Tuesday, October 02, 2007

மத உணர்வுகளைப் புண்படுத்துவது

சேது சமுத்திரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி இந்துக் கடவுள் ராமர் பற்றிப் பேசியது பிரச்னையை எழுப்பியுள்ளது. ராமர் உண்மையில் வாழ்ந்தார்; சமுத்திரத்தின்மீது பாலம் ஒன்றை எழுப்பினார் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர். அதைக் கேலி செய்யும் விதமாக அல்லது இதுபோன்ற நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக யாராவது பேசினால் உடனே தலையை வெட்டுவோம், பஸ்ஸைக் கொளுத்துவோம் என்று முரட்டுத்தனமாக பலர் நடந்துகொள்கிறார்கள்.

1. மத உணர்வுகளைப் புண்படுத்துவது என்றால் என்ன?

(அ) ஒவ்வொரு மதமும் தனக்கென சில நம்பிக்கைகளை வைத்துள்ளன. அந்த நம்பிக்கைகளை யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அந்த மத நம்பிக்கையாளர்களுக்குக் கடும் கோபம் வருகிறது.
(ஆ) ஒரு மதம் புனிதமாக நினைக்கும் சிலவற்றை சிலர் கேலி செய்யும்போது அந்த மதத்தவருக்குக் கோபம் வருகிறது.
(இ) ஒரு மதத்தவரின் புனிதச் சின்னங்களை, கோயில்களை, சிலைகளை அசுத்தம் செய்வதால், தாக்குவதால் கோபம் வருகிறது.

உதாரணம்: தமிழக முதல்வர் செய்தது (அ) மற்றும் (ஆ). ராமன் என்னும் கடவுள் இருந்தாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, இல்லை என்பது தனது கருத்து என்றும் அதனால் ராம சேது என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவியல்பூர்வமாக அது வெறும் மணல்திட்டு என்றும் கருணாநிதி பேசியிருந்தால் பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முடிந்திருக்காது. ஆனால் அரசியல் மேடைகளில் அடுத்தவரைக் குத்திக் காட்டிப் பேசுவது சர்வசாதாரணமானது. எனவே "ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?" என்று பேசும்போது பிரச்னை பெரிதாகிறது.

டென்மார்க் முகமது கார்ட்டூன் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். முகமது நபியை கார்ட்டூனாக உருவமாகவோ வரைவது ஏற்புடையதல்ல என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால் டென்மார்க் பத்திரிகை ஒன்று தன் வாசகர்களை முகமது நபியை கார்ட்டூனாகச் சித்திரிக்குமாறு அழைத்தது. அப்படி வரையப்பட்ட பல கார்ட்டூன்கள் வேண்டுமென்றே மோசமாகச் சித்திரிக்கப்பட்டவை. முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டும் என்றே வரையப்பட்டவை.

2. யார் யாரெல்லாம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள்?

(அ) அறிவியல், மருத்துவக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே மதங்களின் அடிப்படைகளைத் தவறு என்று அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் மத உணர்வாளர்கள் ஒரு காலத்தில் கடுமையாக அவதியுற்றனர். இப்பொழுது வேறு வழியில்லை என்று அறிவியலை, மருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும் பல இடங்களில் அறிவியல் அறிஞர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டனர் என்று மதவாதிகள் சண்டைக்கு வருகின்றனர்.
(ஆ) சமூக அறிவியல் அறிஞர்கள், சிந்தனைவாதிகள், அரசியல்வாதிகள் பலரும் மதங்களின் மோசமான பின்தங்கிய நோக்கைச் சாடுகின்றனர். கருத்து ரீதியில் மதங்களின் தவறான கருத்துகளை எதிர்கொள்வது அவசியம். இங்கு மத உணர்வுகளைப் புண்படுத்துவது அவசியமாகிவிடுகிறது. எல்லா மதங்களும் பெண்களை நடத்துவது; இந்து மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற பலவற்றை எதிர்த்துப் போராடுவது அவசியமாகிறது.
(இ) மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் பிற மதங்களின் அடிவருடிகள்தாம்! முஸ்லிம்கள் பலரும் ஒவ்வொரு நாளும் கிறித்துவ, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். இந்துக்கள் பலரும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். டென்மார்க் கார்ட்டூன் நிகழ்வின்போது சந்தோஷமாக அந்த கார்ட்டூன்களை மீண்டும் பரப்பியவர்கள் கிறித்துவ, இந்து அடிப்படைவாதிகள்.
(ஈ) நாத்திகர்கள். இவர்கள் அறிவியல் சார்ந்த நாத்திகவாதிகளாக இருக்கலாம்; அல்லது பெரியார் வழிவந்த 'நம்பிக்கை' சார்ந்த நாத்திகவாதிகளாகவும் இருக்கலாம்.

