Saturday, September 20, 2008

மின்சார ஸ்கூட்டர்

இன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.

Front view of the electric bike - Ultra Motor Velociti

சாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக வெட்டி, எழுத்தாளர் சுஜாதா வீடு வழியாக, சாயிபாபா கோவிலை நெருங்கி, அலர்மேல்மங்காபுரம் பி.எஸ்.சீனியர் செகண்டரி ஸ்கூல். அங்கிருந்து மீண்டும் லஸ் சர்ச் சாலை வந்து, ஆழ்வார்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பி எல்டாம்ஸ் சாலை அலுவலகம். அல்லது லஸ் சர்ச் சாலை வராமல் சி.பி.ராமசாமி சாலை வந்து, அங்கிருந்து டி.டி.கே சாலை வந்து, அங்கிருந்து இடதுபுறம் எல்டாம்ஸ் சாலையின் திரும்பலாம். அலுவலகத்திலிருந்து டி.டி.கே சாலை, லாயிட்ஸ் சாலை, வீடு.

இங்கு எங்குமே மணிக்கு 40 கி.மீ. வேகத்தைத் தாண்டமுடியாது. இதற்கு மின்சார வண்டி போதும். அல்ட்ரா மோட்டார் நிறுவனத்தின் 500 வாட் மோட்டார் சக்தி கொண்ட வண்டி. இதற்கு ரெஜிஸ்டிரேஷன் தேவை. வண்டியை ஓட்ட லைசன்ஸ் தேவை. இதைவிடக் குறைந்த சக்தி கொண்ட மோட்டார் உள்ள மின் வண்டிகளும் உண்டு. அவற்றை ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை; ரெஜிஸ்டிரேஷனும் தேவையில்லை. ஆனால் மணிக்கு 30 கி.மீ.ஐத் தாண்ட கொஞ்சம் கஷ்டப்படும்.

Side view of the electric bike - Ultra Motor Velociti

இந்த வண்டி 40-ஐத் தொடுகிறது. சத்தமே இல்லை. அதிக பளு இருந்தால் இழுக்க சற்றே கஷ்டப்படலாம். ஆனால் அந்தத் தேவை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். 80-110 கிலோ வரை இழுக்கமுடிகிறது. அதற்குமேலும் இழுத்தால் வேகம் குறையும்.

இந்த வண்டியின் விலை ரூ. 32,000 + 12.5% வாட் (சுமார் 4,000) + சுமார் 6,000 (ரெஜிஸ்டிரேஷன், ரோட் டாக்ஸ், இன்ஷூரன்ஸ்). இந்த வண்டிகள் சுற்றுப்புறச் சுழலுக்கு நன்மை செய்வதால் வாட் வரியை 4% அல்லது 0% என்றாக்கலாம் என்று நினைக்கிறேன். அதேபோல எக்சைஸ் வரிகள் இருந்தால் குறைக்கலாம். ஆனால் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அரசுக்குத் தோன்றாது.

ஒரு யூனிட் மின்சாரத்தில் முழுதாக சார்ஜ் ஆகிறது என்கிறார்கள். சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் ஆகும். அதில் 50 கிலோமீட்டர் ஓடும் என்கிறார்கள். ஓட்டிப் பார்த்தால்தான் சொல்லமுடியும். அது உண்மை என்றால், வீட்டில் சார்ஜ் செய்தால் ஒரு யூனிட் சுமார் ரூ. 2.50 என்று ஆகிறது. அப்படியென்றால் ஒரு கிலோமீட்டர் ஓட்ட வெறும் 5 பைசாதான் செலவு. மாற்றாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 50-55 கிலோமீட்டர் தரும் மோட்டார் பைக்கில், கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஆகிறது. எனது பழைய (2000-வது ஆண்டு) கைனெடிக் ஸ்கூட்டர், லிட்டருக்கு 25-30 கி.மீ. கொடுத்தாலே பெரிசு. அதாவது கிலோமீட்டருக்கு ரூ. 2க்கும் மேலே!

நான் வாங்கியது, சூடி மோட்டார், பிளாட் எண் 3, KPTJ Nest, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை 600 041, தொலைபேசி எண் 2451-2752.

