Sunday, September 16, 2007

காந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு

ராமச்சந்திர குஹாவின் மேக்னம் ஆபஸ் 'India After Gandhi'. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காகவே தான் பிறந்திருப்பதாக அவர் நினைக்கிறார்.

சுதந்தர இந்தியாவின் சமகால வரலாற்றை சுமார் 700 பக்கங்கள், எக்கச்சக்கப் பின்குறிப்புகள் என்று எழுதியுள்ளார். சோர்வடையாமல் படிக்கத்தூண்டும் எழுத்து நடை.

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்திருக்கும் அனைத்தையும் எளிதாக ஒரு புத்தகத்தில் சொல்லிவிடமுடியாது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்தையும் தொட்டுவிடுகிறார்.

அவரது சில அவதானிப்புகள் புத்தகத்துக்கு மேலும் வலிமை சேர்க்கின்றன.

இந்தியா என்ற நாடே ஒருவித அபத்தமான பரிசோதனை என்றும் எவ்வளவு விரைவில் இந்த நாடு துண்டாகிப் போகும், அல்லது குடியாட்சி முறையிலிருந்து நழுவி ராணுவத்தின் கையில் விழும் என்றும் பல மேலை நாட்டு சமூக விஞ்ஞானிகள் பேசிவந்தனர்.

ஆனால் இந்தியா எவ்வாறு தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது?

முதல் காரணம் இந்தியாவின் தேர்தல் ஆணையம். இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் தேர்தலை முடிந்தவரை நடுநிலையாக நடத்தி முதல் 15 ஆண்டுகளில் சாதனை படைத்தது இந்த அமைப்பு. பின்னர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த எமர்ஜென்சி கொடுமைக்குப் பிறகு இப்பொழுது தேர்தல் ஆணையம் மீண்டும் தன் இடத்தை வலுவாக்கிக்கொண்டுள்ளது.

அடுத்ததாக மொழிவாரி மாகாணங்கள் பிரிவினை. அந்தக் காலகட்டத்தில் நேரு மொழிவாரி மாகாணத்தைக் கடுமையாக எதிர்த்தாலும், பின்னர் பெரும்பான்மை முடிவை ஏற்றுக்கொண்டார். இதனால் ஒவ்வொரு மொழிக்குழுவினருக்கும் தனி வெளி கிடைத்தது. இல்லாவிட்டால் ஒவ்வொரு மாகாணத்திலும் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும்.

கடைசியாக சமீப காலங்களில் மத்தியில் நிலையான ஒரு கட்சி ஆட்சி அமைய முடியாத காரணத்தால் ஏற்பட்டிருக்கும் கூட்டாட்சி (Federalism) முறை, பிரிவினை சக்திகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை வலுவாக்கியுள்ளது.

இந்தியா உதிர்ந்துபோகாமல் இருக்க மேற்கண்டவையே காரணங்கள் என்கிறார் குஹா.

இத்துடன் மேலும் சிலவற்றையும் சொல்லலாம். ராணுவம் உள்ளாட்சியில் ஈடுபடாமல் இருந்தது; வலுவான அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது; எமெர்ஜென்சி காலகட்டத்தில் நாடு முழுதும் ஏற்பட்ட வலுவான எதிர்ப்பும், தொடர்ந்த இந்திராவின் தோல்வியும்.

குஹா பொருளாதாரம் தொடர்பாக அதிகம் பேசவில்லை. திட்டக்குழு, பஞ்சம், பசுமைப் புரட்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசினாலும் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் புரட்சி பற்றி தீவிரமாக ஒன்றையும் சொல்லவில்லை.

இந்தியா எதிர்கொண்டிருக்கும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பிரச்னை, மாவோயிஸ்டுகள் தொல்லை ஆகியவற்றைப் பற்றி சொல்லும்போது வடகிழக்கு பற்றி நல்ல அறிமுகத்தைத் தருகிறார்.

-*-

இப்பொழுது நடக்கும் பத்தாண்டில்தான் இந்தியா தன்னம்பிக்கையோடு உலகை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. ஏழைமை, மதக் கலவரங்கள், தீவிரவாதம் (மாவோயிஸப் போராளிகள், அந்நிய சக்திகள் ஆகியவை சேர்த்து), பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைத் தகராறு ஆகியவை முக்கியமான பிரச்னைகள். இதில் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டியது அனைத்து மக்களுக்கும் போய்ச்சேரவேண்டிய அடிப்படை வசதிகள் - கல்வியோடு சேர்த்து. இதைச் செய்துகாட்டினாலே பிற பிரச்னைகளை வெகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் இப்பொழுதுதான் அவற்றை எதிர்கொள்ளமுடியும், தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியும் அந்த வளர்ச்சி கொடுத்துள்ள தன்னம்பிக்கையுமே இதற்குக் காரணங்கள்.

கடந்த ஆறு பத்தாண்டுகளில் பொதுமக்கள் புலம்புவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தனர். இனியாவது புலம்புவதை விடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளாக மக்கள் மாறவேண்டும். அதற்கு சமகாலத்தைய வரலாற்றை அறிவது அவசியமாகிறது. அந்த வகையில் குஹாவின் புத்தகம் அனைவராலும் படிக்கப்படவேண்டியது.

4 comments:

 1. I have no doubt that if British governments had been prepared to grant in 1900 what they refused in 1900 but granted in 1920; or to grant in 1920 what they refused in 1920 but granted in 1940; or to grant in 1940 what they refused in 1940 but granted in 1947 - then nine-tenths of the mistery, hatred, and violence , the imprisonings and terrorism, the murders, flogging, shootings, assassinations, even the racial massacres would have been avoided; the transference of power might well have been accomplished peacefuly, even posibly without partition.

  - Leonard Woolf,1967

  புத்தகத்தில்..மேலே குறிப்பிட்டள்ளது போன்ற மேற்கோள்கள் படிக்க சுவராசியமாக இருந்தன.

  இந்தப்புத்தகத்தை எழுதுவதற்கு Nehru Memorial Library இல் 47 வருடங்களாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் PN Haksar, (Principal Secretary to Prime Minister Indira Gandhi) அவர்களின் குறிப்புகள் முதல் முறையாக ராமச்சந்திர குஹா அவர்களுக்குக் கிடைத்ததாகப் படித்தேன்.

  http://www.ibnlive.com/news/govt-keeping-indias-political-past-a-secret/44914-3-1.html

  ReplyDelete
 2. ஹக்ஸரைத் தொடர்ந்து வந்த பி.என்.தார் எமெர்ஜென்சி பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கொஞ்சம் சுய வரலாறு, மீதம் எமெர்ஜென்சி பற்றி. அதில் கொஞ்சம் உபயோகமான விஷயம், மீதி வழவழா கொழகொழா.

  இந்த ரகசியமான பேப்பர்கள் வெளியே கிடைத்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். பி.என்.டாண்டன் என்பவர் - இவரும் செக்ரடேரியட்டில் ஹக்ஸர் காலத்திலும் அடுத்து பி.என்.தார் காலத்திலும் வேலை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி - தனது டயரிக் குறிப்புகளை எழுதியுள்ளார்.

  இரண்டையும் படித்துள்ளேன்.

  ReplyDelete
 3. நன்றி...இதைப் பற்றி நியூ யார்க் டைம்ஸில் படித்தேன். வாங்க வேண்டும்.

  தமிழுக்குக் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா?

  ReplyDelete
 4. Just ordered from Amazon. Thanks for sharing.

  -Pari

  ReplyDelete