Thursday, September 20, 2007

அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காணச் செய்யும்


நேற்று (19 செப்டெம்பர் 2007) இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், மேக்சேசே விருதுபெற்ற பி.சாயிநாத்தைப் பாராட்ட விழா ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்ட சாயிநாத், "அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காணச் செய்யும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முழுப் பேச்சையும் (ஆங்கிலம்) இத்துடன் ஒலிப்பதிவாக இணைத்துள்ளேன்.

1992-லிருந்து தொடங்கி இன்றுவரையிலான 15 வருடங்களில் இந்தியாவின் மேல்மட்டத்துக்கும் அடிமட்டத்துக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகரித்திருப்பதாகச் சொன்னார்.
ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக ஆறு விஷயங்களை அவர் முன்வைத்தார். அவை:
 1. ஏழைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான துறைகளிலிருந்து (தண்ணீர் வழங்குதல், கழிவுநீர் அகற்றல், கல்வி, அடிப்படைச் சுகாதாரம்) அரசு பின்வாங்குவது.
 2. வளர்ச்சிப் பணிகள், நலப் பணிகளுக்கான பட்ஜெட் வெகுவாகக் குறைக்கப்படுதல்.
 3. கிட்டத்தட்ட ("அறிவிலிருந்து ஆன்மா வரை!") அனைத்தையுமே தனியார்மயமாக்குவது.
 4. பணமே செலுத்தமுடியாத மக்கள்மீது பயனர் கட்டணத்தை விதிப்பது.
 5. ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் மான்யத்தை நீக்குவது.
 6. நிறுவனங்களின் அதிகாரம் வரைமுறையின்றி அதிகமாவது.
ஏற்றத்தாழ்வு என்றால் என்ன என்பதை ஏகப்பட்ட புள்ளிவிவரங்களோடு விளக்கினார். எந்த வகையில், கடந்த 15 வருடங்களில் கீழ்மட்ட 40% மக்கள் அடைந்திருக்கும் துன்பம் அதிகமாயுள்ளது என்று நேரடி அனுபவங்கள் மூலம் விளக்கினார்.

கடைசியில், நீரோ மன்னன் ரோம் நகரத்தின் உயர்மட்டத்தினர், அறிவுஜீவிகள் போன்றோருக்கு ஒரு விருந்து வைத்தபோது ஒளிப்பந்தத்துக்காக சிறைகளில் உள்ளவர்களை எரியவைத்ததைச் சுட்டிக்காட்டி, நீரோவைவிடவும் மோசமான மன்னர்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் நீரோவின் விருந்துக்குச் சென்ற அறிவுஜீவிகளின் மனநிலை - சுற்றிலும் கைதிகள் எரியும்போது, தாங்கள் மட்டும் சற்றும் கவலைப்படாது விருந்து உண்ணுவது - எப்படியிருந்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, இன்று நம்மைச் சுற்றிலும் ஏழை விவசாயக் குடும்பங்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும்போது அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாது இருக்கும் நமது மனநிலையை அத்துடன் ஒப்பிட்டு பேச்சை முடித்தார்.

எப்படி நமது மனநிலையை மாற்றிக்கொள்வது என்ற கேள்வி (கேள்வி-பதில் நேரத்தில்) எழுந்தது. மேலே சொன்ன அந்த ஆறு விஷயங்களையும் கடுமையாக எதிர்ப்பதன்மூலம் நமது மனநிலையை மாற்றலாம் என்பதைப் பதிலாகச் சொன்னார்.

முழு ஒலிப்பதிவு (சுமார் 1.30 மணி, 46.4 MB, MP3) | Other formats

தி ஹிந்து செய்தி

5 comments:

 1. Knowing P Sainath and the title of his talk, I think, the core of his speech could have been easily constructed (even without him speaking it).

  What could matter, though, in the present context, is views [yours, others] on what he said.

  ReplyDelete
 2. மிக்க நன்றி பத்ரி.
  அற்புதமான உரை.

  உங்கள் அனுமதியுடன் இதை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?

  - மு.க

  ReplyDelete
 3. ஸ்வாமி: சாயிநாத்தின் புத்தகம் 'Everybody Loves a Good Drought' படித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய பேச்சு, அவருடைய பிற எழுத்துகள், அவருடைய புத்தகம் - அனைத்தைப் பற்றிய கருத்துகளையும் வரும் நாள்களில் எழுத உள்ளேன்.

  mk: நிச்சயமாக. நான் சேர்க்கும் ஒலித்துண்டுகள், பிற எழுத்துகள் அனைத்துமே CCL வகையைச் சார்ந்தவை. இவற்றைப் பிரதியெடுக்கலாம். குறுந்தட்டுகளில் போட்டு அனைவருக்கும் வழங்கலாம். ரேடியோவில் ஒலிபரப்பு செய்யலாம். என்னிடம் அனுமதி வாங்கவேண்டிய தேவையே இல்லை.

  பொதுமேடைகளில் யாராவது பேசுவதை (இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1954, 52 (za) படி) ஒலிப்பதிவு செய்து, அவற்றை எந்தக் காப்புரிமையும் இன்றி, யாருடைய அனுமதியும் இன்றி, யார் வேண்டுமானாலும் வெளியிடலாம்.

  ReplyDelete
 4. this guy is naive, at best.

  it is well known that 90% or more of the funds do not reach the intended beneficiary. throwing more money for the so called poverty alleviation and developmental programs only help to line up the packets of bureaucrats, politicians and their cohorts.

  ReplyDelete
 5. P.Sainath's data and info are correct. only his reasons for the farm crisis are wrong and superficial. but for this liberalsiation, privatisation and globalisation, we would have been backrupt in 1991 with total economic collapse (like in present Zimbawe). LPG has unleashed our economy and this super growth (un heard of in India until now) is enabling more percentage of people to be pulled out of poverty. and the growth increases govt's tax revenue which can be used for alleivating farm crisis, etc.

  inflation due to fiscal defict induced increase in money supply (22 % last fiscal) is increasing the INPUT costs of all sectors,
  esp agriculture. interest rates are proportinal to local inflation.
  all these have not been taken into account in his inferences.

  we have spent more than 10,000 crores last year alone in Rual Employment guranetee program with not much visible results. most of the spending leaks and fattens the govt staff and their crony contractors. no cost / benefit studies or proper audits...

  ReplyDelete