Wednesday, September 03, 2008

பிள்ளையார்

மைலாப்பூரில் எருக்கம்பூ மாலை, அருகம்புல் சகிதமாக களிமண் பிள்ளையாரை கூட்டம் கூட்டமாக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் அந்த அளவுக்குக் கூட்டம் இல்லை என்றாலும் கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டு வாசலில் உள்ள கிருஷ்ணர் கோயில் அருகே களிமண் பிள்ளையார் விற்பனைக்குக் கிடைக்கிறார். அங்கும் எருக்கம்பூ, அருகம்புல், கலர் பேப்பர் குடை.

தமிழ் ஸ்மார்த்த பிராமணர்கள் கோலாகலமாக பூரண கொழுக்கட்டையுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாட, வைஷ்ணவ பிராமணர்கள், “பரவாயில்லை, விஷ்வக்சேனர்தானே” என்று சொல்லி தாங்களும் கொண்டாடலாமோ என்னவோ.

எங்கள் அவ்வை சண்முகம் சாலையில் (லாயிட்ஸ் ரோட்) சில திடீர் பிள்ளையார் கோயில்கள் தெருவோரத்தில் முளைத்துள்ளன. அவற்றில் காலையிலிருந்தே ஸ்பீக்கர் வைத்து பாட்டுச் சத்தம். பாட்டுகள் பெரும்பாலும் “அம்மன் பாடல்கள்”தான். வேப்பிலை, தாலிப்பிச்சை போன்ற தமிழ் சினிமா செண்டிமெண்ட் பாடல்கள். ஆடி மாத அம்மன் உற்சவத்திலிருந்து அப்படியே தொடரும் கொண்டாட்டம் இது என்று நினைக்கிறேன்.


ஆடி மாதம் சென்னையின் பல்வேறு அடிமட்ட மக்கள் குடியிருப்புகளில் இந்த அம்மன் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதில் மேல்மட்ட மக்களின் பங்களிப்பு வெகு குறைவாக அல்லது இல்லாததாக இருக்கிறது என்பது என் கருத்து. ஒவ்வொரு சிறு ‘குடிசைக் குடியிருப்பிலும்' வண்ணச் சரவிளக்குகளாலான அம்மன் மூங்கில் உருவம் ஆளுயரத்துக்கும் அதற்கு மேலுமாக இருக்கும். தீமிதி, கஞ்சி காய்ச்சல் உண்டு. நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், முண்டக்கண்ணி அம்மன் (முண்டகக் கண்) போன்ற பெயருடைய பல வெகுமக்கள் தெய்வங்களுக்கான படையல். ஆடி வெள்ளி அபாரமான கூட்டத்துடன் இந்த விழாக்கள் நடக்கும்.

இதற்கு மாற்றாக பிள்ளையார் உயர்சாதிக் கடவுளாக மட்டுமே இருந்துள்ளார் என்பது என் கருத்து. ஆனால் இப்போது கால மாற்றத்தில் பிள்ளையார் வெகு மக்கள் கடவுளாகவும் மாறத் தொடங்கியுள்ளார். இது முழுமையாக இன்னமும் நடந்தேறவில்லை என்றாலும் அதற்கான அடித்தளம் வெகுவாக அமைக்கப்பட்டுவிட்டது.

மஹாராஷ்டிரத்தில் திலகர் தொடங்கிவைத்த கணேஷ் சதுர்த்திப் பெருவிழா சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்தியா முழுதும் பரவவில்லை என்றாலும் இன்றைய நவீன இந்துக் கட்டமைப்புக்கு ராமரும் விநாயகருமே முன்னிலை வகிக்கப்போகிறர்கள் என்று தோன்றுகிறது.

6 comments:

 1. >>>விஷ்வக்சேனர்

  என் நண்பர் வீட்டில் ’தும்பிக்கையாழ்வார்’ என்று கூறுவார்கள்!

  ReplyDelete
 2. வட நாட்டில் விநாயக வழிபாடு திலகர் மூலம் பிரபலம் ஆகி இருக்கலாம் ஆனால் தமிழ் நாட்டில் ஔவையார் காலத்துக்கு முன்னிலிருந்தே விநாயாக வழிபாடு இருந்துக்கொண்டு அல்லவா வருகிறது? அவருடைய "விநாயக அகவல்" அதற்கு சான்று அல்லவா? தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் பிள்ளையார் ஒரு மூலையிலாவது இருந்துக்கொண்டல்லவா இருக்கிறார். அவர் எப்படி உயர் சாதி கடவுளாக மட்டும் இருந்திருக்க முடியும்?

  ReplyDelete
 3. ஸ்ரீநிவாசன்: எகப்பட்ட ஔவையார்கள் இருந்துள்ளனர். ஔவையார் பெயரில் பலர் பாடல்களை எழுதிச் சேர்த்துள்ளனர். விநாயகர் அகவல் எழுதியவர் எந்தக் காலத்தில் எழுதினார் என்பதைக் கவனிக்கவேண்டும்.

  தமிழகத்தைப் பொருத்தவரை சிவன், விஷ்ணு, முருகன் ஆகியோர் சங்ககாலம் தொட்டே இருந்துவந்திருக்கிறார்கள். விநாயகர் அப்படிக் கிடையாதே?

  ReplyDelete
 4. பத்ரி,

  ஔவையார் பாடல்களை பற்றி உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
  "பிள்ளையார்" என்ற திரவிடச்சொல் சமீப கால உருவாக்கமாக எனக்கு தோன்றவில்லை.
  பிள்ளையார்பட்டியும் உச்சி பிள்ளையாரும் பல நூற்றாண்டுகளாக சோழ பாண்டிய மன்னர்களால் ஆதரிக்க பட்டு வந்தது என்பதை மறுக்க முடியுமா? இலங்கையில் கூட மிக பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயங்கள் காணப்படுகின்றன, குறிப்பாக பத்தாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் தளபதி கருணாகரனால் கட்டப்பட்ட கருணாகர பிள்ளையார் ஆலயம்.
  மேலும், "பிள்ளையார் குட்டு" மற்றும் "தோப்பு கரணம்" போன்ற பழக்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன.
  அம்மன், முருகன் வழிபாட்டு முறைகளை போல் விநாயக வழிபாட்டுக்கும் விரிவான பூஜை புனஸ்காரங்கள் இல்லாததனால் பிராமன பூசாரிகளின் தேவையின்றி பிள்ளையார் "வன்னிமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும், ஏரிக்கரையிலும்" வெகு மக்களிடையே காணப்படுகிறார்.
  தமிழ் நாட்டில் மட்டுமின்றி விநாயகர் காபுல் முதல் இலங்கை வரை பிரபலம் என்பதை இந்த கட்டுரைகள் உணர்த்துகின்றன.
  http://www.tamilnation.org/forum/sachisrikantha/060402hindugods.htm
  http://en.wikipedia.org/wiki/Hindu_Temples_of_Kabul

  விநாயகர் இமயம் முதல் குமரி வரை வழிபட்டு வந்ததாலும், பிராமணனும் பாமரனும் வழிபட்டதாலும் திலகர் விநாயகரை ஒரு தேசிய ஒருமைப்பாட்டு கருவியாக ஆக்கிகொண்டரே தவிர திலகர் விநாயகரை பிரபல படுத்தியதால் விநாயகர் பிரபலம் ஆகவில்லை என்பது என் கருத்து.

  நன்றி,
  ஸ்ரீனிவாசன்.

  ReplyDelete
 5. //இன்றைய நவீன இந்துக் கட்டமைப்புக்கு ராமரும் விநாயகருமே முன்னிலை வகிக்கப்போகிறர்கள் என்று தோன்றுகிறது.//

  தமிழகத்தில் ராமரை விட பிள்ளையார் அதிகம் பரிச்சயமான கடவுள். பலருடைய கைப்பைகளில், சட்டைபைகளில் அவருடைய படமும் சீருந்துகளின் டேஷ்போர்ட்களின், அலுவலக மேசைகளில் பிள்ளையாரின் சிலையும் இருப்பது போல் (இன்று) ராமரின் தாக்கம் இல்லை என்பது என் கருத்து

  ReplyDelete
 6. பிள்ளையார் ஒன்றும் உயர் சாதிக் கடவுள் இல்லை. எல்லோராலும் எளிமையாகவும் வணங்கினாலே பலன் கொடுக்க க்கூடியவர், பிள்ளையார் தான்! அவரை மஞ்சள் பொடியிலும் யானையிலும் வணங்க கூடியவராக இருக்கிறார்!
  அதனால் தான்
  " பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
  வடி கொடு தனதடி வழி படும் அவர் இடர்
  கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
  வடி வினற்பயில் வலம் பிறை இறையே! "
  என ப்பாடி உள்ளனரே!

  ReplyDelete