3. அடிப்படை உரிமை (பேச்சுரிமை) Vs மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.

இந்தியா போன்ற நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்படிக் கிடைத்த பேச்சுரிமையைக் கொண்டு பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசலாமா?

மத உணர்வுகளைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது தவறில்லை என்பது என் வாதம். மதங்கள் முட்டாள்தனமான கருத்துக்களால் நிறைந்தவையாகவே எனக்குப் படுகிறது. இந்துமதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கருத்துகள் அந்தந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாது அந்த மதத்தவர் இணைந்து வாழும் சமூகத்தையும் துன்பத்துக்குள்ளாக்குகிறது. (உதாரணம்: போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது, குழந்தை மணம், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருத்தல், சதி... இப்படி எத்தனையோ.)

ஒரு மதத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனை முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்து, தனிச் சிந்தனை வழியில் வருபவர்கள் மதங்களில் காணப்படும் மூடக் கருத்துகளை கேலி செய்தே தீரவேண்டும். அதனால்தான் சமூகத்தை பாதிக்கும் பல அவமானகரமான குற்றங்கள் நாளடைவிலாவது தடுக்கப்படும்.

தமிழக முதல்வர் ராமரைப் பற்றிப் பேசுவதற்கு முழு உரிமை அவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். அவர் அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்றால் குடியாட்சி முறைக்குள்ளாக அவருக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதை அவரது எதிரிகள் செய்துகொள்ளலாம். ஆனால் அவரது கழுத்தை வெட்டினால் எடைக்கு எடை தங்கம் என்றெல்லாம் அறிவிப்பு செய்யும் அபத்தமானவர்களை சட்டம் உடனடியாகப் பிடித்து தண்டிக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரினைக் கொலை செய்யச் சொல்லித் தூண்டிய ஹைதராபாத் எம்.எல்.ஏ, டென்மார்க் கார்ட்டூனிஸ்டைத் தண்டிக்கச் சொன்ன உத்தர பிரதேச எம்.எல்.ஏ என்று அனைவரையும் உள்ளே தள்ளவேண்டும்.

புனிதமாகக் கருதப்படும் கருத்துகளைத் தாக்கலாம். ஆனால் புனித இடங்கள், மனிதர்கள் ஆகியோரைத் தாக்குவதை வரவேற்கக்கூடாது. இதுவும்கூட மதம், புனிதம் ஆகிய காரணங்களால் அல்ல. உயிர், உடைமை ஆகியவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுகளிடம் உண்டு.

4. அரசியலாக்கப்படும் மதம், மதத்தால் இயக்கப்படும் அரசியல்

மதமும் அரசியலும் இருக்கும்வரை ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்லும். மதத்துக்கு அரசியலின் ஆதரவு தேவை. அரசியல்வாதிகளுக்கு மதவாதிகளின் செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் தேவை. அதனால்தான் பாஜக ராமசேது விவகாரத்தைப் பெரிதாக்க நினைக்கிறது. அதில் கிடைக்கும் வாக்குகளால், சரிந்து கிடக்கும் தன் நிலையை முன்னுக்குக் கொண்டுவர விரும்புகிறது.

கருணாநிதி ராமர் பற்றி எதுவுமே சொல்லாவிட்டாலும்கூட பாஜக இதைப் பெரிய விஷயமாக மாற்றவே விரும்பும். ஆனால் கருணாநிதியின் பேச்சு காங்கிரஸை இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளது. கருணாநிதிக்கு பாஜக பற்றி எந்தக் கவலையுமில்லை. தமிழகத்தில் இப்பொழுதைக்கு பாஜக ஒரு பொருட்டே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு வட மாநிலங்களில் ராமரும் பாஜகவும் தலைவலிகள்.

