Thursday, August 08, 2013

சேது சமுத்திரத் திட்டம் பற்றி கே.ஆர்.ஏ.நரசய்யா

சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று என்று திமுக கட்சி வலுவாக முன்வைக்கிறது. அதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பும் உள்ளது. ஒரு தரப்பினர் சேதுவில் ராமர் கட்டிய பாலம் உள்ளது, அது சேது சமுத்திரத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்று சொல்பவர்கள். இன்னொரு தரப்பினர், இந்தத் திட்டத்தால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்பவர்கள். மூன்றாம் தரப்பினர், இதுபோன்ற திட்டங்களால் சூழல் பாதிக்கப்படும், மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்பவர்கள்.

எனக்கு சேது சமுத்திரத் திட்டம் குறித்துத் தீர்மானமான கருத்து கிடையாது. அதன் தேவை குறித்துச் சொல்லப்படும் காரணங்கள்மீது இதுவரை அதிக நம்பிக்கை வந்ததில்லை. சற்றுமுன், நரசய்யா எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். நரசய்யா ஒரு மரைன் எஞ்சினியர். பல ஆண்டுகள் கப்பல்களில் பணியாற்றியுள்ளார். துறைமுக நிர்வாகத்தில் இருந்திருக்கிறார். (அவர் கடந்த இரு மாதங்கள் வழங்கிய சொற்பொழிவின் சுருக்கத்தை விரைவில் எழுத உள்ளேன். செங்கடலின் பெரிப்ளஸ் என்பவர் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த கடல் பயணம் பற்றியது முதலாவது சொற்பொழிவு. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியக் கப்பல்துறை எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது இரண்டாவது சொற்பொழிவு.)

சேது சமுத்திரத் திட்டம் பற்றி நரசய்யா முன்வைக்கும் கருத்துகளை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்.

1. இந்தத் திட்டம் தமிழர்களின் கனவு என்று சொல்லவே முடியாது. எந்தத் தமிழரும் இதனை முன்வைக்கவில்லை. 1860 முதல் 1922 வரை பல்வேறு ஆங்கிலேயர்கள்தாம் இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளனர்.

2. ஒரு கடற்பொறியாளராக, பல கப்பல்களில் உலகம் முழுதும் பயணம் செய்தவராக, NEERI அமைப்பு முன்வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் பலவும் செயல்படுத்த முடியாதவை என்று நரசய்யா கருதுகிறார்.

3. தூரம், காலம் ஆகியவற்றில் ஏற்படும் சேமிப்பு என்று திட்டத்தினர் சொல்வதை நரசய்யா மறுக்கிறார். மாற்றுக் கணக்கைக் காண்பிக்கிறார். மேலும் 30,000 டன் கப்பலைப் பொருத்தமட்டில், சேதுக் கால்வாயைப் பயன்படுத்தினால், செலவு அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார். (இதெல்லாம் எனக்கு முழுமையாகப் புரியாத விஷயங்கள்.)

இந்தக் காரணங்களால் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். விரும்புவோர் அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். மேலே சுட்டி கொடுத்துள்ளேன்.

7 comments:

  1. திரு.பச்சோரி [ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் தலைவர் ] , திரு. நரசய்யா [ இதுபோன்ற விஷயங்களில் உண்மையான விஷய ஞானம் உள்ளவர் ] மற்றும் இதர அறிஞர்கள் எத்தனை பேர் சொன்னாலும் பகுத்தறிவு மண்டைகளில் ஏறப்போவதில்லை..... காரணம் இதில் புரளும் கோடிக்கணக்கான மக்கள் பணம்.....[மக்கள் பணம் என்றாலே அது இவர்கள் பாக்கெட்டில் உள்ள‌து போலத்தானே? போனசாக ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.... நம் நாட்டை பொறுத்தவரை ஹிந்துக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதுதானே மதச்சார்பின்மைக்கு இலக்கணம்?

    ReplyDelete
  2. பெரிய பதிவு . தயவுசெய்து பொறுமையாகப் படியுங்கள்.

