Sunday, September 03, 2006

பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டாகச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் இங்கு தலித்களால் தலைவர் பதவியை ஏற்க முடிந்ததில்லை. (நாட்டார்மங்கலத்தில் முதல் ஐந்து வருடங்கள் 1996-2001 ஒரு தலித் பஞ்சாயத் தலைவர் இருந்தார். அடுத்த ஐந்து வருடங்கள் இங்கும் மற்ற மூன்று இடங்களைப் போலவே நடந்துள்ளது.)

இந்த நான்கு கிராமங்களிலும் தலித் மக்கள் (முக்கியமாக பள்ளர்கள்?) 10%-க்கும் குறைவானவர்கள். பெரும்பான்மை மக்கள் முக்குலத்தோர் சாதியான கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் அனைவருமே கள்ளர் இனத்தோரின் வயல்களில் வேலை செய்பவர்களாகவும் ஜீவிதத்துக்கு கள்ளர்களை நம்பி இருப்பவர்களாகவும் உள்ளனர்.

1996 முதற்கொண்டு இந்த கிராமங்களில் நடக்கும் தேர்தல், இடைத் தேர்தல்களின்போது

1. போட்டியிட விரும்பும் தலித்கள் மிரட்டப்பட்டுள்ளனர், தடுக்கப்பட்டுள்ளனர்.
2. கள்ளர்களிடம் வேலை செய்யும் தலித்கள் போட்டியில் இறக்கிவிடப்பட்டு ஜெயித்த ஒரு நாளைக்குள்ளாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
3. மர்மமான முறையில் போட்டியில் நின்ற ஒரு தலித் இறந்துள்ளார். (நரசிங்கம்)
4. அநியாயத்தை எதிர்க்கக்கூடிய சில தலித் குடும்பங்கள் கிராமத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் தலித்களுக்கு எப்படி பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒதுக்கிவைக்கலாம் என்று இங்குள்ள கள்ளர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். மேலும் பஞ்சாயத்து தலைவர்தான் ஊர்க்கோயில் அறங்காவலராகவும் இருக்கவேண்டும் என்ற ஓர் ஐதீகம் இருப்பதால் ஒரு தலித் கோயில் அறங்காவலராக இருப்பது 'தெய்வ குற்றம்' ஆகும் என்ற அபத்தமான கருத்தையும் ஊர் மக்கள் வலியுறுத்துகிறார்களாம்.

அரசியல்ரீதியாக இந்த நான்கு கிராமங்களிலும் இட ஒதுக்கீட்டை மாற்ற அரசு முயற்சி செய்யலாம் என்ற தகவல் கிடைத்ததால் பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவோம் என்று சொல்ல, இந்த நான்கு கிராமங்களிலும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று அரசு சென்ற வாரம் அறிவித்தது.

ஆனால் இன்னமும் பல அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பிரச்னையில் எவ்வாறு ஈடுபடுவது என்று புரியவில்லை. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்கள் கள்ளர்கள் என்பதால் இங்கு ஆதரவு பார்வர்ட் பிளாக், அஇஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்குத்தான். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியோருக்கு ஆதரவு மிகக்குறைவு.

பார்வர்ட் பிளாக் தமிழகத்தைப் பொருத்தவரை முக்குலத்தோர் ஜாதிக்கட்சி. எனவே அவர்கள் தலித் ஆதரவு நிலையை எடுக்க மாட்டார்கள். திமுக, அஇஅதிமுக ஆகியவை சென்னையில் ஒருமாதிரியும் மதுரை மாவட்டத்தில் வேறுமாதிரியுமான நிலையைத்தான் எடுக்க முனைவார்கள்.

எனவே சென்ற சில வருடங்களில் நிகழ்ந்த கோமாளிக்கூத்தே வரும் வருடங்களிலும் தொடரும்.

இதனை ஒரேயடியாக மாற்ற முடியாது; இது கள்ளர் சாதியினர் மனம் சம்பந்தப்பட்டது என்றாலும் அரசு சிலவற்றைச் செய்யலாம்.

1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

மொத்தத்தில் economic embargo.

