Monday, March 07, 2011

யக்ஷி அம்பிகாவின் கதை

இந்தக் கதை பேராசிரியர் ஜோப் தாமஸ் எழுதி நாங்கள் வெளியிட்டுள்ள Paintings in Tamil Nadu - A History என்னும் புத்தகத்திலிருந்து... கீழே காணப்படும் ஓவியம் ஒன்று அவர் எடுத்தது. இப்போது நான் திருமலை சென்றபோது இவையெல்லாம் காணப்படவில்லை. அழிந்துபோயிருக்கவேண்டும். யக்ஷி அம்பிகா வடிவிலான ஓவியம் மட்டும்தான் எஞ்சியுள்ளது.

***

சோமசர்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அக்னிலா. அவன் ஒரு நாள் தன் மனைவியை சமையல் செய்யச் சொல்லிவிட்டு, சில பிராமணர்களை விருந்துண்ண அழைத்திருந்தான்.

விருந்துண்போர் வருவதற்கு முன்பாக, இரு சமண முனிவர்கள் அந்தப் பக்கம் வந்தனர். அக்னிலா, அந்த இருவருக்கும் உணவு பரிமாற விரும்பினாள். வேண்டிய அளவு உணவு இருந்த காரணத்தால் சமணர்களை அழைத்து, வணங்கி, அவர்களுக்கு உணவையும் பரிமாறினாள்.

அவர்கள் சென்றபிறகு விருந்துண்ண வந்த பிராமணர்கள் எப்படியோ இந்த விஷயத்தை அறிந்துகொண்டனர். சமணர்கள் சாப்பிட்ட மிச்சத்தைத் தாங்கள் சாப்பிடமாட்டோம் என்று மறுத்துவிட்டு, கோபமாக வெளியேறினர்.

தனது விருந்தினர்கள் இவ்வாறு அவமதிக்கப்பட்டதை எண்ணிக் கடுங்கோபம் அடைந்த சோமசர்மன், தன் மனைவி அக்னிலாவையும் அவளது மகன்களையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.

இதனால் காட்டுக்குப் போன அக்னிலாவை, கடவுள்கள் காப்பாற்றினர். அவளது பெயரும் புகழும் எங்கும் பரவியது.

சில நாள்கள் சென்றவுடன் சோமசர்மனுக்குத் தான் செய்த தவறு புலப்பட்டது. காட்டுக்குச் சென்று தன் மனைவி அக்னிலாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான்.

காட்டில் இருந்த அக்னிலா தூரத்தில் தன் கணவன் சோமசர்மன் வருவதைப் பார்த்தாள். அவன் தன்னைத் தாக்கத்தான் வருகிறான் என்று எண்ணிய அக்னிலா, பயந்துபோய், மலை முகட்டிலிருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள். அவளது நல்வினைகளால் அவள் ஒரு யக்ஷியாகப் பிறந்தாள். அந்த யக்ஷிதான் அம்பிகா.

மனைவி தன்னை தவறாகப் புரிந்துகொண்டு தன்னையே மாய்த்துக்கொண்ட காரணத்தால் வருத்தமுற்ற சோமசர்மன், சில காலம் கழித்து இறந்துபோனான். இறந்தபின் அவன் ஒரு சிங்கமாகப் பிறந்தான். யக்ஷி அம்பிகா அந்த சிங்கத்தைத் தன் வாகனமாகக் கொண்டாள்.

*

இந்தக் கதையைத்தான் விஜயநகரக் காலத்து ஓவியர்கள் தீட்ட முற்பட்டுள்ளனர். அக்னிலா சமண முனிவர்களை வரவேற்று வணங்கும் ஓவியத்தைக் கீழே காணலாம்.

திருமலை - அக்னிலா சமணர்களை வரவேற்பது (படம்: ஜோப் தாமஸ்)

இப்போது நான் சென்றிருந்தபோது இந்த ஓவியத்தைக் காணோம். முற்றிலுமாக அழிந்துவிட்டதா என்று தெரியவில்லை. அக்னிலா யக்ஷி அம்பிகாவாக ஆனபின் இருக்கும் தோற்றம் இப்போதும் இருக்கிறது. பெரும்பாலும் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

திருமலை - யக்ஷி அம்பிகா

பெரிதாக்கிப் பார்த்தால் அம்பிகாவுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். அவளது தலையைச் சுற்றி அக்னிப் பிழம்புகள் தெரியும். சிங்க வாகனம், மூன்று கண்கள், தலையில் அக்னியுடன் இவள் ஹிந்து காளியைப் போன்றவள்.

சமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் என்று யக்ஷிகள் உண்டு. அம்பிகா, நேமிநாதருக்குப் பணிவிடை செய்பவள். இந்தத் தலம் நேமிநாதருக்கானது என்பதால் யக்ஷி அம்பிகாவின் கதையைப் படமாக்கியுள்ளனர்!

விஜயநகர சாயலில் சமண முனிவர்களும்கூட தொந்தியும் தொப்பையுமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம். நீண்டு தொங்கும் காதுகள் மற்றுமொரு அடையாளம்.

ஓவியச் சிறப்பில், அஜந்தா வாகாடக ஓவியங்கள், சித்தன்னவாசல் பாண்டிய ஓவியங்கள், கைலாசநாதர்/பனமலை பல்லவ ஓவியங்கள் அளவுக்குத் திறம்படைத்தவையாக இல்லாவிட்டாலும், 700 ஆண்டுக்கும் மேற்பட்ட இந்த ஓவியங்களையும் நாம் ரசிக்கத்தான் வேண்டும்.

4 comments:

 1. நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவீங்கனு நினைக்கிறேன். அடிக்கடி சுற்றுலா செல்வது சிலருக்குதான் அமையும். உங்கள் blogil படிப்பது நாங்களும் போய் வந்தது போல் உள்ளது.

  ---iambalamurugan

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ள பதிவு. Paintings in TamilNadu என்ற புத்தகத்தைத் தமிழில் கொண்டுவந்தால் என் போன்ற தமிழ் வாசகர்கள் பயனடைவார்களே? செய்வீர்களா?

  ReplyDelete
 3. மாரியப்பன்: வருமாண்டு (ஏப்ரல் 2011-மார்ச் 2012) இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவரமுடியுமா என்று பார்க்கிறோம்.

  ReplyDelete