Tuesday, April 11, 2006

சிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு

தமிழகத்தில் இயங்கும் ஏர்செல் மொபைல் நிறுவனத்தை உருவாக்கி சமீபத்தில் அதனை மலேசிய தொலப்பேசி நிறுவனமான மேக்சிஸ், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தை நடத்தும் பிரதாப் ரெட்டி குடும்பத்தினருக்கு விற்ற சிவசங்கரன், இப்பொழுது தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனமான சஹாரா ஒன் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனத்தில் 14.98% பங்குகளை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளார். (இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது சஹாரா ஒன்.)

சிவசங்கரன் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர். இவரது முதலீடுகள் கவனிக்கத் தகுந்தவை. பல்வேறு காலகட்டங்களில் இவர் செய்துள்ள முதலீடுகள் இவருக்கு நிறைய வருவாயை ஈட்டியுள்ளது. ஆனால் இவர் எந்தெந்தத் தொழில்களிலெல்லாம் ஈடுபட்டுள்ளார், என்னென்ன செய்கிறார் என்று முழுமையான தகவல்கள் வெளியே தெரிவதில்லை. தெரிந்த சில கீழே:

ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம்மூலம் சிவா பிசி என்ற கணினிகளை இந்தியாவில் விற்றார். ஆரம்பித்த நேரத்தில் - 1980களின் கடைசியில் - இந்த நிறுவனம் இந்தியாவில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. மற்ற கணினிகள் எல்லாமெ அப்பொழுது ரூ. 50,000க்கும் மேல்!ஆனால் சிவா பிசி முதலில் ரூ. 33,000 என்றும், பின்னர் ரூ. 30,000க்கும் குறைவாகவும் விற்றது.

1990களின் ஆரம்பத்தில் மத்திய அரசு மொபைல் சேவை உரிமங்களை தனியாருக்குத் தர முன்வந்தது. அப்பொழுது சிவசங்கரன் பல தொலைப்பேசி வட்டங்களுக்கான உரிமங்களைப் பெற்றார். ஆனால் எல்லா இடங்களிலும் மொபைல் பேசிச் சேவையைத் தரக்கூடிய முதல் அவரிடம் இல்லை. அதனால் தனது உரிமங்களை - முக்கியமாக புது தில்லி உரிமத்தை - விற்றார். புது தில்லி உரிமத்தை வாங்கியது எஸ்ஸார் நிறுவனத்தின் ருய்யா குடும்பம். இந்தக் குடும்பம் இந்த உரிமத்துக்குப் பதிலாக பணமும் அவர்களிடமிருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (அல்லது "நாடார்கள்" வங்கி) பங்குகளையும் கொடுத்தனர்.

மெர்க்கண்டைல் வங்கி விவகாரம் ஒரு தனிக்கதை. அதற்குள் நாம் போகவேண்டாம். சிவசங்கரனுக்கு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகளை மீண்டும் நாடார்களுக்கு விற்றதில் நல்ல லாபம்.

தமிழகத்தின் செல்பேசி உரிமத்தை வைத்து உருவாக்கியதுதான் ஏர்செல் மொபைல் நிறுவனம். நாடெங்கும் மொபைல் கட்டணம் நிமிடத்துக்கு ரூ. 30, 40 என்று பயமுறுத்தியபோது கம்பித் தொலைப்பேசிக் கட்டணத்திலேயே கம்பியில்லாத் தொலைப்பேசிக் கட்டணத்தையும் கொண்டுவந்த பெருமை சிவசங்கரனுக்குத்தான். அதன்பிறகே பிற செல்பேசி நிறுவனங்களும் குறைந்த கட்டணத்திலேயே தரமான சேவையைக் கொடுத்து லாபத்தையும் ஈட்டமுடியும் என்ற எண்ணத்துக்கு வந்தனர்.

ஆர்.பி.ஜி குழுமத்தின் சென்னை வட்ட நிறுவனத்தையும் விலைக்கு வாங்கி (முதலில் வோடாஃபோனிடமிருந்து கொஞ்சம், பின்னர் ஆர்.பி.ஜியிடமிருந்து மீதம்) அதனை மேக்சிஸ், அப்போலோ குழுமங்களுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக விற்றதில் சிவசங்கரனுக்குக் கொள்ளை லாபம்!

