Thursday, August 01, 2013

இந்தியப் புவியியலின் வரலாறு

சில மாதங்களுக்குமுன் சென்னை சிட்டி செண்டர் லாண்ட்மார்க்கில் அமீஷ் திரிபாதி கலந்துகொண்ட ஒரு நிகழ்வு நடந்தது. அமீஷ் திரிபாதி, சிவா ட்ரைலாஜி என்று மூன்று கதைப் புத்தகங்களை எழுதியுள்ளார். இம்மூன்றும் விற்பனையில் பிரம்மாண்டச் சாதனை புரிந்துள்ளன. அடுத்த மூன்று புத்தகங்களின் இந்திய உரிமைக்காக மட்டுமே அவருக்கு முன்பணமாக ஐந்து கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வுக்கு இந்தப் புத்தகங்களின் வாசகியான என் மகளை அழைத்துச் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியோ அதில் அமீஷ் பேசியதோ அவ்வளவு முக்கியமல்ல. அவரிடம் கேட்கப்பட்ட பல அபத்தமான கேள்விகளுக்கிடையே, ‘நீங்கள் சமீபத்தில் ரசித்துப் படித்த புத்தகம் ஒன்றின் பெயரைச் சொல்லுங்கள்’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அவர் சொன்ன புத்தகத்தின் பெயர், சஞ்சீவ் சான்யால் எழுதிய The Land of the Seven Rivers: History of India's Geography.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் கீழே.

(1) முதலில் இந்தியா என்ற நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் எவ்வாறு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தது என்பதை ‘கண்ட நகர்வு’ என்ற கருத்தின்மூலம் விளக்குகிறார். அடுத்து இந்தியர்கள் என்ற இனம் எப்படி உருவாகியிருக்கும், அதன் மரபணுப் பின்புலம் என்ன என்பது குறித்து மிக லேசாக விளக்குகிறார். வர்ணம், சாதி முதலியவற்றைத் தொட்டுச் செல்லும் சான்யால், இவ்வாறு சொல்கிறார்:
In order to appreciate the messiness of the Jati system of castes, note the distribution of the R1a1 genetic haplogroup, the genes many Indians share with Eastern Europeans. Their distribution in India across region and caste is telling. It is present in high concentration among high-caste Brahmins of Bengal and Konkan as well as in Punjabi Khatris, but it also shows up in tribes such as the Chenchus of Andhra Pradesh. In other words, a Chenchu tribesman is closely related to an upper-caste Bengali ‘bhadralok’ and a blond Lithuanian. You never know where you will bump into relatives.
சாதி என்பது மிக மிகச் சமீபமானது, அதாவது இரண்டாயிரம் வருடத்துக்கும் குறைவான காலகட்டம் கொண்டது. புதிய கற்கால மனிதர்கள் தொடங்கி இந்திய நிலப்பகுதியில் மனித இனம் புழங்கிவந்துள்ளது. வட நிலப்பகுதி வழியாகவும் தென் கடல்பகுதி வழியாகவும் மனிதர்கள் இந்தியப் பகுதிக்கு வந்தவண்ணம் இருந்துள்ளனர். கலப்பு நிகழ்ந்துள்ளது. மொழி, பண்பாடு வளர, வளரத்தான் பல்வேறு பிரிவினைகள் தோன்றியுள்ளன. இன்று மரபணு ஆராய்ச்சிகளைக் கொண்டு எம்மாதிரியான கலாசார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

(2) இரண்டாவது அத்தியாயம், சரசுவதி ஆற்று நாகரிகம் பற்றியது. சரசுவதி என்ற ஓர் ஆறு இமயமலையிலிருந்து தொடங்கி இன்றைய குஜராத்தின் கட்ச் பகுதியில் கடலில் கலந்தது. அதன் கரையில் தோன்றிய ஒரு நகர நாகரிகம், பின்னர் சரசுவதி ஆறு வற்ற வற்ற சிந்து நதியையும் கங்கை நதியையும் நோக்கி நகரத் தொடங்கியது.

சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்படும் இந்த நாகரிகத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் சில இடங்களிலும் இந்தியாவின் பலப்பல இடங்களிலும் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதரோ, ஹரப்பா பெயர்களைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டுள்ளோம். லோத்தல், தோலாவிரா போன்ற நகரங்கள் இந்தியப் பகுதியில் உள்ளன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பல மாநிலங்களிலும் (ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்), பாகிஸ்தான் மாகாணங்களிலும், ஆஃப்கனிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லை வரையிலும்கூட இந்த நாகரிகத்தின் புதையுண்ட நகரங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நாகரிகம் பற்றிய மிக அருமையான ஒரு புத்தகம் - இதுவரை எழுதப்பட்டதிலேயே மிக எளிமையானதும் சிறந்ததும் - மிஷல் தனினோ எழுதியதுதான். கிழக்கு பதிப்பகத்திலிருந்து இதன் தமிழாக்கம் வந்துள்ளது. (சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு).

