Sunday, April 29, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலையும்

நேற்று ஆஸ்திரேலியா தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் காண்பித்தார்கள். (இரவு 10.00-11.00 இந்திய நேரம். ஒவ்வொரு நாளும் ஓர் ஆவண நிகழ்ச்சி வருகிறது. கட்டாயம் பார்க்கவேண்டியவை.) ஷென்சென் SEZ-ல் நோக்கியா நிறுவனத்துக்கு பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் நிகழ்ச்சி.

ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருக்கும் இந்தத் தொழிற்சாலை ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானது. ஆனால் அங்கு மொத்தமாக இரண்டு ஐரோப்பியர்கள்தான் உள்ளனர். மீதம் உள்ள அனைவரும் சீனர்களே. வேலை செய்வது 90%க்கும் மேல் பெண்கள்.

அதிகாரபூர்வ குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணிக்கு 2.75 ரென்மின்பி. ஒரு நாளைக்கு ஓர் ஊழியர் 8 மணிநேரம் வேலை செய்யவேண்டும். ஒரு நாள் ஊதியம் 22 ரென்மின்பி. அதிகபட்சம் 2 மணிநேரம் ஓவர்டைம். ஆனால் ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தையும்விடக் குறைவுதான் ஊதியம். மாத ஊதியம் என்று கிடையாது. ஒரு நாளைக்கு 10 மணிநேரம், 12 மணிநேரம் என்ற கணக்கில் 26 நாள்களுக்கு என்ன ஊதியம் என்று கணக்கிட்டுக் கொடுக்கும் தின ஊதிய முறைதான். ஞாயிறு மட்டும்தான் விடுமுறை.

வேலையாள்கள் அனைவரும் அங்கேயே டார்மிட்டரியில் வசிக்கிறார்கள். ஓர் அறைக்கு எட்டு பேர். பெண்கள் தனியாக. ஆண்கள் தனியாக. அங்கேயே, கேண்டீனில் அவர்கள் கொடுக்கும் சாப்பாடுதான். மாதத்துக்கு, தங்குவதற்கு 120 ரென்மின்பி, சாப்பாட்டுக்கு 30 ரென்மின்பி என்று அவர்களே பிடித்துக்கொள்வார்கள். ஆக நியாயமாக ஊதியம் கொடுத்தாலே - மாதம் 25 நாள், நாளுக்கு 8 மணிநேரம் வேலை செய்வோர்க்கு - 550-150 = 400 ரென்மின்பிதான் கையில் கிடைக்கும்.

ஆனால் கொடுக்கப்படும் ஊதியம் அதைவிடக் குறைவு. வேலை நேரமும் அதிகம். மாதத்துக்கு கையில் 200 ரென்மின்பிதான் மிஞ்சும் என்கிறார்கள் பல பெண்கள். சாப்பாடு மோசம். ஆனால் பக்கத்தில் உணவகங்கள் கிடையாது. தொலைதூரம் சென்று உணவு வாங்கப்போனால் விலையோ வெகு அதிகம். (பல ஏக்கர்கள் கொண்ட SEZ-ல் தொழிலகங்களைத் தவிர வேறு ஏதும் இருக்காது.)

முதல் மூன்று மாதங்கள் probationary period என்று சொல்லி, முழுநேர வேலைக்காகும் ஊதியத்தைவிடக் குறைவாகவே கொடுக்கிறார்கள்.

ஊழியர்களுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஒப்பந்தம் இருந்தால் அதை மீறவேண்டிவரும் என்பதால் ஒப்பந்தமே செய்துகொள்ளவில்லை என்று 'வெளிப்படையாகச்' சொல்கிறார் ஊழியர்களின் நிர்வாகி.

வேலைக்கு தாமதமாக வந்தால் அபராதம். 5 நிமிடம் தாமதமாக வந்தால் அரைமணிநேர ஊதியம் கட்!

90% பேர் பெண்கள். அவர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள அரசின் பெர்மிட் இருந்தால் முதல் பிரசவத்துக்கு மூன்று மாதம் லீவ் கொடுக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது சட்டத்துக்குப் புறம்பானது! அப்படி ஆகும் பட்சத்தில் வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள்!

டார்மிட்டரியில் தண்ணீர், டாய்லெட் வசதிகள் மோசம்தான். (இந்தியத் தரத்தில்தான் உள்ளன...)

எந்தத் தொழிலாளரையும் கேள்விகள் ஏதும் கேட்காமல், பதில்கள் ஏதும் சொல்லாமல் வேலையை விட்டு நீக்கமுடியும்.

-*-

ஏன் இந்த ஊழியர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கப்படவில்லை, சரியான வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற கேள்விக்கு அதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பார்கள் என்ற பதில்தான் வருகிறது. லாபத்தைப் பெருக்க, ஊழியர்களுக்குச் செய்துதரவேண்டிய நியாயமான வசதிகளையும் குறைந்தபட்ச ஊதியத்தையும் கொடுக்காமல் இருக்கிறது SEZ-களில் நடத்தப்படும் தொழிற்சாலைகள்.

இது தனிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் நடத்தை மட்டுமல்ல. சீனாவின் சி.பொ.மண்டலங்களில் இருக்கும் பல/அனைத்துமே இப்படித்தான்.

