Tuesday, May 15, 2007

பங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்

நேற்று சேவியர் தன் வலைப்பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தார்.
சன் தொலைக்காட்சி திமுக வை விட்டு விலகும் நிலையில் ராஜ் தொலைக்காட்சியை திமுக வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக கேள்வி. !! காலையிலேயே சன் தொலைக்காட்சியின் பங்குகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி இது உண்மைதான். 14 மே 2007 அன்று சென்செக்ஸ் குறியீடு 164.12 புள்ளிகள் (1.18%) உயர்ந்தது. நிஃப்டி குறியீடு 57.4 புள்ளிகள் (1.39%) உயர்ந்தது. ஆனால் தேசியப் பங்குச்சந்தையில் சன் டிவி பங்கு 4.83% இறங்கியது. ராஜ் டிவியின் பங்கோ 3.75% உயர்ந்தது.

இதனால் மார்க்கெட் இரண்டு விஷயங்களை நினைத்திருக்கலாம். ஒன்று - சன் டிவி பெற்றுவந்த 'ஏகபோக' உரிமை இப்பொழுது போய்விடும்; அதனால் சன் டிவியின் வருமானமும் லாபமும் குறையும். அதே நேரம் ராஜ் டிவிக்குக் கொடுக்கப்பட்டுவந்த இடைஞ்சல்கள் பல குறையும்; அந்த நிறுவனத்தின் லாபம் அதிகமாகும். இதனால் ஏற்பட்ட கரெக்ஷன் ஒன்று.

மற்றொன்று சேவியர் குறிப்பிட்டதுபோல சன் டிவி நிறுவனம் ராஜ் டிவியை வாங்க முயற்சி செய்யலாம் என்பது. அரசியல் ஆதரவு இல்லாத சன் டிவி அதிக பிரீமியம் கொடுத்தே ராஜ் டிவியை வாங்கவேண்டியிருக்கும். அப்பொழுது ராஜ் டிவியின் பங்கு விலைகள் உயர்வது நியாயமானது. சன் டிவி பங்கு விலைகள் குறைவதும் நியாயமானதே.

ஆனால் பங்க்குச்சந்தையின் இந்த இரண்டு எண்ணங்களுமே தவறானவை. இவ்வளவு குறுகிய காலச் சிந்தனை தேவையே இல்லை. அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் சன் டிவியின் வருமானமும் லாபமும் சடாரெனக் குறைந்துவிடும் என்று கணக்கு செய்யவே கூடாது. அதற்கான 'நிரூபணம்' ஏதும் சந்தையிடம் இல்லை.

அரசியல் குறுக்கீடுகள் இல்லாத நிலையில் ராஜ், ஜெயா, விஜய் ஆகிய மூன்று நிறுவனங்களின் லாபமும் அதிகரிக்கும். எனவே அந்த அளவில் ராஜ் டிவி பங்கு விலை ஏறுவது சரிதான் என்று தோன்றுகிறது.

இரண்டு நிறுவனங்களின் அடுத்த இரண்டு காலாண்டு வருமானத்தையும் லாபத்தையும் கவனிப்பது நல்லது.

[சற்றுமுன்!: இன்று காலை 10.15 மணி நிலவரத்தின்படி ராஜ் டிவி நெருப்பாக 8%க்கும் மேல் ஏறியுள்ளது. சன் டிவி சுமார் 1.5% குறைந்துள்ளது.

15 மே 2005 இறுதித் தகவல்: சன் டிவி பங்கு 3.17% குறைந்துள்ளது. இரண்டு நாள்களில் மொத்த வீழ்ச்சி 8%. ராஜ் டெலிவிஷன் பங்கு இன்று மட்டும் 20% உயர்ந்துள்ளது. இரண்டு நாள்கள் மொத்த உயர்வு 24%! மிகவும் ஆச்சரியம் தரத்தக்கது இது.]