கருணாநிதி மத அடிப்படைவாதத்தை ஒழிக்க காங்கிரஸுக்கு உதவ விரும்பினால் சிலவற்றைச் சொல்லாமல் விடுவது நலம்.

====

அறிவியல் ரீதியில் என் கருத்து...

ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. காலத்தால் பிற்பட்டவர்களாகக் கருதப்படும் இயேசு இருந்ததற்கான ஆதாரங்களையே பல அறிஞர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

ராமசேது என்ற கடல்மீது கல்லையும் மண்ணையும் போட்டு பல ஆயிரம் வானரங்கள் நடந்து செல்ல, பாலம் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. புஷ்பக விமானம், பத்து தலை அரக்கன், மாயாவிகள், சஞ்சீவி மலை, நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று அனைத்துமே கற்பனை. இன்றைய தேதியில் இதுபோன்று ஏதும் முற்காலத்தில் இருந்திருப்பதற்கான/நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.

அறிவியல் கூறும் உண்மைகள் மட்டுமே இன்று ஏற்கக்கூடியன.

இலங்கையைச் சேர்ந்த செரான் தெரணியகல என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் சென்னையில் கொடுத்த பேச்சில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாக் நீரிணைப்பில் கடந்த 7,00,000 ஆண்டுகளில் 17 முறை மண் திட்டாகவே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடைசியாக இது நடந்தது கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். [ Search for a common past, S.Muthiah]

அப்படி முழுதும் மணலால் தொடர்பிருந்த ஒரு கால கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை கடல்மீது பாலம் கட்டியதாகக் கற்பனை செய்துகொள்ளும் வளம் மனிதனிடம் உண்டு. ஹோமரின் இலியட் போல வால்மீகியின் ராமாயணமும் அற்புதமான சம்பவங்கள் நிறைந்த அருமையான காவியம். [அவ்வளவே!]

எனவே, மத உணர்வுகள் என்னும் பூச்சாண்டியைத் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியில், சூழலியல் ரீதியில் என்ன நன்மை, தீமை என்பதை ஆராய்ந்து அதன்படி நடப்பதே நல்லது.

10 comments:

 1. சரியாகச் சொன்னீர்கள்.

  என்னைக் கேட்டால் ராமர் பொறியியல் கல்லூரியில் படித்தாரா என்று கலைஞர் கேட்டது, ரொம்ப மைல்ட். நிசமாகவே ராமன் என்ற ஒருவன் இருந்தான் என்றால், ராவணனும் கும்பகர்ணனும் இருந்தார்களா? ராவணனுக்கு நிசமாகவே பத்துத் தலை இருந்ததான்,எப்படிக் குளித்தான், தூங்கினான், ஒரே இம்சையாக இருந்திருக்குமே? கும்பகர்ணன் எப்படி வருஷக் கணக்கில் தூங்கினான் என்றெல்லாம் கிண்டல் செய்திருக்க வேண்டும்.

  பலருக்கும் கடவுள் என்ற ஒருவர் தேவைப்படுகிறார். அந்தத் தேவையை மதம் பூர்த்தி செய்கிறது. அவ்வளவுதான். அதை நிச வாழ்வில் கொண்டு வந்து குழப்பினால், அந்த குழப்பத்தினால், பிறருக்குச் சங்கடம் ஏற்படுகிறது என்றால் அதைக் கிண்டல் செய்தே தீரவேண்டும்.

  கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை என்பதல்லாம் சும்மா டகல்பாஜி. உதாரணத்துக்கு இப்போது ஏதாவது காரணத்தைக் காட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலை இடிக்க ஒரு திட்டம் வருகிறது என்று வருகிறது என்று வைத்த்துக் கொள்ளுங்கள். அதற்கு , மதுரை மீனாட்சியம்மன் கோயில் உபாசகர்களாக இருப்பவர்கள் அனைவரும் எதிர்ப்பார்கள். அந்த பக்தர்கள் அனைவரும் மீனாட்சியம்மனை வழிபடுகிறவர்கள் தானே தவிர, மதுரையில் மீனாட்சி என்கிற தெய்வம் நிசமாகவே மனித ரூபத்தில் இருந்தது என்று நம்புகிறவர்கள் அல்ல. வழிவழியாக வந்த பழக்கத்தினாலும், கற்பிக்கப்பட்ட விதத்தினாலும் , வாழ்க்கையிலே ஏதாவது ஒரு பற்றுக்கோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும்,பிறருக்குத் தொந்தரவு தராத கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு , சாமி நிசமாகவே மனித உருவில் இருந்தது, இருக்கிறது என்று நம்பும் முழுமூடர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