அடுத்து எழும் கேள்வி, வேதங்களை இயற்றியவர்கள் பற்றிய காலகட்டம்.

1. வேதங்கள் எங்கோ இயற்றப்பட்டு, இங்கே உள்ளேவந்த ‘ஆரியர்கள்’ கொண்டுவந்ததா?
2. வேதங்களை இயற்றியவர்கள்தாம் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மக்களா?
3. சரசுவதி நதி நாகரிகம் அழிந்தபின், கங்கைக் கரைக்குக் குடிபெயர்ந்த மக்கள் உருவாக்கியவைதான் வேதங்களா?

உங்கள் சாய்வுகளைப் பொருத்து நீங்கள் இவற்றுக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். தனினோவின் கருத்து இரண்டாவது.

சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருத்து பற்றி சான்யால் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அதைத்தான் பலர் முன்வைக்கிறார்கள்.

(3) கங்கைக்கரை நாகரிகம், இதிகாச காலகட்டம். இந்தியா முழுதும் பல்வேறு முடியாட்சி நாடுகள் நிலவுகின்றன. இதன் இறுதிக்கட்டத்தில்தான் புத்தர் வருகிறார். அசோகர் வருகிறார். கல்வெட்டுகள் நாடு முழுதும் தோன்றுகின்றன. எழுத்து பிறக்கிறது.

ராமாயணத்தின் பாதை என்பது வடக்கு தெற்கானது என்கிறார் சான்யால். கங்கைக் கரையில் மத்திய இந்தியாவிலிருந்து தொடங்கி, தெற்கில் கன்யாகுமரி வரை செல்லும் வழி இது. மகாபாரத்தின் பாதை என்பது கிழக்கு-மேற்கு. ஆஃப்கனிஸ்தானத்திலிருந்து பஞ்சாப், கங்கைச் சமவெளி வழியாக வங்காளத்தின் கடற்கரை வரை செல்லும் பாதை. இதனை இந்திய வரைபடத்தில் குறித்து, ராமர் சென்ற பாதை என்ற ஒரு பாதையையும் குறித்துக் காட்டுகிறார்.

பின்னர் இதே ராமாயண, மகாபாரத்ப் பாதையைத்தான் ஷேர் ஷா சூரி, முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோர் விரிவாக்கிப் பராமரித்தனர். அதுதான் வாஜ்பாயியின் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் வரை தொடர்கிறது என்கிறார் சான்யால்.

இந்த அத்தியாயத்தின் பெரும்பகுதி ராமாயண, மகாபாரத இடங்களைக் குறித்தானது. அடுத்த பகுதி சிங்கம் பற்றியது.

சிங்கம் ஓர் ஆச்சரியம். உலகின் பல இலக்கியங்களில் பேசப்படுகிறது. சிங்கமே காணப்படாத நிலப்பகுதியின் இலக்கியங்களிலும் சிங்கம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களில் சிங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் சிங்கம் மருந்துக்கும் இல்லை; ஆனால் அங்கும் சிங்கம் பற்றி உயர்வாக வருகிறது. சிங்கம்தான் இலங்கையின் மகாவம்சத்தில் முக்கியமான பாத்திரம். (ஆனால் கிழக்கு இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, சிங்கம் எக்காலத்திலும் இருந்தது கிடையாது!)

சரி, இதற்கும் இந்தியப் புவியியலுக்கும் வரலாறுக்கும் என்ன உறவு? சமீபத்தில் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், ரோஜா முத்தையா நூலகத்தில் அளித்த சொற்பொழிவில் இன்று குஜராத்தில் மட்டும் இருக்கும் சிங்கத்தைப் பற்றிய நுண்ணிய, தெள்ளிய விவரணை சங்க இலக்கியத்தில் வருகிறது, ஆனால் வேதத்தில் காணப்படுவதே இல்லையே என்ற கேள்வியை எழுப்பினார். ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி ஒன்றும் இல்லை (அல்லது ஓரிரு இடங்களில் இருக்கலாம்). ஆனால் இதிகாச காலகட்டத்தில் சிங்கம் மிக உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படியானால் வேதம் சிங்கம் இல்லாத ஓரிடத்தில் உருவானதா? அல்லது வேத காலத்தில் சிங்கமே இந்தியாவில் இல்லாதிருந்து, பின்னர் வந்ததா? சங்க இலக்கியத்தை எழுதியவர்களுக்கு சிங்கம் மட்டுமல்ல, ஒட்டகம் குறித்துமான நுண்ணிய தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன? (இதைப்பற்றி மேற்கொண்டு எழுத இது சரியான இடமல்ல.)