    பாகம் 1

    ராமர் பாலம் பிரச்சனையை விட்டுவிடுவோம். அது காவிப்பரதேசிகள் நடத்தும் ஓட்டுவங்கி அரசியல். மெய்யான பகுத்தறிவுடன், அறிவியல்பூர்வமாக சிந்தித்துப் பார்ப்போம்.

    சேதுத்திட்டம் 150 வருடக் கனவு .... 100 வருசத்துக்கு முன்னாடி உலகில் ஓடிய வணிகக் கப்பல்கள் எல்லாம் அளவில் சிறியவை. சேதுக்கால்வாயின் ஆழம், அகலத்துக்கு எளிதாக செல்லக்கூடியவை. ஆனால் இன்றைய வணிகப் பெருங்கப்பல்கள் எல்லாம் பேனாமேக்ஸ் (பேனமேக்ஸ், போஸ்ட் பேனமேக்ஸ் ப்ளஸ், நியூ பேனமேக்ஸ் கப்பல்கள்) என்னும் அளவில் மிகப்பெரியவை. சேதுக்கால்வாய் ஆழம் அகலம் குறைவு என்பதால் உலகளாவிய வர்த்தகத்தில் உள்ள பேனமாக்ஸ் அளவுள்ள கப்பல்களுக்கு பயன்படாது.

    வழக்கம்போல 1981- 82-ம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழு அறிக்கையின்படி திட்டத்தின் வெற்றி சாத்தியம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக திமுக தலைவர் சொல்றாரு. சேதுக்கால்வாயின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் அன்றைய (1980கள் ) காலக் கப்பல்கள் ஒத்து வரும். பிலிப்பைன்ஸ் நாட்டில் கிளம்பும் ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வந்து சரக்கு மாற்றி சேதுக்கால்வாய் வழியாக துபாயோ, கேப் டவுனோ போக முடியும். அதனால் தூத்துக்குடியை ஒட்டிய பகுதிகளுக்கு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கும். 80களில் பயன்பாட்டில் இருந்த 500லிருந்து 2500 கன்டெய்னர் வரை ஏற்றிச்செல்லும் மூன்றாவது தலைமுறை கப்பல்கள் , சராசரியாக 12மீட்டர் மட்டும் ஆழம் கொண்ட சேதுக்கால்வாயில் போகமுடியும் ...

    ஆனால் இன்றைய வெளிநாட்டு வணிகக்கப்பல்கள் ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவை, 12000 கன்டெய்னர்களை சுமக்கும் இக்கப்பல்கள் செல்ல 15மீட்டர் ஆழம் தேவை. அந்த அளவுக்கு சேதுக்கால்வாயை ஆழப்படுத்தவே முடியாது. அப்படி முயன்றாலும் செலவும், இயற்கைச் சீர்கேடும் ஏற்படும். இன்று காலம் மாறிவிட்டது. பெருங்கப்பல்கள் வரவே வராது.(ஆனால் சேதுக்கால்வாயின் திட்ட அறிக்கையில் 60% வருமானம் வெளிநாட்டுப் பெருங்கப்பல்களின் மூலம் வரப்போவதாக காட்டியுள்ளார்கள்). எனவே இக்கப்பல்கள் வழக்கம் போல் கொழும்புவிற்கே செல்லும். நமக்குப் பிடிக்காத ஊராக இருந்தாலும் புவியியல்படி கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்கள் உலகளாவிய கடல் வாணிபப்பகுதிக்கு வசதியாக அருகே உள்ளன. ஆழம், அகலம் பிரச்சனைகளும் கிடையாது.

    சேதுக்கால்வாயை ஓரளவுக்கு மேல் ஆழமோ அகலமோ படுத்த இயலாது. மேலும் தினம் தினம் அலையால் மண் குவிப்பு ஏற்படும். அதை அள்ளி அள்ளி அப்புறப்படுத்தவேண்டும். செலவு அதிகம். வருடம் முழுதும் மண் அள்ளிக்கொட்டும் செலவு.

