Saturday, May 19, 2007

பஞ்சாப் கலவரங்கள்

சீக்கியர்களின் தலைமைப்பீடம் அகால் தக்த். அவர்கள்தான் சீக்கிய மதத்தைக் கட்டிக் காப்பவர்கள். சீக்கிய மதம் பரவியிருக்கும் மாநிலங்களில் டேரா சச்சா சவுதா (உண்மையான தொழில்) எனும் தனிப்பிரிவு நிலவுகிறது. இவர்களும் சீக்கிய மதகுருக்களை ஏற்றுவந்தவர்கள். சீக்கிய மதமே சாதிப்பிரிவினைகளை ஏற்றுக்கொள்ளாத மதம். பல சாதிகளைச் சேர்ந்த ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கிய மதத்தில் இணைந்தனர். இரு மதங்களின் கொள்கைகளிருந்து சிலவற்றை ஏற்று, பலவற்றை விலக்கி உருவாக்கப்பட்டதுதான் சீக்கிய மதமே.

ஆனால் அடிப்படையில் சீக்கிய மக்களிடையே சாதி பார்ப்பது இன்றும் இருந்துவருகிறது. அதன் விளைவாகத்தான் சச்சா சவுதா போன்ற அமைப்புகள் உருவாகின்றன. இதனைப் பின்பற்றுபவர்கள் பிரேமிகள் என்று அழைக்கப்படுகின்றனர். சச்சா சவுதாவின் தலைவரான குர்மீத் சிங் ராம் ரஹீம், சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்கின் வேடத்தில் இருப்பதைப்போல ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. இது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்கள் குர்மீத் சிங்கின் கொடும்பாவியை எரிக்க, பிரேமிகள் திரண்டு எழுந்து சீக்கியர்களைத் தாக்க, சில சாவுகள். பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - இங்கெல்லாம் கலவரம்.

அகாலி தக்த், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி போன்றவை ஆளும் அகாலி தல் கட்சியின் ஆதரவு. சச்சா சவுதா காங்கிரஸ் ஆதரவு. இதனால் அரசியல் பிரச்னை இதற்கு அடிப்படையாக உள்ளது என்கிறார்கள். குர்மீத் சிங்மீதும் சச்சா சவுதா அமைப்பின்மீதும் கொலைக் குற்றங்கள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் ஆகியவை இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எங்கெல்லாம் அமைப்புரீதியான மடங்கள் உள்ளனவோ அங்கு பணம், நிலம், வன்குற்றங்கள், அரசியல் என அனைத்தும் உள்ளே நுழைகின்றன.

இந்தப் பதிவு அதைப்பற்றி அல்ல.

மத உணர்வுகள், மத உணர்வுகளைப் புண்படுத்துவது தொடர்பானது. 'முணுக்' என்றால் வெகுண்டெழுந்து தெருவுக்கு வந்து கலவரத்தில் ஈடுபடுவது பல மதங்களில் உள்ளது.
உலகெங்கிலும் முஸ்லிம்கள் தெருவுக்கு வந்து கலவரத்தில் ஈடுபடுவது, ஃபத்வா கொடுப்பது போன்றவை பல சமயங்களில் நிகழ்ந்துள்ளன. கடைசியாக உலகு தழுவிய போராட்டங்கள் நடந்தது முகமது நபியின் கார்ட்டூன்கள் ஐரோப்பாவில் ஒரு பத்திரிகையில் வெளியான சமயம். அதற்குமுன் சல்மான் ருஷ்டியின் நாவல்.

ஹிந்து மதக் காவலர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள் யாராவது ஏதாவது படம் வரைந்தால்போதும். கிளம்பிவிடுவார்கள். எம்.எஃப்.ஹுசைன்மீது எப்பொழுது பார்த்தாலும் வழக்கு போடுவது வாடிக்கை. இப்பொழுது குஜராத்தில் ஒரு நுண்கலை மாணவர் வரைந்த ஓவியத்தைக் கண்டித்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதத்தை மட்டும் காப்பதாகத் தங்களைக் கருதுவதில்லை. ஹிந்து கலாசாரத்தையே காக்கும் பொறுப்பு இவர்களுடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள். தீபா மேஹ்தா படம், ஜேம்ஸ் லெய்னின் சிவாஜி பற்றிய புத்தகம் என்று இவர்கள் ரகளை செய்யாத இடமே இல்லை.

'டா விஞ்சி கோட்' புத்தகம் தொடர்பாக கிறித்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தெருவில் இறங்கி அடிதடி, பொதுச்சொத்துக்கு நாசம், கொலை என்றெல்லாம் ஈடுபடுவதில்லை.

இப்பொழுது சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களும் ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

மத உணர்வுகள் vs தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை. பொது விஷயங்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை, வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றியோ அல்லது புராணப் பாத்திரங்களைப் பற்றியோ வெளிப்படையான கருத்துகளைக் பிரசுரிக்கும் உரிமை, நுண்கலைகள் (ஓவியம், சிலை) வாயிலாக அழகியல்ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். இந்த உரிமைகளை வெளிப்படுத்தும்போது பிறருக்கு அதனை எதிர்க்கும் உரிமை நிச்சயமாக உண்டு. ஆனால் வன்முறையை எதிர்ப்பின் கருவியாக ஆக்குவது முற்றிலுமாகத் தடுக்கப்படவேண்டும்.

