Tuesday, September 28, 2004

வங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு

நேற்று (27 செப்டம்பர் 2004, திங்கள்) பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிரக்ஞா விஸ்வதர்ஷன் பேச்சுக்கள் வரிசையில் பேரா. எஸ்.ராதாகிருஷ்ணன் 'Role of NBFCs in Our Financial System' என்ற தலைப்பில் பேசினார். அதிலிருந்து நான் புரிந்து கொண்டவற்றை கட்டுரையாகத் தருகிறேன்.

-*-

வங்கியோ, வங்கியில்லா நிதி நிறுவனமோ இரண்டும் செய்யும் வேலை - 'x' இடமிருந்து பணத்தை வாங்கி, 'y'க்கு பணத்தைத் தந்து பணத்தைப் புரட்டுவது. கடன்வாங்கிய பணத்திற்கு கொடுக்கும் வட்டியை விட, கடன்கொடுக்கும் பணத்திற்கு அதிக வட்டி வசூலிப்பார்கள். இந்த வட்டி வித்தியாசத்திற்கு spread என்று பெயர். இப்படி அதிகம் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு நிர்வாகச் செலவுகள் போக லாபம் சம்பாதிப்பார்கள்.

இந்தியாவில் வங்கி ஒன்றை நடத்த வேண்டுமானால் ரிசர்வ் வங்கியிடம் தேவையான உரிமம் பெறவேண்டும். வங்கியல்லா நிதி நிறுவனங்களால் (NBFC) வங்கிகள் செய்யும் பல காரியங்களைச் செய்ய முடியாது: அவர்களது வாடிக்கயாளர்களால் வைப்பு நிதி தவிர பிற கணக்குகளைத் தொடங்க முடியாது. (No savings bank a/c, current a/c etc. only fixed deposit. No safe deposit.) காசோலைகளை அச்சிட்டுத் தர முடியாது. அன்னியச் செலாவணி மாற்றுதலில் ஈடுபட முடியாது. பணத்தை ஒரு ஊரிலிருந்து பிற ஊர்களுக்கு கட்டு கட்டுகளாக எடுத்துக் கொண்டு போக முடியாது.

இந்தியாவில் வங்கிகள் தொடங்கும் முன்னரே முறைசாரா வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தோன்றிவிட்டன. சென்னையில் இருக்கும் மைலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி 130 வருடங்களுக்கு முந்தையது. இந்தியாவின் முதல் வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி தொடங்கி 103 வருடங்கள்தான் ஆகின்றது.

வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு இரண்டு முக்கியமான பணிகளைச் செய்தன: (1) வங்கிகள் தொடத் தயங்கும்/மறுக்கும் மக்களுக்கு, வெகு குறைந்த காலத்திலேயே சிறு-சிறு தொகைகளைக் கடன்களாகக் கொடுத்தன. (2) வங்கிகள் கொடுப்பதைவிட அதிக வட்டியை - எனவே அதிக வருமானத்தை - தம்மிடம் வைப்பு நிதிகளைக் கொடுத்திருப்போருக்கு அளித்து வந்தன.

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர்தான் இந்தியாவில் பல்வேறு விதமான நிதி நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் தோன்றத் தொடங்கின. பொருட்களைக் குத்தகைக்குக் (lease) கொடுத்து வருமானம் செய்யும் நிறுவனங்கள், வாடகை/வாங்கல் முறையில் - தவணை முறையில் (hire-purchase) - பொருட்களை வாங்க உதவும் நிறுவனங்கள், அடகு வைத்தல் மூலம் (mortgage) வீடு/நிலம் வாங்க உதவும் நிறுவனங்கள், பெனிபிட் பண்டு, நிதி, சகாய நிதி, சாஸ்வத நிதி என்று பல பெயர்களிலும் இயங்கும் 'நிதி'க்கள், சீட்டு நிறுவனங்கள் (chit fund என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. இது கேரளாவில் குறி(?) என்ற பெயரிலும், தமிழ்நாட்டில் சீட்டு என்ற பெயரிலும் தொடங்கியது என்கிறார் பேராசிரியர்) என்று பல்வேறு இந்தியாவிற்கே உரித்தான பழமையான நிதி நிறுவன முறைகள், புதுமையான மேற்கத்திய வங்கி மற்றும் நிதி நிர்வாக முறைகளோடு சேர்ந்து வசிக்க ஆரம்பித்தன.

