Wednesday, August 22, 2007

நெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மூன்று புத்தகக் கண்காட்சிகள் தமிழகத்தில் நடைபெற்றன. இவை மூன்றுமே சென்னைக்கு அடுத்து நல்லமுறையில் நிர்வகிக்கப்படும் கண்காட்சிகள்.

இவற்றுள் ஈரோடுக்கு இது மூன்றாவது வருடம்; மதுரைக்கு இரண்டாம் வருடம். நெய்வேலி பத்து வருடங்களைத் தொட்டுவிட்டது. நெய்வேலி கண்காட்சியை நடத்துவது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். ஈரோடு கண்காட்சியை நடத்துவது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு. மதுரை கண்காட்சியை நடத்துவது பபாஸி (BAPASI) எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் கூட்டமைப்பு. சென்னைக் கண்காட்சியையும் இதே அமைப்பே நடத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கோவையிலும் பபாஸி முதல்முறையாக ஒரு கண்காட்சியை நடத்தியது.

சென்னைக்கு அடுத்து ஈரோடு கண்காட்சிதான் கூட்டத்தை அதிகமாகத் திரட்டுவதிலும் விற்பனையிலும் முன்னிலையில் உள்ளது. கோவை, மதுரை கண்காட்சிகள் ஒருவகையில் ஏமாற்றத்தையே அளித்தன. கோவையில் கண்காட்சியைப் பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெகு சுமார். மதுரையில் சென்ற ஆண்டு மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

புத்தகக் கண்காட்சிகள் சில ஆண்டுகளாவது தொடர்ந்து ஓரிடத்தில் நடைபெற்றால்தான் மக்கள் மனத்தில் நிலைபெறும். அதைத் தொடர்ந்து கூட்டம் தானாகவே வரத்தொடங்கும். நகர மக்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாள்களில், இந்த இடத்தில் புத்தகங்கள் குவியல் குவியலாகக் கிடைக்கும் என்ற தகவல் முன்னதாகவே பரவியிருக்கும். கண்காட்சித் திடலுக்கு மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிடுவதற்காகவாவது கூட்டம் வரும்.

அடுத்து, புத்தகம் வாங்குவோர் மேற்கொள்ளும் முறைகளிலும் மாற்றம் இருக்கும். இதை இப்போது சென்னையில் மட்டுமே காணமுடிகிறது. சென்னையில் நிறைய வாசகர்கள் முதல் ஓரிரு நாள்களில் கண்காட்சிக்கு வந்து நோட்டம் விடுவர். பணம் என்பது குறைவாகவும் குறிப்பிட்ட அளவிலுமே உள்ளது. ஆனால் எதை வாங்கிப் படிப்பது என்று பார்த்தால் நிறைய. அதனால் முதல் சில நாள்களில் புதிதாக என்ன புத்தகங்கள் வந்துள்ளன, என்ன விலை ஆகியவற்றைப் பல வாசகர்கள் தீர்மானித்து பின் கடைசி இரண்டு நாள்கள் வந்து விரும்பிய, அதே சமயம் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால் மதுரை, ஈரோடு போன்ற இடங்களில் வாசகர்கள் அந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றவர்களாகத் தெரியவில்லை. நேரடியாக வந்து கண்ணில் படும் முதல் சில கடைகளில் பார்ப்பதை வாங்கிவிட்டு உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். இதனால் பல சிறு பதிப்பாளர்கள், அல்லது கண்காட்சி வளாகத்தில் இடைப்பட்ட பகுதியில் (ஆரம்பத்தில் அல்லாமல்) மாட்டிக்கொள்பவர்கள் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. வாசகர்களுக்கும் இதனால் பாதிப்புதான். நல்ல பல புத்தகங்கள் அவர்களது பார்வைக்கே படாமல் போய்விடுகின்றன.

கண்காட்சி நிர்வாகிகள் வேறு பல விஷயங்களையும் கவனிக்கவேண்டும். மதுரையில் பத்து நாள் கண்காட்சியில் முதல் நாள் மாலை 6 மணிவரையில் வாசகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள், சோனியா காந்தி கொடி அசைத்து ரயிலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பியதால் மதுரையே பாதுகாப்பு வளையமாக்கப்பட்டு மக்கள் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நடுநடுவே விட்டுவிட்டுப் பெய்யும் மழையும் ஆதரவாக இல்லை.