அலெக்சாண்டர், சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், அசோகர், அசோகரின் கல் தூண்கள், கட்டளைகள் என்ற பல்வற்றைத் தொட்டுச் செல்கிறார். அசோகர் நிறுவிய தூண்கள் அனைத்திலும் சிங்கத்தைச் சின்னமாக்கினார். அது இன்றைய சுதந்தர இந்தியாவின் சின்னமாக எதிரொலிக்கிறது. (இந்தமாதிரி அசோகர் என்ற ஒருவர் இருந்தார் என்பதும் அவர் தூண் தூணாக நிறுவி பலவற்றை எழுதிவைத்தார் என்பதும் இந்தியர்களிடமிருந்து காணமலே போனது. எழுத்தையும் ஒருவராலும் படிக்க முடியவில்லை. யார் இந்த எழுத்துகளைப் படித்தார், எப்படி அசோகர் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டார் என்பது பற்றி கோபுவின் அற்புதமான உரை இங்கே.)

(4) வணிகர்களின் காலம். இந்த அத்தியாயத்தில்தான் தமிழ்நாடு பேசப்படுகிறது. சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், கடல்வழி வாணிகம், செங்கடலின் பெரிப்ளஸ் (இதைப்பற்றி ஜூலையின் ஆரம்பத்தில் நரசய்யாவின் அற்புதமான உரை), இந்தியர்கள் வாணிபத்துக்கெனச் சென்ற இடங்கள், தென்கிழக்கு ஆசியாவின் இந்தியத் தொடர்புகள், இந்தியாவின் கப்பல்கள், இந்தியாவுக்கு வந்த புத்தத் துறவிகள், அவர்கள் எழுதிவைத்தவை, குப்தர்களின் காலம், அப்போது உருவான இலக்கியங்கள், சோழர்களின் கடற்படையெடுப்பு போன்றவற்றை இந்த அத்தியாயத்தில் காணலாம்.

(5) அந்நியப் படையெடுப்புகள். பத்தாம் நூற்றாண்டு தொடங்கி இந்தியாமீதான இஸ்லாமியப் படையெடுப்புகள். இவற்றை விளக்கும்வகையில் தில்லி என்ற நகரம் எப்படியெல்லாம் இந்தக் காலகட்டத்தில் மாற்றம் அடைந்தது என்பதை எடுத்துக்கொள்கிறார். இது மிகவும் சுவாரசியமாக உள்ளது. இப்ன் பதூதாவின் குறிப்புகள் பற்றிச் சொல்கிறார். இந்த அத்தியாயம் முகலாயர்கள் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதுவரை செல்கிறது.

(6) வரைபடங்களும் ஐரோப்பிய காலனி ஆதிக்கமும். போர்ச்சுக்கீசியர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை இந்தியா வருதல். அவர்கள் ஒவ்வொருவரும் வரைபடங்களை எப்படிக் கையாண்டனர் என்பது. விஜயநகரப் பேரரசு. முகலாயர்களின் இறுதிக் கட்டம். ராபர்ட் கிளைவ் சிராஜ் உத் தௌலாவைத் தோற்கடித்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அமைய வழிகோலுவது.

(7) ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கும் இந்தியாவில் முழுமையான வரைபடம் தயாரிக்கும் திட்டம். (இது சென்னையில்தான் தொடங்கியது!) வில்லியம் லாம்ப்டன் என்பவர் எவ்வாறு இந்தியாவின் பரப்பு முழுவதையும் முக்கோணங்களால் பரப்பி வரைபடத்தை உருவாக்க ஆரம்பித்தார் என்னும் கதை. அவர் பயன்படுத்திய கனமாக கருவியான தியோடோலைட். (அது எப்படி தஞ்சைப் பெரிய கோவில்மீது ஏற்றப்பட்டு கீழே விழுந்து உடைந்துபோனது; பின் அதனை அவர் எப்படிச் சரி செய்தார், எவ்வாறு இன்னொரு கருவியையும் இங்கிலாந்திலிருந்து வரவழைத்தார்...) லாம்ப்டனுக்கு அடுத்து இந்த வேலையைத் தொடர்ந்தவர்தான் ஜார்ஜ் எவரெஸ்ட். அவருடைய பெயரைத்தான் இமயமலையின் உயர்ந்த சிகரத்துக்கு வைத்துள்ளார்கள்.