இந்தக் கஷ்டங்களிலிருந்து தலித்கள் தப்பிக்க அரசு அவர்களுக்கு மாதாமாதம் வாழ்வுக்குத் தேவையான உதவித்தொகை வழங்கும். அரசு இந்த கிராமங்களில் சிறப்புக் காவல்நிலையங்களை ஏற்படுத்தி, அதற்கு வெளி நகரங்களிலிருந்து காவலர்களை நியமித்து தலித்கள்மீது தாக்குதல் நடைபெறாவண்ணம் காப்பாற்றும்.

2. இந்த நான்கு பஞ்சாயத்துகளில் ஏதாவது ஒன்று தலித் ஒருவரை தலைவராகக் கொண்டு நடக்க ஏற்றுக்கொண்டால், அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகமான அளவு வசதிகள் செய்துதரப்படும். சாதாரணமாக ஒதுக்கப்படும் நிதி அளவு இரட்டிப்பாக்கப்படும். இங்கு வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் அரசு வேலைகளில் முன்னுரிமை முதற்கொண்டு பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இது வலிந்து செய்யப்படும் social re-engineering. ஆனால் இதைச் செய்யாமல் சென்னையில் கொடிபிடித்துப் போராடினால் யாருக்கும் பயன் கிடையாது. 'ஏதோ, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துவிட்டோம்' என்று கட்சிகள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு விழா எடுக்க மட்டுமே இந்த அடையாளப் போராட்டங்கள் உதவும்.

27 ஆகஸ்ட் 2006: Pappapatti, Keeripatti to stay reserved
29 ஆகஸ்ட் 2006: Parties welcome Government move
2 செப்டம்பர் 2006: தி ஹிந்துவில் ஒரு செய்தி அலசல் வந்திருந்தது. ஆனால் ஆன்லைனில் கண்டுபிடிக்க முடியவில்லை.

21 comments:

  1. //இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும். தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. மொத்தத்தில் economic embargo.//

    நிச்சயமாக செய்யப்பட வேண்டும். ஆனால் ஓட்டுக்களை நம்பியுள்ள அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். ஒரு கிராமத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அந்த ஜாதிக்கு எதிரான செயலாக மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்யப்படும். ஆட்சியில் உள்ளோர் கதி அதோகதிதான்.

    ReplyDelete
  2. //1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

    தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

    மொத்தத்தில் economic embargo.//
    நிச்சயமாக இது செய்தால் நன்மை கிடைக்கும், இதே மாதிரியான தீர்வைத்தான் நானும் நண்பர்களுடன் பேசும்போது சொல்லியிருந்தேன்....

    ReplyDelete
  3. 2. சாத்தியம்

    1. நீங்கள் எழுதினீர்களென்று நம்ப முடியவில்லை.

    இப்படி ஒரு அரசாங்கம் குடிமக்களின் மேல்
    embargo செய்வது தவறு.

    ReplyDelete
  4. தருமியின் பதிவைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ஒரு ஊரை சட்டத்தின் கீழ் கொண்டுவர ஏதாவது சட்டம் இருக்கிறதா எனத் தெரியவில்லை?

    தலித் மெஜாரிட்டி இருக்கும் தொகுதிகளுக்கு இட ஒதுக்கீட்டை அளிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

    at least a sizeable number should be there in the constituancy.

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    Do we have that amount of political
    will?

    ReplyDelete
  6. ஆதிரை: எம்பார்கோ - ஏன் செய்யக்கூடாது? அரசு தவறு செய்யும் தனிமனிதனைத் தண்டிக்கிறது. தன் சட்டங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களைத் திருத்த, மாற்ற, சில முயற்சிகளை மேற்கொள்கிறது. எனவே இதைப்பற்றி முதலில் பேசவேண்டும். பயந்து அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொண்டால் இந்தக் கடினமான முடிவை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை.

    சிறில்: தலித் மெஜாரிட்டி ஊர்கள் - இப்படிப் பார்த்தால் எந்த ஊருமே கிடைக்காது. எல்லா ஊர்களிலும் தலித் மக்கள் 25%-30% எண்ணிக்கைக்கு மேல் போகமாட்டார்கள். எந்தவொரு பஞ்சாயத்து, சட்டமன்றத் தொகுதி, நாடாளுமன்றத் தொகுதியை எடுத்துக்கொண்டாலும் அங்கு தலித்கள் 50% என்று இருப்பதில்லை. அப்படியும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது; நடந்து வருகிறது. கிராமப் பஞ்சாயத்துகளிலேயே பல இடங்களில் தலித்கள் எண்ணிக்கை குறைவாக (25% அல்லது குறைவு) இருந்தும், அங்கும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த விஷயத்தைப் பொருத்தவரை பிரச்னை 4 இடங்களில் மட்டும்தான். எனவே அதிரடியான சில நடவடிக்கைகள் தேவை.

