Sunday, April 29, 2007

உலகக்கோப்பை: Cricket is dead, Long live Australia

அடுத்தடுத்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றுகிறது ஆஸ்திரேலியா. 1999-ல் பாகிஸ்தான். 2003-ல் இந்தியா. 2007-ல் இலங்கையின் முறை. ஒவ்வோர் எதிரணியும் அவமானப்பட்டு, சரியான பதிலடி கொடுக்கமுடியாமல், ஆஸ்திரேலியாவை நெருங்ககூடமுடியாமல் தோற்றுள்ளன. நெருக்கமான ஓர் ஆட்டத்தில், கடைசிக் கட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றால் மனத்துக்கு திருப்தி இருக்கும்.

1999-ல் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி 39 ஓவர்களில் 132-க்கு ஆல் அவுட். ஆட்டம் அங்கேயே முடிந்துவிட்டது. 2003-ல் முதலில் கில்கிறிஸ்டும், அடுத்து பாண்டிங்கும் இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்ததுமே, ஆட்டம் முடிந்துவிட்டது.

நேற்றும் அதே கதிதான். அதோகதிதான். சமிந்தா வாஸ் திடீரென ஸ்விங் போடுவதை மறந்துவிட்டாரா? புலி போல ஃபீல்டிங் செய்யும் இலங்கை வீரர்கள் கையில் படாமல் கேட்ச்கள் தள்ளித் தள்ளியே விழுந்தன. சில கேட்ச்கள் கையிலிருந்து நழுவின. முரளிதரனால்கூட அதிகமாக ஒன்றும் செய்யமுடியவில்லை. மலிங்கா, வழக்கத்துக்கு மாறாக, துல்லியமாகப் பந்துவீசினார். ஆனால் ஒரேயொரு பந்துவீச்சாளரை வைத்துக்கொண்டு என்ன செய்வது.

மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்படுவது இலங்கைக்குச் சாதகமாக இருக்கும் என்றே எண்ணினேன். ஆனால் கில்கிறிஸ்ட் வேறு மாதிரியாக நினைத்தார்.

ஓவருக்கு 7 ரன்னுக்கு மேல் என்பது எளிதான விஷயமல்ல. ஜெயசூரியாவும் சங்கக்காரவும் சேர்ந்து நன்கு விளையாடினாலும் அவர்கள் இருவரும் அவுட் ஆனால் அத்துடன் இலங்கை தோல்வி நிச்சயம் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. கடைசியில் அதுதான் நடந்தது. கடைசிவரை பார்க்கவில்லை. காலையில் எழுந்து முடிவை மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன். கடைசியில் குறைந்த வெளிச்சத்தில் ஏதோ குழப்பம் நிகழ்ந்துள்ளது; ஆனால் ஆஸ்திரேலியாதான் வெற்றிபெறப்போகிறது என்பதில் குழப்பம் ஏதும் இருக்கவில்லை.

இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்ககூடியவர்கள் உள்ளனர் என்றே பலரும் நினைத்தார்கள். நியூசிலாந்து செய்திருக்கும். இலங்கைகூடச் செய்திருக்கலாம். ஆனால் யாரும் அருகேகூட நெருங்கவில்லை.

கிரிக்கெட் உலகம் மிகவும் கஷ்டப்பட்டுதான் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றை உருவாக்கவேண்டியிருக்கும்.

1 comment:

  1. //இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்ககூடியவர்கள் உள்ளனர் என்றே பலரும் நினைத்தார்கள். நியூசிலாந்து செய்திருக்கும். இலங்கைகூடச் செய்திருக்கலாம். ஆனால் யாரும் அருகேகூட நெருங்கவில்லை//

    தென்னாப்ரிக்காவாலேயே முடியவில்லை, இலங்கையும் நியூசியும் எங்கே? ஏதோ ஒரு குருட்டு அதிருஷ்டத்தில் இங்கிலாந்து வேண்டுமானால் ஆஸியை ஜெயிக்கலாம். மற்றவர்களிடம் வலுவும் இல்லை, அதிருஷ்டமும் இல்லை.

    ReplyDelete