இதே நிலைதான் இந்தியாவின் சி.பொ.மண்டலங்களிலும் நடக்கும் என்று நாம் கருதவேண்டிவருகிறது. அதுவும் இந்திய அரசு கவனமாக இந்த சி.பொ.மண்டலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏதும் நடைமுறையில் இருக்காது என்று சொல்கிறது. இதை நாம் எதிர்க்கவேண்டும். SEZ, அதன்மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என அனைத்தும் நமக்குத் தேவை என்றாலும் அவை எவற்றிலும் தொழிலாளர் விரோதப் போக்கு இருக்கவே கூடாது. அடிப்படையில் SEZ அனைத்துமே வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக எனும்போது எம்மாதிரியான வேலை வாய்ப்புகள் என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

[ஒரு ரென்மின்பி = 10 யூரோ ஒரு யூரோ = 10 ரென்மின்பி; ஒரு ரென்மின்பி = சுமார் ரூ. 5.30. அதிகபட்ச மாதச் சேமிப்பு இந்தப் பெண்களுக்கு ரூ. 1,000 தான் இருக்கும்.]

3 comments:

  1. >>ஒரு ரென்மின்பி = 10 யூரோ

    Badri, I think it's the other way around.

    ReplyDelete
  2. சீன ஜீன்ஸ்

    கிட்டத்தட்ட மேலே உள்ளதைப் போன்ற விஷயம்.

    ReplyDelete
  3. தொழிலாளர் நலச் சட்டங்களும் வேலை வாய்ப்பும்

    நமது நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 90 சதவீதம் உள்ளனர். அமைப்பு சார்ந்தவர்கள் 10% மட்டுமே. 100 பேர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பேக்டரி ஆக்ட் சட்டம் செல்லும். குறைந்த பட்ச சம்பளம், ESI, PF மற்றும் விடுப்புகள். இதை விட முக்கியமாக ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்க மிகக் கடினமான நடைமுறைகள் உள்ளன. சோம்பேறியானாலும், நேர்மையற்றவனானாலும், தகுதியற்றவனாய் ஆனாலும் அத்தொழிலாளியை வேலையை விட்டு அனுப்புவது மிகக் கடினம். அப்படியே சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.

    இதன் மொத்த விளைவாக, தொழிற்சாலைகள் புதியவர்களை எடுக்கத் தயங்குவார்கள். ஒப்பந்த முறைப்படி (contract labour) எடுப்படு பரவலாக உள்ளது. ரூ 3500க்கு 8 மணி நேரம் வேலை செய்ய பல்லாயிரம் பேர் தயாராக இருந்தாலும், சட்டத்திற்குப் பயந்து தொழிற்சங்கங்களுக்குப் பயந்து 10 பேர் செய்யும் வேலைக்கு பதில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தும் அவலம் உண்டானது.

    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடுமையான துன்பங்கள் போதிய வேலை வாய்ப்பின்மை, நிரந்தர வேலை கிடைப்பதில்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின், சங்கங்களின் குறுகிய நோக்கத்தால், சுய நலத்தால் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு மேலும் வேலை வாய்ப்பு பெருகாத நிலை உள்ளது.

    நாங்கள் ஒரு சிறு தொழிற்சாலை நடத்துகிறோம். அருகாமையில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலைக்கு ஜாப் வொர்க் செய்து தருகிறோம். அவர்களிடம் இருப்பது போல நவீன இயந்திரங்கள் எங்களிடம் இல்லை. இருந்தாலும் எங்கள் உற்பத்தித் திறன் (productivity) அவர்களை விட மிக அதிகம். செலவும் குறைவு. எனவே அவர்கள் மேலும் ஆள் எடுத்து உற்பத்தியைப் பெருக்காமல் எங்களைப் போன்ற ஜாப் வொர்க்கர்ஸுக்குக் கொடுக்கின்றனர். அந்தத் தொழிற்சாலையின் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் முறையாக, நேர்மையாக வேலை செய்வதில்லை. யாரையும் வேலையே விட்டு நீக்க முடியாததால் தங்கள் இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். மேலதிகாரிகளிடம் பயமோ, கீழ்ப்படிதலோ இல்லை. இவர்களின் பொறுப்பற்ற தன்மையினாலும் ஒழுக்கமின்மையினாலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. அல்லது அவை எங்களைப் போன்ற சிறு தொழிற்சாலைகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன. (எங்களிடம் சம்பளம், அவர்களை விட குறைவு. ஏனென்றால் அதுதான் கட்டுப்படியாகும்)

    இடது சாரிகளும் இச்சட்டங்களை மாற்ற எதிர்க்கின்றனர். யதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அரசாங்க ஊழியர்கள் பண்பு இதை விட மோசமானது. ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு பங்கு அரசாங்க ஆசிரியர்கள் (கிராமப் பள்ளிகளில்) பள்ளிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்க யாருமில்லை. வேலை போகும் பயமில்லை. தனியார் பள்ளிகளில் இந்நிலை இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கம் செலவு செய்தும் மாணவர்களுக்கு பயன் இல்லை. ஏன் இந்த நிலை? யோசியுங்கள்.

    http://nellikkani.blogspot.com/

    ReplyDelete