Tuesday, May 06, 2008

நியூ ஹொரைசன் மீடியா முதலீடு - அறிவிப்பு

இந்திய மொழிப் பதிப்பகம் நியூ ஹொரைசன் மீடியா, இரண்டாவது முறையாக மூலதனத்தைத் திரட்டியுள்ளது
மேலும் பல புதிய புத்தகங்களை வெளியிடவும், பல இந்திய மொழிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது

சென்னை, இந்தியா, மே 06, 2008

சென்னையைச் சேர்ந்த பல மொழி, பல வடிவப் புத்தகப் பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியா, பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டிடமிருந்து சிறுபான்மை முதலீட்டைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்த நிறுவனம் பெறும் இரண்டாவது முதலீட்டுச் சுற்றாகும். இந்தச் சுற்றில் நிறுவனத்தின் ஆரம்பப் பங்குதாரர்களும், முதல் சுற்றில் முதலீடு செய்த எமெர்ஜிக் வென்ச்சர் கேபிடல் நிறுவனமும் மேற்கொண்டு முதலீடு செய்துள்ளன. எமெர்ஜிக் வென்ச்சர் கேபிடல், 2006-ல் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தில் முதல் சுற்றில் முதலீடு செய்திருந்தது.

நியூ ஹொரைசன் மீடியா, பல துறைகளிலும் அச்சுப் புத்தகங்களையும் ஒலிப் புத்தகங்களையும், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கிறது. வரும் காலங்களில், இந்தியாவின் பிற மொழிகளில் பதிப்பிப்பதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழில் கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, ப்ராடிஜி புக்ஸ் ஆகிய நான்கு பதிப்புகளுடனும்,ஆங்கிலத்தில் இண்டியன் ரைட்டிங், ஆக்சிஜன் புக்ஸ், ப்ராடிஜி புக்ஸ் ஆகிய மூன்று பதிப்புகளுடனும், மலையாளத்தில் புலரி ப்ரசித்தீகரணம், ப்ராடிஜி புக்ஸ் ஆகிய இரண்டு பதிப்புகளுடனும் நியூ ஹொரைசன் மீடியா புத்தகங்களை வெளியிடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் புதுப் புத்தகங்களின் எண்ணிக்கையிலும்சரி, விற்பனையிலும்சரி, தமிழில் நியூ ஹொரைசன் மீடியா முதன்மை புத்தக வெளியீட்டு நிறுவனமாக விளங்குகிறது.

‘எங்களது அதிவேக வளர்ச்சிக்குக் காரணங்களாக, எங்களது நூதனமான வெளியிடுகள், உயர்தர எடிடிங் மற்றும் புத்தக உற்பத்தி, சகாய விலை மற்றும் திறன்வாய்ந்த விநியோகம் ஆகியவற்றைச் சொல்லமுடியும். எங்களது புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதைக் காணமுடிகிறது. விரைவிலேயே இந்தியாவின் பல மொழிகளுக்கும் விரிவடைய விரும்புகிறோம்’ என்கிறார் பத்ரி சேஷாத்ரி, நிர்வாக இயக்குநர்.

இந்தச் சுற்று மூலதனத்தைக் கொண்டு நியூ ஹொரைசன் மீடியா, தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் மேலும் பல புது நூல்களை வெளியிடும். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும். இந்தியா முழுமைக்குமாக ஆங்கிலப் புத்தகங்களை விநியோகிக்கும் நெட்வொர்க்கை உருவாக்கும்.

‘இப்போது பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் செய்திருக்கும் முதலீடானது, இந்தியப் புத்தகப் பதிப்புத்துறையிலேயே ஏற்பட்டிருக்கும் முதல் வென்ச்சர் கேபிடல் முதலீடாகும். இப்போது நடந்துள்ள முதலீடு, இந்தியப் புத்தகப் பதிப்புத் துறைக்குப் பிரகாசமான வளர்ச்சி உள்ளது என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நியூ ஹொரைசன் மீடியாவின் இயக்குநர், கே.சத்யநாராயண்.

‘இந்திய மொழிகளிலான உள்ளடக்கத்துக்கு உள்ள வாய்ப்பும், நியூ ஹொரைசன் மீடியாவை வழிநடத்திச் செல்வோரின் தொலைநோக்கும், பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிறுவனம், மிகக் குறுகிய காலத்துக்குள்ளாக வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் புதுமையான புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு, விற்பனையையும் மார்க்கெட்டிங்கையும் வெகுவாக முன்னெடுத்துச் சென்றுள்ளது’ என்கிறார் பீக்கன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தீபக் ஷஹ்தாத்புரி. இவர் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் இயக்குனராகச் சேர்கிறார்.

