Friday, April 06, 2007

சென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்

மக்கள் நெருக்கம் அதிகமான பெருநகரங்களில் வீடு, நிலம் விலைகள் கிடுகிடுவென ஏறிக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகப் பொதுமக்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

நான் ரியல் எஸ்டேட் விலைகளை அதிகமாக கவனித்து வருபவன் அல்லன். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவனும் அல்லன். கடந்த சில தினங்களாக மேலோட்டமாகப் பார்ப்பதிலிருந்து எழுதுகிறேன்.

சென்னையில் வாழ்விட நெருக்கடியை ஏற்படுத்துவதில் பிரதானமானது இங்கு தமிழக மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்து சேரும் மக்கள்தான் என்று நினைத்திருந்தேன். இதே பிரச்னைதான் பெங்களூரு, மும்பை, தில்லி போன்ற பிற நகரங்களிலும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அது உண்மையான காரணம் அல்ல என்று நினைக்கிறேன்.

1. திடீரென, பெரும் வணிக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள் ஆகியவை அதிகமான அளவில் நிலத்தை வாங்க முற்படுகின்றன. மும்பை இந்தியாவின் நிதி அதிகார மையமாக இருந்ததால் அங்கு நடந்தது. பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நகரமாக ஆனபோது நடந்தது. இப்பொழுது சென்னையில் நடக்கிறது.

பல புதிய நிறுவனங்களுக்கு பல லட்சம் சதுர அடி அளவில் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. இந்த அலுவலகம் சேர்ந்தாற்போல் இருக்கவேண்டும். எனவே விலை சற்று அதிகமானாலும் காசு கொடுத்த வாங்க இவர்கள் தயங்குவதில்லை. நிறுவனத்தின் மொத்தச் செலவு, வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தச் செலவு, கவலையைத் தருவதாக இல்லை. எனவே எத்தனை கோடி ஆனாலும் ஆகட்டும் என்று வாங்குகிறார்கள். இது சமச்சீராக இருக்கும் டிமாண்ட் - சப்ளையைக் கலைக்கிறது. உடனடியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலங்களின் சந்தை விலை ஏறுகிறது.

ஏற்கெனவே இருக்கும் வணிகப் பகுதிகளில் (தி. நகர் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில்) நெருக்கடி அதிகமாக இருப்பதால் புதிய வணிகப் பகுதிகள் திடீரென்று உருவாகின்றன. கதீட்ரல் சாலை அப்படித்தான்... கடந்த ஐந்து வருடங்களில் கதீட்ரல் சாலையின் இருமருங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் ஆக்ரமித்து வருகின்றன. இதனால் இதற்கு அருகில் உள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களும் விலையில் வெகுவாக ஏறிவிடுகின்றன.

2. நகரின் நடுவில் இருக்கும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வோர், தமது வசிப்பிடங்கள் நகருக்கு நடுவிலேயே இருக்குமாறு தேடுகிறார்கள். ஏனெனில் சென்னையில் மெட்ரோ போக்குவரத்து மோசமாக உள்ளது. இந்த எக்சிகியூடிவ்கள் பஸ்ஸில் பயணம் செய்யப்போவதில்லை. நல்ல மெட்ரோ ரயில் இருந்தால் செய்யலாம். ஆனால் இல்லை என்பதால் கார், பைக் பயணம்தான். சாலையின் மோசமான போக்குவரத்து நெருக்கடியால் தொலை தூரத்தில் வீடுகளை வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. அதனால் சபர்பன் - புறநகர் வாசத்தை விடுத்து ஊருக்குள் வசிக்க விரும்புகிறார்கள். அவர்களது வருமானம் அதிகமாக இருப்பதால் விலை ஏற ஏற, சிக்கலாக இருந்தாலும் பரவாயில்லை என்று பெரும் கடனில் வீட்டை வாங்குகிறார்கள், அல்லது அதிக வாடகையில் வசிக்கிறார்கள்.

3. அடுத்து ஸ்பெகுலேட்டர்கள். கடந்த ஐந்து வருடங்களில் சென்னையில் வீட்டு/நில விலைகள் ஜுரம் போல ஏறுவதைக் கவனிக்கிறார்கள். சரி, எதிலோ முதலீடு செய்வதற்கு பதில் இதில் செய்வோம் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். என்.ஆர்.ஐக்கள் தங்களது டாலர்களை இந்திய ரியல் எஸ்டேட்டில் போடுகிறார்கள். அவர்கள் இந்த வீடுகளில் வசிக்கப் போவதில்லை. பலர் தமது வீடுகளில் யாரையும் குடிவைப்பதும் இல்லை. இதனால் நகரின் நடுவில் பல வீடுகள் சும்மா பூட்டியே கிடக்கின்றன. இதுவும் நில, வீடு விலைகள் மிக அதிகமாக ஏற வகை செய்கின்றன.

