Tuesday, October 18, 2011

நேற்றைய சென்னை மாநகராட்சித் தேர்தல்

கிண்டியிலிருந்து கோபாலபுரம் வந்து வாக்களிக்கவேண்டியிருந்தது. அடுத்த தேர்தலுக்குள் வாக்குச் சாவடி மாற்றியிருப்பேன்.

நிறைய வருத்தங்கள். சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டம் இப்போது இருக்கவில்லை. சென்னை மாநகராட்சிக்கு வெறும் 48% வாக்குப் பதிவுதான் நடந்துள்ளது என்பது கடும் சோகம். இதற்கு முழுக்காரணம் வீட்டுக்குள்ளிருந்து சாக்கியம் பேசும் மிடில் கிளாஸ் ஆசாமிகள்தான் என்பது தெளிவு. இன்னொரு முறை அவர்கள் நீட்டி முழக்கினால் அவர்கள் வீட்டில் சாக்கடைத் தண்ணீரைக் கொண்டுவந்துதான் கொட்டவேண்டும். நான் தெருவில் பார்த்தவரை கீழ்த்தட்டு மக்கள்தான் அதிகமாக வாக்களிக்கச் சென்றுகொண்டிருந்தனர்.

அடுத்து, வாக்குச் சாவடி மேனேஜ்மெண்ட். அடையாளச் சீட்டைக் காண்பித்தாலே போதும், உடனே வாக்களிக்க அனுப்பிக்கொண்டிருந்தனர். தேர்தல் அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லவே இல்லை. நானாகக் காண்பித்தும் அதனைப் புறக்கணித்தனர். எனக்கு முன்னால் ஒரு இளைஞர் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் வாக்களிக்கச் சென்றார். யாருமே, சாவடி ஏஜெண்டுகள்கூட, கண்டுகொள்ளவில்லை.

காவல்துறையினர் பெயருக்கு, சும்மா நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவித அவசர உணர்வோ, எச்சரிக்கை உணர்வோ இல்லை.

ஆளாளுக்கு சாவடிக்குள் வந்துபோய்க்கொண்டிருந்தனர். யாரோ ஒரு கரைவேட்டிக்காரர் தேர்தல் அலுவலருக்கு சாப்பாடு (சரவணபவன்) வாங்கிக் கொடுத்தார். இது வரைமுறைக்குள் வராத ஒன்று. ஆனால் அந்தத் தேர்தல் அலுவலரே சொந்தக் காசு கொடுத்து உணவு வாங்கி வரச் சொல்லியிருந்திருக்கலாம். தெரியவில்லை.

வாசலில் ஒரு அம்பாசடர் வண்டியில் பத்து பேருக்குமேல் திணிக்கப்பட்டு உட்கார்ந்திருந்தனர். என்ன காரியத்துக்காக என்று தெரியவில்லை. என்ன காரியமாக இருந்தாலும் அது நல்ல காரியம் என்று நினைக்கத் தோன்றவில்லை. பின்னர் வேறு ஓரிடத்தில் சுமார் 17-18 வயது மதிக்கத்தக்க பல இளைஞர்கள் ஒரு டாடா மேஜிக் வண்டியில் திணிக்கப்பட்டு எங்கோ கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்தக் காரியத்தின் நோக்கமும் நல்லதாக இருக்காது என்றே பட்டது.

ஆங்காங்கு வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. சென்ற 2006 அளவுக்கு இல்லை என்றாலும் இந்த வன்முறை மிக மோசமானது. இதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் வன்முறையில் திமுகவும் ஈடுபட்டுள்ளதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே ஆசுவாசம், எல்லா இடங்களிலும் வன்முறை இன்றி, ஓரளவுக்கு நல்லதாகவே தேர்தல் நடந்துமுடிந்ததுதான். சென்னை என்ற அவமானச் சின்னத்தைத் தாண்டி, பிற இடங்களில் அதிகமாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

16 comments:

 1. 1959 ஆம் ஆண்டில் சென்னை நகரின் மத்திய தர வகுப்பினர் அப்போதைய மாநகராட்சி தேரதலை கிட்டத்தட்ட அடியோடு கண்டுகொள்ளாமல் விட்டதன் பலனாகவே சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 2. //இதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் வன்முறையில் திமுகவும் ஈடுபட்டுள்ளதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. //

  புரியலையே ! வேறு கட்சியினரின் வன்முறைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டாமா ?

  ReplyDelete
 3. எனக்கும் இதேதான் தோன்றியது. நேற்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகமாக இருந்ததாக
  செய்தி படித்ததும் வெறுத்து விட்டேன். இருப்பதிலே சுமாரான வேட்பாளரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்
  என்ற பொறுப்பிலாத மக்களை நினைத்து எரிச்சல்தான் வருகிறது. பலர் சட்டசபை, பாராளுமன்ற தேர்தலுக்கு
  கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த தேர்தல்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால் தினப்படி வசதிகளை நாம் கேட்டுப் பெற வேண்டியதே உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்துதான் என்பதைப் பலர் உணர்வதில்லை. இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை மாநில தேர்தல் ஆணையம் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் ஆகியவற்றின் மூலம் உணர்த்தியிருக்க வேண்டும்.

  ReplyDelete
 4. மணிகண்டன்: ஜெயலலிதா முதல்வர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியவர். யார் வன்முறை செய்தாலும் தடுக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. திமுக”வும்” என்றுதான் சொன்னேன். திமுக மட்டுமல்ல. ஆளும் கட்சி வன்முறை கட்டாயம் நடந்துள்ளது. அதற்கு மட்டுமாவது அவர் பொறுப்பேற்றுக்கொள்ளட்டும்.

