Tuesday, November 28, 2006

மாஞ்சா நூலில் சிக்கிய கழுகு

நேற்று காலை என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் சுற்றியிருந்த பட்டம் விடும் நூலில் ஒரு கழுகு மாட்டிக்கொண்டது.

ஞாயிறு அன்றே சில சிறுவர்கள் தெருவில் பட்டம் விட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். பட்டம் அறுந்து விட்டது. அது சாதாரண நூல் இல்லை, சிறு சிறு கண்ணாடித் துகள்கள் போட்டு உருவாக்கியிருக்கும் மாஞ்சா நூல் என்று பிற்பாடுதான் தெரிந்தது. கழுகு நல்ல பெரிய கழுகு. அது எப்படி வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது என்று தெரியவில்லை. அல்லது மேலிருந்தே நூலில் மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்திருக்கலாம்.

சாதாரணமாக அந்த வேப்ப மரத்தில் இரண்டு காக்கைகள்தான் உட்கார்ந்திருக்கும். அந்த இரண்டு காக்கைகளும் அதே வேப்பமரத்தில் கட்டியிருந்த கூட்டில் பிறந்தவை. எப்பொழுதும் அருகருகே உட்கார்ந்திருக்கும். பிற காக்கைகளைப் போல ஊர் சுற்றாது. அந்த மரத்தில் ஓடும் அணில்களைத் துரத்தும். பக்கத்து வீடுகளில் கிடைக்கும் உணவைச் சாப்பிடும். மீண்டும் மரத்தில் வந்து உட்காரும்.

ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் - கோடையில் - நிறைய கிளிகள் வரும். இப்பொழுது கிளிகள் கிடையாது.

கழுகு ஒருவேளை அணில் எதையாவது பிடிக்க வந்திருக்கலாம். ஆனால் தானே மாஞ்சா நூலில் மாட்டிக்கொண்டது. நூல் அதன் ஒருபக்க இறக்கையைச் சுற்றி அறுக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய ரத்த சேதம். அரை மயக்க நிலையில் கிடந்தது கழுகு.

கழுகைக் கண்டு பயந்தோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ பல காக்கைகள் அந்த இடத்தில் குழுமி சத்தம் போடத் தொடங்கின. சாதாரணமாக வேறு ஏதாவது ஒரு காக்கைக்குப் பிரச்னை என்றால்தான் பிற காக்கைகள் வந்து ஓலமிடும். ஆனால் கழுகைக் கண்டு ஏன் காக்கைகள் கூட்டம் கூடிச் சத்தம் போட்டன என்று தெரியவில்லை.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் பலரும் வந்து பார்த்தனர். எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தபோதுதான் மரத்தின் இலைகளுக்குப் பின்னே கழுகு ஒரு கிளையில் உட்கார்ந்திருந்தது தெரிய வந்தது.

தெருவில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் மரத்தில் ஏறி மயக்க நிலையில் இருந்த கழுகைக் கீழே கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்தனர். இன்னமும் உயிர் இருந்தது. ப்ளூ க்ராஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதில் அவர்கள் ப்ளூ க்ராஸ் வைல்ட்லைஃப் என்னும் பிரிவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். (வீட்டு மிருகங்களுக்குத் தனிப்பிரிவு, சுதந்தர மிருகங்களுக்குத் தனிப்பிரிவு.) இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ஓர் ஆம்புலன்ஸ் வந்து கழுகை எடுத்துச் சென்றது.

கழுகு பிழைத்து விடும் என்று நினைக்கிறேன். அதனால் மீண்டும் பறக்க முடியுமா என்று தெரியவில்லை. ஓர் இறக்கையை அது இழக்க நேரிட்டாலும் நேரிடலாம். மீண்டும் போன் செய்து கழுகு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்!

நீங்கள் சென்னையில் இருந்தால், இதுபோன்று ஏதேனும் சுதந்தரமான பறவை/விலங்குக்குப் பிரச்னை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:

Blue Cross Wildlife: 2220-0335

6 comments:

  1. உபயோகமான தகவல் பத்ரி..

    நிகழ்ச்சியை நீங்கள் விவரித்த விதமும் இயற்கையாக இருந்தது.

    ReplyDelete
  2. நான் சிறுவனாக இருந்தபோது தெருவில் (மாஞ்சா நூலுடன்) பட்டம் விட்டால் போலிஸ் பிடிக்கும். இப்போது காவல்துறை அவ்வளவு அலர்ட்டாக இல்லையோ?

    ReplyDelete
  3. //கழுகு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்!///

    விசாரிச்சீங்களா? நல்லா இருக்கா இப்போ?

    இறந்து போன பறவைகளைப் பற்றித் தெரிவிக்கவும் இது போன்ற எண் ஏதாவது இருக்கா?

    ReplyDelete
  4. சென்ற வாரம் சென்னையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குப் பிறகு தமிழ் வலைப்பதிவுகளில் நிகழ்ந்தனவற்றிற்கும் தங்கள் பதிவிற்கும் எந்தவித தொடர்பும் (உ.கு.ம்) இல்லை என்றே நினைக்கிறேன்.
    :-))))))

    ReplyDelete
  5. //ப்ளூ க்ராஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதில் அவர்கள் ப்ளூ க்ராஸ் வைல்ட்லைஃப் என்னும் பிரிவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.//

    இதை ஒரு அரசு அலுவலகத்தில் சொன்னால் ("அது இந்த டிபார்ட்மென்ட் இல்லை, வேற") அதற்கு என்ன Reaction இருந்திருக்கும் ????

    ReplyDelete
  6. ஐயோ பாவம். அந்தக் கழுகு இப்ப எப்படி இருக்கோ?

    ReplyDelete