  இந்த சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து, பெரியாரின் சிந்தனைகள், தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் மறுக்கவியலாதது. நடக்கிற அத்தனை குழப்பத்துக்கும் பிஜேபி கட்சி, தமிழகத்தில் ஊடுருவல் செய்ததே காரணம். ( அதற்குக் காரணமான திமுக, இப்போது அனுபவிக்கிறது என்பது தனிக்கதை ) . பதினைந்து பதினாறு ஆண்டுகள் முன்பு வரை, வினாயகர் சதுர்த்தி என்கிற சடங்கு, ஒரு கொழுக்கட்டை சுண்டல் செய்து வீட்டுக்குள்ளேயே பிள்ளையாருக்கு நிவேதனம் செய்து விட்டு சாப்பிடுகிற ஒரு சங்கதியாகத்தானே இருந்தது? பிஜேபியின் தலையெடுப்புக்குப் பிறகுதான் தீபாவளி, கார்த்திகை தீபம் என்று வீட்டு விசேஷமாக இருந்தது, இப்போதுமெகா சைஸ் பிள்ளையார், ஆரஞ்சு வர்ணக் கொடிகள், ஆர்.எஸ்.எஸ் என்று மத ஊர்வலம் ரேஞ்சுக்கு மாறிவிட்டது விட்டது. இதை வளர விட்டால், எல்லாத் தெய்வங்களுக்கும் அரசியல் கலர் பூசி, மதவாத நாடாக்கி விடுவார்கள்.

  ராமர் என்ற ஒருத்தர் நிசமாகவே இருந்தாரா என்று தமிழகத்தில் ஒரு ரெஃபரண்டம் வேண்டாம், ஐபிஎன் லைவிலே ஒரு poll வைத்தாலே உங்களுக்கு ரெப்ரசண்டேடிவ் சாம்பிள் கிடைத்து விடும்.

  இதிலே செமை காமெடியான விஷயம் என்ன என்றால், ராமர் என்ற ஒருத்தர் நிசமாகவே இருந்தார் என்பதை நிரூபிக்கும் சில "ஆராய்ச்சிகள்", இணையத்தில் படிக்கக் கிடைத்தன. வாய் விட்டுச் சிரிக்கலாம். சில நாட்களுக்கு முன்பு, தினமணிக்கு அளித்த பேட்டியில், சோ.ராமசாமி, இது நாள் வரை ராமர் என்பது வெறும் நம்பிக்கைதான் என்று நினைத்திருந்ததாகவும், இப்போது ராமர் நிஜமாகவே உயிருடன் உலவினார் என்பதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் இந்திய விஞ்ஞானிகள் எல்லாம் எங்கே போய்விட்டார்களென்றே தெரியவில்லை. ஒருவேளை, அவர்களும், சாமி கண்ணைக் குத்திடும் என்று நினைக்கிறார்களோ என்னமோ தெரியவில்லை :-)

  சேதுசமுத்திரத் திட்டம் உருப்படியான திட்டமா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ராமர் விஷயத்திலே வழவழா கொழகொழாவே கூடாது. எல்லாம் டூப் என்று அடித்துச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் நல்லது.

  ReplyDelete
 2. Enna ularal idhu, Prakash?
  Udharanathirku, En muppaattan Chelliah Josiyar Aavudayar kovilil vaazhnthar apdinnu en family nanbranga. Avar kalathil foto illai, avar sambanthapata entha physical proof-m illai enbathal apdi oruthar illave illai endru en kudumbam namba venduma? Extrapolating the same example, exaggerated or not, crores of Hindus do believe Ram existed. "Patrukodu" mattum pathathu sir. Apdinna, oorla irukra ella koilayum idichudlame..Sami foto, aiyappan dollar, kovil mottai ipdi entha adayalame vendame...Manasukulliye kumbuttukalame..Koil, church, mosquenu ella edathulayum govt office, industrynu kattalame...
  Ada yen Ramar kalathuku poreenga? Evlavo recent vishyangalke proof illa. Onnum illa, Kattabommannu oruthan actual-a vazhnthannu confirmed proof kaaminga. Nan Rajarajan peria kovilla kattala, kalvettula irukarthu ellam uttalakkadi apdingren. En arguement-a break pannungalen parpom. Sir, Appa yarngarthula arambichu vazhkaila nerya vishyangala nambi than aaga vendum.
  Idhu Nabigaloda mudithana, idhu guru gobind singh-oda kuruvaal thana apdinu ketu ketu ellathaiyum idikkalamgreengala?

