Sunday, September 07, 2008

ஐஐடி சென்னையில் கலந்துரையாடல்


©The Hindu

நேற்று ஐஐடி சென்னையில், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. “தொழில்முனைதல்: சிந்தனையிலிருந்து செயல்பாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நாள் முழுவதற்குமான நிகழ்ச்சிகள். மைண்ட்-ட்ரீ கன்சல்டிங் இணை-நிறுவனர் சுப்ரதோ பாக்ச்சி அருமையான காட்சி உரை ஒன்றை நிகழ்த்தினார். ஒருவர் எப்படி, எப்போது தொழில்முனைவராக ஆகிறார்? பயோகான் நிறுவனத்தின் கிரன் மஜும்தார் ஷா, ஏர் டெக்கானை உருவாக்கிய கோபிநாத், கஃபே காஃபீ டே நிறுவனர் சித்தார்த்தா ஆகியோரை உதாரணங்களாகக் காட்டி தொழில்முனைவரது குணாதிசயங்களைப் படம் பிடித்துக் காட்டினார் பாக்ச்சி.

அற்புதமான கண்டுபிடிப்பாளரான எடிசன், ஒரு தொழில்முனைவர் கிடையாது. அவரைத் துரத்தியபிறகுதான் ஜி.ஈ என்ற கம்பெனியை ஒழுங்காகக் கட்டமுடிந்தது என்று எடுத்துக்காட்டாக பாக்ச்சி சொன்னது பின்னர் கேள்வி-பதில் நேரத்தில் சூடான விவாதத்தை உருவாக்கியது. பாக்ச்சி பல நேரங்களில் மாணவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய வகையில் “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்பதாகப் பதில் சொன்னார். பார்வையாளர்கள் பலருக்கும் எரிச்சல் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர் பேச்சின் நியாயம் எனக்குப் புரிந்தது. பார்வையாளர் ஒருவர், கையில் மொபைல் ஃபோனை எடுத்து குறுஞ்செய்தியை அனுப்ப (அல்லது பார்க்க?) ஆரம்பித்ததும் பாக்ச்சி கடும் கோபம் அடைந்தார். “நான் எனது குடும்பத்தையும் நிறுவனத்தையும் விட்டுவிட்டு, எனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நாளை உங்களுடன் கழிக்கவந்திருக்கிறேன். அதற்காகவாவது மரியாதை செலுத்துங்கள்” என்றார். மிக நியாயமான வார்த்தைகள்.

ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது செல்பேசியை அணைத்துவைப்பது என்ற அடிப்படையான நாகரிகம் தெரியாமலேயே வளர்ந்துள்ள ஒரு தலைமுறை நம்முடையது.

எனக்கு பாக்ச்சியின் பேச்சு நிறைய சாளரங்களைத் திறந்துவிட்டது. அவரது புத்தகமான High Performance Entrepreneur என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வாங்கிப் படிக்கவில்லை. இன்று முதல் வேலையே அதை வாங்குவதுதான்.

அடுத்து, நான்கு முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தோம். இந்த நிகழ்ச்சியை ஐஐடி சென்னை முதல் பேட்ச் மாணவரான ஸ்ரீனி நாகேஷ்வர் (Srini Nageshwar) மட்டுறுத்தி வழி நடத்தினார். இவர் அமெரிக்காவில் எச்.பி (HP) நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். 3.5” ஃப்ளாப்பி உருவாக்குவதில் பங்களித்தவர். எச்.பியின் முதல் பெர்சனல் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் ஈடுபட்ட குழுவில் இருந்தவர். ஐ-ஒமேகா என்ற வெளியிலிருந்து இணைக்கப்படும் தகவல்களை அழுத்திச் சேகரிக்கும் கருவி வடிவமைப்பில் ஈடுபட்டவர். பல ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சும்மா இருக்கமுடியவில்லை.