    சிவஞானம்: 'பொலிடிகல் வில்' உள்ளதோ இல்லையோ, சொல்லித்தான் பார்ப்போமே?

    ReplyDelete
  7. பத்ரி, இது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ குமுதத்துக்கு தெரியாத கிராமங்கள் மிக மோசமான அடக்குமுறைகளின் களங்களாக இருந்துவருகின்றன.

    இந்தியாவில் ஒரு நாள்கூட நான் வாழ்ந்தது கிடையாது. ஆனால் இப்படியான செய்திகள் வரும்போது நான் ஒன்றைமட்டும் யோசிக்கிறேன்.

    இந்தியா ஒரு வல்லரசு. உலகின் குறிப்பிடத்தக்க அளவு பெரிய படைபலத்தை கொண்டுள்ள நாடு. திறமை மிக்க பல தலைவர்களை கொண்டுள்ள நாடு.

    காஷ்மீரத்தில் , அஸ்ஸாமில், நக்சல்பாரி பிரதேசங்களில் எல்லாம் பயங்கரவாதத்தை(?) ஒடுக்க தன் ராணுவத்தை அதி தீவிரமாக பயன்படுத்தும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நாடு. பக்கத்து நாடுகளில் கூட ராணுவத்தலையீடு செய்யும் நாடு.

    மேல்சாதி ஒன்று , அதிகார வர்க்கம் ஒன்று அரச ஆணையை மீறி, அரசின் கொள்கையை மீறி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின்மீது இப்படி வெளிப்படையாகவே பயங்கரவாதத்தை புரிகிறதே, இதை ஏன் அரசு கண்டுகொள்வதில்லை? இந்த பயங்கரவதிகளை ஏன் ராணுவக்கரம் கொண்டு ஒடுக்கி, ஒடுக்கப்பட்டவர்களின் நீதியை மீட்டெடுப்பதில்லை?

    ஒடுக்கப்பட்டவர்கள் போராடினால் மட்டும் பொலிசையும் ராணுவத்தையும் ஏவி நசுக்குகிறது?

    ஏன் இந்த பாரபட்சம்? உயர்சாதியினர் செய்யும் அட்டகாசங்களை கண்ணைமூடி பார்த்துக்கொண்டிருக்கும் அரச ராணுவ கட்டமைப்புக்கு, ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதப்போராட்டங்கள் ஏன் கண்ணை உறுத்துகிறது?

    ஏன்?

    இந்தியா ஒரு ஜனனாயக நாடா? உண்மையாகவே?

    ReplyDelete
  8. இவர்களாகவே ஒரு தலித்தை தேர்தலில் நிற்க வைத்து அப்புறம்
    ராஜினாமா செய்ய வைக்கிறார்கள். சட்டப்படி இது தவறு என்று சொல்ல முடியாது.
    இவர்கள் சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.
    அதனால் இவர்களை சர்வாதிகாரம் செய்தாலும் தவறில்லைதான்.

    அதற்காக தண்ணீர் கட் செய்வேன் என்று சொல்ல முடியுமா?

    நிலங்களை அரசாங்கம் எடுத்து மறு வினியோகம் செய்யும்
    என்று கூட சொல்லலாம்.


    திமுகவும் அதிமுகவும் நிச்சயம் இப்படி செய்யாது. அதுவும்
    தெரிந்ததே.

    ReplyDelete
  9. //மேல்சாதி ஒன்று , அதிகார வர்க்கம் ஒன்று அரச ஆணையை மீறி, அரசின் கொள்கையை மீறி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின்மீது இப்படி வெளிப்படையாகவே பயங்கரவாதத்தை புரிகிறதே, இதை ஏன் அரசு கண்டுகொள்வதில்லை? இந்த பயங்கரவதிகளை ஏன் ராணுவக்கரம் கொண்டு ஒடுக்கி, ஒடுக்கப்பட்டவர்களின் நீதியை மீட்டெடுப்பதில்லை?//

    இந்தியா என்ன ஹிட்லர் ஆட்சி புரியும் நாடா, தன் மக்கள் மீது ராணுவத்தை ஏவி விட?ராணுவத்தை ஏவி கிராமமக்களை பஞ்சாயத்து தலைவருக்கு ஓட்டு போடும்படி மிரட்ட சொல்லுகிறீர்களா?