8 comments:

  1. //மற்றொன்று சேவியர் குறிப்பிட்டதுபோல சன் டிவி நிறுவனம் ராஜ் டிவியை வாங்க முயற்சி செய்யலாம் என்பது. அரசியல் ஆதரவு இல்லாத சன் டிவி அதிக பிரீமியம் கொடுத்தே ராஜ் டிவியை வாங்கவேண்டியிருக்கும்.//
    1.Please Correct whether it is DMK or Sun TV trying to buy Raj TV.
    2. Im expecting your views on "Dayanithi Maran's resignation (or ousting???)", How Sun TV and DMK activities in coming days?
    Please post ur views

    Regards
    Vibin

    ReplyDelete
  2. விபின்: திமுக எனும் கட்சி தொலைக்காட்சியை வாங்க நேரடியாக முயற்சி செய்யாது. கட்சியின் முக்கியமான நபர் ஒருவர், தன் நிறுவனங்கள் மூலமாக அல்லது நேரடியாக முயற்சி செய்வார். அப்படியானால் அதைத் தடுக்க சன் டிவி நிறுவனமும் பதிலுக்கு முயற்சி செய்யலாம். இப்படி நடக்கும் ஏலத்தில் பங்குகள் விலை ஏறும்.

    மேனேஜ்மெண்ட் கட்டுப்பாடு மாறும்போது பங்குச்சந்தையில் இருக்கும் பங்குகளுக்கு ஓப்பன் ஆஃபர் தரவேண்டும். அப்பொழுது சந்தை விலைக்கு மேலாகத் தரவேண்டும் அல்லது வெளியே என்ன விலைக்கு வாங்கினார்களோ அதே விலைக்கு ஆஃபர் கொடுக்கவேண்டும்.

    எப்படியானாலும் இதனால் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்று சன்தை நினைக்கிறது... எனவே வாங்கித் தள்ளுகிறார்கள்.

    உண்மை என்ன என்று பங்குச்சந்தைகள் ராஜ் டெலிவிஷனுக்குக் கடிதம் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். தாமாகவே ராஜ் டிவி நிர்வாகம் முன்வந்து அவர்களது பங்கின் விலை இன்றுமட்டுமே 13% (இதுவரை) ஏறியுள்ளதைப் பற்றி விளக்கவேண்டும்.

    ReplyDelete
  3. திமுக - மாறனுடன் உடன்படாத பட்சத்தில் அதற்கு ஒரு மீடியா தேவை. அதுவும் ஜெயா தொலைக்காட்சி இருக்கும் வரை திமுக மீடியா இல்லாமல் இயங்குதல் கடினம் என்றே தோன்றுகிறது.

    ராஜ் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை சரியான லாப நிலையில் இல்லாதது திமுகவுக்கு சாதகம். அதை வாங்கும் நிலையில் வேறு அரசியல் கட்சிகள் இல்லாதது அதைவிட சாதகம்.

    கலைஞரின் பொன்விழா நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சிக்கு மறுக்கப்பட்டு ராஜ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பானது கூட இங்கே கவனிக்கத் தக்கது.

    சன் தொலைக்காட்சியும் திமுக வும் பின்னிப் பிணைந்து இருப்பதனால் தான் கலைஞரால் காவிரிப் பிரச்சனை உட்பட பிற மாநிலங்களோடான பிரச்சனைகளை ஆக்ரோஷமாக எதிர்க்க முடியவில்லை எனும் கருத்தும் மக்களிடையே உண்டு. கலைஞர் காவிரிப் பிரச்சனையை தீவிரமாய் கையிலெடுத்தால் கர்நாடகாவில் சன் குழுமத்தின் மீது தாக்குதலோ, தடையோ நிகழ்த்தப்படலாம். அதே போல கேரளாவிலும் பிரச்சனை எழலாம் எனும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் திமுக ராஜ் தொலைக்காட்சியை தன்னுடைய ஆஸ்தான சூரியனாக்கும் பட்சத்தில், கலைஞர் எதைத் தீவிரமாக எதிர்த்தாலும் பிற மாநிலங்களில் சன் குழுமம் மீது தாக்குதல் ஏதும் நிகழ வாய்ப்பில்லை.

    இத்தகைய அரசியல் சூழலில் கலைஞர் நதி நீர் இணைப்பைக் கையில் எடுத்திருப்பதும் கவனிக்கத் தக்கதே !!