இவ்வாறு விலை ஏறுவதால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எப்படி என்று பார்ப்போம்:

1. குறைந்த வருமானம் உடையவர்களின் குடியிருப்புகள் கலைக்கப்பட்டு அவர்கள் ஊரின் மையத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். நான் சொல்வது lower middle class, middle class வகையைச் சேர்ந்தவர்களை. மாத வருமானம் உண்டு. ஆனால் அது குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,000 முதல் ரூ. 25,000 வரை மட்டுமே இருக்கும். வேறு பூர்விகச் சொத்து ஏதும் இல்லாத நிலையில், இவர்களால் இப்போதைக்கு சென்னையின் நடுவில் எந்த வீட்டையும் வாங்க முடியாது. வாடகையும் எக்கச்சக்கமாக ஏறிவிடுகிறது.

எனவே, இவர்கள் புறநகரில் மட்டுமே வசிக்க வேண்டியுள்ளது. அங்கும் இவர்கள் போவதால் விலை ஏற்றம் அதிகமாகி, பக்கத்து கிராமங்களில் வாழும் உள்ளூர் மக்கள் கஷ்டப்படவேண்டியிருக்கும்.

2. அடுத்ததாக, மிகக் குறைந்த வருமானம் பெறும் ஏழை மக்கள். இவர்கள் பெரும்பாலும் நகருக்கு நடுவில் மிகக்குறுகிய குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இதில் பலர் பட்டா இல்லாத அரசு நிலங்களில் வசிக்கலாம். இந்த நிலங்களைக் காலி செய்து இவர்களை ஊருக்கு வெளியே துரத்த நில மாஃபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் நிலத்தில் அவ்வளவு பணம் உள்ளது. ஆனால் இந்த மக்களது வாழ்வாதாரமே நகருக்கு மையத்தில் இருந்து சிறு வேலைகளைச் செய்வது. இதில் பலர் மாத வருமானம் ரூ. 3,000க்கு ஏதேனும் நிறுவனத்தில் வேலையில் இருக்கலாம். வேறு சிலர் காய்கறி விற்கலாம். தெருவோரம் டீக்கடை நடத்தலாம். சிலர் அண்டை வீடுகளில் வீட்டுவேலை (பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து...) செய்யலாம். இவர்கள் அனைவரும் ஊருக்கு மையத்தில் இருந்தால்தான் சம்பாதிக்க முடியும்.

மீனவர்கள் கடலை ஒட்டி இருந்தால்தான் கடலுக்குப் போய் மீன் பிடிக்க முடியும். இவர்களை எப்படியாவது தொலைவில் தள்ளிவிட்டு அந்த நிலங்களைக் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, வளர்த்தெடுத்து நல்ல விலைக்குத் தள்ளிவிட மாஃபியாக்கள் முயற்சி செய்வர். இதெல்லாம் நியூ யார்க் நகரத்திலிருந்து பல்வேறு நகரங்களில் நடந்ததுதான்.

3. Upper middle class-ஐச் சேர்ந்தவர்களும்கூட மிக அதிகமாகக் கடன் வாங்கி வீடுகளை வாங்கவேண்டிவரும். உதாரணத்துக்கு நான் வசிக்கும் கோபாலபுரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 2001-ல் அபார்ட்மெண்ட் வாங்க, சதுர அடிக்கு ரூ. 2,000 - 2,500 இருந்தது. சுமார் 1,000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்ட் வாங்க ரூ. 25 லட்சம் ஆகும். இதில் சுமார் ரூ. 20 லட்சம் கடன் என்று வைத்துக்கொள்வோம் சுமார் 10% வீட்டுக்கடன் விகிதம், கடன் 15 வருடங்களுக்கு என்றால், மாதம் கட்டவேண்டியது ரூ. 21,500.

மாதம் சுமார் ரூ. 50,000 வாங்குபவர் வரி போக, வீட்டுக்கடன் போக வீட்டுக்கு ரூ. 10,000 - 15,000 எடுத்துக்கொண்டு போகலாம். பிற சேமிப்புகள் செய்வது கஷ்டம்.

ஆனால் இன்றோ சதுர அடி ரூ. 5,000க்கு மேல் என்கிறார்கள். அப்ப்டியானால் 1,000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்டின் விலை ரூ. 50 லட்சம்!

ஐந்து வருடத்துக்கு முன்னர் ரூ. 25 லட்சத்துக்குமேல் வீட்டுக்கடன் கொடுக்க வங்கிகள் யோசித்தன. இப்பொழுது நிறைய மாறிவிட்டது போலும்! ரூ. 50 லட்சம் உள்ள வீட்டை வாங்க ஒருவர் எவ்வளவு கடன் வாங்கவேண்டியிருக்கும்?