    ஜனநாயகத்தில் எந்த பிரச்சனைக்கும் அமைதி வழியில் தான் தீர்வு காணப்படவேண்டும்.வன்முறை உடனடி பலனை தந்தாலும் நாள்போக்கில் மேலும் வன்முறைக்கே வித்திடும்.

    //தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

    மொத்தத்தில் economic embargo.//

    அஜித் படத்தில் சொல்வது போல் இருக்கிறது.ஜனநாயகத்தில் அப்படி எல்லாம் செய்ய எந்த அரசுக்கும் உரிமை இல்லை.தண்ணீர் கிடைக்காமல் மக்கள் செத்தால் பதில் சொல்வது யார்?

    கல்வி அறிவின்மையால் நடக்கும் முட்டாள்தனம் இது.ஜனநாயகத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பெரும்பான்மை ஆதிக்க சாதி தலித்துகள் மீது வன்முறையை செலுத்துகிறது.அந்த கிராம தலித்துகள் அனைவருக்கும் இலவச நிலம் வழங்கி கள்ளர்களுக்கு மேம்பட்ட பொருளாதார,கல்வி வசதிகளை அளித்தால் நிலைமை மாறிவிடும்.

    விவசாய கூலிகளாக இருப்பதால் தானே அவர்கள் பயப்படுகிரார்கள்?தலைக்கு இரண்டு ஏக்கர் தருகிரேன் என்ற அரசு,இந்த கிராமத்து தலித்துகளுக்கு மட்டும் 10 ஏக்ரா நஞ்சை நிலமாக தரட்டும்.தலித் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி அளிக்கட்டும்.10 ஆண்டுகளில் தலித்துகள் மேலே வந்துவிடுவார்கள்.அப்புரம் நிரந்தரமாக அவர்கள் தான் ராஜா.

    ReplyDelete
  10. செல்வன்: "ஜனநாயகத்தில் அப்படி எல்லாம் செய்ய எந்த அரசுக்கும் உரிமை இல்லை. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் செத்தால் பதில் சொல்வது யார்?" என்று கேட்டுள்ளீர்கள். இது உண்மையில்லை. அரசு இப்பொழுதே சரியான தரத்தில் தண்ணீரைப் பல குடியிருப்புகளுக்குத் தருவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் குடிசைகள் பலவும் சரியான தண்ணீர் வசதி இல்லாமல்தான் உள்ளன.

    தண்ணீர் வரி கட்டாத வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அதை கோர்ட்டுக்குக் கொண்டு செல்வதற்கு முன்னால் தண்ணீர் வரியைக் கட்டவேண்டும். அரசு தரும் மான்யங்கள் சில கட்டுப்பாடுகளுடன்தான் இயங்கும். No objection certificate இல்லாவிட்டால் விவசாயிகளால் மீண்டும் கடன் வாங்க இயலாது.

    தண்ணீர் கிடைக்காமல் மக்கள் செத்தால் யார் பதில் சொல்வது என்று கேட்கிறீர்கள். அதைப்போலத்தான் தலித்களுக்கு சரியான வாழ்க்கையுரிமை இல்லாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கும்தான் அரசு பதில் சொல்லவேண்டும்.

    தலித்துகளுக்கு பத்து ஏக்கர் நிலமும் இலவச உயர்கல்வியும் அளிக்கச் சொல்கிறீர்கள். நிச்சயம் செய்யவேண்டும். ஆனால் தமிழகத்தில் இன்றுவரை நிலச் சீர்திருத்தம் உருப்படியாக நடந்ததில்லை. இந்த கிராமங்களில் எங்கே பல பத்து ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளன? இருந்தால்தானே அள்ளிக்கொடுப்பதற்கு? ஒருவேளை நஞ்சை நிலங்கள் இருந்தாலும் தலித்களுக்கு அரசியல் உரிமை இல்லாவிட்டால் நாளைக்கு வாய்க்காலில் தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமே. இதையெல்லாம் எதிர்கொள்ள கல்வியுடன் சட்ட பயத்தையும் கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் நாம் பேசிக்கொண்டுதான் இருப்போம். செயலில் இறங்கமாட்டோம்.