இந்தியாவின் முதல் குத்தகை கம்பெனி First Leasing Company Of India Limited சென்னையில்தான் தொடங்கியது. வாடகை/வாங்கலுக்கு உதவி செய்யும் சுந்தரம் பைனான்ஸ் இந்தத் துறையில் இந்தியாவிலேயே இரண்டாவது பழமையான நிறுவனம் - சென்னையில்தான் (1924இல்) தொடங்கியது. [முதலாவது நிறுவனம் பூனாவில்(?) தொடங்கப்பட்டது என்றார் என்று நினைக்கிறேன்.]

குத்தகை கம்பெனிகள் பிறருக்குத் தேவைப்படும் பொருள்களை தங்கள் செலவில் வாங்கி, அதன் அனுபவ உரிமையை மட்டும் பிறருக்கு - மாத வாடகையில் - கொடுக்கும். சொத்து குத்தகை கம்பெனிகள் பெயரில் இருக்கும். இதனால் அந்தப் பொருளின் தேய்மானம் (depreciation) குத்தகை கம்பெனியின் கணக்குகளில் வரும். பொருளுக்கான விலை, லாபம் அனைத்தையும் முதல் மூன்று (அல்லது ஐந்து) வருடங்களுக்குள் சம்பாதித்து விடுவர். அத்துடன் தேய்மானம் மூலம் கிடைக்கும் வரிச்சலுகையும் உண்டு. பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து அதனை கிடைத்த விலையில் விற்கலாம். இப்படித்தான் குத்தகை கம்பெனிகள் லாபம் சம்பாதித்தன.

வாடகை/வாங்கல் முறையில் பொருளானது வாங்குபவருக்குச் சொந்தம். ஆனால் அவர் பணம் கட்டுவதை நிறுத்தி விட்டால் பண உதவி செய்த நிறுவனம் பொருளை ஜப்தி செய்யலாம். ஆனால் தேய்மானம் அதிகம் உள்ள பொருட்களை ஜப்தி செய்தும் எந்தப் பயனுமில்லை. வீடு, நிலம், தங்கம் போன்ற பொருட்களை அடகு வைக்கும்போது அதன் மதிப்பில் குறைவு ஏதும் (பொதுவாக) ஏற்படுவதில்லை.

சீட்டு முறை பழந்தமிழகத்தில் 'தான்யச் சீட்டு' என்று தானியங்களைக் கொண்டு செய்வதன் மூலம் பணம்/நாணயம் புழங்குவதற்கு முன்னேயே இருந்துள்ளது போலும். பத்து, பதினைந்து (அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை) பேர் ஒன்று சேர்ந்து மாதம் குறிப்பிட்ட பணத்தைக் கட்ட வேண்டும். அந்தப் பணத்தை உறுப்பினர்களுல் ஒருவர் ஏலத்தில் எடுப்பார். யார் குறைந்த அளவு ஏலம் கேட்கிறாரோ அவருக்கு அவர் கேட்ட பணம் போய்ச்சேரும். மீதிப் பணத்தில், சீட்டு நடத்துபவரின் தரகு போக மீதியை மற்ற அனைவரும் பிரித்துக் கொள்வார்கள். இந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதியை அடுத்த மாதம் கட்டினால் போதும். வரும் மாதங்களில் ஏற்கனவே ஏலத்தில் ஜெயித்தவர்கள் போக மீதிப்பேர்தான் ஏலத்தில் பங்கு பெற முடியும்.

இப்படி தமிழகம், கேரளாவில் தொடங்கிய சீட்டு முறை இப்பொழுது இந்தியா முழுதும் பரவியுள்ளது.

சராசரியாகப் பார்க்கும்போது, இதுபோன்ற சீட்டு முறைகளில் ஒருவருக்கு கிட்டத்தட்ட 16-18% வட்டியில் பணம் கடனாகக் கிடைக்கிறது. அதுபோல மற்றவர்கள் அனைவருக்கும் அவர்கள் மாதாமாதம் கட்டும் தொகைக்கு கிட்டத்தட்ட 12% வரை வட்டி வருமானம் போலக் கிடைக்கிறது. (Spread - இந்த இரண்டு விகிதங்களுக்கும் இடையிலான வித்தியாசம் சீட்டு நடத்துபவரின் கமிஷன்...)

