Wednesday, September 29, 2004

செம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தமிழ்மொழியைச் செம்மொழியாக்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

அப்பொழுது, இது எங்கு போய் முடியப்போகிறதோ என்று ஆதங்கப்பட்டிருந்தேன். இந்தியாவில் நடக்கும் அரசியலை சற்று கவனித்துப் பார்க்கிறவன் என்பதால் எழுதியது அது.

அப்பொழுது பல தமிழர் வலைப்பதிவுகளிலும் தமிழ் (மட்டும்) ஏன் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

கடந்த இரண்டு வாரங்களாக தினமணி நாளிதழில் செம்மொழி பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் மணவை முஸ்தபா, 20 செப்டெம்பர் 2004 அன்று, "செம்மொழிகள் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அதில் தமிழ் முதலாவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது, அப்படியானால் ஏற்கனவே இருக்கும் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட சமஸ்கிருதம், பாரசீகம், அரபி ஆகிய மொழிகள் எந்தப் பட்டியலில் உள்ளன? தமிழ் இரண்டாவது (சற்றே குறைவுபட்ட) பட்டியலில் உள்ளதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த மொழிகள்தாம் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக்கும் (யாரால்?) நிலையில் இப்பொழுது ஆயிரம் ஆண்டுகள் என்று கொண்டுவந்திருப்பது எதனால்? அடுத்து ஐநூறு ஆண்டு பட்டியல் வருமா?" என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.

திமுக மத்திய அமைச்சர் A.ராஜா அடுத்த நாள் தினமணியில் எழுதியிருந்த கட்டுரையில், பெரும் குண்டுகளைத் தூக்கிப் போட்டார். அதாவது இதுநாள் வரையில் மத்திய அரசு (மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்) எந்த மொழியையுமே செம்மொழி என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததில்லை. சமஸ்கிருதம், பாரசீகம், அரபி ஆகியவற்றுக்கு இதுநாள் வரை கிடைத்து வந்த அங்கீகாரம், பணம், விருதுகள் எல்லாமே பழக்கம் காரணமாக, மரபு காரணமாகத்தான். இப்பொழுதுதான் முதல் முறையாக அரசு ஒரு மொழி செம்மொழியாவதற்கு என்ன தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று தரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றார். "சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி செம்மொழியாக்கப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் சம்ஸ்கிருதமும், பாலியும், பாரசீகமும், அரேபியமும் அதிகாரபூர்வமான அரசு ஆணையுடன் கூடிய செம்மொழித் தகுதியைப் பெறுகின்றன என்பதுதான் உண்மையும் நடப்பும் ஆகும்." என்றும் சொன்னார். மேலும், அரசியல் காரணங்களால் தகுதி இல்லாத மொழிகள் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டு விடக் கூடாது என்ற கரிசனத்துடன் தேவையான கடுமையான தகுதி வரைமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளையின் தலைவர் தமிழப்பன் 23 செப்டெம்பர் எழுதிய கட்டுரையில், மணவை முஸ்தபாவுக்கு வந்த சந்தேகங்கள் அனைவருக்கும் வரக்கூடியதே என்றும், ஆயிரம் வருடங்கள் போதும் என்றால் இன்ன்னமும் பல இந்திய மொழிகள் செம்மொழிகளாகி விடுமே என்றும் காலப்பழமையை "ஈராயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுக்காலம் என்று வரையறுப்பதே சாலச் சிறந்ததாக அமையும்" என்றார்.

அதே நாள் வெளியான தினமணி தலையங்கம் உடனடியாக மத்திய அரசு, மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்து, தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டது.

27 செப்டெம்பர் தி டெலிகிராப், கொல்கொத்தா செய்தித்தாளில் சுஜன் தத்தா என்பவர் எழுதிய கட்டுரையில், நிபுணர்கள் எதிர்ப்பையும் மீறி(!) மத்திய அரசு அரசியல் காரணங்களால் தமிழை செம்மொழியாக்கியது என்று ஒரு போடு போட்டுள்ளார்! கூடவே கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜசேகரனும், முதல்வர் தரம்சிங்கும் கன்னடத்தையும் செம்மொழியாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். போகட்டும், குறைந்தது செம்மொழி என்பதற்கு இப்பொழுதைக்கு நிபுணர்கள் என்ன வரையறை வைத்துள்ளனர் என்று சொல்கிறார். அதைப் பார்ப்போம்.