  Why is the alternative route suggested is not even considered by the Central govt? Adhuku mudhalla badhil sollunga parpom..

  ReplyDelete
 3. ஹோமரின் இலியட் போல வால்மீகியின் ராமாயணமும் அற்புதமான சம்பவங்கள் நிறைந்த அருமையான காவியம். [அவ்வளவே!]
  >>>>>>>>>
  இந்த உண்மையை கோயிலில் "இராமகாதை" கேட்ட கும்பலிடம் விற்க முடியாது. அவ்வளவு ஏன் "எஜுகேட்டட் மிடில் கிளாஸ்"-ல் விற்பது கூட சிரமம்தான்.
  (இதுவே பைபிள், குரான், பகவத் கீதைகளில் வரும் "உண்மைக் கதை"களுக்கும் பொருந்தும்.)

  -பரி

  ReplyDelete
 4. இது போன்ற கட்டுரைகள் நிறைய வரவேண்டும். வாழ்த்துகள். எனது காட்டமான, கேலியான புன்னூட்டங்களை இங்கு இடவில்லை.

  -------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)

  ReplyDelete
 5. எல்லோரும் கருணாநிதி ராமனை எந்த collegeல் படித்தார் என்று பேசியதுதான் பிரச்சனைக்கு ஆரம்பம் என்று சொல்கின்றனர்.

  சேது சமுத்திர திட்டத்தினை பல ஆண்டுகளுக்கு பின் ஆரம்பித்து (அது சாத்தியமுள்ள கால்வாயா என்பது வேறு விஷயம்) பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் சு.சாமி தொடுத்த ஒரு அபத்தமான வழக்கை ஏற்றுக்கொண்டு தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிமான்களின் செயல்தான் பிரச்சனைக்கு ஆரம்பம். சிறிது அளவேனும் பொது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் ராமாயணம் ஒரு கதை என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. அப்படி இருக்கையில் மகா மேதைகள் ஆன நீதிபதிகள் ஒரு இடைக்கால தடை விதிப்பது என்பது அபத்தத்தின் உச்ச கட்டம். பிறகு நடந்தது ASIயின் குழப்பம். அதன் பிறகுதான் கருணாநிதி இப்படி பேச ஆரம்பித்தார்.

  ReplyDelete
 6. //Sir, Appa yarngarthula arambichu vazhkaila nerya vishyangala nambi than aaga vendum.//

  If you have any doubts about your father, you can go & do DNA analysis & find the truth.

  //Idhu Nabigaloda mudithana, idhu guru gobind singh-oda kuruvaal thana apdinu ketu ketu ellathaiyum idikkalamgreengala?//

  Usual hindu fanatics style of diverting the issue. The topic is whether rama existed or not.

  //Why is the alternative route suggested is not even considered by the Central govt?//

  Can you publish the alternative route? Havent you read the newspapers?? 6 different routes were discussed and this route was finalized by the NDA (BJP) government. The current UPA (Congress) government is just implementing what their predecessors recommended.

  ReplyDelete
 7. To demand faith should be acceptable only if there is
  historic or scientific evidence
  is not the right perspective.
  Trying to accomodate faith of a section of Hindus and reconsider
  the project will help in finding amicable solutions. Some matters cannot be resolved by science but only by dialogue and understanding.
  Science will deny immaculate conception and hence can we conclude that Christmas should not be clebrated or declared as a holiday.

  I am an atheist and I will
  object to any plan to demolish Meenakshi Temple as I consider it
  as a part of Tamil Heritage and
  an example of art and sculpture.
  There is more to Ramar Setu and
  Meenakshi Temple than just faith.

  Badri and Prakash suffer from
  a myopia, call it secularism
  or whatever you want.

  ராமர் விஷயத்திலே வழவழா கொழகொழாவே கூடாது. எல்லாம் டூப் என்று அடித்துச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் நல்லது.

  Great, this will push more Hindus towards BJP and RSS because you cannot do the same with faith of
  other religions. These myopic secularists are doing more harm
  than good.