ஒரு மாதத்துக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் என்ன என்று சொல்லமுடியும். ஆனாலும் சூழலுக்குக் கேடில்லை; பெட்ரோல் தேவையில்லை என்ற ஜிலுஜிலுப்பே இப்போதைக்குப் போதும்.

34 comments:

  1. வாழ்த்துக்கள், சமூக நலன் அக்கறை மீது. கோ கிரீன்!

    ஆர்காட்டர்கிட்டே சொல்லிடீங்களா? நல்ல மின்வெட்டு வேறே.

    உங்கள் வீட்டில் ஜென்ரடோர் இருக்கும் போலே? அதுக்கு உனிட் எவ்வளவு ஆகும்?

    சார்ஜ் லெவல் காட்டுமா? சார்ஜ் தீர்ந்தால் தள்ளு வண்டி தானா? பெடல் உண்டா?

    ReplyDelete
  2. சார்ஜ் லெவல் உண்டு. பெட்ரோல் ஈருருளி வண்டிகளில்தான் பெட்ரோல் அளவு என்ன என்பதைச் சரியாகக் கண்டுபிடிப்பது கஷ்டம்.

    பெடல் கிடையாது. எனவே சார்ஜ் போய்விட்டால், தள்ளிக்கொண்டுதான் செல்லவேண்டும்.

    எங்கள் வீட்டில் ஜெனரேட்டர் கிடையாது. இன்வெர்ட்டர் உண்டு. மின்சாரம் போனால் நாலு லைட், ரெண்டு ஃபேன், ஒரு கம்ப்யூட்டர் + இண்டெர்னெட் ஓட உதவும். ஆனால் என் அபார்ட்மெண்ட் இரண்டாவது மாடியில். அங்கிருந்து கீழே தரைத்தளத்தில் இருக்கும் வண்டியை சார்ஜ் செய்யமுடியாது.

    ஆற்காட்டார் எங்களை அவ்வளவாகப் படுத்துவதில்லை. சில வாரங்களுக்குமுன் நாளுக்கு 1.5 மணிநேரம் மின்வெட்டு இருந்தது. இப்போது மின்வெட்டு இல்லை. ஆனால் நான் வசிப்பது கருணாநிதிக்குப் பக்கத்துத் தெருவில்.

    ReplyDelete
  3. \\ஆனால் நான் வசிப்பது கருணாநிதிக்குப் பக்கத்துத் தெருவில்\

    அங்கேயே 1.5 மணி நேரம் மின்வெட்டு இருந்ததா?

    ReplyDelete
  4. பேட்டரி எத்தனை நாளைக்கு வரும்? 2-3 வருடங்களுக்கு மேல் தாங்காது என்றே இது போன்ற வண்டி வைத்திருக்கும் நண்பன் சொல்லுகிறான். இந்த வண்டிகள் ஆயிரக்கணக்கில் இருந்தால் எப்படி பழைய பேட்டரிகளை நாம் பாதுகாப்பாக கழித்து விடுவோம்? நம்ம நாட்டில பெரிய சூழல் பிரச்சினை இதுதான். பழைய பாட்டரிகளை பாதுகாப்பாக கழிப்பது.

    ReplyDelete
  5. அருள்: உண்மைதான். அதுதான் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளுக்கும் பொருந்தும். என்னிடம் இண்டெல்லிஸோன் என்னும் நிறுவனம் உருவாக்கும் சூரிய ஒளி, எல்.ஈ.டி விளக்கு உள்ளது. அதில் லிதியம் அயான் பேட்டரி உள்ளது. அதன் வாழ்க்கை 1.5 வருடங்கள். இந்த வண்டியில் உள்ள பேட்டரி 2-3 வருடங்கள் வரும். அதன்பின் மாற்றவேண்டும்.

    தெர்மோடயனமிக்ஸ் இரண்டாம் விதி, அருள்... ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் எண்ட்ரோபியை அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு அதிகம், எவ்வளவு விரைவில் என்பதுதான் பிரச்னையே. குறைவாகவும் மெதுவாகவும் எண்ட்ரோபி அதிகரித்தால் மனித வாழ்வை சற்றே அதிகமாக நீட்டிக்கலாம். மற்றபடி பூமியும் மனிதனும் ஒரு கட்டத்தில் அழிந்துதானே தீரவேண்டும்?

