Wednesday, October 18, 2006

முகமது யூனுஸ் - அமைதிக்கான நோபல் பரிசு

முகமது யூனுஸ் என்னும் பங்களாதேசத்தவர் பற்றியும் குறுங்கடன் (Micro credit) என்பது பற்றியும் நான் சில நாள்களாகப் படித்து வருகிறேன். அதையொட்டி வலைப்பதிவு ஒன்றையும் தொடங்கியுள்ளேன்.

இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு முகமது யூனுஸ் மற்றும் அவரது கிராமீன் வங்கிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

யூனுஸ் தொடங்கிய கிராமீன் வங்கி இன்று பங்களாதேசத்தில் ஏழைப் பெண்களுக்குக் குறுங்கடன்கள் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் ஒரு வங்கி.

வெறும் கடன்கள்மூலம் மட்டுமே ஏழைமையைத் தீர்த்துவிடலாம் என்று நம்பினால் அது தவறுதான். கடன்கள் அவசியம். எந்தவிதப் பிணையும் இல்லாமல் கொடுக்கப்படும் குறுங்கடன்கள் மிகவும் அவசியம். ஆனால் ஏழைமை ஒழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு வெறும் கடன்கள் போதா. Microcredit may be necessary but not sufficient.

ஏழைமையை ஒழிக்க பல்வேறு நாட்டு அரசுகளும் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வளர்ந்த நாடுகள் பலவும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்துகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி (பிற ஐரோப்பிய நாடுகள்) ஆகியவையும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் தம் குடிமக்களுக்கு பல்வேறு நலன்களை வழங்குகிறார்கள். வேலையில்லாதோருக்கு மாதாந்திர உதவித்தொகை, முதியோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை, சகாய வாடகையில் வீடுகள், பொதுப் போக்குவரத்தில் இலவசப் பயணம், பள்ளிக்கல்வி வரை இலவசம், உயர் கல்விக்கு குறைந்த வட்டியில் கடன் என்று பல விஷயங்கள் இந்த நாடுகளில் உண்டு. இவை எல்லாமே எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. ஆனால் குறைந்தது மாதாந்திர உதவித்தொகையாவது கிடைத்து விடுகிறது.

இந்தியா, பங்களாதேசம் போன்ற நாடுகளில் மாதாந்திர உதவித்தொகை கிடையாது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ வசதி இலவசம் என்று பெயரளவில் இருந்தாலும் நடைமுறையில் மத்தியதர மக்களும் மேல்தட்டு மக்களும் தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். பொருளாதார அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைப்பதில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் கண்ணியமான முறையில் வாழ்வதற்கு வழியே இல்லை. சத்தான உணவு என்றில்லை; பசியை அடைக்கத் தேவையான உணவு கிடையாது. அதனால் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதிலிருந்து, பெண்களுக்கான வாழ்வுரிமை பறிக்கப்படுவதிலிருந்து ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இருக்கும் நாடுகளில்கூட ஏழைகளால் தங்களது ஏழைமையிலிருந்து எளிதாக வெளியே வரமுடிவதில்லை. குறைவான சம்பளம் உள்ள வேலை கிடைத்தால் உடனடியாக உதவித்தொகை நிறுத்தப்படும் என்பதால் பலர் வேலையே தேடுவதில்லை. சுயமாகத் தொழில் புரிந்தால் உதவித்தொகை நிறுத்தப்படும். இப்படியான நிலையில் பலரும் உதவித்தொகை என்னும் சிறையில் மாட்டிக்கொண்டு தங்கள் நிலையை மேம்படுத்த முடியாமல் உள்ளனர். வலதுசாரி அரசியல்வாதிகள் (அமெரிக்காவில்) இம்மாதிரி உதவித்தொகை பெறுபவர்களை 'Welfare Queens' என்று புறம் பேசுகிறார்கள்.

ஜனத்தொகை மிகுதியால் திண்டாடும், அரசு உதவி என்ற வாய்ப்பே இல்லாத மூன்றாம் உலக நாடான பங்களாதேசத்தில் யூனுஸ் செயல்படுத்திய குறுங்கடன் திட்டம் ஓரளவுக்கு ஏழைகள் முன்னேற வகைசெய்துள்ளது. ஆனால் இதே திட்டம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சாத்தியப்படுமா?

நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார் யூனுஸ். ஆனால் இன்றுவரை பங்களாதேசம் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் பெரிய அளவில் குறுங்கடன் திட்டம் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. பங்களாதேசத்துக்குப் பிறகு இந்தியாவில்தான் ஓரளவுக்கு கண்ணுக்குத் தென்படுகிறார்போல குறுங்கடன் திட்டத்தின் வளர்ச்சி தெரிகிறது - முக்கியமாக ஆந்திரப் பிரதேசத்தில்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் நடக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எதுவுமே இந்த கிராமீன் வங்கியின் குறுங்கடன் திட்டத்தைப் போன்றதில்லை. இந்தியாவில் குறுங்கடன் முறை வெகுவாக வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது.

குறுங்கடன் திட்டத்திலும் குறைகள் சில உள்ளன.

பலர் குறுங்கடன் வட்டிகள் (கிட்டத்தட்ட 24%) மிக அதிகமாக உள்ளதாகச் சொல்கின்றனர். ஆனால் 24% என்பது கந்து வட்டியையோ அல்லது கடனட்டை வட்டியையோ ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவுதான். இந்த அளவுக்காவது வட்டி வாங்கினால்தான் குறுங்கடன் வங்கிகளது நிர்வாகச் செலவை ஈடுகட்ட முடியும்.

கடன்களைத் திருப்பிச் செலுத்த குறுங்கடன் குழுக்கள்மீது அளவு கடந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஆனாலும் யூனுஸ் தனது வங்கி மனிதாபிமான அடிப்படையிலேயே இயங்கி வருகின்றது என்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திரப் பிரதேசத்தில் குறுங்கடன் வங்கிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக சில தற்கொலைகள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள்மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வங்கிகளும் அரசும் சேர்ந்து சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பங்களாதேசத்தில் கிராமீன் வங்கியில் குறுங்கடன் வாங்கியவர்களில் பாதிப்பேர் இன்னமும் தங்கள் நிலையில் முன்னேறவில்லை என்று ஓர் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். இது 'பாதி தம்ளர் காலி' என்ற வகையைச் சார்ந்தது. மீதிப்பேர் தங்கள் நிலையிலிருந்து முன்னேறி விட்டார்களே என்று நாம் அந்த ஆராய்ச்சியாளரிடம் கேட்கலாம். அத்தனை ஏழைகளையும் ஒரே நாளில் மாற்றிவிடக்கூடிய மந்திரக்கோல் இல்லை குறுங்கடன்.

குறுங்கடன் வசதி மிக மிக ஏழைகளுக்குப் போய்ச்சேருவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மை என்றே அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். குறுங்கடன் பெற குழுக்கள் உருவாகும்போது பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பவர்களை யாரும் தங்களது குழுவில் சேர்க்க விரும்புவதில்லை. கடன் வாங்கி அந்தப் பணத்தில் தொழில் செய்ய முடியாமல் அந்தப் பணத்தை உணவாக மாற்றிச் சாப்பிட்டு விடுபவர்கள் கடன் பெறுவதை குறுங்கடன் நிறுவனங்களும் விரும்புவதில்லை. கடன் பெற்றாலும் எந்தத் தொழிலும் செய்யத்தெரியாத சோம்பேறிகள், செய்ய இயலாத முதியோர், ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு குறுங்கடன் நிறுவனங்கள் உதவி செய்ய விரும்புவதில்லை.

முதியோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு அரசுதான் உதவி செய்யவேண்டியிருக்கும். சோம்பேறிகளுக்குக் கடவுளால்கூட உதவ முடியாது.

அரசு நிறுவனம் குறுங்கடன் கொடுக்கும் வேலையில் இறங்கலாமா என்றால் கூடாது என்பதுதான் என் பதிலாக இருக்கும். எப்பொழுது பார்த்தாலும் கடன் தள்ளுபடி என்று சொல்லி வாக்குவங்கிகளைக் குறிவைப்பதும், efficiency அல்லாத முறையில் இயங்குவதும்தான் அரசு நிறுவனங்களில் செயல்பாடாக இதுவரை இருந்துள்ளது. (கடன் தள்ளுபடி பற்றிய முகமது யூனுஸின் கருத்தை நான் முன்னர் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.)

