகத்தில் அதிகம் தெரியப்படாமல் இருப்பதைப் பற்றி வருத்தத்துடன் பேசினார். "ஜன்னலைத் திறந்து வைத்தால் கடல் தெரிகிறது. கடல் வழியாக ஈழத்தில் விளக்கு எரிவது தெரிகிறது. ஆனால் இங்கு மக்கள் மனத்தை மூடிவைத்துள்ளனரே" என்றார். செங்கை ஆழியானுடைய தொகுப்பைப் பொருத்தவரையில் ராமகிருஷ்ணன் கூரிய விமரிசனத்தை முன்வைத்தார். "செ.யோகநாதன், செங்கை ஆழியான் போன்றவர்கள் வாழ்க்கை மீதான அவதானிப்புகளை வைக்கிறார்களே ஒழிய, அதன்மீதான விமரிசனங்களை வைப்பதில்லை. கூர்மையான அவதானிப்புகளை வைப்பதோடு எழுத்தாளனின் பணி முடிந்துபோய்விடுகிறது என்று எண்ணுபவர்கள்" என்றார்.
பத்மாவதி விவேகானந்தன் அகடெமிகலாக எதோ பேசினார். தலித் இலக்கியத்தின் தந்தை டேனியல் என்றும் இலங்கையில் மூன்று பெரும் பிரிவாக - முற்போக்கு, நற்போக்கு, பொழுதுபோக்கு - இலக்கியம் உள்ளது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், முற்போக்கு இலக்கியம் என்றால் அது நற்போக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பினார். (இதற்கு பின்னால் எஸ்.பொ பதில் சொன்னார்.)
காந்தளகம் சச்சிதானந்தன் குணராசாவை நன்கு தெரிந்தவர். அவர் குணராசாவைப் பற்றிப் பேசினார். சிங்கள ஆட்சியாளர்கள்மீது ஈழத்தமிழ் மக்களுக்கு பெருத்த அதிருப்தி இருந்த நேரத்தில் குணராசா போன்றவர்கள் அரசு நிர்வாகச் சேவையில் இருந்தனர் என்றும் அதனால் மிகவும் கவனமாக கம்பியில் நடப்பதைப்போன்ற நிலையில் இருக்கவேண்டியிருந்தது என்றும் சொன்னார். குணராசா நிலவரை (map) நிபுணர் என்றும் இன்றும் இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது குணராசா வரைந்து கொடுத்த நிலவரை படங்களே என்றும் சொன்னார்.
ஒருமுறை கி.வா.ஜகனாதன் ஈழ இலக்கியங்களுக்கு அடிக்குறிப்பு கொடுக்கவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்து அது ஈழ எழுத்தாளர்களை மிகவும் வருத்தமுறச் செய்தது என்றார். ஈழத்தமிழ் என்று தனியான தமிழ் ஒன்றும் இல்லை. ஈழத்தவர் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் பழந்தமிழ் அகராதிகளில் உள்ள சொற்கள்தான் என்றும் தமிழகத் தமிழர்கள்தாம் அந்தச் சொற்களை மறந்துபோய்விட்டனர் என்றும் சொன்னார். ('நுளம்பி' போன்ற சில சொற்களைப் பற்றிப் பேசும்போது சொன்னது.)
சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள 'ஈழத்து பூதந்தேவனார்' பற்றியும் ஆங்காங்கே சில விவாதங்கள் எழுந்தன.
காலம் அதிகமாகிவிட்டபடியாலே வைகைச்செல்வி, நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் 2 நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
பா.ரவிக்குமார் ஒருவர்தான் அரசியலைப் பற்றிப் பேசினார். செஞ்சோலைத் தாக்குதல், இலங்கை அரசு NGO அமைப்பின் ஊழியர்களை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்துக் கொன்றது, வேலுப்பிள்ளை பிரபாகரன் எவ்வளவு சாமர்த்தியமானவர், பிபிசி ஆனந்தி பிரபாகரனின் பேட்டியின்போது தமிழ்ச்செல்வனின் சாதியைப் பற்றி அடிக்கோடிட்டது, அதற்கு பிரபாகரனின் கோபமான பதில், இப்பொழுது நடக்கும் சண்டை 'இறுதிப் போர்' என்று பலவற்றைப் பற்றிப் பேசினார்.
முடிவில் எஸ்.பொ பேசும்போது "நற்போக்கு இலக்கியம் = முற்போக்கு இலக்கியம் - (கைலாசபதி + சிவத்தம்பி)" என்ற சமன்பாட்டையும் (is equal to, bracket என்று இதே வடிவில் சொன்னார்), டேனியல் தலித் இலக்கியத்தின் தந்தை கிடையாது, அவர் முன்னிறுத்தும் சாதிக்கு எதிராகத்தான் பல போராட்டங்கள் நடந்தன என்றும் சொன்னார். (எனக்கு டேனியல் எழுத்திலும் யாழ்ப்பாண சாதிப் பிரச்னைகளிலும் எந்தப் பரிச்சயமும் இல்லை, அதனால் என்ன சொல்லப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் நான் இல்லை.)