1. மிகப் புராதனமான, அதாவது 1500, 2000 வருடங்களுக்கு முந்தையதாகவே எழுத்து முறையில் எழுதப்பட்டிருத்தல்
2. போற்றக்கூடிய கலாச்சாரம் என்று கருதக்கூடிய தொன்மையான பிரதிகள்
3. பிற மொழிகளிலிருந்து கிளைத்திராத, தானாகவே தோன்றிய இலக்கியப் பின்னணி
4. பண்டைச் செம்மொழிக்கும் அதன் பிந்தைய வடிவத்துக்கும், கிளைகளுக்கும் இடையில் பெரும் பிளவு

ஆக, 1000? 1500? 2000? அரசு என்னதான் சொல்கிறது? தமிழ்தான் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முதல் செம்மொழியா? (ஆகா, என்ன பாக்கியம்!) சம்ஸ்கிருதம் செத்த மொழி என்பதால் அதை அரசு செம்மொழியாக்காதா? (சுஜன் தத்தா அப்படித்தான் சொல்கிறார்.) அதுதான் கவிக்கோ அப்துல் ரகுமானே பாடிவிட்டாரே? தேவபாஷை பாடையிலே போகையில் தமிழ் மட்டும்தான் மக்கள் ஆடையிலே, பாடையிலே வளர்ந்தது என்று.

அடுத்த, அதிகாரபூர்வமான செம்மொழி கன்னடமா, இல்லை பாரசீகமா, அரபியா?

அரபி மொழியைச் செம்மொழி என்று அறிவித்தால் நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என்று பாஜக/வி.எச்.பி/ஆர்.எஸ்.எஸ் பயமுறுத்துவார்களா?

[அப்படியே காசியின் பதிவையும் ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.]

11 comments:

  1. இந்த செம்மொழி விஷயத்தில் எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கிறது. நம்முடைய அரசு அறிவிப்பதென்பது என்ன லாஜிக்? எத்தியோப்பிய அரசு, எத்தியோப்பிய மொழியை செம்மொழி என்று அறிவித்து விட்டால் அதுவும் செம்மொழி தானா? நான் என்ன கேட்கிறேனென்றால் இதெல்லாம் நாடு தாண்டி உலகளாவிய ஒரு அரங்கம் முடிவு செய்ய வேண்டிய விஷயமில்லையா?

    By: Meenaks

    ReplyDelete
  2. இந்த செம்மொழி அறிவிப்பு இந்தியாவிற்குள்ளாக, இந்திய அரசின் பணத்தை எப்படி செலவு செய்வதற்கு என்பதாக - என்றே நினைக்கிறேன். தமிழை எடுத்துக்கொண்டால் இலங்கை, சிங்கப்பூர் அரசுகள் அம்மொழியைப் பயன்படுத்துகின்றன. அவை தமிழை செம்மொழியாக எடுத்துக் கொள்கின்றனவா என்று கவனிக்க வேண்டும். இலங்கை தமிழை செம்மொழியாகக் கருத வேண்டுமானால் சிங்களத்தையும் அப்படியே கருத வேண்டும் என்றுகூட முடிவெடுக்கலாம். சிங்கப்பூர் அரசு இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொள்ளுமா என்று தெரியவில்லை.

    மற்றபடி எந்தெந்த மொழிகளெல்லாம் செம்மொழிகள் என்று தரப்படுத்தும் அளவிற்கு உலகில் எந்தக் குழுவும் வேலை செய்வதில்லை. ஒருவேளை அவர்களுக்கு உருப்படியாகச் செய்ய நிறைய வேலைகள் இருக்கலாம் :-)

    ReplyDelete
  3. மணவை முஸ்தபாவின் கட்டுரையைப் படித்த அன்றே நானும் ஆசிஃப்பும் இது பற்றிப் பேசிக்கொண்டோம். மறுநாளே இராசா இது பற்றி மறுப்புத் தெரிவித்திருந்தார். வைரமுத்துவும் இராசாவின் கருத்தையே சொல்லியிருந்தார். கடைசியில் குழப்பமே மிஞ்சியது. மணவை முஸ்தபாவின் கட்டுரையை இப்போது எடுக்க முடியவில்லை. தினமணியின் ஆர்ச்சீவ்ஸிலிருந்து ஒன்றைத் தேடிக் கண்டெடுப்பது பெருத்த கஷ்டம். எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டு தினமணிக்கு ஒரு மடல் எழுதினேன். பதிலில்லை. யாராவது தினமணிக்குத் தெரிந்தவர்கள் இருந்தால், ஆர்ச்சீவ்ஸிலிருந்து வேண்டியதைத் தேடியெடுப்பதக் கொஞ்சம் எளிமைப்படுத்தச் சொல்லுங்கள்.

    By: Haranprasanna

    ReplyDelete
  4. பத்ரி,

    அப்படியென்றால் கர்நாடக அரசு, "நாங்கள் கர்நாடக அரசின் பணத்தைச் செலவழிக்கப் போகிறோம். அதனால் கன்னடத்தைச் செம்மொழியாக அறிவிக்கிறோம்" என்று சொல்லிவிட்டுப் போகலாம். :-) அநேகமாக அது தான் நடக்கப் போகிறது.

    By: Meenaks

    ReplyDelete
  5. பிரசன்னா: அதான் நான் சுட்டி கொடுத்திருக்கேனே? போதாதா? :)

    ReplyDelete
  6. மீனாக்ஸ்: ஆ, அப்படி விட்டுவிடுவார்களா என்ன? தமிழை மத்திய அரசு அல்லவா செம்மொழியாக அறிவித்துள்ளது? அதனால் கன்னடத்தையும் மத்திய அரசுதான் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பார்கள்:)

    ReplyDelete
  7. நீங்கள் கொடுத்த சுட்டியில் ஒன்று வேலை செய்யவில்லை. தினமணியின் சுட்டிகள் "இடது பக்கமிருக்கும் தலைப்புகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்க" என்ரு சொல்லும் பக்கத்தில் நிற்கின்றன. அதில் மணவை முஸ்தாவைக் காணவில்லை. இரண்டு மூன்று முறை படித்ததுதான். சேமித்துவைக்கத் தேடினேன், கிடைக்கவில்லை; இப்போதும்!

    By: Haranprasanna

    ReplyDelete
  8. பத்ரி, ஆர்.வெங்கடேஷின் தமிழோவியம் சுட்டி - உங்கள் பக்கத்தில் சரியாக செல்லவில்லை. சரியான சுட்டியை கொடுக்கவும். நன்றி.

    இந்த சுட்டிகளை தேதி, மாதம், வருடம் வகையில் இலகுவாக டிசைன் செய்திருப்பதில், தினகரன், கிண்டு, ரிடிஃப் போன்ற தளங்கள் பாராட்டுக்குரியவை. தமிழில், தினமணி, தினத்தந்தி போன்றவை, ஏன் சிஃபி, சமாச்சார் கூட சரியாக செய்யப்படவில்லை.

    அசோக்.

    By: Ashok

    ReplyDelete
  9. பிரசன்னா: நான் firefox-இல் என் பதிவில் உள்ள தினமணி சுட்டிகளைத் தட்டும்போது சரியான இடத்திற்கு - மணமை முஸ்தபா கட்டுரைக்குப் போகிறது. Internet Explorer-இல் நீங்கள் சொல்வது போல "இடது பக்கமிருக்கும் தலைப்புகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்க" என்று சொல்கிறது! ஏனென்று தெரியவில்லை!

    மணவை முஸ்தபாவைப் படிக்க: ஆவணங்கள் -> 20/செப்/2004 -> தலையங்கம் -> செம்மொழி: புதிய பிரிவு ஏன்? செல்லவும்.

    ReplyDelete
  10. பிரசன்னா: நான் firefox-இல் என் பதிவில் உள்ள தினமணி சுட்டிகளைத் தட்டும்போது சரியான இடத்திற்கு - மணவை முஸ்தபா கட்டுரைக்குப் போகிறது. Internet Explorer-இல் நீங்கள் சொல்வது போல "இடது பக்கமிருக்கும் தலைப்புகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்க" என்று சொல்கிறது! ஏனென்று தெரியவில்லை!

    மணவை முஸ்தபாவைப் படிக்க: ஆவணங்கள் -> 20/செப்/2004 -> தலையங்கம் -> செம்மொழி: புதிய பிரிவு ஏன்? செல்லவும்.

    ReplyDelete
  11. ஆவணங்கள் விஷயத்தில் தட்ஸ்தமிழ்.காமும் சிறப்பாகவே இருக்கிறது.

    பத்ரி, நீங்கள் சொன்னபடியும் ஏற்கனவே முயற்சித்து பார்த்துவிட்டேன். இடது பக்கத்தில் இருக்கும் தலைப்பில் தேடச் சொல்கிறது. இடது பக்கத்தில் ஒன்றும் இல்லை!


    By: Haranprasanna

    ReplyDelete