    ReplyDelete
  4. சேவியர் : சுவாரசியமான கணிப்பு. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையானால் ஆச்சர்யமாக இருக்காது.

    எப்படி சன் டீவி இல்லாத திமுகவின் நிலைமையை யோசிக்கிறோமோ அதே போல, திமுக இல்லாத சன் டிவீயின் நிலைமையும் கவலைக்கிடம் தான்.

    என்னுடைய புரிதலுடன் படி, ஆரம்பத்தில், சன் டீவியின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு திமுக உறுதுணையாக இருந்தது. ஆனால், வளர்ந்த பின்னர், திமுகவை பாரமாகத்தான் சன் டீவி நினைத்தது. வேறு வழியில்லாமல், கலைஞர் தொடர்பான செய்திகளைப் ஒளிபரப்பி வந்தாலும், திமுகவின் பிற முக்கிய தலைவர்களை முன்னிலைப் படுத்தியதே இல்லை.. சின்ன லெவலில் துவங்கிய போது, திமுக வின் அடையாளத்தை பாதுகாப்பாகக் கருதிய கலாநிதி மாறன், மீடியா சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திய பின்னர், திமுக என்கிற அடையாளத்தை - மீடியா டைக்கூன் ஆகும் யத்தனத்தில் - கவனமாக தவிர்க்கவே விரும்பினார். ஸ்டாலினை கவனமாக ஓரங்கட்டியது, தயாநிதி மாறன் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பி, திமுக செய்திகளை கவர் செய்ததாகக் கணக்குக் காட்டியது போன்றவை இதற்கான உதாரணங்கள்.

    சன் டீவி குழுமத்தை, அரசியல் கலப்பில்லாத ஒரு மீடியா நிறுவனமாகக் கொண்டு வரவேண்டும் என்பதிலே கலாநிதி உறுதியாக இருந்தார். IPO க்கு போவதற்கு முன்பு, கலைஞர் குடும்பத்தைக் கழட்டி விட்டதும் அதனால் தான். இந்த விவாகரத்து சுமுகமாக நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு ஆன பிறகு இனிமேல் உடன்பிறப்புக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதிமுக தொடர்பான நல்ல செய்திகளைக் கூடக் காட்டி, நடுநிலையான தொலைக்காட்சி போல நடக்கலாம்.

    ஆனால், உடனடியாக எந்தச் சிக்கலும் இல்லை. நேற்று, ஐபிஎன் லைவிலே பேட்டி அளித்த சஷிகுமார்,சன் டீவி ஆழமாக ஊன்றிவிட்டது, அதை அவ்வளவு எளிதில் கலைக்க முடியாது என்று சொன்னார்.

    ஆனால், தொலைநோக்கில் பார்த்தால், திரைப்படங்களையே நம்பியிருப்பது, அரைவேக்காட்டுத்தனமான பேட்டிகள், மெகாசீரியல்கள், பதினைந்து வருடங்களாக ஒரே டெம்பிளேட்டை வைத்திருப்பது, புதுசாக எதையும் முயற்சி செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், ஆபத்துதான். இளைஞர்களில் அனேகம் பேர், விஜய் டீவி பக்கம் சாய்ந்து வருகிறார்கள்.

    அதே போல, ராஜ் டீவியை திமுக வாங்கினாலும், பெருசாக எதையும் சாதித்து விட முடியாது. மக்களை டீவி முன் உட்கார வைத்து, முழுசாக ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பது எவ்வளவு சிரமம் என்பதை விஜய் டீவிக் காரர்களைக் கேட்டால் சொல்லுவார்கள்.

    எனக்கு நினைவு தெரிந்து இத்தனை சுவாரசியமான நிகழ்வுகள், தமிழ் நாட்டு அரசியலில் நடந்ததில்லை.

    எது எப்படியோ, ப்ளாக் எழுத நன்றாகத் தீனி கிடைக்கிறது :-)

    ReplyDelete
  5. //மக்களை டீவி முன் உட்கார வைத்து, முழுசாக ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பது எவ்வளவு சிரமம் என்பதை விஜய் டீவிக் காரர்களைக் கேட்டால் சொல்லுவார்கள்//

    உண்மை. :) கேட்டிருக்கிறேன்.. சொல்லியிருக்கிறார்கள்

    ReplyDelete
  6. Xavier & Prakash - Both of the points are very interesting.

