இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம், குரோம்பேட்டை வளாகம், ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர்களும் மாணவர்களும் வந்திருந்தனர். சிஃபி அண்ணா கண்ணன் வந்திருந்தார்.
இது ஓர் இன்ஃபார்மல் சந்திப்பு. தமிழ்க் கணிமையில் இப்போது என்ன நிலை, யார் யார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இனி என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொதுவான பேச்சாக இருந்தது.
AU-KBC மையத்தின் இயக்குநர் பேரா. சி.என்.கிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உபுண்டு தமிழ் ஆர்வலர் ராமதாஸ், NRCFOSS-ல் வேலை செய்கிறார். அவர் முன்னின்று இந்த அமர்வை கவனித்துக்கொண்டார்.
விளக்கமான செய்திகள், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து வரும். கூட்டத்தின் இறுதியில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
அடிப்படை நோக்கம்: இணையத்தில் இந்திய மொழிகளில் (தமிழில்) செய்தி/தகவல்/விஷயங்களைக் கொண்டுவர உதவுவது. To enable creating Indian language (Tamil) content on the net. அதற்காக
1. NRCFOSS மூலம் ஓர் இணையத்தளத்தை உருவாக்குதல். அங்கே தமிழ் மென்பொருள் தொடர்பாக கல்வி நிலையங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தல்.
2. மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான ஒரு கூகிள் குழுமத்தை ஏற்படுத்துதல்.
3. இணைய மாத இதழ் ஒன்றை ஏற்படுத்துதல்.
4. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்துதல்.
*
இந்தச் சந்திப்பில் ஏற்கெனவே நான் அறிந்த பலர் என்ன புதுமையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பேரா. கிருஷ்ணமூர்த்தி ஒளிவழி எழுத்துணரி (OCR), பேரா.தெய்வசுந்தரம் (Tamil spellchecker, morphological analyser), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஒருவர் தமிழ்-மலையாளம், மலையாளம்-தமிழ் அகராதி ஆகியவற்றில் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று விளக்கினர். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் text-to-speech, voice recognition ஆகியவை தொடர்பாகச் சில காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார். Sourceforge-ல் கட்டற்ற மென்பொருளாகச் சிலவற்றைச் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.
NHM Converter-ஐ கட்டற்ற மென்பொருளாக மாற்ற, லினக்ஸில் வேலை செய்யவைக்க என்ன செய்வது என்பது பற்றிப் பேசினோம். விரைவில் அது நடக்கும். கூடவே NHM Converter, இலவச இணையச் சேவையாகவும் வெளியாகும்.
இன்றைய கூட்டத்தை ஓர் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டு, NHM நிறுவனத்தால் பல மென்பொருள் திட்டங்களைச் செய்யமுடியும். அங்கு வந்த பிறராலும் பல புதிய, உபயோகமான மென்பொருள்களை உருவாக்கமுடியும்.
கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி செய்வோருக்கும் தொழில்துறையில் வேலை செய்வோருக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியைக் குறைக்கவேண்டியது அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
அடடா எனக்கு தெரியாம போச்சே! இப்போ திறமூல நிரல்கள் பற்றி ஏதாவது நிகழ்நிலை அறிக்கை மாதிரி ஏதாவது பகிரப்பதட்டதா?
ReplyDeleteபதிவிட்டமைக்கு நன்றி. தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.
ReplyDeleteதமிழ் வளர்ச்சிக்கும் ஓபன் சோர்ஸ்க்கும் என்ன சம்பந்தம் ?
ReplyDeleteமொழி வளர்ச்சி கட்டற்ற மற்றும் விண்டோஸ் மேகிண்டோஷ் போன்ற கட்டுள்ள OS களிலும் பல்கிப் பெருகினால் நன்மையடையப் போவது அனைவரும் தானே ?
//இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார்.//
ReplyDeleteஅறியாமையாலும், அறிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் மட்டுமே இதைக் கேட்கிறேன்.
