Monday, April 17, 2006

நர்மதா பச்சாவோ ஆந்தோலன்

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை அதிகப்படுத்த பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் விரும்புகிறார்கள். குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் அம்மாநில மக்களும் இதனை விரும்புகின்றனர்.

நர்மதா அணை கட்டப்படுவதால் பல மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய நிவாரணங்களை அளித்துவிட்டதாகவும் மிச்சம் மீதி உள்ள சிலருக்கும் விரைவிலேயே அளித்துவிடுவதாகவும் மாநில அரசுகளின் சார்பில் கூறப்படுகிறது.

ஆனால் இன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியில் நிவாரணம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் மேதா பட்கர் மற்றும் பிறர் நடத்தும் போராட்டத்தை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். நிவாரணம் முழுமையாக நடக்காதவரையில் கட்டுமாணப் பணிகள் நடைபெறக்கூடாது, அது நியாயமற்றது என்றே நினைக்கிறேன். அணையின் உயரத்தை அதிகரிப்பதால் பல கோடி மக்கள் குஜராத்தில் பயன்பெறலாம். ஆனால் நிவாரணம் முழுவதுமாக வழங்கப்படாதவரையில் இந்தப் பயனைத் தள்ளிப்போடுவதில் தவறில்லை.

ஆனால் இன்று உச்சநீதிமன்றம் கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்று கூறியுள்ளது. இது மிகவும் வருத்தம் தரக்கூடிய தீர்ப்பு. ஆகஸ்ட் 2006க்குள் இடம் பெயரும் அனைவருக்கும் நிவாரணம் கட்டாயம் அளிக்கப்படும் என்கிறார் அரசு வக்கீல். ஆனால் உடனேயே "அப்படி நிரந்தர நிவாரணத்தை ஆகஸ்ட் 2006க்குள் அளிக்க முடியாவிட்டால் தாற்காலிக நிவாரணமாவது வழங்கப்படும்" என்கிறார் வக்கீல். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆகஸ்ட் 2006க்குள் முழு நிரந்தர நிவாரணம் அளிப்பது சாத்தியமல்ல என்பதுதான். இதையேதான் அருந்ததி ராய் போன்றவர்களும் சொல்கிறார்கள். ஆனால் சர்தார் சரோவர் திட்டத்தின் தலைவர் முதல் பிற அரசு அதிகாரிகள், முதல்வர்கள் ஆகியோர் பதிலாகச் சொல்வது பொய் கலந்த திட்டல்கள் மட்டுமே.

CNN-IBN-ல் நடைபெற்ற விவாதத்தில் சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட் தலைவர் PL லாஹிரி, அருந்ததி ராய் பொய் சொல்கிறார் என்றே கடுமையாகக் குற்றம் சாட்டினார். ஆனால் பொய் சொல்வது அரசு அதிகாரிகள்தான் என்று நிரூபணமாகியுள்ளது.

தி ஹிந்துவில் முன்னாள் மைய நீர் வளத்துறைச் செயலர் ராமஸ்வாமி ஐயர் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளும் இந்த விவாதத்தின் பல்வேறு கோணங்களை அலசுகின்றன. அவசியம் படிக்கவேண்டியவை. ஒன்று | இரண்டு

7 comments:

  1. இது பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். போன வார தெஹல்காவில் மேதா பட்கர் இதைப் பற்றி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. அது தவிர, பெரும் அணைகள் கட்டுவதால் பயன் யாருக்கு? என்பதை விளக்கும் இன்னொரு கட்டுரையும் தமிழில் மொழிபெயர்க்க தகுதியுள்ளது.

    சுட்டிகள்; http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne042206Anger_in_CS.asp
    http://www.tehelka.com/story_main17.asp?filename=Cr042206Anatony_of.asp

    ReplyDelete
  2. பத்ரி சொல்வது சரி. முழுமையாக நிவாரணப்பணிகள் முடிந்த பின்னரே, அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணியைத்துவங்க வேண்டும். ஆனால், சுப்ரீம் கோர்ட் இப்படியொரு தீர்ப்பை எந்த அடிப்படையில் வழங்தியது என்று தான் புரியவில்லை.

    காவிரி விஷயத்தில், 70வதுகளின் துவக்கத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டு மக்களும் காட்டிய மெத்தனப்போக்கிற்கான விலையைத்தான் இன்றுவரை காண்கிறோம்.

    மாநில உணர்வுகள் ஒரு புறம் இருக்கட்டும், அரசியற்கட்சிகளின் தேசியத் தலைமையின் மௌனம் (deafeningly silent) ஒருவகையில் கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  3. //ஆனால் இன்று உச்சநீதிமன்றம் கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்று கூறியுள்ளது.//

    Is this a later development?

    ReplyDelete
  4. இந்த அணை விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் வீண் கௌரவம் பார்க்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு, இருப்பிடம், வேலை, கலாச்சாரம், வரலாறு, வழிப்பாட்டு முறைகள் பற்ரி எந்த அக்கறையுமில்லாத இந்த அரசுகள் யாருடைய நலனுக்காக?

    ReplyDelete
  5. //ஆனால், சுப்ரீம் கோர்ட் இப்படியொரு தீர்ப்பை எந்த அடிப்படையில் வழங்தியது என்று தான் புரியவில்லை.//

    2003 செப்டம்பரில் பத்ரி திண்ணையில் எழுதிய ஒரு பழைய கட்டுரையை இங்கு சுட்ட விரும்புகிறேன்.

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309185&format=html

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  6. Voice on Wings: உச்சநீதிமன்றத் தீர்ப்பை இரு பக்கத்தைச் சேர்ந்தவர்களுமே தங்களுக்கு ஆதரவானது என்று சொல்லலாம்.

    உச்சநீதிமன்றத்தில் NBA வேண்டியது - நிவாரணம் முழுமையாக முடியாத வரையில் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டாம் - என்பது. ஆனால் உச்சநீதிமன்ற ஆணையோ கட்டுமானப் பணிகள் தொடரலாம்; அதே சமயம் நிவாரணப் பணிகளும் தொடரவேண்டும். அதாவது status quo. அப்படி நிவாரணப் பணிகள் சொன்னபடி நடக்கவில்லையென்றால் கட்டுமானப் பணியைத் தடுத்துவிடுவோம் என்று ஒரு மிரட்டலும் உள்ளது.

    ஆனால் இதுநாள்வரையில் சரியாக நடக்காத நிவாரணப் பணிகள், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு இன்றுமுதல் திடீரென்று மாறியா போய்விடும்?

    முதலில் நிவாரணத்தை நல்லபடியாக முடியுங்கள்; அதன்பின் கட்டுமானத்தைத் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  7. திரு.பத்ரி அவர்களே
    இந்த அணையின் உயரம் உயர்த்துவதால் என்ன நன்மை
    அதனால் தீமை என்ன? இங்கு தமிழ்நாட்டில் கூட முல்லை பெரியார் அனையின்
    உயரத்தை கூட்டுவதில் இரு மாநிலமும் மல்லு கட்டுவது எதானால், எனக்கு தெரிந்து
    அனையின் உயரத்தை உயர்த்துவதால் என்ன பாசனத்திற்க்கு நீர் அதிகமாக தேக்கி
    வைக்கலாம் வேறு ஏதும் பயன் இருக்கிறதா? எதனால் இத்தனை பிரச்சினைகள்.?

    அன்புடன்
    சரவணன்.இரா.

    ReplyDelete