    ReplyDelete
  11. "ஜனநாயகத்தில் அப்படி எல்லாம் செய்ய எந்த அரசுக்கும் உரிமை இல்லை. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் செத்தால் பதில் சொல்வது யார்?" என்று கேட்டுள்ளீர்கள். இது உண்மையில்லை. அரசு இப்பொழுதே சரியான தரத்தில் தண்ணீரைப் பல குடியிருப்புகளுக்குத் தருவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் குடிசைகள் பலவும் சரியான தண்ணீர் வசதி இல்லாமல்தான் உள்ளன.//

    பத்ரி,

    நீங்கள் சொல்வது இருக்கும் தண்ணீர் வசதியை பிடுங்கு என்பது.அதுவும் தண்ணிர் வசதி செய்து தராமல் இருக்கும் அரசின் கையாலாகத்தனமும் ஒன்றல்ல.

    //தண்ணீர் கிடைக்காமல் மக்கள் செத்தால் யார் பதில் சொல்வது என்று கேட்கிறீர்கள். அதைப்போலத்தான் தலித்களுக்கு சரியான வாழ்க்கையுரிமை இல்லாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கும்தான் அரசு பதில் சொல்லவேண்டும்.//

    நிச்சயம் அரசுக்கு அந்த பொறுப்புணர்வும்,கடமையும் இருந்தாக வேண்டும்.இம்மாதிரி நிகழ்வுகள் நம் ஜனநாயகத்துக்கே அசிங்கம்.ஆனால் இப்பிரச்சனைக்கும் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதே நம் அரசியல் சட்டத்துக்கும்,அரசுக்கும் பெருமை சேர்க்கும்.

    //ஆனால் தமிழகத்தில் இன்றுவரை நிலச் சீர்திருத்தம் உருப்படியாக நடந்ததில்லை. இந்த கிராமங்களில் எங்கே பல பத்து ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளன? இருந்தால்தானே அள்ளிக்கொடுப்பதற்கு? ஒருவேளை நஞ்சை நிலங்கள் இருந்தாலும் தலித்களுக்கு அரசியல் உரிமை இல்லாவிட்டால் நாளைக்கு வாய்க்காலில் தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமே.//

    அந்த கிராமங்களில் தலித்துகள் கள்ளர்களின் பண்ணையில் வேலை பார்க்கிரார்கள் என்றால் அங்கே நிலம் இருக்கிரது என்றுதானே பொருள்?நிலமும்,கல்வியும் தந்தால் தலித்துகள் பொருளாதார நிலையில் உடனடியாக மேம்பட்டு விடுவார்கள்.அதன்பின் கள்ளர்கள் அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டிய சூழல் உருவாகும்.அப்போதுதான் அவர்களுக்கு உறைக்கும்:)

    உண்மையில் கல்வி அறிவின்மையாலும்,வேலைவாய்ப்பின்மையாலும் நடப்ப்து தான் இம்மாதிரி கொடுமைகள்.அங்கே பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டி அந்த பிரதேசத்துக்கே கல்வி அறிவை புகட்டினால் அடுத்த தலைமுறையாவது புத்தியோடு வளரும்.

    //இதையெல்லாம் எதிர்கொள்ள கல்வியுடன் சட்ட பயத்தையும் கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் நாம் பேசிக்கொண்டுதான் இருப்போம். செயலில் இறங்கமாட்டோம். //

    பயமூறுத்தி ஓட்டு போட வைத்து தலித்தை தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.ஆனால் மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் அவரால் செயல்பட முடியுமா?கள்ளர்களின் மனதில் அதன்பின் மேலும் ஜாதிவெறி அல்லவா வளரும்?மிரட்டி காரியம் சாதித்துகொண்டார்கள் என்று வைராக்கியம் வளர்ந்து காலாகாலத்துக்கும் அவர்கள் ஜாதிவெறியோடு தான் இருப்பார்கள்.

    நான் சொன்னது,நீங்கள் சொன்னது இரண்டில் எது காரிய சாத்தியம் என யோசித்து பாருங்கள்.விஷயம் அவ்வளவே.