உங்கள் பதிப்பகத்திற்காக இணையக்கடை தளம் நடத்துகிறீர்கள். இந்த வலைப்பதிவில் எழுதுகிறீர்கள். இவற்றைத் தவிர கடந்த ஆண்டுகளில் தமிழ்க் கணிமைக்கு உங்கள் பிரத்தியேகப் பங்களிப்பு என்ன? NHM Writer உங்கள் முயற்சியா அல்லது திரு நாகராஜனின் முயற்சியா? அதில் உங்கள் பங்கு என்ன?
அறியாமையாலும், அறிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் மட்டுமே இதைக் கேட்ட அனானி நண்பரே:
ReplyDelete(1) தமிழ்க் கணிமைக்கு கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, இதுவரையில் மொத்தமாக நான் எந்தப் பங்களிப்பும் அளித்ததில்லை. அளித்ததாகச் சொல்லிக்கொண்டதுமில்லை.
(2) இணையக்கடை, வலைப்பதிவு நடத்துவதால் ஒருவர் தமிழ்க் கணிமைக்குத் தொண்டு செய்ததாக ஆகிவிடாது. என்னைப் பொருத்தமட்டில் இவையெல்லாம் பங்களிப்புகள் அல்ல.
(3) NHM Writer - உருவாக்குதலில் ஈடுபட்டது எங்களது நிறுவனம். தனி மனிதர்களின் பங்கு எப்படியிருந்தாலும் புராகிராமர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பவர்கள்வரை அனைவரது பங்களிப்பும் அதில் உள்ளது. எனது பங்களிப்பு அதில் கடுகைவிடக் குறைவுதான். அது எங்கள் நிறுவனத்தின் product.
(4) கவலைப்படாதீர்கள்; தமிழ்க் கணிமையை நான்தான் கட்டி எழுப்புகிறேன் என்று எங்கும் அரைகூவி யாருக்கோ வரவிருக்கும் பெயரை நான் தட்டிக்கொண்டுபோக விரும்பவில்லை!
வஜ்ரா: தமிழ் வளர்ச்சிக்கும் ஓப்பன் சோர்சுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.
ReplyDeleteகட்டற்ற மென்பொருள்மூலமே பல நேரங்களில் மென்பொருள் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லமுடியும்.
வணிக அளவில் பெரிய நிறுவனங்கள் பலவும் சந்தை சிறியது என்ற காரணத்தால் சில மொழிகளுக்கான மென்பொருள் உருவாக்குதலில் ஈடுபடமாட்டார்கள். அல்லது ஈடுபடுவதற்கு வெகு நாள்களாகலாம். சிறு மென்பொருள் நிறுவனங்களுக்கு, இந்தத் துறையில் ஈடுபடுவதற்கான ஒழுங்கு, வழிமுறை, திறன் ஆகியவை இல்லாமல் இருக்கலாம். இன்றைய தமிழ் சிறு மென்பொருள் நிறுவனங்களைப் பார்வையிட்டால் நான் சொல்வது என்ன என்று உங்களுக்குத் தெரியும்.
பல கல்வி நிறுவனங்களில் அரசு நிதியில் பல மொழி மென்பொருள் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை பெரும்பாலும் வீணாகப் போகின்றன. எனவே தன்னார்வ மென்பொருள் வல்லுனர்களும் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்களும் ஒன்றுசேர்ந்தால் அதற்கு நல்ல பலன் இருக்கும்.
அப்படி இவர்கள் ஒன்றுசேரும்போது உருவாக்கப்படும் மென்பொருள்கள், சேவைகள், வணிக நோக்குடன் இருக்க சாத்தியம் இல்லை. எனவே ஓப்பன் சோர்சாக இருப்பதற்கே சாத்தியம் அதிகம்.
இப்படித்தான் தமிழ் வளர்ச்சியும் ஓப்பன் சோர்சும் ஒரு புள்ளியில் இணைகின்றன.
ஆனால் சந்தை விரிவடையும்போது வேறு பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.