முகமது யூனுஸ் பங்களாதேசத்தில் அறிமுகப்படுத்திய குறுங்கடன் மாதிரிக்குப் பெயர் ‘கிராமின் மாதிரி’. யூனுஸ் ஒரு ‘லாப நோக்குள்ள’ நிறுவனத்தைத்தான் தொடங்கினார். லாபம் அவசியம் என்பது யூனுஸின் கருத்து. ஆனால் அந்த லாபம் அதிகமாக இருக்கக்கூடாது. லாபத்தை மீண்டும் மீண்டும் முதலீடு செய்து கொடுக்கக்கூடிய கடன்களை அதிகரிக்கவேண்டும். இதுதான் அவரது கருத்து.
கிராமின் ஆரம்பம் கடினமாகத்தான் இருந்தது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் என்பதை அவர்களது கணவர்கள் எதிர்த்தனர். பெண்ணுக்குக் கையில் பணம் கிடைத்தால் அவளுக்கு மதிப்பு கூடும். கணவர்களால் அடித்து நொறுக்கி ஆகாத்தியம் செய்யமுடியாது. ஆனால் நாளடைவில் ஆண்கள் வழிக்கு வந்தனர். முல்லாக்கள் வட்டியுள்ள கடனுக்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தனர். ஆனால் செயல்முறையில் மக்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் குறுங்கடன் மெதுவாக, மிக மெதுவாகத்தான் பங்களாதேச மக்களுக்கு நன்மை செய்தது.
முதலில் கிராமின் வளரவேண்டியிருந்தது. உலக அளவில் பலரது நம்பிக்கையைப் பெறவேண்டியிருந்தது. பங்களாதேசம் இயற்கைப் பேரிடர்களால் எப்போதும் தாக்கப்படும் ஒரு தேசம். வெள்ளம், புயல், பயிர் நாசம். உணவுக்குக் கஷ்டம். அங்கு உருப்படியான அரசியலும் கிடையாது. எர்ஷாதின் சர்வாதிகார ஆட்சியை ஏறக்கட்டியபிறகு இரு பெண்கள் ஆக்ரோஷமான அரசியலை நடத்தினர் - இன்றும் தொடர்கின்றனர். ஒருவர் கொல்லப்பட்ட பங்களாதேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா; தற்போதைய பிரதமர். இன்னொருவர் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர், ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா ஜியா. இன்றுவரை இரு பெண்களுக்கும் இடையில் வெட்டுக் குத்துப் பழி. எர்ஷாதைப் பதவியிலிருந்து இறக்கமட்டுமே இருவரும் ஒன்று சேர்ந்தனர்.
பங்களாதேசத்தில் படிப்பறிவு இந்தியாவைவிடக் குறைவு. ஏழைமை இந்தியாவைவிட அதிகம். தொழில் வளர்ச்சி இந்தியாவைவிடக் குறைவு. அரசியல் இந்தியாவைவிட மோசம். அதனால் பங்களதேசத்தின் வளர்ச்சி மிக மிக மெதுவாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று, யூனுஸின் குறுங்கடன் பல லட்சம் ஏழைகளின் வாழ்க்கையை சற்றேனுமாவது முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதுதான்.
ஆனால் யூனுஸுக்கு ஏகப்பட்ட எதிரிகள் உள்ளனர். இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது குறுங்கடன் என்பதையே எதிர்க்கும் உலகளாவிய இடதுசாரிகள். யூனுஸ் கார்பரேட் குழுமங்களின் கையாள் என்பதில் தொடங்கி, ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை என்பதுவரையில் இந்தக் குற்றச்சாட்டுகள் செல்கின்றன. பங்களாதேசத்துக்குள், மாற்று குறுங்கடன் நிறுவனர்கள் சிலரும் யூனுஸுக்குக் கிடைக்கும் உலகப் பெருமையைக் கண்டு பொருமுகிறார்கள். யூனுஸ்க்கு அமைதி நோபல் பரிசு கிடைத்ததும் அவர்மீது படியும் ஏச்சுகள் அதிகரிக்கவே செய்துள்ளன.