நியூ ஹொரைசன் மீடியா பற்றி

சென்னையைச் சேர்ந்த பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியா, 2004-ம் ஆண்டு, பத்ரி சேஷாத்ரி, கே.சத்யநாராயண், ஆர்.அனந்த்குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. நியூ ஹொரைசன் மீடியா, பல மொழிகளிலும் பல வடிவங்களிலும் புதினம், அ-புதினம் ஆகியவற்றை அச்சுப் புத்தகங்கள், ஒலிப் புத்தகங்கள், டிவிடிக்கள், இணையம், மொபைல் ஆகியவை வழியாக வெளியிட விரும்புகிறது. தற்போது, நியூ ஹொரைசன் மீடியா, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கிறது. நியூ ஹொரைசன் மீடியா சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. சென்னையிலும் திருவனந்தபுரத்திலும் எடிட்டோரியல் அலுவலகங்கள் உள்ளன.

பத்ரி சேஷாத்ரியும் கே.சத்யநாராயணும் ஐஐடி மெட்ராஸிலும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்கள். இருவரும், கிரிக்கின்ஃபோ.காம் என்ற கிரிக்கெட் இணையத்தளத்தினை உருவாக்கி நடத்திய குழுவில் இருந்தவர்கள். இந்தத் தளம் 2003-ல் விஸ்டன் குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆர்.அனந்த்குமார் டெக்சாஸ், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார்.

நியூ ஹொரைசன் மீடியாவின் பதிப்புகள் (மேலதிகத் தகவல்களுக்கு www.nhm.in என்ற தளத்துக்குச் செல்லவும்)



பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் பற்றி

பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட், பேயர் கேபிடல் பார்ட்னர்ஸ் ஆதரவுடன் தொடங்கப்பட்ட அமெரிக்க டாலர் 200 மில்லியன் பிரைவேட் ஈக்விட்டி நிதியாகும். பல துறைகளிலும் இருக்கும் வேகமாக வளரும் நிறுவனங்களில், முக்கியமாக நுகர்வோர் துறை, கட்டுமானம், இந்தியாவின் போட்டிபோடும் திறனால் லாபமடையும் நிறுவனங்களிலும், பீக்கன் முதலீடு செய்கிறது. இது பீக்கனின் ஐந்தாவது முதலீடாகும். இதற்கு முன்பாக, கலை ஏலங்களைச் செய்யும் சாஃப்ரன் ஆர்ட், ரியல் எஸ்டேட் நிறுவனமான வாடிக்கா லிமிடெட், மின் கட்டுமானத் துறை நிறுவனமான A2Z மெயிண்டனென்ஸ் அண்ட் எஞ்சினியரிங், உணவுத் துறை நிறுவனமான இம்ப்ரெசாரியோ ஹோல்டிங்ஸ் ஆகியவற்றில் பீக்கன் முதலீடு செய்துள்ளது.

மேற்கொண்டு விவரங்களுக்கு, எங்களது இணையத்தளத்துக்கு (www.nhm.in) செல்லவும் அல்லது கீழ்க்கண்ட நபரைத் தொடர்புகொள்ளவும்:

பத்ரி சேஷாத்ரி
நியூ ஹொரைசன் மீடியா,
33/15, எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018, இந்தியா
தொலைபேசி: +91--44-4200-9601/03/04 மொபைல்: +91-98840-66566
ஃபேக்ஸ்: +91-44-4300-9701
மின்னஞ்சல்: badri@nhm.in

6 comments:

  1. வாழ்த்துகள் பத்ரி.

    வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  2. Congratulations Badri and Team. All the best for NHM.

    ReplyDelete
  3. பதிப்பகத்துறையில் venture capitalistகளை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வட்டார மொழி பதிப்பகத்துறை என்னும் போது இன்னும் மகிழச்சி. சாதனைக்கும் வெற்றி தொடரவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பத்ரி, சத்யா,

    வாழ்த்துக்கள்!

    -sk

    ReplyDelete
  5. Congrats! It would be nice if you write blog post about it, talking about your perspective instead of just publishing the press release. All the very best.

    ReplyDelete