  ReplyDelete
 5. For this election, everybody forgets about the much talked 49-O

  Suppamani

  ReplyDelete
 6. "Jagannath said...
  எனக்கும் இதேதான் தோன்றியது. நேற்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகமாக இருந்ததாக
  செய்தி படித்ததும் வெறுத்து விட்டேன்."

  I guess people utilized the day for deepavali shopping!

  ReplyDelete
 7. அதிமுகவின் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவரான செந்தில் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

  ReplyDelete
 8. வருங்கால வேட்பாளர் என்ற முறையிலும் இவை உங்களுக்கு கவலை தரும் விஷயங்கள்தான்.

  ReplyDelete
 9. பத்ரி,நீங்கள் பார்த்தது சரி.. பார்க்காதது கிராமங்களில் வாக்கு சாவடிக்கு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்களின் நிலைமை படு மோசம். அதுவும் பெண்களின் நிலைமை ரொம்ப மோசம்.அதையும் கொஞ்சம் பதுவு செய்யுங்கள்.

  ReplyDelete
 10. நூற்றிக்கு ஐம்பத்திரண்டு பேர் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கின்றனர் இந்த தருமமிகு சென்னையில்.வெட்ககேடு.மேலும் பல அருமையான புத்தகங்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் கிழக்கு பதிப்பக கடையில் (வழக்கம் போல)ஈ காக்கா இல்லை.வெளியிலோ ஒரு லட்சம் பேர் தலை வெட்டப்பட்ட கோழி போல பையும் கையுமாக அலைகின்றனர்.
  நமக்கு ஜனநாயகம் ஒரு கேடு!!

  ReplyDelete
 11. பத்ரிஜி
  உங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தின் தலைப்பை
  "ஆள்கள் தேவை!"
  என்பதற்கு பதிலாக
  "மொழிபெயர்ப்பாளர்கள் தேவை!"
  என மாற்றி விடவும்
  நன்றி!

  ReplyDelete
 12. Whatever happened to Raj Cherubal ?

  ReplyDelete
 13. From my twitter feed:

  சென்னை வார்ட் 183: அதிமுக 4994, திமுக 1742, தேமுதிக 865, மதிமுக 414, ராஜ் செருபால் 331, பாமக 166, காங்கிரஸ் 140 #TNElectionResult

  ReplyDelete
 14. அதிமுக 4994, செருபால் 331. What a sobering result for the "Educated-for-Politics" enthusiasts!

  படித்தவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்துதான் இதைச் செய்யவேண்டும். அரசியல் கட்சிகளை மறுப்பது என்பது, கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டில் ஜனநாயக விரோதமே. இதை வாக்காளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். (செருபாலின் நல்லெண்ணத்தை நான் குறை கூறவில்லை.)

  தேர்தலில் நிற்பேன், ஆனால் அரசியல் கட்சிகளில் சேரமாட்டேன் என்று சொல்வது, வழக்கமாக மிடில் கிளாஸ் மக்கள் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு "அரசியல் ஒரு சாக்கடை" என்று சொல்வதையே வேறு வழியில் சொல்வதுதான். கொஞ்சம் செலவு பிடிக்கிற, அலைச்சல் தருகிற வழி.

  சரவணன்

  ReplyDelete
 15. செருபால் (பாமக 166, காங்கிரஸ் 140)விட அதிக ஒட்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
  ஒரு சுயேச்சை கவுன்சிலர்,எம்.எல்.ஏ அல்லது எம் பி ஆகும் போது அவரால் தன தொகுதிக்கு நன்மைகள் செய்ய முடியுமா அதை ஆளுங்கட்சி அனுமதிக்குமா என்பது எல்லார் மனதிலும் உள்ள சந்தேகம்.இதையே நான் செருபால் இடம் கேட்டிருந்தேன் ஆனால் காரணம் தெரியவில்லை அவரிடமிருந்து இதற்கு எந்த பதிலும் இல்லை.(பத்ரியையும் நான் கேட்டிருந்தேன்)ஒரு அதிகாரமும் இல்லாமல் ஒரு சுயேச்சையை மக்கள் தேர்தெடுக்க மாட்டார்கள்.இது குறித்த தெளிவாக்கம் மிக அவசியம்.பத்ரி இதையே ஒரு சிறு புத்தகமாக கொண்டு வரலாம்.அதாவது ஒருவர் கட்சி சார்பின்றி தேர்தலில் நின்று ஜெயித்து வந்தால் என்னென்ன நன்மைகள் செய்யமுடியும்,அப்படி இந்தியாவில் யாரேனும் செய்திருக்கிறார்களா என்று!
  மற்றபடி அ.தி.மு க வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.அம்மா எந்த சால்ஜாப்பும் சொல்ல முடியாது.அதேபோல இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் வராது என்பதும் என் கருத்து.ஆனால் தி.மு.க.அளவு ஊழலும் இருக்காது

  ReplyDelete
 16. சென்னை போன்ற நகரங்களில் கட்சி அடி வேர்வரை ஒடுருவியுள்ளது ஆக கட்சியை நிராகரிக்ககுடியது எளிதல்ல.

  ஆனால் மாநில அளவில் சுயேட்சைகள் மூன்றாம் இடம்! தன் தெருவில்/ ஊரில் உள்ள ஒருவனையே தனக்கான பிரதிநீதியாக வேண்டும் என்பதையே இது நிருபிக்கின்றது.

  மாற்றங்கள் மக்களிடமேயிருந்தேதான் வரவேண்டும் - அது கிராமத்திலிருந்து தொடர்வதுதான் சரி! இவ்வாரே தான் மகாத்மா காந்தி அவர்கள் "கிராம பஞ்சாயத்"க்கு ஆளுமை அதிகாரம் வேண்டும் என்று கொரிவந்தார். இன்று வரை கிட்டாமலையே இருக்கிறது!

  ReplyDelete