தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடந்த சமயத்தில் நான் சென்னையில்/இந்தியாவில் இருக்கவில்லை. கடந்த சில நாள்களில் பலரிடம் பேசியதன்மூலம் தெரிந்துகொண்டதை வைத்து இதனை எழுதுகிறேன்.
சென்ற 2001-ல் நடந்ததைப் போலவே இம்முறையும் வன்முறை, கள்ள வாக்கு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றல், காவல்துறை உதவியுடன் ஆளுங்கட்சி அராஜகம் ஆகியன நடந்தேறியுள்ளன.
முறையான உள்ளாட்சித் தேர்தல்கள்மூலம் மட்டுமே நாளடைவில் சரியான குடியாட்சி நாட்டில் நடைபெறும் என்றால் அது இன்னமும் 20-30 வருடங்களில் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது.
சிறிது சிறிதாக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்துக்கு நிறைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தக்கூடியவர்கள் இல்லாதிருந்தனர். டி.என்.சேஷன் முதற்கொண்டு வரிசையாக அனைத்து தலைமை தேர்தல் ஆணையர்களுமே பக்கச்சார்புகளின்றிப் பணியாற்றுபவர்களாகக் கிடைத்துள்ளனர். இதே நிலை தொடரவும் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்பெறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்க்கும் நடக்கும் தேர்தல்கள் வன்முறைகள் குறைந்ததாகவும் பெருத்த நம்பிக்கை தரக்கூடியதாகவும் தோற்றமளிக்கின்றன.
ஆனால் மாநில தேர்தல் ஆணையங்களைப் பொருத்தமட்டில் இதே நம்பிக்கை இல்லை. தம்மளவில் அதிகாரப் பகிர்தலைக் கோருபவர்களாகவும் தமக்குக்கீழே அதிகாரத்தை மறுப்பவர்களாகவுமே நமது அரசியல்வாதிகள் நடந்துகொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குலைக்கும்வண்ணம் நேரடி மேயர்/நகராட்சித் தலைவர் பதவிகள் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டன. சென்ற சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெறக்கூடாது என்று அஇஅதிமுக திட்டமிட்டு கராத்தே தியாகராஜன், சேகர் பாபு போன்ற ரவுடிகளின் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், கள்ள வாக்கு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றில் இறங்கினர். இம்முறை திமுக அதற்குச் சற்றும் சளைக்காமல் நடந்துகொண்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களை நுழையவிடாமல் செய்தது, குண்டர்கள் வந்து வாக்குச்சீட்டுகளை தம்மிஷ்டத்துக்கு எடுத்து சீல் அடித்துத் திணித்தது ஆகியவை நடந்துள்ளன. முக்கியமாகச் சென்னையில். ஆளும் கட்சியின் குண்டர்களுக்கு மட்டும் காவல்துறையின் ஆதரவு கிடைத்துள்ளது!
வாய்ப்பு கிடைத்தால் வன்முறையில் இறங்கி அதன்மூலமாவது பதவியைக் கைப்பற்றுதல் என்பது வழக்கமாகிப் போன நிலையில் குடியாட்சி முறையில் நம்பிக்கை உள்ள நாம் என்ன செய்யவேண்டும்? அரசியல்வாதிகள், முக்கியமாக ஆளுங்கட்சியினர் ஆதரிக்க மாட்டார்கள் என்ற போதிலும் சிலவற்றுக்காக நாம் போராடவேண்டும்.
1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல்களையும் மத்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு நாம் போராடவேண்டும்.
2. மின்னணு வாக்குப்பதிவு - மேற்படி மாறுதல் நடக்கிறதோ இல்லையோ, சட்டத்திருத்தம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடத்தவேண்டும், அதற்கு செலவுகள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்பதை முன்வைத்துப் போராடவேண்டும். இதன்மூலம் வாக்குச்சீட்டு களவாடுதல், கொத்து கொத்தாகக் கள்ள வாக்கு போடுதல், எதிர்க்கட்சி வாக்குகளை செல்லாததாகச் செய்தல் போன்ற குற்றங்கள் குறையும்.
3. மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரப் போராடவேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் செய்யப்பட்டுள்ள செலவுகள் பயமுறுத்துகின்றன. 700 குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள ஒரு பஞ்சாயத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் செலவு செய்துள்ளாராம். பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒருவர் ரூ. 7 லட்சம் செலவு செய்துள்ளார் (தன் சொத்துக்களை விற்று). தோல்வியுற்றவர் ரூ. 5 லட்சம் செலவு செய்துள்ளார். இவர்கள் அனைவருமே எப்படியாவது - அராஜக வழிகளின்மூலம் - செலவைவிட அதிக வருமானம் பார்க்க முயற்சி செய்வார்கள்.
உள்ளாட்சி அமைப்புகள் எந்த வகையில் மக்களை பாதிக்கின்றன, எவ்வாறு மக்களுக்கு இந்த அமைப்புகளால் நன்மை செய்யமுடியும் என்பது புரிந்தால்தான் மக்களும் அதற்கேற்றவாறு சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முனைவார்கள்.
அந்தேரியில் மூன்று தினங்கள்…
5 hours ago
//1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல்களையும் மத்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு நாம் போராடவேண்டும்.
ReplyDelete//
பத்ரி, இது கொஞ்சமே கொஞ்சம் மீதியிருக்கும் மாநில அதிகாரங்களையும் பறிப்பது போலாகும், மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது? இன்றைய மத்தியதேர்தல் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் இருக்கிறார்கள், வருங்காலத்தில் பக்க சார்புள்ள அதிகாரங்கள் வந்தால் என்ன செய்யமுடியும்? அதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் குறுக்கீடற்ற அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.
//2. மின்னணு வாக்குப்பதிவு - மேற்படி மாறுதல் நடக்கிறதோ இல்லையோ, சட்டத்திருத்தம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடத்தவேண்டும், அதற்கு செலவுகள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்பதை முன்வைத்துப் போராடவேண்டும். இதன்மூலம் வாக்குச்சீட்டு களவாடுதல், கொத்து கொத்தாகக் கள்ள வாக்கு போடுதல், எதிர்க்கட்சி வாக்குகளை செல்லாததாகச் செய்தல் போன்ற குற்றங்கள் குறையும்.
//
ஆமோதிக்கிறேன்
//3. மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரப் போராடவேண்டும்.
//
இதை என்னளவில் ஏற்க இயலாது, சென்ற இரண்டு முறைகளாக உள்ளாட்சி அமைப்புகளில் நடந்தேறிய கூத்துகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், கவுன்சிலர்கள் பெரும்பாண்மை வேறு கட்சிக்கிருக்க, தலைவர்கள் வேறு கட்சியை சேர்தவர்களாக இருந்த போது அத்தனை நகராட்சியின் அத்தனை தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டு பல நகராட்சி பேரூராட்சிகள் எந்த வேலையும் நடைபெறவில்லை, கரூர் போன்ற நகராட்சி இதற்கு மிகச்சிறந்த உதாரணம், முதல்வர் ஜெயலலிதா இருக்க, பெரும்பாண்மை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவாக இருந்தால் என்ன கூத்து நடக்குமோ அது தான் நடந்தேறியது இந்த முறையினால், எனவே நேரடியாக மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுப்பதை நீக்கியது சரியானதே.
நன்றி
Local Kings and Queens contested in Local Poll. they hav
ReplyDeleteown Army. they used their Army to attract voters. some of them kissed to die. dont worry.
This our democracy.
சென்னை மட்டுமே தமிழகம் அல்ல .சென்னையில் திமுக அராஜகம் செய்தது கண்டிக்கத் தக்கது .ஆனால் தமிழகத்தின் இதர பகுதிகளில் வழக்கம் போலவே தேர்தல் நடந்துள்ளது (யோக்கியமாக என்று சொல்ல வரவில்லை .வழக்கமாக நடக்கும் சம்பவங்களே நடந்துள்ளன) .சென்னையில் திமுக அராஜகம் செய்ததை சாக்காக வைத்து தமிழகம் முழுவதும் திமுக பெற்ற வெற்றியை சிலர் மறைக்க முயல்வது வேடிக்கை .
ReplyDeleteமதுரன் சொல்வதை படித்த போது "மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என்று பிரதமர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் " -ன்னு சம்பிரதாய செய்தி வாசிப்பது நினைவுக்கு வந்தது.
//பெரும்பாலான மக்கள் என்றுமே அரசாங்கத்தையும், கட்சிகளையும் சார்ந்து இருந்ததில்லை.தேர்தல் //
ReplyDeleteநீங்கள் இந்தியாவில் தான் இருக்கிறீர்களா ??