Wednesday, July 30, 2003

ஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீடும்

ஸ்டார் நியூஸ் ஹிந்தி செய்தித் தொலைக்காட்சி சானல் பற்றி அண்மையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசு உள்நாட்டிலிருந்து செய்தித் தொலைக்காட்சி சேவையை அளிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஒளிக்காட்சிகளை (video) செயற்கைக்கோள் மேலேற்றலுக்கான (satellite uplinking) அனுமதி தருவதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி எதாவது ஒரு நிறுவனம் உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றம் செய்ய விரும்பினால், அந்த நிறுவனத்தில் 26% க்கு மேல் வெளிநாட்டவர் முதலீடு செய்திருக்கக் கூடாது என்று வரையறுத்தது.

ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி சானல், ஆஸ்திரேலியாவில் பிறந்து தற்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான ரூப்பர்ட் மர்டாக் என்பவரில் கட்டுக்குள் இருக்கும் நியூஸ் கார்ப்பொரேஷன் என்னும் நிறுவனத்தினுடையது. இந்த தொலைக்காட்சி சானல் ஆரம்பித்தது முதல் மார்ச் 2003 வரை இதற்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) என்னும் பிரணாய் ராய் என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சியாளரின் நிறுவனம் ஆகும். ஆனால் ஏப்ரல் முதல் ஸ்டார் நிறுவனமே தனது வேலையாட்கள் மூலம் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தனர். இதற்கு பின்னர் தான் அரசின் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த விதிமுறை வெளியானவுடன், மத்திய அரசு இந்த விதிமுறைகளுகளோடு ஒத்திசையுமாறு ஸ்டார் நிறுவனத்துக்கு மூன்று மாத அவகாசம் கொடுத்தது.

உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றுதல் என்பது செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மிகவும் அவசியமானது. இதன்மூலம்தான் உடனுக்குடன் நேரடி செய்தி வாசிப்பு (Live News) நடத்த முடியும். இல்லாவிட்டால் ஒளிநாடாக்களாக வெளிநாட்டுக்கு (சிங்கப்பூர் அல்லது ஹாங்-காங்) அனுப்பி 2-3 மணி நேரத்திற்கு அப்பால்தான் செய்திகளை வாசிக்க முடியும். உள்நாட்டிலிருந்து ஒளிபரப்பும் போட்டி நிறுவனங்கள் பார்வையாளர்களையும், அதனால் வரும் விளம்பரப் பணங்களையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.

அரசு ஏன் 26% என்ற உச்ச வரம்பை வைத்தது? செய்தித் தொலைக்காட்சிகள் இந்தியரது கையில் இல்லாவிட்டால் இந்திய அரசுக்கு எதிராகவும், வெளிநாட்டு அரசுக்கு ஆதரவாகவும் செய்திகள் வழங்கப்படும், மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளையும் என்றெல்லாம் அரசு கருதியிருக்கலாம். பொதுமக்களுக்கு இதுவரை சரியான காரணம் எடுத்துக் கூறப்படவில்லை. மேலும் செய்தித்தாள் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் கையில்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடு இங்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் இதில் 26% வரை வெளிநாட்டவர் பங்கு பெறலாம் என்று அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களை செய்தித்தாள் நிறுவனங்களோடு ஒப்பிட்டு இரண்டிலும் 26% சதவீதம்தான் வெளிநாட்டவரது பங்குரிமை இருக்க வேண்டும் (தற்போதைக்கு) என்று அரசு கருதியிருக்கலாம்.

இந்த அரசு விதிமுறையோடு மூன்று மாத கால அவகாசம் வந்தவுடன் ஸ்டார் நிறுவனம் ஒரு சில இந்தியர்களுடன் பேசி அவர்களைத் தன் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பங்குதாரர்களாக ஆக்கி, தனது பங்கை 26%க்கு குறைக்க முயற்சி செய்தது. இது நடக்கும் வரை அரசிடம் ஒவ்வொரு வாரமாக கால அவகாசம் கேட்டு நீட்டித்து வந்தது.

கடைசியாக, குமார மங்கலம் பிர்லா (பெரிய தொழிலதிபர்), சுஹேல் சேத் (விளம்பர நிறுவனமான ஈக்வஸ் உரிமையாளர்), மாயா அலக் (ப்ரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரின் மனைவி, மற்றும் நாடக ஈடுபாட்டாளர்) போன்றோரைப் பங்குதாரராகக் கொண்டு வந்தனர். ஆனால் போட்டி நிறுவனங்கள் இது ஓர் கண்துடைப்பு வேலை என்றும், எந்த ஒரு பங்குதாரரும் ஸ்டார் நிறுவனத்தை விட அதிக அளவு பங்கு வாங்காததால், ஸ்டார் நிறுவனமே முழு ஆளுகையைத் தன் கையில் வைத்துள்ளது என்றும், மற்றவர்கள் ஸ்டாரின் கைப்பாவை என்றும் குற்றம் சொல்லின.

இதைப் பற்றிய மீதியைப் பின்னர் பார்க்கலாம்.

