பாகிஸ்தானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், அண்டை நாடுகளுடனான பிரச்னைகள், தீவிரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றோடு மதம் கொடுக்கும் உளைச்சல்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பாகிஸ்தானின் தீவிரவாதப் பிரச்னையில் மதத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. இஸ்லாம் என்ற பெயரால்தான் பாகிஸ்தானே உருவானது. ஆனால் அப்பொழுதைய பாகிஸ்தானிய இஸ்லாம், பிரிக்கப்படாத இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையைக் கண்டு அஞ்சி, தம் மக்களுக்கு என்று ஒரு தனி வாழ்விடத்தைப் பெற முனைந்த அரசியல் இஸ்லாம்.
ஆனால் இன்றைய பாகிஸ்தானின் இஸ்லாம் பெரும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது. ஜியா-உல்-ஹக் காலத்தில் ஆஃப்கனிஸ்தானில் சண்டை போட முஜாஹிதீன் வீரர்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டார்கள். காஷ்மீரில் புனிதப்போர் புரிய மதச்சத்து ஊட்டப்பட்ட போராளிகள் உருவாக்கப்பட்டார்கள். கான்கிரீட் மசூதிகள், சவூதி அரேபியப் பணத்தில் தெருவுக்குத் தெரு முளைத்தன. மதரசாக்களிலிருந்து தாலிபன்கள் கிளம்பினார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தனது சொந்தக் காரணங்களுக்காக ஜியா-உல்-ஹக் கிளப்பிவிட்டார். எல்லா நாடுகளிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ன கேட்பார்களோ அதையேதான் பாகிஸ்தானிலும் கேட்கிறார்கள். சவூதி அரேபியா, தாலிபன்களின் கையில் சிக்கிய ஆஃப்கனிஸ்தான் - இதுதான் அவர்களது விருப்பம். இஸ்லாமிய நாடு என்றால் வெறும் ஷரீஅத் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல, சில கருத்துகளில் மாறுபாடு என்பது கூடவே கூடாது என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்.
பெண்கள் கல்வி, சமூகத்தில் பெண்கள் நிலை, பெண்கள் வேலை வாய்ப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், குற்றங்களுக்கான தண்டனைகள், ஓர் ஆண் வைத்திருக்கும் தாடியின் நீளம், கேளிக்கைகள் இருக்கலாமா-கூடாதா என்று பல தளங்களில் அடிப்படைவாதிகள் கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள்.
பாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடா, அல்லது இஸ்லாமிய நாடா? பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா? இதற்கான விவாதம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டும்.
9/11-க்கு முன்புவரை பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்கும் அங்குள்ள மத அடிப்படைவாதிகளுக்கும் இடையே பெரும் பிரச்னை இருந்ததாகத் தெரியவில்லை. இந்தியா மீதான வெறுப்பை இருவரும் சேர்ந்தே வளர்த்தனர். ஆஃப்கனிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பை இருவரும் சேர்ந்தே ஆதரித்தனர்.
ஆனால் 9/11-க்குப் பிறகு இந்நிலையில் பெரும் மாற்றம். அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானைத் தாக்கப் போகிறது என்ற நிலையில் முஷரஃப் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டார். பாகிஸ்தானின் மத அடிப்படைவாதிகள் தங்களது அரசாங்கத்துக்கு எதிராக, தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் ஆதரவளித்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் லாஹூரின் சிகப்பு மசூதியின் அப்துல் ரஷீத் காஸி.
காஸியின் தலைமையில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமான மதப் பள்ளி நடைபெற்றது. இந்தப் பெண்களும் ஆண்களும் சட்டத்தைத் தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்டு லாஹூரில் புகுந்து விளையாடினர். 'கெட்ட காரியம்' செய்யும் பெண்கள் சிலரைச் சிறைப்பிடித்து தண்டித்தனர். கையில் கம்புகளுடன் முகம் மறைத்த புர்க்காவுடன் இளம்பெண்கள் இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சியான ஒரு விஷயம். முஷரஃப் பல மாதங்கள் பொறுத்திருந்து கடைசியில் ராணுவத்தை அனுப்பி, காஸியையும் அவரது தோழர்கள் சிலரையும் பரலோகத்துக்கு அனுப்பினார்.
ஆனால் இந்தப் பிரச்னை காஸியோடு முடிந்துவிடப்போவதில்லை.
மதவாதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முஷரஃபைத் தீர்த்துக்கட்டவேண்டும் என்று அல் காயிதா அழைப்பு விடுத்துள்ளது. வாசிரிஸ்தானில் தாலிபன்கள் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தலைவலியைத் தந்தவண்ணம் உள்ளனர். முஷரஃபுக்கு பேநசீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் இருவரிடமிருந்தும், மறுபக்கம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியிடமிருந்தும் குடைச்சல்கள் வந்தவண்ணம் உள்ளன.
ராணுவம் ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு முஷரஃபுக்கு ஆதரவு. அந்த ஆதரவும் எப்பொழுது வேண்டுமானாலும் விலக்கிக்கொள்ளப்படலாம். இந்நிலையில் அடுத்த மாதமே ஒரு 'ஒப்புக்கான' தேர்தலை வைத்து ராணுவ உடையுடனே அதிபராகத் தனது பதவியை நீட்டிப்பது என்று முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
அப்படி ஒரு தேர்தல் நடந்தால், அந்தத் தேர்தல் உச்ச நீதிமன்றத்தில் வழக்காகப் போகும். அப்பொழுது இஃப்திகார் சவுதுரி என்ன செய்வார், எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், தாலிபன்களும் மத அடிப்படைவாதிகளும் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.
பழைய பதிவுகள்:
பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா
பாவம் முஷரஃப்!
மீன்களின் நடனம்
55 minutes ago
//ராணுவம் ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு முஷரஃபுக்கு ஆதரவு//
ReplyDeleteஅப்பாவி மக்களுக்கு யார் ஆதரவு. பாக்கிஸ்தானில், அப்பாவிப் பொதுமக்களின் நிலைதான் பரிதாபகரமானதாக உள்ளது - caught between devil and the deep sea.
//
ReplyDeleteபாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடா, அல்லது இஸ்லாமிய நாடா? பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா? இதற்கான விவாதம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டும்.
//
அதை பாக்கிஸ்தானியர்கள் தான் செய்யவேண்டும். இதைத்தான் அத்வானி பாகிஸ்தான் போய் சொன்னார் (albeit in a different way). அதற்காக வாங்கிக் கட்டிக் கொண்டார்.