Thursday, April 19, 2007

குறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா?

[சுதேசி செய்திகள் ஏப்ரல் 2007-க்காக எழுதியது.]

சென்ற ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பங்களாதேசத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர் ஒரு பொருளாதார நிபுணர். இவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும்? போரில் ஈடுபட்ட இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட உழைத்தாரா? தன் நாட்டில் புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்களைச் சமாதானப்படுத்தி நல்வழிக்குக் கொண்டுவந்தாரா?

அப்படி ஏதும் இல்லை. கடுமையான வறுமையில் உழலும் பல கோடி மக்களுக்குக் கடன் கொடுத்து அவர்களில் பெரும்பாலானோரை ஏழ்மையிலிருந்து சற்றே மேலே தூக்கி விட்டுள்ளார். பங்களாதேச அரசியல் குழப்பம் மிகுந்தது. கடந்த இருபதாண்டுகளில்தான் குடியாட்சி முறை என்பதையே அந்த நாடு கண்டுள்ளது. ஆனாலும் பெரிய இரண்டு கட்சிகளுக்குள்ளாக வெட்டுப்பழி, குத்துப்பழி. அரசுத்துறை எங்கும் லஞ்ச லாவண்யம். (ஆமாம்! இந்தியாவைவிட மோசம்!) வேலை வாய்ப்பு இல்லாமை, வறுமை, உற்பத்திக் குறைவு. இப்படிப் பலப்பல.

இந்நிலையில் வறுமைக்கு அடிப்படைக் காரணம், பல மக்களுக்கும் தங்களை வறுமையிலிருந்து வெளியே எடுக்கத் தேவையான முதலீடு கிடைக்காமையே என்று யூனுஸ் நினைத்தார். தன் கைக்காசை கிராம மக்கள் சிலருக்கு, வட்டி ஏதும் கேட்காமல், பிணை ஏதும் கேட்காமல் கொடுத்தார். அதன்மூலம் கிராம மக்கள் குறுந்தொழில்கள் பலவற்றைச் செய்து இருவேளை உணவை வாங்கும் அளவுக்காவது சம்பாதிக்க முடியும் என்று கண்டுகொண்டார். ஆயினும் வங்கிகள் பணமற்ற ஏழைகளுக்கு கடன்கள் கொடுப்பதை விரும்பவில்லை. எனவே ஏழைகளுக்கு என்று தனியாக வங்கி ஒன்று இருப்பது அவசியம் என்று உணர்ந்து கிராமீன் வங்கி என்ற வங்கியை உருவாக்கினார்.

இன்று கிராமீன் வங்கியில் கடன் பெறும் உறுப்பினர்களாக 70 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். அதில் 67.7 லட்சம் பேர் பெண்கள்!

-*-

மைக்ரோ கிரெடிட் என்ப்படும் குறுங்கடன் முறை என்பது பல நாடுகளில் இன்று பரவியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வளரும் நாடுகளும், சில வளர்ந்த நாடுகளும்கூட இந்த வழியிலாவது தன் நாட்டின் ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள்.

இரண்டு விதமான குறுங்கடன் முறைகள் உலகில் பரவியுள்ளன. ஒன்று கிராமீன் வங்கியின் முறை. மற்றொன்று இந்தியாவில் பரவலாகக் காணப்படும் சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups - SHGs) முறை.

கிராமீன் வங்கி பெரும்பான்மையாக, பெண்களுக்கு மட்டுமே கடன்களைக் கொடுக்கிறது. பெண்கள்தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது ஒன்று; பெண்களுக்குக் கொடுக்கும் கடன் அந்தக் குடும்பத்துக்கே போய்ச்சேருகிறது என்பது மற்றொன்று. கடன் பெற விருப்பம் இருக்கும் பெண்கள், ஐந்து பேர் இருக்கும் குழுவை உருவாக்க வேண்டும். இந்தக் குழுவில் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் அந்தத் தலைவருக்குக் கடைசியில்தான் கடன் கிடைக்கும். முதலில் இருவருக்குக் கடன் கொடுத்து அவர்கள் ஒழுங்காகக் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்களா என்று பார்ப்பார்கள். அதன்பின் அடுத்த இரண்டு பேருக்கும் கடன் கொடுத்து அவர்களும் சரியாகத் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்றால் கடைசியாக அந்தக் குழுவின் தலைவருக்கும் கடன் கிடைக்கும்.

வங்கி கொடுக்கும் கடனை 'செலவழிப்பதற்கு' பயன்படுத்தக்கூடாது. மாறாக, பணம் கிடைக்கும் தொழில் ஒன்றில் முதலீடு செய்யவேண்டும். மாடு, ஆடுகளை வாங்கி வளர்ப்பது, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வீடு வீடாக விற்பது, கைவினைப் பொருள்களைத் தயாரித்து விற்பது என்று ஏதாவது ஒரு தொழில் செய்தாக வேண்டும். கடன் பெற்ற ஒரு மாதத்துக்குள்ளாக மாதத் தவணையாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மையம் இருக்கும். இந்த மையத்தில் கடன் உதவி பெறும் சில குழுக்கள் இருக்கும். ஒரு குழுவில் உள்ள ஓர் உறுப்பினர் ஏதாவது தவணையைக் கட்ட முடியாவிட்டால் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்கள் சேர்ந்து கடனை அடைக்க வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினர்களால் முடியாவிட்டால் அந்த மையமே சேர்ந்து தவணையைக் கட்டவேண்டும். இப்படியாக கடனை 'சமூக அழுத்தம்' (Social Pressure) மூலம் பெறுகிறது வங்கி.