மழைநீர் சேமிப்பு

தமிழக அரசு ஆகஸ்டு 31, 2003 க்குள் சென்னையில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்பினை (Rain water harvesting unit) கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று அவசர ஆணை (ordinance) பிறப்பித்துள்ளது. மிகவும் அவசியமான ஒன்று என்றாலும் இது போன்ற "துக்ளக்" சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதன. வெறும் 40 நாட்கள் அவகாசம் கொடுத்து விட்டு அத்தனை வீடுகளிலும் இது நடைபெற வேண்டுமென்றால், அது எப்படி சாத்தியம்? கிட்டத்தட்ட 99% வீடுகளில் இதுபோன்ற ஆணை அமலுக்கு வந்ததே தெரியாது.

ஆகாஷ் கங்கா என்னும் அமைப்பின் இணைய தளத்தில் மழைநீர் சேமிப்பு பற்றிய விவரங்கள் தெரிய வரும். சென்னைக் குடிநீர் வாரியத்தின் இணையப் பக்கத்திலும் இது பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

Monday, July 28, 2003

புலிநகக் கொன்றை மற்றும் இதர பல

பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய "Tiger Claw Tree" (Penguin Publishers) என்னும் ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கம் "புலிநகக் கொன்றை" (காலச்சுவடு பதிப்பகம் - அவரே தமிழாக்கியுள்ளார்) சனி அன்று வாங்கினேன். இதன் ஆங்கிலப் பதிப்பை விமரிசைக்கையில் அசோகமித்திரன், "ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்" என்று பாராட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஆங்கில நாவலைப் படித்தமையால், அது இன்னும் மனசில் அழியாமல் இருந்தமையால், தமிழில் படிக்கத் தயக்கம். நேற்று ஒருவகையில் ஆரம்பித்துவிட்டேன்.

நாங்குநேரி - நம்மாழ்வார் பிறந்த ஊர், மதுரகவி ஆழ்வார் தொண்டு செய்த ஊர் - ஜீயருக்கு மடப்பள்ளியில் புளியோதரை செய்து போடும் சமையற்காரருக்கு மகளாகப் பிறந்த பொன்னம்மாளின் கதையாக நீண்டு வளரும் இந்தக் கதையில், தமிழகத்தின் வரலாறும் விரிவடைகிறது. முழுக் கதையையும் மீண்டும் தமிழில் படித்துவிட்டு என் சிறு விமரிசனத்தை இங்கு வைக்கிறேன்.

கூடவே இன்னும் பல புத்தகங்களை வாங்கினேன். முக்கியமாக மா.கிருஷ்ணனின் (அ.மாதவையாவின் புதல்வர்) 'மழைக்காலமும், குயிலோசையும்' புத்தகமும் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றியும், கிருஷ்ணனைப் பற்றியுமான ராமச்சந்திர குஹாவின் கட்டுரை The Hindu இதழிலிருந்து இதோ.

பொன்விழி பற்றிய விமரிசனம்

நான் தமிழோவியம் இணைய இதழில் எழுதி வெளிவந்த பொன்விழி தமிழ் OCR பற்றிய கட்டுரையின் சுட்டி இதோ. இதனை சற்று விரிவாக்கி, இன்னும் சில உதாரணங்களோடு இந்தப் பக்கத்தில் இடுகிறேன் (இந்த வாரக் கடைசியாகலாம்.).

Wednesday, July 23, 2003

தமிழில் OCR

OCR என்றால் Optical Character Recognition - அதாவது படமாக உள்ள எழுத்துக்களை, கணினி மூலம் ஆராய்ந்து, கணிவடிவிற்கு மாற்றுவது - எழுத்துருக்களை அடையாளம் காண்பது ஆகும்.

அச்சிட்ட புத்தகம் ஒன்று வாங்குகிறீர்கள். அது கணினி வடிவில் இருந்தால், பிறரோடு கருத்து பரிமாற உதவியாயிருக்கும். யாஹூ குழுமங்களில் மேற்கோள் காட்டலாம், விமரிசனம் எழுதலாம். கணினி மூலம் பல கோப்புகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட சொல்லை மட்டும் தேடலாம்.

நீங்கள் ஒரு scanner-ஐ (ஒளி மூலம் தாளில் உள்ளதை கணினிப் படமாக மாற்ற உதவும் கருவி) வாங்கினால், அதனோடு ஆங்கில எழுத்துகளை கண்டறியும் மென்பொருளும் கூடவே தரப்பட்டிருக்கும். இதன் மூலம் தினம் வரும் செய்தித்தாளை, ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் பக்கங்களை சுலபமாக scan செய்து, OCR செய்து, கணினி வடிவிற்குக் கொண்டு வந்துவிடலாம்.

தமிழில் இந்த வசதிகள் குறைவு. நேற்று 'பொன்விழி' என்று ஒரு மென்பொருளை வாங்கினேன். இது சென்னையைச் சேர்ந்த 'குரு சொலுஷன்ஸ்' என்னும் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வி. பாலசுப்ரமணியன், 17/10 வாசுதேவ புரம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033, தொலைபேசி எண் +91-44-2473 1048, மின்னஞ்சல் vengba@hotmail.com.

இந்த மென்பொருளைப் பற்றிய தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்க.