'நிதி' என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட கம்பெனிகள். இவற்றில் சேமிப்பு வங்கிக் கணக்கு (Savings Bank a/c), வைப்பு நிதி (Fixed Deposits), Recurring Deposits ஆகியவற்றைத் தொடங்கலாம். நிதி, தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை வசதிகளை அளிக்கலாம். ஆனால் நிதியில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, அல்லது கடன் வாங்கவோ முதலில் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக வேண்டும். ஒரு ரூபாய் பங்கு ஒன்று வாங்கினால் போதும்! நிதி என்பது ஒரு சிறிய உள்வட்டத்தில் இயங்குவது. அந்த சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் அதில் உறுப்பினராக இருப்பார்கள். (மைலாப்பூர், ராயப்பேட்டை... இதுபோல) The Companies Act, 1956 இல் நிதி எப்படி இயங்க வேண்டும், அதற்கு என்னென்ன சலுகைகள் உண்டு என்பதை பகுதி 680A விளக்குகிறது. நிதி தன் உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் (பங்காதாயம் (அ) ஈவுத்தொகை) கொடுப்பதற்கு தனியாகக் காசோலைகளை அனுப்ப வேண்டியதில்லை. கம்பெனியின் உறுப்பினர்கள் அனைவருமே அந்த கம்பெனியிலேயே கடன் கணக்கோ அல்லது சேமிப்பு கணக்கோ வைத்திருப்பதால் ஈவுத்தொகையை நேரடியாக அவர்களது கணக்கிலே பற்று வைக்கலாம்.

நிதியில் முகம் தெரிந்தவர்கள், தங்கள் தேவைகளுக்கான கடன்களை மூன்று, நான்கு நாட்களுக்குள் பெற முடிந்தது. தங்கம் மற்றும் நிலத்தை அடமானம் வைத்து அதன்மீதுதான் கடன் வாங்க முடியும். அதேபோல ஒரு குறிப்பிட்ட neighbourhood இல் உள்ள முக்கியஸ்தர்கள்தான் அந்த நிதியின் இயக்குனர்களாக, அந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களாக இருந்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் தங்கள் சேமிப்புகளை இதுபோன்ற நிறுவனங்களில் வைத்தனர். அதற்கு ஏற்ப அதிக வட்டி வருவாயும் பெற்றனர்.

வெறும் ரூ. 10,000 முதல் இருந்தால் போதும். நிதி தொடங்கலாம் என்று இருந்தது.

1980-1996 நேரத்தில் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் காளான்கள் போல முளைத்தன. 1996இல் இவற்றுக்கு கெட்ட நேரம் தொடங்கியது. 1970களிலேயே வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தம் தொழிலைப் பிடுங்கிக்கொண்டு செல்வதாக, ரிசர்வ் வங்கியிடம் புகார் கொடுக்க ஆரம்பித்தன. அப்பொழுது வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லாமலிருந்தது. 1977இல் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வங்கியல்லா நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் உரிமை கொடுத்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அதிகமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவில்லை. கொண்டு வந்த சில கட்டுப்பாடுகள்:
1. ஒரு வங்கியல்லா நிறுவனம் எத்தனை பணத்தை வைப்பு நிதியாகப் பெறலாம் என்பதில் கட்டுப்பாடி. முதல் + மீதி (Equity + Reserves) எவ்வளவோ, அதைப்போல ஒரு குறிப்பிட்ட மடங்குதான் (பத்து மடங்கு) வெளியாரிடமிருந்து 'கடன்'களைப் பெற முடியும்.
2. இந்தக் கடன்களில் ஒரு குறிப்பிட்ட விகிதம் பிற வங்கிகளிடமிருந்தும், குறிப்பிட்ட விகிதம் வங்கியல்லா பிற நிதி நிறுவனங்களிடமிருந்தும் (Development Credit Institutions), மீதம்தான் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளாகவும் பெற முடியும்.
3. பொதுமக்களிடமிருந்து பெறும் வைப்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்துக்கு மேல் கொடுக்க முடியாது.
4. இடைத்தரகர்களுக்கு (வைப்பு நிதியைப் பெற்றுத்தருபவர்கள்) குறிப்பிட்ட அளவுக்கு மேல் கமிஷன் தர முடியாது.

நன்கு நடந்து வந்த இந்தத் தொழிலும் பேராசைக்காரர்கள், கெட்ட எண்ணம் படைத்தவர்கள் வந்ததால் நாசமடைந்தது. மேலும் வரைமுறையில்லாமல் இவர்கள் பலருக்குக் கடன் கொடுத்ததும் ஒரு காரணம். சென்னை ராயப்பேட்டை பெனிபிட் பண்டு 400 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட்டுகளைப் பெற்றது. அதிலிருந்து ஒருவருக்கு மட்டுமே 140 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. அந்தப் பணம் திரும்பி வராமல் போகவே கம்பெனி முழுதாக மூழ்கிப் போனது.

