Friday, April 21, 2006

அராஜக ஆட்சியை அகற்றுவோம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் சில புத்தகங்களை எழுதியுள்ளவருமான ஏ.கோபண்ணா "அராஜக ஆட்சியை அகற்றுவோம்" என்ற தலைப்பில் ஒரு தேர்தல் பிரசார புத்தகத்தை உருவாக்கியுள்ளார். ரூ. 30 (96 பக்கங்கள்; டெமி 1/4) விலை வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தை யார் காசு கொடுத்து வாங்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்களும் தோழமைக் கட்சிக்காரர்களும் பிரசாரத்துக்காக இந்தப் புத்தகத்தை நிறைய வாங்கி பிறருக்கு விநியோகிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் நடக்கும் பல பிரசார உத்திகளில் இந்தப் புத்தகம் மிகவும் வித்தியாசமானது. பொதுவாகவே தேர்தல் அறிக்கைகள் மிக மோசமாக உருவாக்கப்படுகின்றன. உள்ளே எழுதியிருப்பதைச் சொல்லவில்லை; புத்தக வடிவமைப்பு, லே-அவுட், எழுத்துரு, எழுத்தின் தரம் ஆகியவற்றைச் சொல்கிறேன்.

அதற்கு மாற்றாக கோபண்ணாவின் புத்தகம் நல்ல தரத்தில் உள்ளது. நல்ல தாள், தரமான அட்டை, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட உள்பக்கங்கள் என்று கவனமாகச் செய்திருக்கிறார்.

முன்னட்டையில் கருணாநிதியும் சோனியா காந்தியும் கையசைக்கிறார்கள். பின்னட்டையில் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த துயர சம்பவங்களின் படங்கள் 'கொலாஜ்' ஆகவும் அதற்கு நடுவில் ஜெயலலிதாவின் முகமும் உள்ளது. உள்புற அட்டையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்கள்.

27 அத்தியாயங்களாக ஜெயலலிதா ஆட்சியின் பிரச்னைகளும் கடைசியில் "மீண்டும் மலரட்டும் கலைஞர் ஆட்சி" என்ற அத்தியாயமும் உள்ளன. முன்னுரையில் கோபண்ணா இவ்வாறு கூறுகிறார்:

"ஜெயலலிதா இன்று தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் சதுக்கப் பூதம்; ஊழலின் அடைபடா ஊற்று; தமிழக அரசியலில் ஏற்பட்டுவிட்ட தொற்றுநோய்; அந்தத் தொற்றுநோய் தீர்க்கப்படாத மேகநோயாக வளரும் அபாயம் உருவாகி வருகிறது."

"ஜெயலலிதா விதைத்த கிருமிகளிலிருந்து உருவான எல்லா அரசியல் நோய்களிலிருந்தும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்."

பொதுவாக எதிர்க்கட்சிகள் ஜெயலலிதா ஆட்சியின்மீது சொல்லும் அத்தனை குறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தகம் முழுவதிலும் நிறைய கார்ட்டூன் படங்கள், சிறு சிறு பெட்டிச் செய்திகள், அரசியல்வாதிகளின் மேற்கோள்கள், பத்திரிகைச் செய்திகள் என்று பல விஷயங்கள் உள்ளன. ஒருசில இடங்களில் இலக்கணப் பிழைகள் தென்படுகின்றன, மற்றபடி பொதுவான அரசியல் பிரசுரத்தில் இருக்கும் பிழைகளைவிட மிகக்குறைவுதான்.

புத்தகம் கிடைக்குமிடம்:

சூர்யா பப்ளிகேஷன்ஸ்
'காமராஜ் பவன்'
573 அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 006
போன்: 2434 9565, 2483 5959

6 comments:

  1. I feel, it's a good try. ஆளுங்கட்சியை தாக்கி பேசும் பெரிய பேச்சாளர்கள் இல்லாத நிலையில்... திமுக மேடைகளுக்கு ரொம்ப அவசியமானது.

    ReplyDelete
  2. பின்னட்டை போட்டோவும் போட்டிருக்கக் கூடாதா? ரொம்ப சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே..

    ReplyDelete
  3. ஒரு வருசத்துக்கு முன்னால இந்த புத்தகம் வெளிவந்திருந்தா, பாவம் கொபன்னாவுக்கு அச்சிட்ட செலவுகூட திரும்ப கிடைச்சிருக்காது.
    ம்ம்ம்ம்ம்...
    "காற்றுள்ள போது தூற்றிக்கொள்கிற புத்திசாலி"

    ReplyDelete
  4. வியாபார யுக்திக்காக கோபண்ணாவிற்கு வாழ்த்துக்கள் தேர்தல் நேரத்தில் இவ்வளவு குறைந்த விலை வைத்து விட்டார் என்பது என்னுடைய எண்ணம், இந்த தகவல்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    ReplyDelete
  5. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை முன்னிட்டு பின்னட்டையும் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. கட்சிக்காரர்களும் அபிமானிகளும் கூட விலை கொடுத்து வாங்கினாலும், இம்மாதிரியான படைப்புகளை அவ்வளவாக வாசிப்பதில்லை என்பது நான் பழகிய வட்டத்திலிருந்து கற்ற விஷயம்.

    ஆனால், சமகால நிகழ்வின் பதிவு என்ற வகையிலும்,பொதுவான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வக்கோளாரிலும் பத்ரி போன்ற voracious படிப்பாளிகளும் என்னைப் போன்ற நுனிப்புல் மேய்பவர்களும் வேண்டுமானால் இதையெல்லாம் வாசிக்க நேரலாம்...

    வெங்கடேஷ் வரதராஜன்,
    ரியாத்.

    ReplyDelete