    ReplyDelete
  12. //இந்தியா என்ன ஹிட்லர் ஆட்சி புரியும் நாடா, தன் மக்கள் மீது ராணுவத்தை ஏவி விட?
    //
    தன் மக்களின் மீது அரசாங்கம் அடக்குமுறையை ஏவுவதற்கு ஹிட்லர் தான் ஆட்சி செய்ய வேண்டுமென்பதில்லை, 1987ல் காவல்துறை வடமாவட்டங்களில் வன்னியசங்க போராட்டத்தின் போது நடத்திய வெறியாட்டங்கள், வாச்சாத்தி கிராமத்தில் நடந்த அரச வன்முறை இவைகள் தமிழ்நாட்டில், காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் இங்கெல்லாம் தம் மக்கள் மீதுதான் இராணுவம் ஏவப்பட்டது, அப்போதெல்லாம் ஹிட்லர் ஆட்சி புரியவில்லை

    //விவசாய கூலிகளாக இருப்பதால் தானே அவர்கள் பயப்படுகிரார்கள்?தலைக்கு இரண்டு ஏக்கர் தருகிரேன் என்ற அரசு,இந்த கிராமத்து தலித்துகளுக்கு மட்டும் 10 ஏக்ரா நஞ்சை நிலமாக தரட்டும்.தலித் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி அளிக்கட்டும்.10 ஆண்டுகளில் தலித்துகள் மேலே வந்துவிடுவார்கள்.அப்புரம் நிரந்தரமாக அவர்கள் தான் ராஜா.
    //
    செல்வன் மேலவளைவு கேள்விப்பட்டிருப்பீர்கள், அங்கே முருகேசன் உட்பட 6 தலித்கள் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனர், காரணம் தலித்தான அவர்கள் அங்கே பஞ்சாயத்து தலைவராக இருந்தார் என்பதுவே, கொலைசெய்யப்பட்ட இவர்கள் பிழைப்புக்காக அந்த ஊர் ஆதிக்க சாதியினரை நம்பி இருந்ததில்லை.... பிரச்சினை வெறும் பொருளாதாரத்தில் மட்டுமில்லை....

    ReplyDelete
  13. 1987ல் காவல்துறை வடமாவட்டங்களில் வன்னியசங்க போராட்டத்தின் போது நடத்திய வெறியாட்டங்கள், வாச்சாத்தி கிராமத்தில் நடந்த அரச வன்முறை இவைகள் தமிழ்நாட்டில், காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் இங்கெல்லாம் தம் மக்கள் மீதுதான் இராணுவம் ஏவப்பட்டது, அப்போதெல்லாம் ஹிட்லர் ஆட்சி புரியவில்லை//

    குழலி,

    அரச வன்முறை என்பது நாட்டின் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் அப்பாவிகளை கொல் என நேரடி உத்தரவு பிறப்பித்து,ராணுவம் அதை செய்வது.அதுவும் பெரிய அளவில் படுகொலைகள் அரசு உத்தரவின் பேரில் அப்பவிகளை குறிவைத்து நடக்க வேண்டும்.சும்மா என்கவுன்டரை எல்லாம் அரச வன்முறை என்றால் அப்புறம் அந்த சொல்லாடலுக்கே மரியாதை இல்லாமல் போய்விடும்.இது நீங்கள் சொன்ன உதாரணங்களில் எதற்கும் பொருந்தாது.மஞ்ச காமாலையை பிளட்கான்சர் என்று சொன்னால் அது டூ மச்.

    //அங்கே முருகேசன் உட்பட 6 தலித்கள் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனர், காரணம் தலித்தான அவர்கள் அங்கே பஞ்சாயத்து தலைவராக இருந்தார் என்பதுவே, கொலைசெய்யப்பட்ட இவர்கள் பிழைப்புக்காக அந்த ஊர் ஆதிக்க சாதியினரை நம்பி இருந்ததில்லை.... பிரச்சினை வெறும் பொருளாதாரத்தில் மட்டுமில்லை.... //

    வெறும் பொருளாதாரத்தை மட்டும் சொல்லவில்லை.கல்வி அறிவையும் சேர்த்துத்தான் தர சொல்லுகிறேன்.வேலைவெட்டியும்,படிப்பும் இருந்தால் ஜாதிக்கலவரம் வராது.

    ReplyDelete
  14. பத்ரி,

    ஒரு குறிப்பிட்ட ஊரை ரிஸர்வ்ட் தொகுதியாக அறிவிக்க அரசு எந்தவிதமான அளவுகோல்களை பயன்படுத்துகின்றது என்பது பற்றி சொல்லுங்களேன்.

