கன்யாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்களும் கேரளத்தைச் சேர்ந்த ஒருவருமாக 12 பேர்கள் இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் காணாமல் போனார்கள். அதைத் தொடர்ந்து இவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுவிட்டதா, கடத்திவிட்டதா என்று சந்தேகம் எழுந்தது. பின்னர் இந்த மீனவர்கள் காணாமல் போனதில் விடுதலைப் புலிகளின் பங்கு இருக்கலாம் என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சில நாள்களுக்குப் பின்னர் இந்தக் கடத்தலில் விடுதலைப் புலிகள்தாம் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக டிஜிபி முகர்ஜி தெரிவித்தார். இதையே தமிழக முதல்வர் கருணாநிதியும் சட்டசபையில் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சில விடுதலைப் புலிகளிடம் விசாரணை செய்தபோது இந்தத் தகவல் தெரியவந்ததாக தமிழக காவல்துறை தெரிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கட்சிகள் இதனை ஏற்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக 12 பேரில் 11 தமிழக மீனவர்கள், 68 நாள்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் வந்துசேர்ந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர் இன்னமும் கிடைக்கவில்லை; அவர் மாலத்தீவு காவலில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலையான 11 மீனவர்களும் தங்களை விடுதலைப் புலிகள்தாம் கடத்தினர் என்றும், தாங்கள் ஓட்டிச்சென்ற படகைக் கைப்பற்றவே இது நடந்தது என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே பத்திரிகையாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மக்கள் தொலைக்காட்சி, அந்த 11 பேரில் ஒருவராக இருந்த சிறுவனிடம் பேட்டி எடுக்கும்போது அந்தச் சிறுவன் தங்களைக் கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படைதான் என்றும் விடுவித்ததும் அவர்கள்தாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளான். [விடியோ இங்கே]
ஆனால் இதற்கடுத்து இன்றும்கூட தமிழகத் தொலைக்காட்சிகளில் (சன் டிவி உள்பட), "விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினர்" என்று செய்தி வாசிக்கப்படுகிறது.
ஆரம்பம் முதற்கொண்டே விடுதலைப் புலிகள் தமிழக மீனவர்களைக் கடத்தியதாகச் சொல்லப்பட்டது சந்தேகத்தை வரவழைத்தது. இந்தச் சந்தேகம் வருவதற்கு ஒருவர் புலிகள் ஆதரவாளராக இருக்கவேண்டியதில்லை. ஒரு சாதாரண படகைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் இந்த காரியத்தைச் செய்யவேண்டியதில்லை. தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் ஆதரவை இதன்மூலம் கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள்.
மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ஒருவர் கொடுத்த அறிக்கையில் "யார் கடத்தியது என்பதை முன்னிலைப்படுத்தாமல் யார் கடத்தப்பட்டார்கள் என்பதை முன்னிலைப்படுத்தவேண்டும்" என்று சொன்னது என்ன நடந்திருக்கலாம் என்பதை நமக்கு சூசகமாகத் தெரிவிக்கிறது.
தமிழக மக்களாகிய நாம் நம் ஆட்சியாளர்களை நோக்கிச் சில கேள்விகளைக் கேட்கவேண்டும்.
1. தமிழக மீனவர்கள் கடத்தலின் உண்மை விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்குமா?
2. மத்திய அரசின் உளவு நிறுவனம் (RAW), தமிழக அரசின் காவல்துறையுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் பழியை விடுதலைப் புலிகள்மீது வேண்டுமென்றே போட்டுள்ளதா?
3. 11 மீனவர்களையும் ஊடகங்கள் தடையின்றி நேர்முகம் காணலாமா? உண்மை என்ன என்று வெளிவர இது உதவி செய்யும்.
4. உண்மை வெளியே வராமல் இருக்க, போலி என்கவுண்டர்கள் என்ற வகையில் இந்த மீனவர்கள் உயிருக்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை வாயிலாக எந்தவித ஆபத்தும் நேராதிருக்க அரசு உத்தரவாதம் தருமா?
Monday, May 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சில சந்தேகங்கள்
ReplyDelete1. மீனவர்கள் காணாமல் போன ஐந்தாம் நாலே, இலங்கை அரசு அதிகாரி ஒருவர் புலிகள் கடத்தியதாக ஒரு "புலியே" வாக்குமூலம் கொடுத்தது என்கிறார் .... எப்படி....
2. மரியா என்ற படகு பிடிபடுகிறது. உடன் தூத்துக்குடி S.P. மரியா படகு (மீனவர்களை சுட்ட படகு) பிடிபட்டதாக கூறுகிறார்.
3. ஆனால் மீனவர் ஒருவர் சுட்டது இவர்கள் அல்ல என்கிறார் (இது சன் செய்தியில் தமிழகமே பார்த்தது)
விடை எல்லாருக்கும் தெரிந்தது தான்.
பத்ரி,
ReplyDeleteபிடிபட்ட 'புலி'க்கு மாலைதீவு தண்டனை கொடுத்திருப்பது அறியவில்லையா? 15 வருடங்களாம் 4 பேராம்! ஆனால் பெயர் சொல்லமாட்டார்களாம் எப்போ வழக்கு நடந்தது என சொல்லமாட்டார்களாம் ! இப்படி எத்தனையோ!!!