இவற்றையெல்லாம் சமாளிப்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் முடியாத காரியம். ஆனால் அதற்கு ஏற்றார்போல மேலும் ஓரிரு நாள்கள் இருக்குமாறு கண்காட்சியை நடத்தலாம். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் 11 நாள்கள் கண்காட்சி நடக்கிறது. தொடக்க விழா போன்றவை கண்காட்சி தினங்களை பாதிக்காதவாறு ஒரு நாள் முன்னதாகவே அமைத்து, 1+11 நாள்கள் என்று நடத்தலாம். இதனால் திடல் வாடகை, மின்சாரம் போன்ற செலவுகள் சற்றே அதிகரித்தாலும் அவற்றை பங்குபெறும் கடைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மதுரை கண்காட்சியில் முதல் நாள் முற்றிலுமாக இழக்கப்பட்டு மொத்தம் கிடைத்தது 9 நாள்கள் மட்டுமே. அதிலும் சோனியா காந்தி, மழை, 'சுமாரான புரோமோஷன் மட்டுமே' ஆகியவை சேர்ந்து பல விற்பனையாளர்கள் சோகத்தில் காணப்பட்டனர்.

===

பபாஸி செயற்குழுவில் பங்கெடுக்கும் அனைவரும் தத்தம் பதிப்புத் தொழிலையும் மேற்பார்வை பார்க்கவேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது புதிதாக ஒவ்வோர் ஊரிலும் ஒரு கண்காட்சியை நிகழ்த்திக்காட்டுவது பெரும் சிக்கலான ஒரு விஷயம். நேர விரயம் அதிகமாகும். தனது தொழிலையும் சரியாகக் கவனிக்கமுடியாது. எனவே கூடிய விரைவில் இந்த அமைப்பு ஒரு புரொஃபஷனலான செயலாளர்களை நியமிக்க வேண்டியிருக்கும். பபாஸி ஆண்டுக்கு தனது உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்கிறது. அதனை அதிகரிக்கலாம். கிடைக்கும் பணத்தில் ஒரு முழுநேர CEO, அவருக்குக் கீழே பணியாற்ற நான்கைந்து முழுநேர ஊழியர்கள் ஆகியோரை வேலைக்கு அமர்த்தலாம்.

இந்த executives அனைவரும் காலாண்டுக்கு ஒரு பெரு நகரம் (சென்னை, மதுரை, கோவை, திருச்சி) என்றும் பிற எட்டு மாதங்களில் முக்கியமான எட்டு நகரங்களிலும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து, நடத்தித் தரவேண்டும். நெய்வேலி, ஈரோடு போன்ற நகரங்களில் பிற அமைப்புகள் நன்றாகவே கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதால் அங்கி பபாஸி தனது ஆதரவையும் புரோமோஷனல் உதவிகளையும் செய்தால் போதும். தமிழகத்தில் எந்த ஊரில் புத்தகக் காட்சி நடந்தாலும் அதற்கு பபாஸி எந்த வகையில் உதவி செய்யலாம் என்பதையும் பார்க்கவேண்டும். தகவலைப் பரப்புவது, பபாஸி உறுப்பினர்கள் ஸ்டால்களை எடுத்துக்கொள்ள உதவுவது, பிற மாநில அமைப்புகளுக்குத் தகவல்களை அளித்து அங்கிருக்கும் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களை வரவேற்பது போன்றவற்றை பபாஸி திறம்படச் செய்யலாம்.

===

செப்டெம்பர் இறுதியில் பெங்களூருவிலும் தொடர்ந்து திருச்சியிலும் புத்தகக் கண்காட்சிகள் நடக்க உள்ளன.

அக்டோபர் மாதத்தில் ஃபிராங்ஃபர்ட்டில் புத்தகப் பதிப்பாளர்கள் பங்கெடுக்கும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாண்டிச்சேரி, சேலம் போன்ற இடங்களில் கண்காட்சிகள் நடைபெறும்.

ஜனவரியில் சென்னையில்.

மேலும் பல ஊர்களிலும் சிறுசிறு கண்காட்சிகள் நடைபெறலாம்.

2 comments:

  1. ஈரோடுக்கு -- > ஈரோட்டுக்கு

    ReplyDelete
  2. பத்ரி, புத்தகக் கண்காட்சிகள் பற்றிய விரிவான பதிவிற்கு நன்றி. இந்த முறை மதுரை புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் கண்காட்சியின் உள்ளே செல்லும் வழி மாற்றி விடப் பட்டதா எனத் தெரியவில்லை. இந்த வருடம் மதுரை புத்தகக் கண்காட்சி சென்ற வருடத்தை விட சுமார் ஒரு மாதம் முன்னதாகவே வந்துவிட்டது.சென்ற வருடம் மழையால் விற்பனை பாதிப்பு இல்லை என்றே ஞாபகம். நிச்சயம் புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் காலையிலிருந்தே மக்கள் வாங்க வாய்ப்பளிக்க வேண்டும். வேண்டுமெனில் தொடக்க விழாவை ஒரு நாள் முன்னதாக வைக்க கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சிக்கலாம்.

    ReplyDelete