    ReplyDelete
  15. 1987 Vanniyars attacked police,blocked traffic,damaged
    public property and indulged
    in violence.Was their agitation
    a non-violent one.Kuzhali should
    know that no state will keep quiet
    when violence is instigated by some
    elements.

    ReplyDelete
  16. //கல்வி அறிவின்மையால் நடக்கும் முட்டாள்தனம் இது.ஜனநாயகத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பெரும்பான்மை ஆதிக்க சாதி தலித்துகள் மீது வன்முறையை செலுத்துகிறது.அந்த கிராம தலித்துகள் அனைவருக்கும் இலவச நிலம் வழங்கி கள்ளர்களுக்கு மேம்பட்ட பொருளாதார,கல்வி வசதிகளை அளித்தால் நிலைமை மாறிவிடும்.
    //

    நிலம் எங்கேயிருந்து வரும்?

    தலித்துக்களின் தாழ்நிலையை ஒழித்து அவர்களை சுயமரியாதை கொள்ளச்செய்ய, அவர்களுக்கு நிலம் வேண்டும். அதுதான் அடிப்படை உண்மை. மேல்சாதிக்காரர்களுக்கு சமமாக அவர்கள் நிலம் வைத்திருக்க வேண்டும்.

    இந்த நிலம் வேறெங்கிருந்தும் வராது. பெரும் நிலவான்களாக இருக்கும் மேல்சாதிக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்வதன்மூலம் தான் நிலம் கிடைக்கும்.

    ஜனநாயக வழி, கல்வியறிவு கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் போன்ற வசதியான மேல்வர்க்க ஏட்டுப்பாடங்களை திரும்ப திரும்ப உருப்போட்டு பயனில்லை.


    சரியான வரலாற்று கண்ணோட்டமும் சரியான அரசியல் பார்வையும் உடையவர்கள், எல்லாவற்றையும் விட பிரச்சனைகளை நேர்மையாக அணுகுபவர்கள் இப்படி சாத்தியமில்லாத வெறும் வாய் சப்பல்களை செய்யமாட்டார்கள்.

    வன்முறையை வன்முறையால் எதிர்கொண்டு தோற்கடிப்பதே ஒரே வழி. வரலாறு திரும்ப திரும்ப இதையே நிரூபிக்கிறது.

    //no state will keep quiet
    when violence is instigated by some
    elements.

    //

    தலித்துக்கள் மீது மேல்சாதிக்காரர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வன்முறை இல்லை. அதையெல்லாம் அர்சு கண்டுகொள்ளாது.

    ஆனால் எதிர்ப்பு வந்து தலித்துக்கள் போராடதொடங்கினால் அது வன்முறை,. அதனைஒ அரசு இரும்புக்கரத்தால் அடக்கும்.
    என்னய்யா நீதி இது?

    இந்த அரசு, அரசாங்கம் எல்லாம் எப்போதும் மக்கள் சார்பானதல்ல. பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை சூத்திரமே, அதிகாரவர்க்கங்களுக்கு சார்பான அரசாங்கங்கள் ஆட்சிமுறைகள் அமைவதுதான்.


    அப்படியே வன்முறையற்ற இந்தியாவை இந்த் ரசு விரும்புமானால், தீவிர நிலச்சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தட்டுமே/

    நிலவுடைமை உச்சவரம்பு சட்டத்தை கொண்டுவந்து துப்பாக்கிமுனையில் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தட்டுமே

    நிலமனைத்தையும் மக்களுடைமையாக்கி, உழுபவனுக்கு நிலத்தை வழங்கட்டுமே.

    ஏன் இதையெல்லாம் ஓர் அரசால் செய்யமுடியாது?

    ஏனென்றால் பாராளுமன்ற ஜனநாயகமும் அதன் அரசும் எப்போதும் அதிகாரவர்க்கங்களுக்கு சார்பானது.

    இந்த நிரூபிக்கப்பட்ட உண்மையின் அடிப்படையில்தான் இறுதிமுடிவாக, தலித்துக்கள் ஆயுதம் ஏந்தவேண்டியதாகிறது.

    எல்லோரும் சம உரிமை பெறாதவரை அமைதி, சமாதானம் என்பதெல்லாம் போலிச் சுயநல வேஷங்கள்.

