Friday, September 05, 2008

கேண்டீட் - Candide - தமிழில்

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இவ்வாறு சொல்வதாக வரும்:
“எனக்கு பாவமன்னிப்பு வழங்கும் ஒரு கிரே பாதிரியார், என்னை விரைவில் மயக்கிவிட்டார். அதன் விளைவு கொடுமையானதாக இருந்தது. ஜமீந்தார் உங்களை உதைத்துத் துரத்தியபிறகு நானும் கோட்டையைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. ஒரு நல்ல மருத்துவன் என்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நான் இறந்துபோயிருப்பேன்.

“நன்றியுணர்ச்சி காரணமாக, நான் சில காலம் இந்த மருத்துவனின் வைப்பாட்டியாக இருந்தேன். அவனது மனைவி, என்மீதுள்ள பொறாமை காரணமாக என்னை தினம் தினம் அடித்துத் துன்புறுத்துவாள். அவளைத் தாங்கவே முடியாது. மருத்துவன் ஒரு குரூபி. நான், பாவம், காதலிக்காத ஒருவனுக்காக தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருந்தேன். மோசமான இயல்புடைய ஒருத்தி, ஒரு மருத்துவனுக்கு வாழ்க்கைப்படுவது எவ்வளவு அபாயமானது தெரியுமா? அவளது நடத்தையைப் பொறுக்கமுடியாத மருத்துவன், ஒரு நாள், அவளது ஜலதோஷத்துக்கு மிகவும் வீரியமான மருந்தைக் கொடுத்தான். அவள் இரண்டே மணி நேரத்தில் வலிப்பு வந்து செத்துப்போனாள்.

“மனைவியின் உறவினர்கள் மருத்துவன்மீது வழக்கு தொடுத்தனர். அவன் ஓடிப்போய்விட்டான். ஆனால் என்னை ஜெயிலில் போட்டனர். நான் நிரபராதி என்பது எடுபடவில்லை. எனது அழகு எடுபட்டது. நீதிபதி என்னை விடுவித்தார். ஆனால் மருத்துவனுக்கு பதில் அவருக்கு நான் வைப்பாட்டி ஆகவேண்டும் என்ற ஒப்புதலுடன். சில நாள்களுக்குப்பிறகு வேறு ஒருத்தி என்னிடத்துக்கு வந்தாள். நான் நடுத்தெருவுக்கு வந்தேன். இந்தக் கேடுகெட்ட விபசாரத் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை.

“இந்தத் தொழிலால் நீங்கள், ஆண்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே, இதனால் எங்களைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வேதனை தெரியுமா? எனது தொழிலை நான் வெனீஸ் நகரத்தில் இப்போது நடத்துகிறேன். தினம் தினம், ஒரு கிழ வியாபாரி, ஒரு சாமியார், ஒரு பாதிரியார், ஒரு போலிஸ்காரன் ஆகியோரை விருப்பம் இல்லாவிட்டாலும் தடவவேண்டும்; திட்டல், அடி என்று அனுபவிக்கவேண்டும்; ஒரு மேல்துணியை இரவல் வாங்கிக்கொண்டு சென்று, பிடிக்காத ஒருவன் அதைத் தூக்கிப் பார்க்க அனுமதிக்கவேண்டும்; ஒருவனிடமிருந்து சம்பாதித்த பணம் இன்னொருவனால் களவாடப்படுவதையும், நீதித்துறை அலுவலர்களால் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதையும் அனுமதிக்கவேண்டும். வாழ்க்கையில் முடிவாக மூப்பு, மருத்துவமனை, கடைசியாகச் சாக்கடை. இதைச் சிந்தித்தால் உலகிலேயே நான்தான் மிகச் சோகமானவள் என்று நீங்கள் முடிவுசெய்வீர்கள்.”
என்ன வலிமையான மொழி!

வோல்ட்டேர் (Voltaire) பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி. இவரது இயற்பெயர் ஃப்ரான்சுவா-மரி அரூவே (François-Marie Arouet). பிறந்தது: 21 நவம்பர் 1694, இறந்தது: 30 மே 1778. மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை ஆகியவற்றை இவர் தீவிரமாக முன்வைத்தார். ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்பது இவரது கொள்கை. பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள்மூலம் மன்னராட்சியை அழித்து மக்களாட்சி மலர்வதற்கு வோல்ட்டேரின் கருத்துகள் முக்கியமான காரணங்களாக இருந்தன.