கிராமின் வெறும் குறுங்கடனுடன் நிற்கவில்லை. இந்தியா போலன்றி பங்களாதேசத்தில் பெரிய அளவில் தொழில்துறை கிடையாது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? கிராமின் வங்கிதான் புதிய பல தொழில்களுக்கு அடி போட்டுக்கொடுத்தது. நார்வேயின் டெலிநாருடன் இணைந்து கிராமின் டெலிகாம் என்ற செல்பேசி நிறுவனத்தை ஆரம்பித்தது. அதன்மூலம் போன் லேடீஸ் என்ற ஐடியாவை முன்வைத்து கிராமங்களில் குறுங்கடன்கள் மூலமாக, பெண்கள் நடத்தும் செல்பேசியால் ஆன பொதுத் தொலைபேசி முறையைக் கொண்டுவந்தது. முதன்முதலில் பங்களாதேசத்துக்கு உருப்படியான இண்டர்னெட் சேவையைக் கொண்டுவந்ததும் கிராமின் வங்கியின் கிராமின் இண்டெர்னெட்தான். பிரான்ஸின் குரூப் டானோனுடன் இணைந்து விடமின் கலந்த தயிர் தயாரித்து, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அவற்றை விற்க முனைந்தது கிராமின். இப்படி கிராமினின் பல்வேறு நிறுவனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அதனால்தானோ என்னவோ, யூனுஸுக்கு 70 வயது ஆகிவிட்டது என்று அவரை கிராமின் வங்கியின் தலைமைப் பதவியிலிருந்து பங்களாதேச அரசு தூக்கிவிட்டது!
சில ஆண்டுகளுக்குமுன் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் முடியைப் பிய்த்துக்கொண்டு சண்டை போட்டனர். தேர்தலுக்கு முந்தைய சண்டை இது. அப்போது யூனுஸ் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். நோபல் பரிசு பெற்ற மிதப்பில் இருந்ததனாலோ என்னவோ, தானும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அவர் முடிவு செய்தார். முன்னாள் பிரதமரும் இன்னாள் பிரதமரும் அடித்துக்கொள்ளும் சண்டை நாட்டு மக்கள் அனைவரையுமே வெறுப்பில் ஆழ்த்தியிருந்தது. தன்னை ஒரு மாற்றாக முன்வைக்க யூனுஸ் முன்வந்ததும் அரசியல்வாதிகள் அவருக்குக் கட்டம் கட்டினர். ஒருவிதமாக அரசியல் அமைதி வந்து, தேர்தல் நடத்தப்பட்டு, ஷேக் ஹசீனா ஜெயித்தார். அப்போதே யூனுஸுக்கு ஆப்படிப்பது என்று முடிவானது. ஹசீனா யூனுஸ்மீது பணம் கையாடல் குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் இப்போது 70 வயதாகிவிட்டது; எனவே பதவியில் இருக்கமுடியாது என்ற சட்டப்படியான நடவடிக்கை.
யூனுஸ் இதனை எதிர்ப்பது எளிதல்ல. நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுப் பார்த்தால், யூனுஸ் கட்சி வீக். அவர் பேசாமல் வேறு விஷயங்களில் இறங்கலாம். கட்சி பாலிடிக்ஸ் அவருக்குச் சரிப்படுமா என்று தெரியவில்லை.
***
இந்தியாவில் இதே நேரத்தில் வேறொரு சோதனை முயற்சி நடந்துகொண்டிருந்தது. சிட்பி, நபார்ட் போன்ற மத்திய அரசின் வங்கி அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் என்னும் முறையை ஊக்குவித்துக்கொண்டிருந்தன.
மக்களிடையே, குறிப்பாக, ஏழைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுதான் இதன் அடிப்படை. மக்கள் 20 பேர் கொண்ட குழுக்களாகக் கூடி, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கவேண்டும். இவர்களுக்கு உதவ ஏதேனும் ஒரு தொண்டமைப்பு முன்வரும். இந்தப் பணத்தை ஏதெனும் ஒரு பொதுத்துறை வங்கியில் குழுக் கணக்காக எடுத்துக்கொள்வார்கள். இந்தப் பணத்திலிருந்து குழுவின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட வட்டியில் கடன் கொடுக்கலாம். அவர் கடனைக் குறிப்பிட்ட தினத்துக்குள் கட்டிவிடவேண்டும். நாளடைவில் அந்த வங்கியே மேற்கொண்டு கொஞ்சம் பணத்தைக் குழுவுக்குக் கடனாகக் கொடுக்கும். அந்தப் பணத்தையும் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கடனாகக் கொடுத்துக்கொள்ளலாம்.