  ReplyDelete
 8. இந்த வாதம் அறிவு பூர்வமானது அன்று. வெறும், பரபரப்புக்காக எடுத்துக்கொண்டது போல் தான் தோன்றுகிறது. அறிவியலால் அங்கீகரிக்கபட்டவற்றை மற்றுமே நம்புவதாக கூறினால், நம் உடலையே நம்பக் கூடாது. ஏனெனில், இன்னும் பலவற்றிற்கான காரணம் தெரியவில்லை.

  ஏதோ, நானும் "balanced view" சொல்கிறோம் என்று கூறி உங்களையே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்.ஆமாம் கருணாநிதி அ,ஆ செய்தார், ஆனால் தப்பில்லை. தனிப்பட்ட மனிதரின் உணர்வு வேறு, அரசவையில் இருக்கும் ஒருவர் தன் எண்ணத்தை மற்றவர்களிடம் புகுத்துவது வேறு. அப்படி கூறும் அரசு ஜனநாயகமா? அதற்கு நீங்கள் ஜால்ராவா?

  நிற்க. இன்னும் "Noah's arc" உன்மை என்று நம்பி அந்த இடத்தை பாதுகாக்கிறார்கள். நாம், நம்முடைய "அபரிதமான" அறிவை மற்றவர்களை குறை கூறுவதிலும், ஏளனம் செய்வதிலும் செலவிடுகிறோம்.

  எந்த சட்டாம், காவியம், சமயம் மற்றவர்களை புண்படுத்த சொல்கிறது? பகுத்தறிவாதம் என்பது இதுதானா? இதில் எதை பகுத்தீர்கள்? என்ன சாதித்தீர்கள்?

  அலகு குத்துவதை தவறென்று கூறுவது ஒருவிதம். மூடப்பழக்கத்தை தவறென்று கூறலாம். பலரின் நம்பிக்கையை கிண்டல் அடிப்பது அயோக்கியத்தனம். கரிகாலன் பொறியாளரா? சான்று உள்ளதா? எங்கு பட்டம் பெற்றார்?

  ReplyDelete
 9. prakash/badri,

  I believe that ram existed. But based on that i would not be blocking any constructive developments. And also i believe in pechuurimai. But it does not mean that i can use it in a irresponsible/stupid way. If karunandhi says something about ram, people cannot just pick that view in isolation. I would personally think about his views on christianity/islam (even though i am not supposed to do that - but i am not that matured). And so, if his views are causing people to react in stupid ways (thalaiya vettu, kaala vettu), i would put the blame squarely on karunanidhi. It is the usual defensive /evasive mechanism of human. when someone points a stupidity of your belief, you tend to react criticizing the other's beliefs(rather than acting on the merit of the statement)

  And so, if you are in a position to rule a state, you should be careful in projecting yourself. He is just doing this to gain a political mileage and he needs to be censured for the same.

  you don't get into constructive discussion with someone who is nothing but a liar.

  பலருக்கும் கடவுள் என்ற ஒருவர் தேவைப்படுகிறார். அந்தத் தேவையை மதம் பூர்த்தி செய்கிறது. அவ்வளவுதான்.

  idha nisa vaazhuvala kondu vandhu kozhappa koodadhu...What do you mean by that ? How do you treat nisa vaazhvu and your need for god separately. Everyone who is in need of god would try to keep him sacred. So, the best way is to eradicate the need for god.

  with regards
  manikandan

  ReplyDelete
 10. தமிழக முதல்வர் ராமரைப் பற்றிப் பேசுவதற்கு முழு உரிமை அவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன

  அதை ஏன் அவர் ராமனிடம் (இந்து)மட்டும் காட்டுகிறார்?மற்ற மதங்களிலும்(பால் தினகரன்) காட்டலாமே ?


  என்னைக் கேட்டால் ராமர் பொறியியல் கல்லூரியில் படித்தாரா என்று கலைஞர் கேட்டது, ரொம்ப மைல்ட
  ராமர் விஷயத்திலே வழவழா கொழகொழாவே கூடாது. எல்லாம் டூப் என்று அடித்துச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் நல்லது.


  இப்படி சொல்வதால் கலவரங்களை மட்டுமே உருவாக்க முடியும்
  பிரகாஷ்.

  ReplyDelete