பலருக்கும் நன்றி அறிவித்தலுடன் விழா முடிவுற்றது.
விழா நடக்கும்போதே நான் பெற்ற புத்தகத்திலிருந்து பல கதைகளைப் படித்து முடிந்துவிட்டேன். முடிந்தால் புத்தகம் பற்றிய என் கருத்துகளை வரும் நாள்களில் எழுதுகிறேன்.
ஆலயம்
1 day ago
பத்ரி,
ReplyDeleteநல்ல பதிவு. செங்கை ஆழியானைப் பற்றி ஈழத்து வலைப்பதிவர் நண்பர் கானா பிரபா அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஓர் பதிவு போட்டிருந்ததாக ஞாபகம். அவரின் பதிவு மூலம் தான் நான் செங்கை ஆழியான் பற்றி அறிந்திருந்தேன். அவரின் படைப்புக்களை இதுவரை படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.
// ஈழத்தமிழ் என்று தனியான தமிழ் ஒன்றும் இல்லை. ஈழத்தவர் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் பழந்தமிழ் அகராதிகளில் உள்ள சொற்கள்தான் என்றும் தமிழகத் தமிழர்கள்தாம் அந்தச் சொற்களை மறந்துபோய்விட்டனர் என்றும் சொன்னார்.//
இக் கருத்தோடு நான் முழுக்க முழுக்க உடன்படுகிறேன். ஏனோ தெரியவில்லை தமிழகத் தமிழில் வடமொழியின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் , ஈழத்தில் எம்மினம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் புழங்கிய சொற்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக , பறைதல் எனும் சொல். பறைதல் என்பது பழம் தமிழ்ச் சொல். அச் சொல் இன்று ஈழத்திலும், கேரளாவிலும் தான் புழக்கத்தில் உள்ளது. தற்போதைய கேரளா பண்டைய சேர நாட்டுப் பகுதி என்பது வரலாறு.
//எனக்கு டேனியல் எழுத்திலும் யாழ்ப்பாண சாதிப் பிரச்னைகளிலும் எந்தப் பரிச்சயமும் இல்லை, அதனால் என்ன சொல்லப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் நான் இல்லை.)//
எனக்கும் டானியல் அவர்களின் எழுத்துகளில் பரிச்சயம் இல்லை. ஈழத்துச் சாதியமைப்பு தமிழகச் சாதி முறைகளைப் போல் மிகவும் மோசமானதல்ல என்றே நினைக்கிறேன். தற்போது ஈழத்தில் சாதிப் பிரச்சனை அருகி வருகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
பத்ரி,
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. படிக்கச் சுவையாக இருந்தந்து. பல நிகழ்வுகளுக்குப் போய்வருகிறீர்கள் போலும். பேச வந்தவர்கள் பல விடயங்களைத் தொட்டுச் செல்கிறார்கள். அத்தோடு தமிழீழத் தமிழ் வழக்கு உண்மையிலே யாழ் வழக்கு, மட்டு வழக்கு என்று ஒரு வட்டார வழக்குகளின் தொகுப்பு. தமிழக வட்டார வழக்குகள் போல் தான் அதுவும் இன்னொரு வழக்கு. நுளம்பு (நுளம்பி இல்லை:) என்பது சில சங்க இலக்கியகளில் நானும் கண்டிருக்கிறேன்.
//எஸ்.ராமகிருஷ்ணன் ஈழ இலக்கியம் தமிழகத்தில் அதிகம் தெரியப்படாமல் இருப்பதைப் பற்றி வருத்தத்துடன் பேசினார். "ஜன்னலைத் திறந்து வைத்தால் கடல் தெரிகிறது. கடல் வழியாக ஈழத்தில் விளக்கு எரிவது தெரிகிறது. ஆனால் இங்கு மக்கள் மனத்தை மூடிவைத்துள்ளனரே" என்றார்//
ReplyDeleteஇந்தப் பகிடி நல்ல பகிடி.
எஸ்.ராமகிருஷ்ணன் விகடனில் ஒரு தொடர் எழுதினார்.கதாவிலாசம் தொடர் அதில் மொத்தம் ஐம்பது சிறுகதையாளர்களையும் அவர்களுடைய சிறுகதை ஒன்றையும் அறிமுகம் செய்தார்.ஐம்பதிலே ஒன்றுகூட ஈழத்துச் சிறுகதை இல்லை.
நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டுவிட்டார்களே என்பதற்காக இப்படிச் சொல்லக் கூடாது.
எஸ்.ராவை.... /நிகழ்ச்சிக்குக்கூப்பிட்டுவிட்டார்களே என்பதற்காக இப்படிச் சொல்லக் கூடாது./
ReplyDeleteஈழநாதன் சொன்ன அதேதான் :-).
என் ஆதர்ஷ எழுத்தாளரைப் பற்றிய பதிவுக்கு என் நன்றிகள்.
ReplyDeleteஇன்றுதான் பார்த்தேன்