இதற்கிடையில் டிஷ்நெட் டி.எஸ்.எல் என்ற நிறுவனத்தை உருவாக்கினார் சிவசங்கரன். இந்த நிறுவனம் வீடுகளுக்கு டி.எஸ்.எல் முறையில் இணைய வசதியைச் செய்து தந்தது. இந்தச் சேவை உருவான காலகட்டம் மிகவும் மோசமானது. தொலைப்பேசிச் சேவை தனியார்மயமாக்கப்படாத நேரம் அது. அதையடுத்து வந்த காலகட்டத்திலும் உரிமக் கட்டணம் எக்கச்சக்கமாக இருந்தது. வெறும் இணையச் சேவைக்காக வீடுகளுக்கு தொலைப்பேசிக் கம்பிகளை தலைக்கு மேலே இழுத்து வந்து டி.எஸ்.எல் சேவையைத் தந்தார்கள்! சில வருடங்களுக்கு இந்தியாவில் கம்பி வழியாக டி.எஸ்.எல் சேவையைத் தந்த ஒரே நிறுவனம் டிஷ்நெட் டி.எஸ்.எல்லாக மட்டுமே இருந்தது. பின்னர் இந்த நிறுவனத்தை டாடாவின் வி.எஸ்.என்.எல் விலைக்கு வாங்கியது. அதிலும் சிவசங்கரனுக்கு லாபம்தான். சென்ற மாதம் சிவசங்கரன் டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தில் 8% பங்குகளை சுமார் ரூ. 1,200 கோடிக்கு வாங்கினார்.

ஆக, கணினி, இணையம், செல்பேசி ஆகிய துறைகளில் கால் பதித்து, புதுமையான சேவையைக் கொடுத்து, அதே சமயம் லாபத்தையும் பெற்று தனது நிறுவனங்களை நல்ல வருவாய்க்குப் பிறரிடம் விற்று சாதனையாளராகத் திகழ்கிறார் சிவசங்கரன்.

இவர் எந்தத் துறையிலும் எந்த நிறுவனத்திலும் நுழைந்தாலும் அந்த நிறுவனத்தைக் கவனமாகப் பார்ப்பது நமக்கு அவசியம்.

5th June 2003: Sivasankaran acquires 20.76% in RPG Cellular, Chennai for approximately USD 7 million.
19 December 2003: Sivasankaran acquires 79.24% in RPG Cellular from RPG Group for Rs. 210 crore
19 March 2004: VSNL takes over Dishnet's ISP division for Rs. 270 crore
April 2004: Sterling acquires 65.69% stake in Barista from Turner Morrison for Rs. 30 crore
December 2004: Sterling acquires the remaining 34.31% stake from Tata Coffee for an undisclosed sum
30 December 2005: Sivasankaran sells Aircel (TN + Chennai) to Maxis and Reddy family for Rs. 4,800 crore+ app
9 March 2006: Sivasankaran gets 8 pc equity in Tata Tele for Rs. 1,200 crore
Sivasankaran has recently bought a small stake in Idea Cellular (1.9%) held by AIG and is selling it off to an investment firm for about Rs. 150 crore.
10 April 2006: Sivasankaran acquires 14.98% in Sahara One Media & Entertainment for Rs. 120 crore

6 comments:

 1. சிவசங்கரன் துவக்கியது ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் என்ற நிறுவனம். ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் நிறுவனத்தை துவக்கியவர் ஆர். சுப்பிரமணியம். சிவசங்கரனுக்கும், ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்க்கும் சம்பந்தமில்லை.

  ReplyDelete
 2. Has the Maxis, Apollo Group sale been approved by the indian regulators?
  I remember that his proposed sale to a Russian telco met with some problem.

  Sivasankaran also bough M C Hammer's house in California and spends some of his time there. Although he maintains a Singapore residential status, I doubt whether he lives in Singapore.

  ReplyDelete
 3. Kaps: Aircel deal is through. Maxis now has taken management control of the company, I think. The board has also been changed.

  ReplyDelete
 4. Barista Coffee chain and Fresh&Honest Coffee (in railway stations) are also his companies. People say that he is developing Barista so that when Starbucks comes to India he can sell it to them :-)

  ReplyDelete
 5. தமியன்: சிவசங்கரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

  ReplyDelete