Sunday, March 13, 2011

திருப்பாண்மலை

திருமலைசென்ற அதே நாளில் திருப்பாண்மலை என்ற மற்றோர் இடத்துக்கும் சென்றிருந்தோம். இதுவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள இடம். இதுவும் ASI பராமரிப்பில் உள்ளது. இங்கு சிறு குன்றின்மேல் ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இந்தக் குன்றின்மேல் உள்ள பாறையில் சிறப்பாகச் சொல்லவேண்டியவை இரண்டு கல்வெட்டுகள். ஒன்று பல்லவ அரசன் நந்திவர்மன் காலத்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது; பல்லவ கிரந்தத்தில் இல்லை. நந்தி போத்தரசன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் பல்லவ அரசர்கள் ‘போத்ராதிராஜன்’ என்று அழைக்கப்படுவார்கள்.

நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு - பொன் இயக்கியைச் செதுக்கியுள்ளதைக் குறிக்கிறது.
அந்தக் கல்வெட்டு தென்படும் இடத்துக்கு அடியில் ஒரு சுனை உள்ளது. சுனையை ஒட்டிய கல்லில் ஒரு யக்ஷியின் சுமாரான புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த யக்ஷியின் பெயர் அம்பிகை. தமிழ்க் கல்வெட்டு இவளை ‘பொன்னியக்கி’ என்று குறிப்பிடுகிறது (யக்ஷி = யக்கி = இயக்கி).

பொன்னியக்கி - யக்ஷி அம்பிகா
இதே பாறையின் மறுபக்கம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டு அடிப்பவர் ராஜராஜனுக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ என்று எழுத விட்டுவிட்டார். பின் அவசர அவசரமாக சற்று தள்ளி கீழே அதனை எழுதியிருக்கிறார். நன்றாக அடிக்கோடிட்டு அழகாக எழுதப்பட்ட கல்வெட்டு. கீழே சோழர்களின் புலி பொறிக்கப்பட்டுள்ளது. (பார்த்தால் கொஞ்சம் நாய் மாதிரி இருக்கும்!)

ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு
சோழர்களின் புலி இலச்சினை
குன்றின் நடு மையத்தில் தீர்த்தங்கரர் ஒருவரின் புடைப்புச் சிற்பத்தை ஆரம்பித்துள்ளனர்.


குன்றைச் சற்றே சுற்றிவந்தால், ஒரு குகைக் கோவிலைக் காணலாம். ஏழு கருவறைகள் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாதியில் கைவிட்டுவிட்டு, கருவறைகளை முழுவதும் செதுக்காமலேயே சென்றுவிட்டனர். ஸ்டைலைப் பார்த்தால் நிச்சயமாக பல்லவர் காலக் குகைக் கோவில் என்றுதான் சொல்லவேண்டும். மகேந்திரன் காலமாக இருக்கலாம். ஆனால் அருகில் ஏ.எஸ்.ஐ பலகைகள் ஏதும் இல்லை.

மகேந்திரன் காலக் குகைக் கோவில்?
மேலே ஒரு தர்கா இருப்பதால் இந்த இடத்துக்கு நிறைய முஸ்லிம்கள் வருகின்றனர். ஆனால் அந்த தர்காவில் வழிபாடு எல்லாம் கிடையாது.

2 comments:

  1. அருமையான புகைப்படங்களுடன் சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நீங்க திருடர்களின் முன்னேற்றத்திற்கு அடிக்கும் ஜால்ராவுக்கு பாவம் கழிக்க இது போன்ற pro pseudo Hinduism கட்டுரைகளா? அது எப்படியும் தீராது. (ஐயோ என்னை கொல்றாங்களேனு மறுபடியும் கதறும் வரைக்கும்) அப்பவும் கைது சர்ச்சைனு ஒரு கையேடு போட்டு கல்லா கட்ற மாட்டீங்களா என்ன? அப்ப நீங்க எங்கே இருப்பீங்களோ ? இருந்தாலும் சொல்லிவெச்சுக்கறேன்.

    ReplyDelete