நான் கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது Piss Christ என்ற கலை வெளிப்பாடு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு கலைஞர் தனது சிறுநீரை ஒரு பாட்டிலில் பிடித்து அதனுள் சிலுவையில் அறைந்த இயேசுவின் உருவை வைத்து அதனைப் புகைப்படமாகப் பிடித்திருந்தார். ஒளி திரவத்தின் வழியாக ஊடுருவி படத்தில் பல வர்ணஜாலங்களைச் செய்திருந்தது. பல்கலைக்கழகத்தில் கிறித்துவ வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் எதிர்ப்பு அமைதியாக இருந்தது.

இந்த எதிர்ப்புச் செய்திகள் வெளியே வந்ததால் நானும் சென்று அந்தப் படத்தைப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. இது நிச்சயம் கிறித்துவர்களின் மனத்தைப் புண்படுத்தக்கூடியதுதான். வண்ணத் திரவம் வேண்டுமென்றால் எத்தனையோ ரசாயனங்களை வைத்து உருவாக்கியிருக்கலாமே? அதற்கு சிறுநீர்தான் தேவையா? ஆனாலும் அந்த நிலையிலும்கூட எதிர்ப்பு என்பது வெகு அமைதியாக இருந்தது. அதுதான் நாகரிகம்.

மனம் புண்படலாம். அது எதிர்ப்பாக மாறலாம். ஆனால் அதற்காக வன்முறையில் இறங்குவது நாகரிகமான செய்கையல்ல. காட்டு விலங்குகள்தான் தெருவில் இறங்கி அநாகரிகமாகக் கற்களை எறிந்து, பொதுச்சொத்தைக் கொளுத்தி, காவல்துறையைத் தாக்கி, சேதம் விளைவிக்கும்.

குர்மீத் சிங், தன்னை குரு கோபிந்த் சிங்கின் அவதாரம் என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே? இதனால் கோபிந்த் சிங்குக்கு ஏதாவது குறைந்தா போய்விட்டது? அல்லது சீக்கியர்கள்தான் குறைந்துபோய்விட்டார்களா? சரசுவதி, லட்சுமி அல்லது எந்த இந்துக் கடவுளையும் நிர்வாணமாக யாராவது வரைந்துவிட்டுப் போகட்டும். முஸ்லிம்களின் புனிதமான நம்பிக்கையை யாராவது கேலிசெய்துவிட்டுப் போகட்டும். கோபம் வந்தால் எதிர்ப்பு அறிக்கை கொடுங்கள். கண்டியுங்கள். ஆனால் கள்ளுண்ட குரங்குகள்போல வெறிபிடித்து பொதுச்சொத்துகளை நாசமாக்கும் வன்முறையைக் கைவிடுங்கள்.

3 comments:

  1. சிறிய மத, சமூக பிரச்சினைகள்கூட குழு வன்முறையாக (Mass Violence) மாறுவது அதிகரித்து வருகிறது. முன்பு தகவல் பரவுவது மெதுவாக நடக்கும். ஆனால் இப்போது டிவி மூலமாக தகவல் பரவும் வேகம் மிக அதிகம். எஸ்.எம்.எஸ் மூலமும், பரவியதாக பேப்பரில் செய்தி. சில மாதஙகளுக்கு முன் அம்பேத்கர் சிலை அவமதிக்க பட்டதாக சில நாட்கள் கலவரம் நடந்தது. பெருகி வரும்(வேலை இல்லாத) இளைஙர் கூட்டமும் இதற்கு காரணமாக இருக்கலாம். கவலை தரும் விஷயம்தான்

    விபின், கோவை.

    முதன்முறையாக பெரிய அளவில், புதிய இடத்தில் புத்தக திருவிழா கோவையில் சிறப்பாக துவங்கி இருக்கிறது. பதிப்பகத்தார்களுக்கும், பபாஸிக்கும் வாழ்த்துக்கள். விளம்பரம் குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகம் வரவில்லை என நினைக்கிறேன். கண்காட்சி குறித்து நீங்கள் கூட ஏதும் தெரிவிக்கவில்லயே?

    ReplyDelete
  2. true reaction . and sensible !

    ReplyDelete
  3. Podhu soththai naasam seivadhu thavaru endru thaangal kooruvadhai oppukkolla mudigiradhu.

    Aanaal, udalukkum porulukkum sedham yerpattal dhaan adhu vanmurai endra vazhakkai ennal yerkka mudiyavillai.

    Yesunaadharin uruvathai siruneeril moozhga vaithu padam pidippadhum ennai porutha varayil oru vidhamaana vanmuraiye. Kodikkanakkana makkalin nambikkai meedhu seyyappatta vanmurai.

    "Freedom of expression" endra peyaril enna vendumaanalum seyyalaam. Aanal badhilukku neengal amaidhiyaha kodi kaanbithu theruvil nirpadhu dhaan naahariham. Badhilukku ennai adithal adhu thavaru - enbadhu ungal vazhakku.

    Idhu endha vidhathil nyayam?

    ReplyDelete