    I wish Sun TV should stand its own on coming days with out any political issues.

    இனி கலைனர் இருக்கும் வரை சன் TV-ஐ பெரிதாக எதிர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேஎன். அதற்குள் மாறன் சுயமாக அரசியல் சார்பு இல்லாத மீடியா நிறுவனமாக மாற்றிக்கொள்ளவேண்டும். தென்னிந்தியாவில் சன் குழுமம் பலமாகவே உள்ளது. பார்ககலாம், ஏதவாது உருப்படியாக நடக்குமா அல்லது அப்படியே அடங்கி விடுமா?

    விபின்

    ReplyDelete
  7. ராஜ் பங்குகள் தொடர்ந்து உயர்கின்றன .. இன்றைய நிலவரப்படி சுமார் 15 % !!!

    பார்ப்போம்.. என்ன நடக்கிறதென்று !

    ReplyDelete
  8. சன் டிவி ஆழமாகக் காலூன்றிவிட்டது என்பது உண்மை. அதே சமயம் இந்த விஷயத்தை இப்படியும் பார்க்கலாம். உதாரணமாக, இப்போது எந்தப் புதிய திரைப்படமானாலும் அதை தொடங்கும்போதே பெரும் தொகை கொடுத்து சன் டிவி வாங்கிவிடுகிறது. சில சமயங்களில், பல தயாரிப்பாளர்கள், படத்தை முடிக்கவோ, தொடர்ந்து எடுக்கவோ கூட, சன் டிவியிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கொடுத்துவிட்டு, பணம் வாங்கிக்கொள்கிறார்கள். இன்றைக்கும் தொலைக்காட்சியில் Staple food திரைப்படங்கள்தாம். இதுநாள் வரை ஆட்சி பலமும் தம்முடன் இருந்ததால், சன் டிவியால், எந்த தயாரிப்பாளரையும் அணுகுவதும், உடன்படாதவரை வழிக்குக் கொண்டு வருவதும் ஓரளவுக்குச் சுலபமாக இருந்தது. இன்றைக்கு நிலைமை மாறி இருக்கும் சூழ்நிலையில், இந்த அரசியல் பலம், சன் டிவிக்குக் குறைந்துபோகும். மேலும் அதே அரசியல் பலம் ராஜ் டிவிக்குக் கூடவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியாகும் போது, திரைப்படங்களை என்ன விலை கொடுத்தும் வாங்க ராஜ் டிவி முன்வரலாம். புதுப்படங்கள் எல்லாம் ராஜ் டிவிக்குக் கிடைக்கும்போது, இங்கே இருக்கக்கூடிய சமன்பாடே மாறிப்போகும். ஒரு மூன்று மணி நேரம் பார்வையாளர்களை கட்டிப் போட்டு உட்கார வைக்க முடிந்தால், அதுவே போதும். வரிசையாக இதுபோல் பல மூன்று மணி நேரங்கள் பார்வையாளர்கள் ராஜ் டிவி முன்னாலேயே உட்கார்ந்துவிட்டால் இன்னும் யதேஷ்டம். சன் டிவியில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளுமே ராஜ் டிவியிலும் இருக்கிறது. அதனால், மீண்டும் வேறொரு டிவியைத் தேடிப் போகவேண்டிய அவசியமே பார்வையாளர்களுக்கு வராது. மேலும் பார்வையாளர்களிடம் அப்படி ஒன்றும் லாயல்டி எல்லாம் இருப்பதாகச் சொல்ல முடியாது. எப்போது ராஜ் டிவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற விளம்பரத்தைப் பார்க்கிறீர்களோ, அன்று அது சன் டிவியை வீழ்த்த் ஆரம்பித்துவிட்டது என்று புரிந்துகொள்ளலாம்.

    நேசமுடன்
    வெங்கடேஷ்.

    ReplyDelete