கடன் கொடுப்பதுடன், சேமிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்துதல், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தல், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் (கருத்தடை முறைகளைப் பயிற்றுவித்தல்), புதிய குறுந்தொழில்களைக் கற்றுத்தருதல், சுகாதாரத்தைக் கற்றுத்தருதல் போன்ற பலவற்றிலும் கிராமீன் வங்கி ஈடுபடுகிறது.

பெரும்பாலும் கடன்கள் சில ஆயிரம் ரூபாய்களுக்குள்ளாக இருக்கும். இப்பொழுது வீடு கட்டுவதற்கு என்று சில பத்தாயிரம் ரூபாய் அளவிலும் கடன்கள் தருகிறார்கள். ஆனால் வீடுகள் கடன் பெறும் பெண்கள் பெயரில்தான் இருக்க வேண்டும்.

இந்தியாவிலும் கிராமீன் வங்கியைப் போன்ற நகல்கள் (Replicators) உள்ளன.

ஆனால் இந்தியாவிலேயே தயாரான மற்றொரு முறையும் உள்ளது. இவைதான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். இங்கு ஒரு வங்கி நேரடியாக உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஈடுபடுவதில்லை. மூன்று தனியான படிநிலைகள் உள்ளன. மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களை உருவாக்குகிறது. இந்த சுய உதவிக் குழுக்கள், கிராமீன் குழுக்களைப் போல் அல்லாது, 15 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்.

சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு முதலில் சேமிப்புப் பழக்கம் கற்றுத் தரப்படுகிறது. கிராமீன் முறையிலும்கூட ஒவ்வோர் உறுப்பினரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். ஆனால் இந்திய சுய உதவிக் குழுக்கள் முறையில் முதலில் சேமிப்பில்தான் ஆரம்பமே. அவ்வாறு சேமித்த பணம் ஒரு வங்கியில் கணக்கில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தாம் சேமித்த பணத்திலிருந்து குழு உறுப்பினர்களுக்குக் கடன் கொடுக்கலாம். அதற்கு மேலாக ஒவ்வொரு குழுவும் சேமித்திருக்கும் தொகையின் அளவைப் பொருத்தும், அவர்களது கடன் வரலாற்றைப் பொருத்தும் வங்கி அந்தக் குழு உறுப்பினர்களுக்கு மேற்கொண்டு கடன்களைத் தருகிறது.

இந்த முறையில் ஓர் அரசு வங்கி சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை நேரடியாக மதிப்பிடுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நம்பி உள்ளனர். தொண்டு நிறுவனம், தனது மதிப்பை நிலைநாட்டவும், மேற்கொண்டு குழுக்களை உருவாக்கவும் வசதியாக, கடன்களை அடைக்க ஆவண செய்கின்றனர்.

-*-

சுய உதவிக் குழுக்கள் முறையில் பல வங்கிகள், பல நூறு தொண்டு நிறுவனங்கள், பல்லாயிரம் சுய உதவிக் குழுக்கள், பல லட்சம் உறுப்பினர்கள் என்று வேகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கிராமீன் முறையில் உள்ளதுபோன்ற கட்டுக்கோப்பு இருக்காது. ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் அதிகபட்சம் ஓரிரு லட்சம் உறுப்பினர்களை மட்டுமே நிர்வகிக்க முடியும். ஸ்கேலிங் - பெரிதாகச் செய்வது என்பது முடியாது.

ஆனால் அதே நேரம் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட வங்கி வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

இரண்டு முறைகளிலுமே சில குறைபாடுகள் உள்ளன, சில ஆதாயங்கள் உள்ளன. இந்தியாவில் இரண்டு முறையுமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால் கிராமீன் வங்கி போன்ற ஓர் அமைப்பு இந்தியாவில் 'வங்கி' என்ற வரையறைக்குள் வராது. அது ஒரு Non Banking Finance Corporation - வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற வரையறையில்தான் வரும். இதனால் வைப்புத் தொகைகளைப் பெறுவது, சேமிப்புக் கணக்குகளை வைத்திருப்பது, குறைந்த வட்டியில் கடன் பெறுவது போன்ற பலவற்றில் பிரச்னைகள் உண்டு. வரும் காலங்களில் இதில் மாற்றம் ஏற்படலாம்.