    இத்திட்டத்தை நிறைவேற்றினாலும் தூத்துக்குடிக்கு வரும் பேனமேக்ஸ் கப்பல்கள் சேதுக்கால்வாய்க்கு வராமல் இலங்கையைச் சுற்றித்தான் வரவேண்டும். ராணுவக் கப்பல்களுக்கும் உதவாது. மேலும் கிழக்கிலும் மேற்கிலும் இந்தியாவுக்கு வலுவான கப்பல் ராணுவதளங்கள் ஏற்கனவே உள்ளன

    ReplyDelete
  3. தொடர்ச்சி....

    பாகம்- 2

    பின் யாருக்குப் பயன்படும்???

    அரசியல் செல்வாக்குடன் கப்பல் நடத்தும் முதலாளிகள் வைத்துள்ள சிறிய கப்பல்கள் தூத்துக்குடியிலிருந்து கொச்சியோ துபாய் ஜெபல் அலியோ போவதற்கு நேரம் குறையும்.

    அரசியல் செல்வாக்கு இருந்தால் அரசாங்கம் கால்வாய் உபயோகப்படுத்த ஏற்படுத்தும் கட்டணத்தை குறைக்கவைக்கலாம்.(2-ஜியில பீலா விட்ட மாதிரி, கட்டணம் குறைந்தால்தான் தூத்துக்குடிக்கு நல்லது என்று கப்சா விட்டுக்கலாம்) ஏமாளி மக்கள் வரிப்பணம்தானே. அதனால் அவர்களுக்கு காசு சேரும்.

    தினமும் மண் அள்ளி கிளியர் செய்யும் காண்ட்ராக்ட் எடுக்கலாம். தினம் தினம் காசு. அப்புறம், கால்வாய்க்கு வரும் 1, 2 கப்பலை இன்னொரு பைலட் கப்பலை வைத்து இழுத்து விடுவார்கள். அந்த பைலட் கப்பல் காண்ட்ராக்ட் எடுத்து பாக்கெட் நிரப்பிக் கொள்ளலாம்.

    இதெல்லாம் யாருக்கு லாபம்???? இப்பப் புரியுதா ஆடு நனையுதுன்னு ஓநாயி வருத்தப் பட்டு ஊளையிடுற வெவரம் ??!!!!

    ராமரைக் காரணம் காட்டி எதிர்ப்பது ஏமாற்று அரசியல். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று கூறி ஆதரிப்ப்பதும் ஏமாற்று அரசியல். (தமிழர் போற்றும் பாரதியே சேதுவை மேடுறுத்தி வீதி அமைப்போம் என்று சொன்னானே தவிர , சேதுவை ஆழப்படுத்தி காசு பார்ப்போம் என்று சொல்லவில்லை !)

    இரண்டையும் புறந்தள்ளி வணிக ரீதியாகவும், அரசுப் பண விரயம், மக்கள் வரிப்பண விரயம், ஊழல் அரசியல் பெருச்சாளிகள் பணம் பண்ணும் பொற்குடமாக நினைக்கும் இத்திட்டத்தை நாம் புறந்தள்ள வேண்டும்.

    தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கு. சேதுக் கால்வாய்க்கு செய்யும் இன்றைய வெட்டிசெலவு மற்றும் அதனால் அரசுக்கு அடுத்த 50ஆண்டுகளுக்கு ஏற்படப்போகும் வெட்டிசெலவு எல்லாம் சேர்த்து அந்தப் பணத்தில்:

    (1) நெல்லை, தூத்துக்குடி, நாஞ்சில், முகவை மாவட்டங்களில் விவசாய மேம்பாடு செய்து இயற்கை விவசாய உத்திகள், சீரிய நீர் மேலாண்மை, நீர் சேகரிப்பு, செம்மையான கால்வாய்கள், கண்மாய்கள் என்று விவசாயத்தை ஊக்குவிக்கலாம்.