அவரது எழுத்தில் மிளிரும் அங்கதம், எள்ளல் வகையிலான கேலி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கேண்டீட் நாவலை (Candide, ou l'Optimisme) இவர் 1759-ல் பதிப்பித்தார். இந்த நாவலின்மூலம், மனிதர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் அண்டை நாட்டவர்கள்மீது நடத்தும் அசுரத் தாக்குதல்களைக் கடுமையாக கேலி செய்தார். மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவது, பொய் சொல்வது, திருடுவது, வஞ்சிப்பது என அனைத்தையும் தோலுரித்தார். லெய்பினிட்ஸ் என்ற ஜெர்மானிய தத்துவவாதியின் ‘இந்த பிரபஞ்சம் என்பது மிகச் சிறந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருகிறது. எல்லாம் மிகச் சிறந்ததே’ என்ற கொள்கையை நாவல் முழுவதிலும் கடுமையாக விமரிசித்தார்.

இந்த நாவல் முழுவதிலுமே மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், தத்துவவாதிகள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடினார். வறட்டுத் தத்துவத்துக்கு பதிலாக, உடலுழைப்பின்மூலம் மனிதன் பெறும் மகிழ்ச்சியே முதன்மையானது என்பதையும், அனைத்துவித வேற்றுமைகளையும் புறக்கணித்துவிட்டு, சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என்பதையும் இந்த நாவலில் மிக அருமையாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.

பிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாகக் கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான்.

கேண்டீட் நாவலை பெயர் தெரியாத பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தமிழாக்கத்தை நான் Project Gutenburg-ல் இருந்த ஆங்கில மொழிபெயர்ப்பின்வாயிலாகச் செய்தேன்.

இந்த மாத கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

8 comments:

 1. வாழ்த்துக்கள் - நீங்க எழுதின ஒரு புத்தகத்தை முதன்முறையா பார்க்கிறேன்..

  Project Gutenbergனா, இணைய பதிப்பும் கிடைக்குமா?

  ReplyDelete
 2. அட்டைப்படம் பிரமாதம் !
  (இப்போதைக்கு என் ரிவ்யூ)

  ReplyDelete
 3. அருமையான தேர்வு. தமிழில் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.
  NHM புத்தகங்கள் Airmail-இல் அனுப்பும் வசதி வந்து விட்டதா, பத்ரி?

  ReplyDelete
 4. நான் Diplôme Supériure படிக்கும்போது எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

  @ பொன்ஸ்: தமிழ் மொழிபெயர்ப்பு பத்ரி அவர்களின் காப்புரிமை பெற்றது. இப்போதே இலவச Project Gutenberg கீழ் வராது என்றுதான் நினைக்கிறேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 5. பொன்ஸ்: நான் “எழுதிய” புத்தகம் இது என்று சொல்லமுடியாது. மொழிபெயர்த்தது. இதற்குமுன் கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றிய ஒரு புத்தகத்தை (ஆங்கிலத்தில் விஜய் லோகபள்ளி) தமிழில் கிழக்குக்காக மொழிபெயர்த்திருக்கிறேன் (2004). அது இப்போது அச்சில் இல்லை.

  ப்ராடிஜி புக்ஸ் என்னும் NHM பதிப்பு சார்பாக, தமிழில் நான்கு புத்தகங்களும் ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். (எல்லாமே 80 பக்கம், ரூ. 25.) ஆனால் என் பதிவில் சொல்லவில்லை. அவையெல்லாம் பள்ளிக்கூட மாணவர்களை நோக்கி எழுதப்பட்டது.

  அவை முறையே:

  1. நான் எஞ்சினியர் ஆவேன் - எஞ்சினியரிங் எனப்படும் பொறியியல் துறைகள் பற்றிய அறிமுகம். சிவில் என்றால் என்ன, மெக்கானிகல் என்றால் என்ன, கம்ப்யூட்டர் சயன்ஸ் என்றால் என்ன...

  2. உலகம் எப்படித் தோன்றியது? இந்த பிரபஞ்சம் என்பது என்ன என்று தொடங்கி அணுக்கள், அணுத்துகள்கள் ஆகியவை வரை அறிமுகம் செய்து, சில இயல்பியல் கொள்கைகளை விளக்கி, அண்டப் பெருவெடிப்புக் கொள்கையை அறிமுகம் செய்வது.

  3. உயிர்கள் எப்படித் தோன்றின? இந்தப் பிரபஞ்சத்தில் இந்த பூமியில் எப்படி உயிர்கள் தோன்றத் தொடங்கின? தாவரங்கள், விலங்குகள், ஒற்றை செல் உயிர்கள் ஆகியவற்றில் ஆரம்பித்து, டார்வினின் கொள்கையை விளக்கி, இன்றைய குளோனிங் (நகலாக்கம்) வரை மேலோட்டமான ஓர் அறிமுகம்.

  4. கணித மேதை ராமானுஜன் - சிறு அறிமுக வாழ்க்கை வரலாறு.

  5. The Universe (உலகம் எப்படித் தோன்றியது - ஆங்கில ஆக்கம்)

  6. Life (உயிர்கள் எப்படித் தோன்றின - ஆங்கில ஆக்கம்)

  சொல்லப்போனால், சீரியஸாக புத்தகம் எதையும் இதுவரை எழுதத் தொடங்கவில்லை.

  ReplyDelete
 6. விகடகவி: ஏர்மெயிலில் அனுப்பமுடியும். புத்தகம் கால் காசு, அஞ்சல் செலவு முக்கால் காசு என்று இருக்கும். அடுத்த மாதத்துக்குள் எங்களது அனைத்துப் புத்தகங்களும் (தமிழ், மலையாளம், ஆங்கிலம்) அமேசானில் - ஆனால் டாலர் விலையில் - அமெரிக்காவில் கிடைக்கும். நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்தால் இந்த வழியாகப் புத்தகத்தைப் பெறுதல் வேகமானது. ஒரு வாரத்துக்குள்ளாக உள்ளூர் போஸ்டில் வந்துசேரும். விலை டாலரில் இந்திய விலையை விட அதிகமாக இருந்தாலும் சுமைகூலியோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவானதாக வரும் என்பது என்னுடைய கணிப்பு.

  அது தயாரானதும் சொல்கிறேன். இந்தப் புத்தகமும் அவ்வாறே கிடைக்கும்.

  மேலும் அமேசான் மூலம் கிடைக்கும் ஸ்பெஷல் அமெரிக்க எடிஷனாக இருக்கும். தாள், அச்சு, பைண்டிங் எல்லாம் அமெரிக்காவில் செய்யப்பட்டிருக்கும்.

  ReplyDelete
 7. பொன்ஸ்: Project Gutenburg-ல் எடுக்கப்பட்டது என்றாலும் டோண்டு சொல்வதுபோல, தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடைய காப்புரிமை பெற்றது. இப்போதைக்கு இதை, பொதுவில் இணையத்தில் வைக்கப்போவதில்லை. எனது நிறுவனம் நாலு காசு பார்த்தபின், (நானும் அதில் ஒரு சிறு பங்கைப் பெற்றபின்) வேண்டுமானால் யோசிப்பேன்.

  ReplyDelete
 8. //அது தயாரானதும் சொல்கிறேன்.
  //இந்தப் புத்தகமும் அவ்வாறே கிடைக்கும்

  நல்லது பத்ரி. மற்ற Amazon புத்தகங்கள் வாங்கும் பொழுது, அதனுடன் சேர்த்து NHM புத்தகங்கள் வாங்குவேன் என்று நினைக்கிறேன். கால்காசு/முக்கால்காசு equation, amazon shipping/handling chargeஇல் எப்படி விளையாடும் என்று தெரியவில்லை.

  Amazon முறை எனக்கும் பிடித்திருக்கிறது. பார்க்கலாம்.
  நன்றி,
  -விகடகவி

  ReplyDelete