-*-

குறுங்கடன் எந்த வகையில் நாட்டில் ஏழ்மையைப் போக்க முடியும்? அடிப்படையில் கிரெடிட் - கடன் என்பது கிடைத்துவிட்டால் ஏழ்மை போய்விடும் என்றால் குறுங்கடனால் ஏழ்மையைப் போக்குவது எளிது. ஆனால் பல நேரங்களில் மிகவும் ஏழையாக இருப்பவர்கள் குறுங்கடன் பெறுவது எளிதாக இல்லை. பணத்தைச் செலவழித்துவிட்டு தவணைகளைக் கட்ட முடியாதவர்கள் என்று நினைப்போரை சுய உதவிக் குழுக்களிலோ கிராமீன் குழுக்களிலோ சேர்க்க பிறர் விரும்புவதில்லை.

பலருக்குக் கடன் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரிவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு எப்படிப்பட்ட புதுமையான வழிகளில் தொழில்புரிவதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கற்றுத்தரவேண்டும். எனவே தொண்டு நிறுவனத்தின் திறனைப் பொருத்தே கடன்களின் பயன் தெரிய வரும். குறுங்கடன்கள்மூலம் தயாராகும் பொருள்கள் நாட்டின் பெரிய சந்தையை, முக்கியமாக மத்தியதர வர்க்கத்தினரைச் சென்று அடையுமா என்பது இன்றைய காலகட்டத்தில் சந்தேகமே. கிராமப்புறங்களில் மட்டுமே தாங்கள் தயாரித்த பொருள்களை (அல்லது சேவைகளை) விற்பதன்மூலம் இந்தச் சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்க்கைத்தரத்தை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும் என்று நிரூபித்தால்தான் குறுங்கடன் எந்த அளவுக்கு ஏழ்மையைப் போக்கும் என்று புரியும்.

குறுங்கடனால் நகர்ப்புற ஏழைகளுக்கு நல்ல வாழ்கையை அமைத்துத் தரமுடியும் என்றே தோன்றுகிறது. ஓர் அயர்ன்பாக்ஸும் தள்ளுவண்டியும், ஓர் எலெக்ட்ரிஷியனுக்குத் தேவையான உபகரணங்கள், ஒரு தையல் மெஷின், பொருள்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று விற்க உதவியாக தள்ளுவண்டி மற்றும் வொர்க்கிங் கேபிடலாகக் கொஞ்சம் பணம் என்று பலவகைகளில் குறுங்கடனைப் பயன்படுத்தலாம். பெரிய நகரங்களில் பெரிய சந்தையும் உள்ளது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தால் தனி மனிதர்களால் வருமானம் பெறமுடியும்.

ஆனால் கிராமப்புறங்களில் நேரடி விவசாயம் அல்லாத பிற தொழில்களைச் செய்வோருக்கு சரியான சந்தை கிடையாது. இந்தச் சந்தையைத் தயார்செய்வது கிராமப்புற வருமானத்தை வளர்த்த மிகவும் அவசியமாகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் இதனைச் செய்யமுடியுமா என்பது சந்தேகமே.

-*-

முகமது யூனுஸுக்குக் கிடைத்திருக்கும் நோபல் பரிசு, குறுங்கடன் மீது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலர், குறுங்கடன் வங்கிகள் முதலாளித்துவத்தின் கைக்கூலிகள், இதனால் ஏழைகளுக்கு நன்மை கிடையாது, அவர்களைக் கடனில் ஆழ்த்தும் திருகுதாளமே குறுங்கடன் என்கிறார்கள். பங்களாதேசத்தில் குறுங்கடன் பெற்றவர்களில் 50%க்கும் மேலானவர்கள் ஏழ்மையிலிருந்து மீண்டிருக்கிறார்கள் என்றால் மீதம் உள்ளோர் மீளவில்லையே என்கிறார்கள். (டம்ளரில் பாதி தண்ணீரா, பாதி வெற்றிடமா என்பதுபோல!) வேறு சிலரோ குறுங்கடன் நிறுவனங்கள் அதிகமாக வட்டி வசூலிக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள். கிராமப்புறங்களில் வட்டிக்கடைகள் எந்த அளவுக்கு வட்டி வசூலிக்கின்றன என்பதைப் பார்த்தால் குறுங்கடன் வட்டி அவ்வளவு மோசமில்லை.

எந்த முயற்சியையுமே எதிர்மறையாக விமரிசிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நேர்மறையாக, எப்படி இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் ஒரு முறையில் உள்ள குறைகளைக் களைந்து அதன்மூலம் ஏழைகளின் வாழ்வை உய்விக்க முடியும் என்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

1 comment:

 1. //குறுங்கடன்கள்மூலம் தயாராகும் பொருள்கள் நாட்டின் பெரிய சந்தையை, முக்கியமாக மத்தியதர வர்க்கத்தினரைச் சென்று அடையுமா என்பது இன்றைய காலகட்டத்தில் சந்தேகமே//

  Some high level views:

  Here is where the govt should step in and make things easier for both the ends.

  It can announce tax excemptions for those who buy the products made by the Micro credit member and also, like Khadikraft stores, the members can open stores and sell their products.

  On top of all, I think if they provide quality, the market will get better.

  -Raj Chandra

  ReplyDelete