ரிச்சர்ட் டாக்கின்ஸ் 1976-ல் வெளியிட்ட புத்தகம் The Selfish Gene - சுயநலம் கொண்ட மரபணு, நான் சமீபத்தில் படித்த புத்தகம்.
பரிணாம வளர்ச்சிக் கொள்கையை சார்ல்ஸ் டார்வின், வாலேஸ் ஆகியோர் வெளியிட்டபின்பு, உயிரிகளை ஆராய்ந்து அவை எப்படித் தோன்றியிருக்கும், எப்படி ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்திருக்கக்கூடும் ஆகியவை பற்றி நன்கு தெளிவான சிந்தனைகள் இன்று அறிஞர்களிடையே நிலவுகிறது. இந்தச் சிந்தனைகள் மதங்களின் அடிப்படையை ஆட்டிப்படைக்கின்றன.
உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றின? உயிர்களின் உச்சமான மனிதன் எப்படித் தோன்றினான்? இந்த மனிதனை உருவாக்கிய 'கடவுள்' இந்த மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்கிறான்? இந்த கேள்விகளுக்கு ஆதிகாலம் தொட்டே மனிதர்கள் விடைகாண முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான விடை கடவுளின் இருப்பையே கேள்வி கேட்க வைத்துள்ளது.
[டாக்கின்ஸின் இந்தப் புத்தகம் கடவுளை நேரடியாக வம்புக்கு இழுக்கவில்லை. அவரது மற்றொரு புத்தகம் 'The God Delusion' அதனைச் செய்கிறது.]
பூமிப் பரப்பில் இருந்த வேதித் திரவத்தில் (primeval soup) திடீரென தன்னைத்தானே நகலாக்கும் ஒரு வேதிப்பொருள் உருவானது. அது தன்னைச் சுற்றி இருக்கும் வேதித் திரவத்திலிருந்து தன் நகல்களாகப் பலவற்றை உருவாக்கியது. நாளடைவில் இதேபோன்று தன்னைத்தானே நகலாக்கும் பல வேதிப்பொருள்கள் உருவாயின. இவை ஒன்றோடு ஒன்று போட்டி போட, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து ஒரு செல் உயிரினங்களாகவும், அங்கிருந்து பல செல் உயிரினங்களாக - தாவரங்களாக, விலங்குகளாக - மாற்றமடைந்து, இன்று நாம் உலகில் காணும் பல்வேறு உயிரினங்களும் தோன்றின என்பது தியரி.
பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது டார்வின் Natural Selection - இயற்கைத் தேர்வு என்பதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஏகப்பட்ட உயிரினங்களில் பல முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன. இடையிடையே பல புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. பல ஆரம்ப காலம் முதற்கொண்டு இன்றுவரை உயிர்வாழ்ந்து வருகின்றன. எந்தெந்த உயிரினம் வாழும், எது அழியும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? இயற்கை என்கிறார் டார்வின்.
ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உள்ளாகவே சில இயல்புகளை அதிகமாகக் கொண்ட தனி உயிர்கள் (individuals) உயிர்தப்ப நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த உயிர்கள் உருவாக்கும் குழந்தைகளே அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றன.
டாக்கின்ஸின் அடிப்படைக் கொள்கை இதுதான். ஓர் உயிர் - விலங்கோ, தாவரமோ - வெறும் கருவிதான். அந்த உயிர் பல மரபணுக்கள் (genes) இணைந்த டி.என்.ஏவால் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றும் தங்களது நகல்களை எப்படியாவது தோற்றுவித்து அவை இந்த உலகில் தொடர்வதை விரும்புகின்றன. தன்னை முன்னிறுத்துவது, பிறர் அழிந்தாலும் பரவாயில்லை, தான் நகலாக்கம் பெறவேண்டும் என்று அவை நினைக்கின்றன. ஆனால் அதே சமயம் தமக்கு அதனால் ஆதாயம் என்றால் அவை பிற மரபணுக்களுடன் ஒத்துழைக்கத் தயங்குவதில்லை. சில மரபணுக்களுடன் ஒத்துழைத்து அவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்குவதே ஓர் உடல். தாவர/விலங்கு உடலை டாக்கின்ஸ் survival machine என்கிறார். மரபணுக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்த இயந்திரங்களைத் தயாரிக்கின்றன.