ரிசர்வ் வங்கியின் பொறுப்பற்ற நடைமுறையும், கையாலாகத்தனமும் கூட ஒருவிதத்தில் காரணம். ராயப்பேட்டை பெனிபிட் பண்டை மேற்பார்வையிட்ட ரிசர்வ் வங்கி ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னது. ஆனால் சில நாள்களிலேயே அந்த கம்பெனி மூழ்கியது.

1996இல் சென்னையைச் சேர்ந்த CRB Capital Markets என்னும் வங்கியல்லா நிதி நிறுவனம் மூழ்க ஆரம்பித்தது. அவர்கள் பொதுமக்கள் வைப்புத்தொகையையும் மற்ற பணத்தையும், பல்வேறு தவறான காரியங்களுக்காகப் பயன்படுத்தி வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிறுவனம் மூழ்கப்போவதாக புரளி (நிசமாகவும் இருக்கலாம்!) கிளம்பியது. இதனால் பீதி அடைந்த மக்கள், தங்கள் வைப்பு நிதிகளைத் திரும்பப் பெற முயன்றனர். ஆனால் CRBயால் திரும்பித் தர இயலவில்லை. மேலும் பீதியடைந்த பொதுமக்கள் இதர நிதி நிறுவனங்களில் தாங்கள் போட்டுவைத்திருந்த பணத்தையும் வெளியே எடுக்க முனைந்தனர்.

ரிசர்வ் வங்கியோ, கஷ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் அத்தனையையும் மேற்கொண்டு வைப்பு நிதிகளைப் பெறத் தடை செய்தது. அதே நேரம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தரவும் அழுத்தியது. இது முடியாத காரியம். பணத்தைப் புரட்டுவதனால் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களின் கழுத்தை ரிசர்வ் வங்கி அழுத்திப் பிடித்தது. அத்தோடு நியாயமாக இயங்கிக் கொண்டிருந்த அனைத்து வங்கியல்லா நிதி நிறுவனங்களையும் இரும்புக் கரம் கொண்டு ரிசர்வ் வங்கி அடக்க ஆரம்பித்தது.

அதுவரையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு இனி லைசன்ஸ் உண்டு என்றும், அவர்கள் அனைவரும் உடனடியாக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 1999இல் 40,000 எண்ணிக்கையில் இருந்த நிறுவனங்களில் பலவற்றை ரிசர்வ் வங்கி தொழிலிலிருந்து விலகிப்போகச் சொன்னது. அப்படியும் 10,000 நிறுவனங்கள் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தன. ஆனால் இதுவரை வெறும் 674 நிறுவனங்களுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி லைசன்ஸ் கொடுத்துள்ளது! எந்தவித அவசரமும் இல்லாமல் மீதமுள்ள உரிம விண்ணப்பப் படிவங்களை ரிசர்வ் வங்கி கிடப்பில் போட்டு வைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் NBFCக்கள் வேண்டாமே என்ற எண்ணம் ரிசர்வ் வங்கிக்கு.

மேலும் வங்கிகளின் மீது விதிக்கப்படும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் (Capital Adequacy Ratio norms) போன்றவற்றை NBFCக்கள் மீதும் விதிக்கத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.

இதனால் NBFCக்கள் காணாமல் போக, பொதுமக்கள் வேறு வழியின்று பணத்தை வங்கிகளில் கொண்டு சேர்த்தனர். இதனால் வங்கிகளில் liquidity - பணத்தாராளம் - அதிகமானது. வங்கிகளும் கவலையே படாமல் இந்தப் பணத்தை ரிசர்வ் வங்கியிலும், நம்பகத்தன்மை அதிகமான அரசின் கில்ட் போன்றவற்றிலும் போட்டுவைத்து விட்டு சும்மா இருக்கின்றன. வட்டி விகிதம் குறையக் குறைய, பொதுமக்களின் சேமிப்பின் வருமானம் குறையத் தொடங்கியது.