மாதம் ரூ. 75,000 சம்பளம் பெறும் சாஃப்ட்வேர் நிறுவன உயர்மட்ட ஊழியர் ஒருவரை எடுத்துக்கொள்வோம். வரி போக, அவருக்கு டேக் ஹோம் மாதம் ரூ. 60,000 கிடைக்கும். அவர் ரூ. 50 லட்சம் வீட்டை வாங்க, குறைந்தது ரூ. 40 லட்சமாவது கடன் வாங்கவேண்டும். 20 வருடக் கடனாக இருந்தாலும், இதற்குக் கட்டவேண்டிய மாதத்தொகை ரூ. 38,600. கடன் போக அவருக்குக் கையில் கிடைக்கும் பணம் வெறும் ரூ. 21,400 மட்டுமே. இதில் பெட்ரோல் செலவு, சாப்பாட்டுச் செலவு என்று போனால் சேமிப்பு குறைவுதான்.

-*-

மொத்தத்தில் கடுமையாக ஏறும் ரியல் எஸ்டேட் விலைகள் மக்கள் அனைவரையும் பாதிக்கின்றன. இதைத் தடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

1. இந்தியவாசி ஒருவர் அதிகபட்சம் இரண்டு வீடுகளுக்குமேல் வாங்கக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும்.

2. முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள் வரி என்றும் முதல் வீட்டை விற்காமல் இரண்டாம் வீட்டை வாங்குபவருக்கு 15% முத்திரைத்தாள் வரி என்றும் செய்யலாம். ஆனால் இரண்டாம் வீட்டை வாங்கியபின் முதல் வீட்டை விற்கிறார் என்றால் அப்பொழுது 11% ஸ்டாம்ப் டியூட்டியைத் திரும்பப் பெறுமாறு செய்யலாம்.

3. நிலத்தில் ஸ்பெகுலேட் செய்யும் என்.ஆர்.ஐகளை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம். இந்தியாவில் ஒரு வீட்டுக்குமேல் அவர்கள் முதலீடு செய்ய முடியாது என்று சட்டம் கொண்டுவரலாம்.

4. ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள் போன்றவை இயங்குவதைத் தடை செய்யலாம்.

5. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளதுபோல நிலத்தை வாங்கி சும்மா போட்டிருப்பவர்களுக்கு (அது விலை ஏறியதும் விற்கலாம்... என்றிருப்பவர்கள்) தனியாக வரி விதிக்கலாம்.

6. Zoning regulations-ஐக் கடுமையாக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் வணிகக் கட்டடங்கள் வரக்கூடாது, எங்கு மட்டும்தான் அவை இருக்கவேண்டும் என்று மிகக் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தவேண்டும்.

7. சென்னை மெட்ரோ திட்டத்தை உடனடியாகக் கொண்டுவந்து சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்குமாறு செய்யவேண்டும். இதற்கு எப்படியும் 6-8 வருடங்கள் ஆகும். ஆனால் நாம் இன்னமும் செயல்படுத்தவே ஆரம்பிக்கவில்லை. இது ஏற்பட்டால் சென்னையின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் 30-45 நிமிடத்தில் வந்துவிட்டுப் போகமுடியும். அதனால் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறையும். கொஞ்சம் கொஞ்சமாக பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். தெருக்களில் கார்கள், பைக்கள் குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் வெகுவாகக் குறைக்கலாம்.

அப்பொழுது பெரும்பான்மை மக்கள் ஊருக்கு வெளியிலேயே இருக்க விரும்புவார்கள். அதனால் தானாகவே நகரின் நெருக்கடி குறைந்துவிடும், விலையும் வெகுவாகக் குறைந்துவிடும்.

8 comments:

 1. பத்ரி ஸார்.. உங்கள் கூற்று உண்மைதான்.. இன்னும் ஐந்து வருடங்களில் கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அடையார், ராஜா அண்ணாமலைபுரம் என்ற பகுதிகளில் பணக்காரர்கள் மட்டுமே குடியிருக்கலாம். மற்றவர்கள் வந்து எட்டிப் பார்த்து போய்க் கொண்டிருக்கலாம் என்ற நிலைமைதான் வரும்.. ஒரு ரூம் கொண்ட வீடு மயிலாப்பூரில் 2300 ரூபாய் வாடகை. அதுவே அடையாறில் 2800.. நிலைமை இப்படியே போனால் குறைந்த வருமானம் கொண்ட அரசு ஊழியர்கள் கை நீட்டாமல் என்ன செய்வார்கள். அரசு ஊழியர்கள் மயிலாப்பூரில் குடியிருக்க ஆசைப்படவே கூடாதா? அப்படி ஆசைப்பட்டால் அது தவறா? தன் குடும்பத்தினரை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கவே கூடாதா? ஒரு அரசு ஊழியனுக்கு ஒரு வருடத்திய ஊதியம் எவ்வளவோ அதனை பத்தாண்டுகளால் பெருக்கி வரும் தொகையைத்தான் அந்தந்த ஊர்களில் நிலத்தின் குறைந்தபட்ச அரசின் மதிப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு மேல் வாங்குபவர்கள் எவர் வந்தாலும் அதை ஏற்கக்கூடாது.. செய்யுமா அரசு? விடுவார்களா பணக்காரர்கள். நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்கள் வீடு 25 லட்சம் ரூபாய் பெறும் என்ன? பிறகு எங்கள் கதி? நாங்கள் தாம்பரத்தில் வீடு பார்த்து அங்கேயிருந்து விடியற்காலை கருக்கலில் எழுந்து அவதி அவதியாக கிளம்பி வேலைக்கு வர வேண்டும். பின் மீண்டும் இருட்டிய பிறகே வீடு போய்ச் சேர வேண்டும்.. என்ன வாழ்க்கை இது? என்ன அரசு இது? யோசித்துப் பாருங்கள்.. நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஆளும் அரசுகள் பணக்காரர்களுக்காக மட்டும்தான்.. ஏழைகளுக்காக அல்ல. இந்த லட்சணத்தில் நேற்று ஒரு எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்க வேண்டுமாம்.. என்ன கொடுமை இது? கேள்வி கேட்க வேண்டியவர்களே.. சுருட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால்.. இது எங்கள் தலைவிதி.. வேறென்ன சொல்வது?

  ReplyDelete
 2. nicely written article on Chennai. The same situation prevails in Coimbatore too. Realestate is too hot to touch but i see some CORRECTION EFFECT here after the bullish speculation trend.

  ReplyDelete
 3. சென்னையில் ரியல் எஸ்ட்டேட் விலையை பார்த்து அரண்டு போயிருப்பது என்னவோ உண்மை தான்...

  குழலி

  ReplyDelete
 4. sir

  your are telling the exact fact. please send it to top level policians who make the decisions ie. the fate of the nation.

  keep it your thoughts up.

  Dr.senthil kumar
  namakkal
  drpsenthil@rediffmail.com

  ReplyDelete
 5. இதில் புறவாசிகளை வில்லன்களாக்குவது தேவையில்லாதது.
  கட்டுமானத்துறை கடந்த 10 வருடங்களாக ஏறுமுகமாக இருப்பததற்குக் காரணம் என்ன ? அத்துறையில் இருப்பவர்களைக் கேட்டுப்பாருஙள். எவ்வளவு ஆயிரம் பேர் இதனை நம்பி உள்ளனர் ?

  //என்.ஆர்.ஐக்கள் தங்களது டாலர்களை இந்திய ரியல் எஸ்டேட்டில் போடுகிறார்கள். பலர் தமது வீடுகளில் யாரையும் குடிவைப்பதும் இல்லை.//

  எனக்குத் தெரிந்து பெரும்பாலான NRIகள் (middle class) தமது வீடுகளை வாடகைக்கு விடத்தான் செய்துள்ளனர். அப்படிச்செய்யாதவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவே.

  ReplyDelete
 6. *****முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள் வரி என்றும் முதல் வீட்டை விற்காமல் இரண்டாம் வீட்டை வாங்குபவருக்கு 15% முத்திரைத்தாள் வரி என்றும் செய்யலாம். ஆனால் இரண்டாம் வீட்டை வாங்கியபின் முதல் வீட்டை விற்கிறார் என்றால் அப்பொழுது 11% ஸ்டாம்ப் டியூட்டியைத் திரும்பப் பெறுமாறு செய்யலாம்.*****

  You dont even have to complicate the law like the above.
  If we enforce the buyer and seller to pay the right amount of tax, based on the 'actual cost' of the property, the buying frenzy will come to normal.

  People are transacting in 'cash', and 100% of the time, the tax paid is only 10% of what they should really pay.

  லஞ்சம் தலைவிரித்து ஆடும் இடங்களில், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம், முதன்மை வாய்ந்தது.

  இதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
 7. அபரீதமாக லோன் போட்டு வாங்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
  வீழ்ச்சி அடையும் போது வாங்கிய கட்னுக்கும் வீட்டு விலைக்கும் இழப்பு அதிகமாக இருக்கும்.
  மற்றபடி உங்கள் யோஜனையில் சில சரியாக வரும்.
  எங்களுக்கெல்லாம் ஒரு வீடு தானா? :-))

  ReplyDelete
 8. சென்னையில் மட்டுமல்ல! கோவையிலும் இப்படித்தான் கண்ணா பின்னாவென்று விலை உயர்ந்து வருகிறது!

  ReplyDelete