இதே அத்தியாயத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சி, இந்திய ரயில்வே உருவாவது, சிப்பாய் கலகம், கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வருவது, தில்லி மீண்டும் தலைநகர் ஆவது ஆகியவை வருகின்றன.

(8) இறுதியாக சுதந்தர இந்தியா, இந்தியப் பிரிவினை, சமஸ்தான இணைப்பு, மொழிவாரி மாகாணங்கள் பிரிப்பு, கோவா, பாண்டிச்சேரி போன்ற பகுதிகள் இணைப்பு, இந்திய-பாகிஸ்தான் போர்கள், இந்திய-சீனப் போர், பங்களாதேச உருவாக்கம் என்று இந்தியாவின் வரைபடம் சார்ந்த விஷயங்கள் பற்றிய கதைகள் வருகின்றன.

===

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். ஆனாலும் ஒருசேரப் படித்தது நன்றாக இருந்தது. ஆனால் புத்தகம் கொஞ்சம் ஃபோகஸ் இல்லாமல் தடுமாறியதாகவும் உணர்ந்தேன். அது எடுத்துக்கொண்டிருக்கும் பரப்பு மிகவும் விரிவானது என்பது ஒரு காரணம். அதன் எழுத்து முறைமை மற்றொரு காரணம். பொதுவாக சோழர்கள் அல்லது பல்லவர்கள் அல்லது குப்தர்கள் வரலாறு என்று எடுத்துக்கொண்டால், அதற்கு ஓர் ஆரம்பமும் ஒரு முடிவும் இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த சாம்ராஜ்ஜியத்தில் எல்லைகள் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். அவற்றைத் தெளிவாக வரையறுக்க முடியும். போர்கள், நண்பர்கள், பகைவர்கள், உறவுகள் என்று அனைத்தையும் தெளிவாகச் சுட்டிக் காட்ட முடியும். கலை, எழுத்து, கட்டடங்கள் என்று அந்த நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நடந்தவற்றை முழுமையாகச் சொல்ல முடியும். ஆதாரங்களாக, கல்வெட்டுகள், இலக்கியங்கள் ஆகியவற்றைச் சுட்ட முடியும். வரிசையாக வந்த அரசர்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுகளிலிருந்து கிடைத்துவிடும்.

எனவே படிக்கும்போது ஏதோ ஒருவிதத்தில் ஒரு முழுமை இருக்கும்.

ஆனால் சான்யாலின் புத்தகத்தில் இந்தியா என்ற ஒரு தெளிவற்ற பிரதேசத்துடன் ஆரம்பிக்கிறார். அதற்கு என்று காலத்திலும் தெளிவான எல்லை கிடையாது, நிலத்திலும் தெளிவான எல்லை கிடையாது. இந்த நிலப்பரப்பில் பலர் உள்ளே வருகிறார்கள், வெளியே போகிறார்கள். அவர்களைப் பற்றி முழுமையாகவும் சொல்ல முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லைப் பகுதிகள் மாறும்போது அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிடுவதும் சாத்தியமில்லை. இந்தியப் பரப்பில் இருந்த பல்வேறு நாடுகளை, அரச சாம்ராஜ்ஜியங்களை முழுமையாகச் சுட்டவும் முடியவில்லை. ஒரு சில நகரங்களைத்தான் பேச முடிகிறது, ஆனால் அதுவும் முழுமையாக இல்லை. (உதாரணம்: தில்லி. இதைப் பற்றி எழுதவேண்டும் என்றாலே பல தொகுதிகள் தேவைப்படும்.)

அதனால்தான் புத்தகத்தை சமீபத்தில்தான் படித்து முடித்தும் எனக்கு ஒரு வரியில் புத்தகத்தை விளக்குவது சிரமமாக இருக்கிறது. ஆனாலும் சுவாரசியம் குன்றாமல் எழுதப்பட்டுள்ள புத்தகம்.

Land of the Seven Rivers: A Brief History of India's Geography
Sanjeev Sanyal
Hardcover: 352 pages
Publisher: Penguin India (12 November 2012)
Language: English
ISBN-10: 0670086398
ISBN-13: 978-0670086399

6 comments:

  1. இதனுடன் (Land of Seven rivers) டிஸ்கவரி ஆப் இந்தியாவை ஒப்பிட இயலுமா?