    (2) மீன்வளத்தைப் பெருக்கும் திட்டங்களுடன், மீன் பொருட்கள் மதிப்புக்கூட்டும் தொழில்களுடன் ஏற்றுமதிக்கும் உதவி, மீனவர் வாழ்வில் ஒளியேற்றலாம்,

    (3) சிறு, குறுந்தொழில்களின் தொழிற்சாலை அமைத்தால் சேதுக்கால்வாயைவிட அது ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பளித்து மக்களுக்கு பயன்படும். சாதிச்சண்டையும் குறையும்.

    ஆனால் வியாபார நோக்கில் அரசியல் செய்யும் குடும்ப சுயநல தீயசக்திகள் இதையெல்லாம் விரும்பாது.

    உணர்ச்சிபூர்வமாக அடுக்குத் தமிழ் வீராவேசம் இல்லாமல் பகுத்தறிவுடன் அறிவியல்பூர்வமான விவாதம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அறிவு பூர்வமாக சிந்தித்து எழுதப்பட்ட பின்னூட்டம்.

      Delete
  4. @valayan......

    //அது காவிப்பரதேசிகள் நடத்தும் ஓட்டுவங்கி அரசியல்.//

    நீங்கள் சொல்லும் ஒலகமகா கருத்துக்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே பத்திரிக்கைகளிலும் , இணைய தள‌ங்களிலும் வெளியானவைதான் .......... நீங்கள் எதையும் புதிதாக சொல்லிவிடவில்லை....

    ஏசு பிறந்த மாட்டுத்தொழுவம் [ஜெருசலேம்] , அவரது சவப்போர்வை [ டூரின்] ......., யூதர்களின் அழுகைச்சுவர் [ ஜெருசலெம்] ..... ந‌பிகள் வின்னேற்றம் நிகழ்ந்த அல் - அக்சா மசூதி [ ஜெருசலெம்] - இவையெல்லாம் அந்தந்த மத மக்களின் நம்பிக்கை....... நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்..... அது போலத்தான் ராமர் பாலமும்........உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லாவிட்டால் அதை உங்கள் அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.......

    அடுத்தவரின் நம்பிக்கையை மதிக்கப்பழகுங்கள்......குறைந்தபட்சம் அதை அவமதிக்காத குறைந்தபட்ச நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க பழகுங்கள்......விமர்சன‌த்தில் குறைந்தபட்ச கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்......பிறகு சூரியனுக்குக்கீழ் எல்லாவற்றைப்பற்றியும் கருத்துச்சொல்லலாம்............

    ReplyDelete
  5. திரு வலயன், தங்கள் கருத்து லாஜிகலாகத் தோன்றுகிறது. எனினும் காவிப் பரதேசிகள் எனும் பிரயோகம் வெறுப்பை உமிழ்வதாக உள்ளது. மத நம்பிக்கையைத் தவிர்த்துப் பார்க்க வேண்டும் என்று தாங்கள் சொல்ல விரும்பியதாகக் கருதுகிறேன். அவ்வாறே எழுதியிருக்கலாம். ஒருவேளை, பின் பகுதியில் பகுத்தறிவுப் பாசறையைத் தாக்குவதாக இருந்ததால், முதலிலேயே ‘காவிப் பரதேசிகள்’ பிரயோகம் இருப்பது சமன் செய்ததாக இருக்கும் என்று கருதினீர்களோ?

    ReplyDelete
  6. SETHUSAMUDRAM PROJECT IS A FAILURE FROM THE START.BECAUSE IT IS NOT LIKE SUEZ CANAL WHICH HAS GOT DEPTH FOR BIG OCEANLINERS
    TO PASS THROUGH. PROBABLY IT WAS STARTED TO BENEFIT THE THEN
    SHIPPING MINISTER.AND THE SAME FAMILY WHICH LOOTED THROUGH
    SPECTRUM 2G.LOT OF PUBLIC MONEY WAS WASTED ALREADY. THE COMMISSION GIVEN BY THE CONTRACTORS HAS BEEN POCKETED BY
    THE POLITICIANS WHO MASTERMINDED IT. NOW WHO CARES?

    ReplyDelete