குறுங்கடன் நிறுவனங்கள் சந்தைப் பொருளாதார முறையில் முற்றிலுமாக இயங்க முடியுமா? சந்தை மூலம் தனக்குத் தேவையான மூலதனத்தையும் கடன் கொடுக்கத் தேவையான நிதியை முற்றிலுமாகக் கடனாகவும் பெற முடியுமா? கிராமீன் வங்கிகூட ஆரம்பத்தில் பல்வேறு மான்யங்களை வைத்துத்தான் வாழ்க்கை நடத்தியது. எனவே அரசு விரும்பினால் பல்வேறு குறுங்கடன் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு மான்யம், நீண்டகால குறைந்த வட்டிக் கடன் ஆகியவற்றைத் தரலாம். அத்துடன் இந்த நிறுவனங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு வாரியங்களை நிறுவினால் போதுமானது.

குறுங்கடன் நிறுவனங்கள் சிலவற்றை ஆரம்பிக்க உதவி செய்துவிட்டு ஏழைகளுக்கு நல்லது செய்துவிட்டதாகச் சொல்லி ஓர் அரசு ஒதுங்கிக் கொள்ளலாமா என்றால் நிச்சயம் கூடாது. குறுங்கடன் மட்டும் போதா. அடிப்படை வசதிகள் பலவற்றை அரசுதான் செய்துதர வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு என்று குறைந்த வாடகை வீடுகள், உணவுக்கான மான்யம் (ரேஷன் கடைகள் மூலமாக), இலவசக் கல்வி, இலவச/தரமான மருத்துவ வசதி ஆகியவற்றை ஓர் அரசு செய்துதர வேண்டும். அதற்கு மேலாக குறுங்கடன் நிறுவனங்கள் கொடுக்கும் கடன்களை வைத்து மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதைத் தாங்களாகவேதான் முயற்சி செய்யவேண்டியிருக்கும்.

ஏழைமையை முற்றிலும் ஒழிக்க குறுங்கடன் போதாது என்றாலும்கூட பெரும்பாலான உலக ஏழைகளின் நிலையை ஓரளவுக்கு உயர்த்தும் எனலாம். அந்த வகையில் குறுங்கடன் முன்னோடியான முகமது யூனுஸுக்கும் அவரது நிறுவனமான கிராமீன் வங்கிக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

4 comments:

  1. கந்துவட்டிக் கொடுமை இம்முயற்சியால் கொஞ்சம் குறையும். ஆனால், மிக மிக ஏழைகளுக்கு Micro credit உதவுவதில்லை என்பது பெரிய குறைபாடே!
    ஆங்கில தொடர் பதிவுக்கு நன்றி. ஆனால் தொடர்ந்து தமிழிலும் இதுபற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
  2. In India, we still lagging in providing this kind of social security support to our poor people. Our politicians are only thinking about giving something 'Free' to get votes.There is no long term plans from planning commission or governemnt. I have forwarded one such document from Vindo Khosla to our A.P.J and got reply that they will consider my suggestion in next plans. But I have not seen anything so far.

    I have tracking & watching 'Grameen Story' for the last four years. I even I thought of starting something similar in 'Rural Insurance' or 'Micro Credit'.I don't have that much money to start that venture and determination too.We are from rural TN, and mother is active group leader for W-SHG.Only thing I could do was, I told her to given enough financial help when needed.

    But what I observed was...they were very prompt in repaying and came back gain to get more money.
    All their transactions were good so far.I am encouraging my mother to lend more money in small amounts.

    You can find the link to that doc in my blog. I am not updating my blog.

    ReplyDelete
  3. Hi Badri,

    There was an ad in todays express about a group in Tiruchi indian replication of Grameen scheme congratulating Yunus. Thought u might be interested to look into.

    Best regards,
    Magesh

    ReplyDelete