ஆனால் ஒரு மரபணுவின் அடிப்படை நோக்கம் தான் மட்டும் எப்படியாவது காலம் காலமாகத் தொடரவேண்டும் என்பது மட்டும்தான். தொடர்வது என்றால் தன்னை அப்படியே நகலாக்கி அந்த நகலைப் பரப்புவது. பெரும்பாலான உயிர்களில், பால் இனப்பெருக்கம் வாயிலாக மரபணுக்கள் மாறி மாறிக் கூட்டுச்சேரும் நிலை ஏற்படுகிறது.
மரபணுக்கள் சுயநலத்தோடு செயல்படுகின்றன என்றால் அவை சிந்தித்து அவ்வாறு செயலாற்றுகின்றன என்று பொருள் கிடையாது. அப்படியாக நடந்துகொள்வது அவற்றின் குணத்தில் எழுதப்பட்ட ஒன்று.
0
ஆராய்ச்சியாளர்களுக்கென எழுதப்பட்டதல்ல இந்தப் புத்தகம். பாபுலர் சயன்ஸ் என்னும் வகையைச் சார்ந்தது. ஆனாலும் படித்துப் புரிந்துகொள்ள நிறைய நேரம் தேவைப்படுகிறது.
டார்வினின் கொள்கை, கேம் தியரி எனப்படும் கணிதம் ஆகியவற்றைக் கொண்டு இன்று உலகின் நாம் காணும் பல புதிர்களை டாக்கின்ஸ் அழகாக விளக்குகிறார்.
படிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டம் என்றாலும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்களில் இது ஒன்று.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
தன்னை முன்னிறுத்துவது, பிறர் அழிந்தாலும் பரவாயில்லை, தான் நகலாக்கம் பெறவேண்டும் என்று அவை நினைக்கின்றன. ஆனால் அதே சமயம் தமக்கு அதனால் ஆதாயம் என்றால் அவை பிற மரபணுக்களுடன் ஒத்துழைக்கத் தயங்குவதில்லை.
ReplyDelete>>>>
If I remember correctly, Darwin's explanation was that "the species that adapts itself survives rather than the strongest species."
Probably the DNAs of such species' have these characteristic?
Interesting topic.
Anything and everything to counter "Intelligent Design" is a good topic :)
Last week's TIME article on
Mother Teresa may interest you, if you haven't read already.(Not directly related though)
http://www.time.com/time/world/article/0,8599,1655415,00.html
-Pari
Darwin was talking in terms of species. Dawkins however projects that to the genes, and that the survival instinct is coded into these genes. Genes here represent a part of the chromosomes, part of the DNA that is always together during the meiotic cell splitting.
ReplyDeleteஅதாவது உயிரின அளவில் பேசாமல் டி.என்.ஏ அளவில் பேசாமல், அதற்கும் அடியில் மரபணு அளவில் 'சுயநலம்' இருப்பதாகச் சொல்கிறார் டாக்கின்ஸ்.
மதர் தெரசா டைம் கட்டுரை முன்னமே படித்துவிட்டேன். (கிறிஸ்டோபர் ஹிட்சின்ஸின் God is Not Great கூட வாங்கி வைத்துள்ளேன், அடுத்து படிக்க. அதற்கு முதலில் The God Delusion படிக்கவேண்டும்.)
Dear Badri sir,
ReplyDeleteAny idea to translate Dawkin's books into Tamil??
I am reading your old posts now only...that why a very late comment..
But Please sir, consider this request..
Regards,
GIRI