Friday, May 11, 2007

ராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை

நேற்று மதியம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிய நேர்முக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டது. தமிழ் வர்ணனை படுமோசம். முன் பின் கிரிக்கெட் தெரியாத யாரோ ஒருவரை - அல்லது தமிழில் கிரிக்கெட் வர்ணனை தெரியாத ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அவருக்கு தமிழில் கிரிக்கெட் கலைச்சொற்கள் எதுவுமே தெரியவில்லை. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் பல வருடங்களாகச் சென்னை வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வந்துள்ளனர். ராமமுர்த்திக்கு வயதாகி குரல் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்துல் ஜப்பார் (வயதானாலும்) இன்னமும் கம்பீரமான குரலைக் கொண்டிருக்கிறார்.

ராஜ் டிவி கிரிக்கெட் வர்ணனையாளருக்கு உதவும் விதமாக, சில கலைச்சொற்கள் இங்கே: (இவை புழக்கத்தில் உள்ள சொற்கள். புதிதாக நான் உருவாக்கியவை அல்ல.)

Ball - பந்து
Bowler - பந்து வீச்சாளர்
Bowling - பந்து வீசுதல்
Fast Bowler - வேகப்பந்து வீச்சாளர்
Medium Pacer - மித வேகப்பந்து வீச்சாளர்
Spin - சுழல்பந்து
Spinner - சுழற்பந்து வீச்சாளர்
Left hand - இடது கை
Right hand - வலது கை
Over the wicket - வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர
Round the wicket - வீசும் கை விக்கெட்டைவிட்டு விலகி வர

Bat - மட்டை
Defended the ball - தடுத்து ஆடினார்
Played a stroke/shot - அடித்து ஆடினார்
Driving at the ball - செலுத்தி ஆடினார்
Cutting the ball - வெட்டி ஆடினார்
Pushed the ball - தட்டி விட்டார்
Sweep/Swept the ball - பெருக்கி அடித்தார்
Steered the ball - திசை கொடுத்துத் தட்டினார்
Lofted the ball - உயரத் தூக்கி அடித்தார்
(இவை போதா. பல அடிகளுக்கு தமிழில் புழக்கத்தில் நல்ல சொற்கள் இல்லை. கிளான்ஸ், ஃபிளிக், புல், ஹூக் என்று பல நுணுக்கமான அடிகளுக்குச் சொற்கள் இன்று இல்லாவிட்டால் பரவாயில்லை. நாளடைவில் உருவாக்கிக் கொள்ளலாம். இதேபோல பந்துவீச்சிலும் பல சொற்களுக்குச் சரியான தமிழாக்கம் எனக்குத் தட்டுப்பட்டதில்லை.)
Off-side - ஆஃப் திசை
On-side/leg-side - கால் திசை
Front foot - முன் கால்
Back foot - பின் கால்
Front foot defensive shot - முன்னாங்காலில் சென்று தடுத்தாடினார். (etc.)

Fielder - தடுப்பாளர் (பந்துத் தடுப்பாளர்)
(தடுப்பு வியூகத்தின் பல பெயர்களுக்கு தமிழாக்கம் கிடையாது. இவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாகப் பயன்படுத்துவதில் பெரிய தவறில்லை - இப்பொழுதைக்கு.)
Catch - கேட்ச்
catches the ball/caught the ball - பந்தைப் பிடிக்கிறார்/பிடித்தார்
Diving - பாய்ந்து விழுந்து (பிடித்தார்/தடுத்தார்)

Boundary - எல்லைக்கோடு - அல்லது நான்கு ரன்கள் (இடத்துக்குத் தகுந்தவாறு)
Six/Sixer - ஆறு ரன்கள்
Run(s) - ஓட்டம்(ங்கள்)/ரன்(கள்)

Glove(s) - கையுறை(கள்) / கைக்காப்பு(கள்)
Pad(s) - கால்காப்பு(கள்)
Helmet - தலைக்கவசம்

Umpire - நடுவர்

இன்னமும் கூட நிறைய இருக்கலாம். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு ஒப்பேற்றிவிடலாம். அடுத்த ஆட்ட வர்ணனை கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும் என்று நம்புவோம்.

5 comments:

  1. ball - பந்துங்கிறது கூட ராஜ் டிவி தொகுப்பாளருக்குத் தெரியலியா? கொடுமை தான். இராம. கி அவர்களின் கட்டுரையிலும் சில கலைச்சொற்கள் இருக்கின்றன

    ReplyDelete
  2. அப்துல் ஜப்பார் அடுத்த ஆட்டத்தின் வர்ணனைக்குச் செல்வதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

    நல்ல செய்தி.

    ReplyDelete
  3. ரவிஷங்கர்: பல நேரங்களில் அவர் 'பால்' என்றே சொன்னார். அந்த வர்ணனை கண்றாவியாக இருந்தது.

    ReplyDelete
  4. Badri,
    What's the tamil word for wicket?

    ReplyDelete
  5. விக்கெட் விழுதல் = ஆட்டம் இழத்தல் = அவுட் ஆதல்.

    ஸ்டம்ப் என்பதற்கும் விக்கெட் என்று பெயர்.

    இதற்கான தமிழ்ச்சொற்கள் எதையும் யாரும் பயன்படுத்தி நான் கேட்டது கிடையாது.

    ReplyDelete