பிரையாரிட்டி செக்டர் என்ற கணக்கில் இதுபோன்ற சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதை மத்திய அரசு ஊக்குவிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் குறிப்பிட்ட அளவு கடன்களை இந்த வழியில் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களைக் கட்டமைத்து இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் தொண்டமைப்புக்கு மாநில அரசுகள் மானியத் தொகை கொடுத்தனர்.
லாபநோக்கற்ற அமைப்புகள் என்றாலும் இவற்றில் நிறைய ஊழல்களும் நிறைந்திருந்தன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களது பணம் பிறருக்குப் பயன்பட ஆரம்பித்தது. தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த ஓட்டுவங்கியாக குறிப்பிட்ட பணம் கைமாறினால் வாக்களிக்கப்படும் என்பதாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எந்த ஒரு தொண்டமைப்பாலும் சராசரியாக, 10-20 சுய உதவிக்குழுக்களுக்குமேல் நடத்தமுடியாது. இவர்களிடம் தேவையான தகவல் தொடர்பு மென்பொருள்கள் இருக்காது.
பணப் பட்டுவாடா என்பதைத் தாண்டி, ஸ்கில் பில்டிங் என்னும் திறன் மேம்பாடு இவர்களுடைய ஆதாரத் தேவை. ஆனால் எவ்வளவு குழுக்களில் இது முறையாக, ஒழுங்காக நடந்தது என்பது தெரியவில்லை.
***
மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் ஆங்காங்கே தோன்றி, மையமான தலைமை இல்லாமல் நடப்பதால், சில நன்மைகள் உண்டு, பல தீமைகள் உண்டு. பெயர் சொல்லும்படியாக ஓரிரு அமைப்புகளையே சொல்லலாம். ஆனால் ஸ்கேலபிலிடி கிடையாது. இவை அனைத்தும் அடிப்படையில் சேமிப்பையும் அதற்குப்பின் கடனையும் முன்வைக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஏழை மக்களுக்கு, சேமிக்கக் கையில் ஒன்றுமே இல்லை. அவர்களுக்குத் தேவை முதலில் கடன். பின் அதிலிருந்து வரும் வருமானத்தில் சேமிப்பு. பின் ஒழுங்கான குறுமுதலீடு, குறுங்காப்பீடு...
இங்குதான் மீண்டும் கிராமின் மாதிரி இந்தியாவுக்குள் புகுந்தது.
(தொடரும்)
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
திரு பத்ரி அவர்களுக்கு
ReplyDeleteஇந்த சப்ஜெக்டில் எளிமையாக தமிழில் இல்லையேனு நினைத்ததுண்டு. இப்ப நீங்க தொடங்கி நல்லா எழுதிட்டு வரீங்க. மிக்க நன்றி
இது புத்தகமாகவும் மலரும்னு நினைக்கிறேன்
A very informative and educative post, Badri.
ReplyDeleteThanks and Keep writing. :)
Ovvakkaasu.
அரசியல் காற்று சூறைக்காற்றாக வலைபதிவுகளில் அடித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இது போன்ற பதிவுகளை இந்த சமயத்தில் எழுதும் உங்களுக்கு என் வாழ்த்துகள். காந்தி சொன்ன மாதிரி கிராம அளவில் சுதந்திர வாழ்க்கையை உள்ளூர் நபர்கள் தீர்மானிக்கும் சக்தி பெறும் போது மிகப் பெரிய மாறுதல்கள் உருவாகும். இந்தியாவின் மிகப் பெரிய சாபக் கேடே எந்த உரிமையும் அவரவர் சார்ந்த துறையில் யோசிக்க முடியாத அளவிற்கு எல்லா நிலையிலும் அரசியல்வாதிகள் சக்தி ஊடுருவி இருப்பதால் நான் வாழும் பகுதியில் உள்ள நெசவுத் தொழில் மக்கள் மிகப் பெரிய பாதிப்பை அடைந்துள்ளனர். ஒவ்வொன்றுக்கும் எவரையோ சார்ந்து இருப்பதால் தங்களின் தொழில் வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் அரசியல் சக்தியை எதிர்கொள்ள முடியாமல் தவித்துப் போய் தடுமாற்ற பாதையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். மாற்றம் வந்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ள பலரில் நானும் ஒருவன்.
ReplyDelete