மேற்கத்தியப் பொருளாதாரம் நுகரும் கலாச்சாரத்தின் பின்னணியில் உருவானது. அதனால் வட்டி விகிதம் குறையக் குறைய, அவர்கள் அதிகமாகக் கடன் வாங்கி, அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் இந்தியப் பொருளாதாரம் சேமிப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது. அதனால் வட்டி விகிதம் குறைவது இந்தியாவிற்கு நல்லதல்ல. அத்துடன் informal அடிப்படையில் பணம் கடன் கொடுப்பது நின்று போனது பல கீழ்நிலை மக்களைத்தான் பாதித்துள்ளது. இவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை - ரிஸ்க் அதிகம் என்பதால். ஆனால் வங்கிகள் விடாமல் பணத்தேவையற்றவர்களைப் பின்தொடர்ந்து 'நீங்கள் கடனைக் கட்டிவிட்டீர்கள், அதனால் மேலும் கடன் வாங்குங்கள்' என்று நச்சரிக்கின்றன. ஆக, தேவையானவர்களுக்குக் கடன் கிடைக்காமல், தேவையில்லாதவர்களைப் பணம் பின்தொடர்கிறது!

நிதியமைச்சர் சிதம்பரம் வங்கிகளை விவசாயத்துறைக்கு கடன் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் வங்கிகளோ, விவசாயத்திற்குக் கடன் கொடுத்தால் அது NPA - Non Performing Asset ஆகிவிடுமோ என்று பயப்படுகின்றன. ஆனால் முறைசாராத்துறையில் இருக்கும் தனியார்கள், கிராமங்களில் பணத்தை இதுபோன்றவர்களுக்குத்தான் வட்டிக்குக் கொடுக்கின்றனர் (மிக அதிக வட்டியில்!).

இதற்கிடையில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அவசர அவசரமாக யாருமே 9%க்கு மேல் ஆண்டு வட்டி வசூலிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியது. இது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். ஜி.வி என்னும் சினிமாக்காரர் தற்கொலை செய்து கொண்டது கந்துவட்டியினால்தான் என்பதால் இப்படி ஒரு சட்டம் இயற்றியிருக்க வேண்டாம். [இது பற்றிய என் முந்தைய பதிவு இங்கே. - பத்ரி] ஒரு பக்கத்தில் சிடிபேங், கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத்திற்கு 2.5% வரை வசூல் செய்கிறது! ஆனால் தமிழகத்தில் கடன் கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 9% மேல் வட்டி வசூலிக்கக் கூடாதாம்!

எந்தவொரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் அதில் சில நிறுவனங்கள் போண்டியாகும். கெட்டவர்கள் வருவார்கள், பணத்தைத் திருடுவார்கள். அதற்காக அந்த தொழிலையே ஒட்டுமொத்தமாக மூடிவிடுவது நியாயம் ஆகாது. சாலையில் இரண்டு பேர் மீது பஸ் மோதிவிட்டது என்பதனால் தெருவில் நடக்காமலா இருக்கிறோம்?

வங்கியில்லா நிதி நிறுவனங்கள் மிக அவசியம். அவை [கடன் வாங்கும்] வாடிக்கையாளர்களிடையே நெருக்கமான உறவுகளை வைத்துள்ளன. தமது informal முறையால் வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை இருக்கும்போது பணம் திருப்பிச் செலுத்தும் தவணையை மாற்றி அமைக்கின்றன. சுந்தரம் பைனான்ஸ் கொடுக்கும் கடன்கள் 99.5% திருப்பித் தரப்படுகின்றன! இதற்குக் காரணம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தமக்கு முகம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறார்கள். பொதுமக்களிடம் தமது உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் வங்கிகள் இதயமற்ற, முகமற்ற சேவையை அளிக்கின்றன. அவை வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. பணம் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நேரடி முகம் காண்பித்து சேவையைக் கொடுக்கின்றன. பணத்தின் அவசியத் தேவை உள்ளவர்களைப் புறக்கணிக்கின்றன.

ரிசர்வ் வங்கியால் NBFCக்க்களையும் அவை இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆற்றும் சேவையினையும் சரியான முறையில் இதுவரை புரிந்துகொள்ள முடிந்ததில்லை. எனவே NBFCக்களை ரிசர்வ் வங்கியின் இரும்புப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். புதிதாக வேறு ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்மாணித்து அதன் கையில் NBFCக்களை ஒப்படைக்க வேண்டும்.