    ***

    I read the first part of the Shiva trilogy. I felt it is a book written for westerners and alienated Indians, sprinkled with Indian mythological names... I couldn't go past some 100 odd pages. Shiva enters into Kashmir and immediately he is asked by the guards for a Passport!! Yes, Passport!! I cant go further that.

    Gita for Business, Chankya for Professionals, Ancient mantras for success - என்பது போல இது நாவல் உலகில் புதிய உத்தி என்று நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  2. //சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருத்து பற்றி சான்யால் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அதைத்தான் பலர் முன்வைக்கிறார்கள்.//

    சன்யாலோ மற்றவர்களோ இதைச் சொல்லாமல் கடந்து செல்வது இரண்டு காரணங்களால் இருக்கலாம்.
    1. அப்படிச் சொல்வதற்கு போதுமான தரவுகள் இல்லாமல் இருப்பது
    2. அப்படிச் சொல்வதற்கு தேவையான (மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும்) தரவுகளை சிந்திக்க மறுக்கும் மனநிலை... வடக்கில் இருந்தே எல்லாம் வந்தது என்ற மனநிலை வாய்க்கப்பெறாத வரலாற்று ஆசிரியரோ, சமூகவிஞ்ஞானியோ அரிதிலும் அரிது. இதை மார்க்ஸ்முல்லர் போன்றவர்களாலேயே இந்திய நாகரீகத்தின் காலத்தொன்மையை பைபிளின் மனுக்குல கால அளவீட்டின் அடிப்படையில் அணுகமுடியாத மனநிலையோடு இதை ஒப்பிடலாம்.
    ***
    //இதன் இறுதிக்கட்டத்தில்தான் புத்தர் வருகிறார். அசோகர் வருகிறார். கல்வெட்டுகள் நாடு முழுதும் தோன்றுகின்றன. எழுத்து பிறக்கிறது.//

    இந்தக்கருத்தும் அப்படியே. எழுத்து, நாகரீகம் போன்றவை ஓரீடத்தில் ஒரு ஊற்றுக்கண்ணைக் கொண்டிருக்கலாம் அல்லது பல ஊற்றுகள் பல இடங்களில் இருக்கவும் நேரலாம். தமிழ் எழுத்துக்களுக்கான ஊற்றுக்கண்ணாக, ஆரம்பமாக பெளத்த, சமண பிக்குகள் (மிஷநரிகள், அசோகரது கல்வெட்டுகள் கூறப்பட்டு வந்த காலம் மாறவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம்.

    பொருந்தல் அகழ்வாய்வுகள் அதற்க்கான பலமான ஆதாரங்கள். //New results from the analysis of paddy grains found in the Porunthal graveyard archaeological site prove that writing systems in India were in existence in the 5th Century BC, predating the arrival of Asoka, according to history professor at the Pondicherry University and director of the excavation project at Porunthal K. Rajan.(http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece)// ஆனாலும் இன்னும் எழுத்து, அசோகன் கல்வெட்டு, பிராமி என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

    இவ்விரண்டு விசயங்களை இங்கு கவனப்படுத்த விரும்பினேன். அவ்வளவே.

    ReplyDelete
  3. 7 நதிகளில் ஏன் கோதாவரியைக் காணோம்?

    ReplyDelete
  4. "சங்க இலக்கியத்தை எழுதியவர்களுக்கு சிங்கம் மட்டுமல்ல, ஒட்டகம் குறித்துமான நுண்ணிய தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன? (இதைப்பற்றி மேற்கொண்டு எழுத இது சரியான இடமல்ல.)"

    இது குறித்து மேலதிக தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறதா? சுட்டி பகிரவும். நன்றி.

    ReplyDelete
  5. நன்றி பத்ரி. முடிந்தால் இப்புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியீடவும். வாசிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

    ReplyDelete
  6. தங்களது தமிழ் மொழி பெயர்ப்பு அவ்வளவு சுவராசியமாக இருக்கிறது.
    நான் எப்பவுமே இவ்வளவு பெரிய விசயங்களைப் படிக்க ஆரம்பிக்கும்போது முதல் இரு பாரா படிக்க சுவையாக இருந்தால் போதும் அதனை படித்து முடிக்காமல் அடுத்து வேலை பார்க்க மாட்டேன்.
    என்னைப் போன்று ஆங்கிலம் தெரியாதவர்களையும் மனதில் வைத்து தமிழில் தர இயலுமா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete