Friday, April 07, 2006

AICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்

AICTE, பல்கலைக்கழக மான்யக் குழு (UGC) என்ற இரண்டும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரகத்தின்கீழ் வருகிறது. இரண்டும் நாட்டின் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுடன் அடிதடி சண்டையில் இறங்கியுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

இந்த விஷயம் வழக்குவரையில் செல்லாமல் அர்ஜுன் சிங்கோ அல்லது வேறு ஜூனியர் அமைச்சரோ அல்லது ஒரு செயலரோகூட இதைத் தீர்த்திருக்கலாம். சம்பந்தப்பட்ட நிகர்நிலை வேந்தர்கள், UGC, AICTE தலைவர்கள் அனைவரையும் அழைத்து இப்படித்தான் செயல்முறைகள் நடக்கவேண்டும் என்று விளக்கமாகச் சொல்லியிருக்கலாம். பிரச்னை அத்துடன் முடிந்திருக்கும்.

ஆனால்... அதையெல்லாம் விட்டார்கள். இப்பொழுது பிரச்னை சென்னை உயர்நீதிமன்றத்தி. இந்த சமயத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சு ஒரு சுற்றறிக்கை விடுகிறது.

அந்தச் சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
  • நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு புதுப் படிப்பை ஆரம்பிக்க AICTE-இடம் எந்த அனுமதியும் பெறவேண்டியதில்லை.
  • ஆனால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் AICTE கொடுத்திருக்கும் குறைந்தபட்ச வரைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
  • UGC, AICTE இரண்டுமே எந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் நுழைந்து ஆய்வு செய்யலாம். ஆனால் AICTE ஆய்வு, நிர்வாகவியல், பொறியியல் பட்டப்படிப்புகளின் தரம் எப்படி இருக்கிறது என்பதில் மட்டுமே இருக்கும். UGC ஆய்வு நிகர்நிலையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்தும் இருக்கும்.
  • AICTE ஏதாவது குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தால் அதனைச் சரி செய்யுமாறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தான் கண்டுபிடித்தவற்றை UGCயிடம் சொல்லவேண்டும்.
  • UGCதான் AICTEயின் ஆய்வறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு நிகர்நிலைகள் என்ன செய்யவேண்டும் என்று அவற்றை நிர்பந்திக்க முடியும்.
  • நிகர்நிலைகள் UGCயின் கட்டளைகளை ஏற்காவிட்டால் அவற்றின் நிகர்நிலை அந்தஸ்து போக நேரிடலாம்.
மொத்தத்தில் இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
As for the AICTE, it "may cause an inspection of the relevant departments of the institution declared as `Deemed-to-be-University' offering courses that come under the jurisdiction of the AICTE Act 1987, in order to ensure the maintenance of standards."
அதாவது சத்யபாமா, விநாயகா மிஷன், SRM ஆகியவை AICTE தங்களை எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று இப்பொழுது நீதிமன்றம் சென்றுள்ளது தவறு. ஏனெனில் மனிதவள அமைச்சகத்தின் அறிக்கையின்படி AICTEக்கு அந்த அதிகாரம் உண்டு. (ஏன் இதை உடனடியாகச் சொல்லாமல் இந்த விஷயம் கோர்ட் செல்லும்வரை தாமதித்தார்கள்?)

இரண்டாவது: AICTE ஒரு பல் பிடுங்கபட்ட பாம்பு. எந்த நிகர்நிலையாவது தப்பு செய்துள்ளது என்று கண்டறிவது மட்டுமே அதன் வேலை. அதன் அறிக்கையை UGCயிடம் சமர்ப்பித்துவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கவேண்டியதுதான். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது UGCயின் வேலை.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த அறிக்கையின்மீது என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

முந்தைய பதிவு:
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு

No comments:

Post a Comment