9 comments:

  1. பத்ரி,

    மிக அருமையாக இந்த விஷயங்களைப் பற்றி எளிமையாக எழுதுகிறீர்கள். நன்றி. இரண்டு கேள்விகள்

    1. உங்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ( ) எப்போதாவது - என்னடா நம்ம பாஸ் எவ்வளவு எழுத்து, மீட்டிங், விழா என்று அலைகிறாரே.. வேலை எதுவும் செய்யவில்லையோ என எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கும் அளவில் எப்படி டைம் மானேஜ்மென்ட் செய்கிறீர்கள் ? அல்லது அவர்களும் வலைப்பதிவு, தமிழ் குழுக்கள் என வேலை நேரத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தால் (புனை பெயரில்) எப்படித்தெரியும் ?

    2. வீட்டில் எப்படி சமாளிக்கிறீர்கள் :-)

    - நரேன்

    By: Naren

    ReplyDelete
  2. மீட்டிங், விழா எல்லாமே வேலை நேரத்தில் நடப்பதில்லையே? சனி, ஞாயிறு அல்லது மாலை வேளைகளில்.

    வேறு சில தந்திரங்களும் உள்ளன, அதைப் பற்றியெல்லாம் இங்கு நேரடியாக எழுத முடியாது:-)

    மற்றபடி வீட்டில் எதையும் சமாளிக்க வேண்டியதே இல்லை! நிறைய நேரம் வீட்டிலும்தான் செலவழிக்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன், சினிமா போகிறோம், ஊர் சுற்றுகிறோம் - அட நிசமாகத்தான் சார்!

    இந்த பதிவுகளையெல்லாம் எழுத நிறைய நேரம் பிடிப்பதில்லை. அதிகமாகப் போனால் அரை மணிநேரம் - அவ்வளவுதான்.

    ReplyDelete
  3. சினிமா போகிறோம், ஊர் சுற்றுகிறோம் - அட நிசமாகத்தான் சார்!
    >>
    வூட்டுல சொல்லிட்டா, சொல்லமலா? :)

    ReplyDelete
  4. நிதியமைச்சர் சிதம்பரம் வங்கிகளை விவசாயத்துறைக்கு கடன் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் வங்கிகளோ, விவசாயத்திற்குக் கடன் கொடுத்தால் அது NPA - Non Performing Asset ஆகிவிடுமோ என்று பயப்படுகின்றன. ஆனால் முறைசாராத்துறையில் இருக்கும் தனியார்கள், கிராமங்களில் பணத்தை இதுபோன்றவர்களுக்குத்தான் வட்டிக்குக் கொடுக்கின்றனர் (மிக அதிக வட்டியில்!).
    >>>
    எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் விவசாயத்திற்காக வங்கிகளில் கடன் பெறுவது குதிரைக் கொம்பு. வங்கிகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. வாங்கிய கடனை திருப்பித்தர வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் கிடையாது(நல்ல மகசூல் கண்டால் கூட). எதாவது ஒரு ஆட்சியில் கடன்களைத் 'தள்ளுபடி' செய்துவிடுவார்கள் என்று நம்பியிருப்பவர்கள் இருக்கிறார்கள்.

    >>
    ஒரு பக்கத்தில் சிடிபேங், கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத்திற்கு 2.5% வரை வசூல் செய்கிறது! ஆனால் தமிழகத்தில் கடன் கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 9% மேல் வட்டி வசூலிக்கக் கூடாதாம்!
    >>
    2.5% = 12.5%?

    >>
    அத்துடன் informal அடிப்படையில் பணம் கடன் கொடுப்பது நின்று போனது பல கீழ்நிலை மக்களைத்தான் பாதித்துள்ளது. இவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை - ரிஸ்க் அதிகம் என்பதால்.
    >>
    வங்கிகள் எந்தக் காலத்திலும் கீழ்நிலை மக்களுக்குக் கடன் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக துரத்தியடித்த சம்பவத்தை நேரில் பார்த்த அனுபவம் உண்டு.

    ReplyDelete
  5. பரி: 2.5% மாதத்திற்கு = 30% வருடத்திற்கு.

    ReplyDelete
  6. "மாதத்திற்கு" - கவனிக்கவில்லை :D :D
    (சிட்டி பேங்க் = பகல் கொள்ளைக்காரர்கள்)

    ReplyDelete
  7. Very well written. Maybe you could email this link to the Prof and solicit his comments?


    By: saumya

    ReplyDelete
  8. பத்ரி, பின் தொடர்தல் வசதியைக் காணோமே. இந்தப் பதிவு சம்பந்தமான எனது பதிவு ஒன்று - http://blog.selvaraj.us/index.php?p=78

    இங்கு பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து நீண்டதால் தனிப் பதிவாக இட்டிருக்கிறேன்.


    By: செல்வராஜ்

    ReplyDelete