அமெரிக்க மருத்துவர்களிடம் விலையுயர்ந்த கருவிகள் உள்ளன. ஆனால் அதுபோன்ற கருவிகள் இந்திய மருத்துவர்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை உயர்ந்தனவாக உள்ளன. இந்திய மருத்துவர்களிடம் பெரும்பாலும் இருப்பது மூன்றே மூன்று கருவிகள்தாம். ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி, வெப்ப நிலையை அளக்கும் தெர்மாமீட்டர் (அதுகூட ஏதாவது ஒரு மருந்து நிறுவனம் இலவசமாகத் தருவது என்றார்). எனவே கணிதத்தையும் மின்னணுக் கருவி உருவாக்குதலையும் இணைத்து இந்திய மருத்துவர்கள் (வளரும் நாடுகளின் மருத்துவர்கள்) வாங்கக்கூடிய விலையிலான கருவிகளை உருவாக்குவதற்கு என்று DyAnsys Inc. என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

மற்ற நால்வரில் நான் ஒருவன், மிகவும் இளையவன். 1991 பேட்ச். அடுத்தது சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் & ஃபார்மசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்ரமணியன் (1987 பேட்ச்). பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை சீஃப் ஜெனரல் மேனேஜர் ஜே.சந்திரசேகரன் (1970கள் பேட்ச்). ஷங்கர் சுவாமி (1960கள் பேட்ச்) நான்காமவர். இவர் ஒரு பேட்டரி (தொழில்துறைக்கான மின்கலங்கள்) உருவாக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மற்றொரு பக்கம் எலெக்ட்ரிக் கிட்டார்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையையும் நடத்துகிறார்.

சுமார் 1.5 மணி நேரம் மாணவர்கள் கேள்வி கேட்க, நாங்கள் நால்வரும், ஸ்ரீனியும், சில கேள்விகளுக்கு சுப்ரதோ பாக்ச்சியும் பதில் சொன்னோம்.

அடுத்து மதிய உணவு.

சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அடுத்த பதிவு ஒன்றில் எழுதுகிறேன்.

தி ஹிந்து செய்தி

4 comments:

  1. Do you have a copy of that presentation ? If yes, is it possible for you to post it ?

    ReplyDelete
  2. Saravanan: I did not make any presentation in this event. They were all only Q & A.

    ReplyDelete
  3. //அமெரிக்க மருத்துவர்களிடம் விலையுயர்ந்த கருவிகள் உள்ளன. ஆனால் அதுபோன்ற கருவிகள் இந்திய மருத்துவர்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை உயர்ந்தனவாக உள்ளன. இந்திய மருத்துவர்களிடம் பெரும்பாலும் இருப்பது மூன்றே மூன்று கருவிகள்தாம். ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி, வெப்ப நிலையை அளக்கும் தெர்மாமீட்டர் (அதுகூட ஏதாவது ஒரு மருந்து நிறுவனம் இலவசமாகத் தருவது என்றார்).//

    http://www.dyansys.com/bedside_ansiscope.php போன்ற கருவிகள் ஒவ்வொரு பிணியாளர் ஊர்தியிலும் கட்டாயம் இருக்க வேண்டும். (தற்சமயம் பல மருத்துவமனைகளிலேயே இல்லை - அரசு மற்றும் தனியார் - என்பது தான் நிதர்சணம்)

    ஏன் ஒவ்வொரு திரையரங்குகள், வணிக வளாகங்களில் கூட இது போன்ற கருவிகள் தேவை.

    அமெரிக்காவில் காசினோக்களில் கூட டிப்பிப்ரிலேட்டர் இருக்கிறது.

    //இந்திய மருத்துவர்களிடம் பெரும்பாலும் இருப்பது மூன்றே மூன்று கருவிகள்தாம்.//

    அதே நேரம் அமெரிக்க மருத்துவர்களிடம் இருக்கும் பல கருவிகள் தேவையே இல்லை என்பதையும் நாம் மறக்க கூடாது

    உதாரணம் http://www.dyansys.com/autonomicdysfunction.php

    இந்த கருவியை வாங்கும் பணத்தை எப்படியும் (மறைமுகமாகமாவது) பிணியாளரிடம் இருந்து தான் பெற வேண்டும். அந்த அளவு பொருளாதாரம் இங்கு இல்லை. இதற்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு X Ray கருவி வாங்கினால் அதனால் அதிக பலன்.

    ReplyDelete
  4. Saravanan -
    A slideshow of Bagchi's presentation of "High Performance Entrepreneur" is available online.
    http://www.slideshare.net/guesta65d92/the-high-performance-entrepreneur/

    ReplyDelete