    இந்த போலி அமைதியில் இந்தியாவை மூழ்கடித்து, ஒடுக்கப்பட்டோர் மீது வசதியாக வன்முறைகள் நடப்பதை உக்குவிப்பதே செல்வன் போன்றவர்களுடைய கருத்தியலை உருவாக்கியவர்களுடைய ஆசை.

    ReplyDelete
  17. Land reforms have been truly implemented in only two states
    Kerala, W.Bengal due to the
    rule of communist parties.
    But mere land reforms wont
    solve all problems of Dalits.
    Mayuran is confused about
    Dalits and Vanniyars.

    ReplyDelete
  18. //ஜனநாயக வழி, கல்வியறிவு கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் போன்ற வசதியான மேல்வர்க்க ஏட்டுப்பாடங்களை திரும்ப திரும்ப உருப்போட்டு பயனில்லை.
    சரியான வரலாற்று கண்ணோட்டமும் சரியான அரசியல் பார்வையும் உடையவர்கள், எல்லாவற்றையும் விட பிரச்சனைகளை நேர்மையாக அணுகுபவர்கள் இப்படி சாத்தியமில்லாத வெறும் வாய் சப்பல்களை செய்யமாட்டார்கள். வன்முறையை வன்முறையால் எதிர்கொண்டு தோற்கடிப்பதே ஒரே வழி. வரலாறு திரும்ப திரும்ப இதையே நிரூபிக்கிறது. //

    மயூரன்

    இது ஈழமோ,ஆப்கானிஸ்தானோ,ஈராக்கொ அல்ல.இந்தியா.உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு.உலகுக்கு அஹிம்சையையும் தர்மத்தையும் கற்றுத்தந்தவர்கள்.கத்தியை தூக்கியவன் எவனும் கத்தியால் தான் செத்திருக்கிறான்.வரலாறு சொல்லும் பாடம் இதுதான்.கத்தியை தூக்கிய கம்யூனிஸ்டுகள் தாங்களும் கெட்டு,தங்கள் நாட்டையும் சேர்த்து கெடுத்தார்கள்.கத்தியை தூக்கிய ஈழத்தமிழர்கள் நிலை இன்று என்ன?வன்முறை என்பது முட்டாள்தனமான எதிர்வினையாகும்.வன்முரையால் சீரழியும் ஈராக்கையும்,இலங்கையையும் பாருங்கள்.எங்கள் மக்களுக்கும் அம்மாதிரி நிலை வரவேண்டுமா?

    கத்தியை தூக்குவது எளிது.கீழே போடுவது கடினம்.இந்தியாவில் நீதியின் சக்கரங்கள் மெதுவாகத்தான் சுழலும்.ஆனால் நின்றுவிடாது.

    அரசன் அன்று கொல்லாவிடினும் எங்கள் பாரதத்தாய் நின்று கொல்வாள்.

    ReplyDelete
  19. //உலகுக்கு அஹிம்சையையும் தர்மத்தையும் கற்றுத்தந்தவர்கள்.கத்தியை தூக்கியவன் எவனும் கத்தியால் தான் செத்திருக்கிறான்.வரலாறு சொல்லும் பாடம் இதுதான்.//

    காந்தி?

    ReplyDelete
  20. //Kuzhali should
    know that no state will keep quiet
    when violence is instigated by some
    elements. //

    Ravi srinivas should know that,
    Gujarat kept quiet when violence was instgated by hindutvaa elements

    ReplyDelete
  21. //உலகுக்கு அஹிம்சையையும் தர்மத்தையும் கற்றுத்தந்தவர்கள்.கத்தியை தூக்கியவன் எவனும் கத்தியால் தான் செத்திருக்கிறான்.வரலாறு சொல்லும் பாடம் இதுதான்.//

    காந்தி?

    -----------------------------------

    காந்தி, தேசமெனும் பிள்ளைக்கு உதிரத்தை பாலாக தந்த தாய்.

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறற்கு

    காந்தி அன்புடையார்.தன் என்பையும் தன் மக்களுக்கு கொடுத்தார்.தன்னுயிர் தந்து மன்னுயிர் வளர்த்தார்.

    அவர் விழவில்லை.எங்கள் நெஞ்சில் ஜனநாயகத்தையும்,சத்தியத்தையும்,தருமத்தையும் விதைத்த விதையானார்.

    இது காந்தி தேசம்.இங்கு வன்முறை எனும் விஷ விருட்சம் வளரவே வளராது.

    ReplyDelete