Tuesday, November 07, 2006

தமிழக நீதிமன்றங்களில் தமிழ்

தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக நீதிமன்றங்களில் தமிழிலேயே வழக்காடுதல் நடைபெற வேண்டும் என்று பேசியுள்ளாராம். இந்தப் பேச்சின் தமிழ் மேற்கோள் எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. NDTV தளத்தில் கிடைத்த ஆங்கில ஆக்கம்:
"Let's strive to make Tamil the sole language in all court proceedings in Tamil Nadu," said Karunanidhi.
NDTV செய்தியில் கருணாநிதியின் கருத்தை பலரும் எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில், முடிந்தவரை, எல்லாமே தமிழிலேயே நடைபெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே? கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் நடைமுறைகள் அத்தனையும் தமிழில் உடனடியாக வரவேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. பொதுவாக "நீதிமன்றங்களில்" என்றுதான் சொல்லியுள்ளார்.

NDTV செய்தியில் உள்ளபடி, இப்பொழுதைக்கு அரசியல் அமைப்புச் சட்ட மாறுதல் இல்லாமல் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுதலைக் கொண்டுவரமுடியாது. எனக்கென்னவோ அது தேவையும் இல்லை என்று தோன்றுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தலைமை நீதிபதி எப்பொழுதுமே பிற மாநிலத்தவராகத்தான் இருப்பார். பிற மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போது ஓரளவுக்காவது உடைந்த தமிழில் பேசுகிறார்கள். ஆனால் நீதித்துறை என்றால் எந்த மொழியில் நீதி வழங்குகிறார்களோ அந்த மொழியில் மிகப்பெரும் ஆளுமை தேவைப்படும். எனவே பிற மாநில நீதிபதிகள் தமிழகம் வரும்போது தமிழைக் கற்று அதில் புலமை பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அதைப்போல உயர் நீதிமன்ற அளவில் பிற மாநிலங்களில் இருக்கும் பிரபல வழக்கறிஞர்கள் வந்து வழக்கை நடத்துகின்றனர். அரசுத் தரப்புக்காக வாதாடக்கூட ஹரீஷ் சால்வே, ராம் ஜேத்மலானி, அந்த்யார்ஜுனா, சோலி சொராப்ஜி என்று பெரும் பெரும் ஆள்கள் வருகிறார்கள். இவர்கள் தமிழில்தான் வாதாட வேண்டும் என்று தமிழக அரசு கேட்காது.

எனவே முதல்வரின் கூற்றை சரியான வழியில் பார்த்தால் நமக்குத் தோன்றுவது இதுதான்:

* மாநிலத்தில் உயர் நீதிமன்றம் தவிர்த்து பிற நீதிமன்றங்கள் அனைத்திலும் முழுக்க முழுக்க தமிழிலேயே வழக்காடுதல், நீதி வழங்குதல் ஆகியவை நடைபெற வேண்டும். இது நியாயமான கோரிக்கை. ஏனெனில் பொதுமக்களுக்குப் புரியாமல் வழக்கு நடப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிலும் நீதித்துறை மொழி என்பது கடினமானது. ஒப்பந்தங்கள், சட்டங்கள் போன்றவை எழுதப்பட்டுள்ள விதமே புரிந்துகொள்ளக் கடினமானது. அதற்கு மேலாக வழக்காடுதலும் தீர்ப்பும் புரியாத மொழியில் இருந்தால் அதனால் மக்கள் மன உளைச்சலுக்குத்தான் ஆளாவார்கள்.

இப்பொழுது செஷன்ஸ், மாஜிஸ்டிரேட், முன்சீஃப் நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் என இரண்டும் கலந்துதான் நடைமுறை உள்ளது. தீர்ப்புகளில் சிலதான் தமிழில் வருகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் தமிழிலும், வழக்காடுதல் முடிந்தவரை தமிழுலும் இருக்கவேண்டும்.

* உயர் நீதிமன்ற வழக்காடுதல் ஆங்கிலத்திலும், தீர்ப்புகள் வரும்போது அவை ஆங்கிலத்திலும், கூடவே தேவைப்பட்டால் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வழங்கப்படலாம். "தேவைப்பட்டால்" என்பதை வேண்டுமானால் மாற்றி "அவசியமாக" என்றும்கூடச் சொல்லலாம்.

அத்துடன் தமிழக முதல்வருக்கு நாம் வேறு சில யோசனைகளை முன்வைப்போம்.

1. தமிழக அரசின் அனைத்து இணையத்தளங்களையும் உருப்படியாகத் தமிழில் இருக்குமாறு செய்யலாம். இன்றும் முக்கால்வாசிக்கும் மேலான தளங்கள் ஆங்கிலத்தில்தாம் உள்ளன.

2. தமிழக அரசின் பல்வேறு நிர்வாகத் துறைகளும் வருடா வருடம் எழுதும் Policy Notes ஆங்கிலத்தில்தான் உள்ளது. தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழில் இல்லாவிட்டால் தமிழில் கட்டாயமாகக் கொண்டுவருவதற்கு வகை செய்யலாம்.

6 comments:

  1. எங்கெங்கு உறுத்தாமல் உபயோக்கிக்க முடியுமோ, அங்கு உபயோகிக்கலாம்.
    அதற்காக வண்டிகள் நம்பர் பிளேட்டில் "தா நா" என்று புகுத்தினால் "கோரமாக இருக்கும்"

    ReplyDelete
  2. //தமிழக அரசின் அனைத்து இணையத்தளங்களையும் உருப்படியாகத் தமிழில் இருக்குமாறு செய்யலாம். இன்றும் முக்கால்வாசிக்கும் மேலான தளங்கள் ஆங்கிலத்தில்தாம் உள்ளன.//

    முதலில் தளங்கள் உருப்படியாக (எந்த மொழியில் இருந்தாலும்) இருக்குமாறு செய்ய வேண்டும். பல தளங்களில் உள்ள தொலைபேசி/தொலைநகல் எண் கூட தவறாக இருக்கிறது.

    ReplyDelete
  3. தமிழக பட்ஜட் கூட ஆங்கிலத்தில் இருந்ததாக நியாபகம்.

    ReplyDelete
  4. நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தீர்ப்பு கூறுவதாக யார் கூறியது? கீழமை நீதிமன்றங்களில் தமிழிலேயே தீர்ப்பு எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுத அனுமதி பெற வேண்டும். தற்பொழுது 'உறுத்துக் கட்டளை' போன்ற தமிழ் வார்த்தைகள் அனைவருக்கும் பழகி விட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் மூன்றில் ஒருவர் பிற மாநிலத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று கூறிய பொழுது நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத வேண்டப்பட்டனர் (encouraged) அந்த நிலையும் போய் விட்டது. எனவே தமிழில்தான் 95 சதவிகித தீர்ப்புகள் எழுதப்படுகின்றன!

    இது குறித்து எனது பதிவு http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post.html

    ReplyDelete
  5. பார்க்க:

    http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு அரசு இணையத்தளம்

    http://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழ்நாடு அரசு இணையத்தளம்

    நன்றி.

    ReplyDelete