    ReplyDelete
  6. இங்கே என் நண்பன் இதைப் போல ஒன்றை மூன்று வருடமாக வைத்திருக்கிறான். அவனுக்கு நன்றாக பயன்படுகிறது. நான் அதைப் பார்த்து அவனைப் பாராட்டிவிட்டு, நானும் இதைப்போல வாங்கவா என்ற போது அவன் சொன்னது. பெட்ரோல் செலவு மிச்சப் படுத்த என்றால் இதை வாங்கு, ஆனால் என்விரோன்மென்ட் பிரண்ட்லி என்று சொல்லாதே என்று சொல்லி விளக்கினான். அவன் ரொம்பத் திறமையான என்ஜினீயர். யோசித்துப் பார்த்தால் பெட்றோல், நிலக்கரி எல்லாம் ஒப்பீட்டளவில் ரொம்ப சூழலைப் பாதிக்காதவை மாதிரி தெரியுது. சொன்னால் அடிப்பார்கள். We urgently need a comprehensive, implementable disposal policy .
    அருள்

    ReplyDelete
  7. மற்றபடி பூமியும் மனிதனும் ஒரு கட்டத்தில் அழிந்துதானே தீரவேண்டும்?

    is this thinking a side effect of seeing dasavatharam
    a dozen times :)

    ReplyDelete
  8. Badri,

    Is the technological challenge to design a hybrid(petrol-electric driven) vehicle very high. One of the reasons cited for the bad show of Reva was this. Or at-least said if the CNG-gas model kind of thing were feasible would have been more convenient or not constraining.

    Would appreciate your thoughts on that.

    Best regards,
    Magesh

    ReplyDelete
  9. ஒரு மாதம் ஆகட்டும் பத்ரி அப்போதுதான் புரியும் உங்களுக்கு...

    ஹிஹி அது வரைக்கும் உங்க ஆசைய நான் ஏன் கெடுப்பானேன்

    ReplyDelete
  10. //80-110 கிலோ வரை இழுக்கமுடிகிறது. அதற்குமேலும் இழுத்தால் வேகம் குறையும்.
    //

    அதாவது, அவசரத்துக்கு டபுள்ஸ் கூட போகமுடியாது ?

    ReplyDelete
  11. உண்மையில் டபுள்ஸ் போகமுடிகிறது. கிட்டத்தட்ட 140-150 கிலோ இழுக்கிறது. ஆனால் ஆக்சிலரேட் ஆகி 40-ஐத் தொட நேரம் அதிகமாகிறது.

    அவசரத்துக்கு நன்றாக டபுள்ஸ் போகலாம்.

    அடுத்தது, ஒரு ஃபுல் சார்ஜுக்கு 50 கி.மீ என்றால் அது நல்ல ரோட் கண்டிஷனில், பிரேக் பிடிக்காமல் செல்லும்போது. 38-40 கி.மீதான் எனக்குத் தருகிறது. 35 கி.மீதான் சேஃப் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.

    ஆனாலும் என்னுடைய ரூட்டில் எனக்கு எந்தப் பிரச்னையும் இதுவரை இல்லை.

    அதிஷா: நீங்கள் இந்த வண்டியை அல்லது இதுபோன்ற வைத்துள்ளீர்களா?

    ReplyDelete
  12. உங்கள் வண்டியை ஒரு ரவுண்டு ஓட்ட கொடுப்பீர்களா? :-)

    ReplyDelete
  13. லக்கிலுக்: நிச்சயமாக. என் அலுவலகத்தில் உள்ள பலரையும் நானே வற்புறுத்தி வண்டியை ஓட்டச் செய்து, அவர்களையும் வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  14. So with full charge you will be able to go and come back to home from office. Is it?

    ReplyDelete
  15. I clocked my round trip as follows:
    Home to my daughters school: 3 km
    School to my office: 2 km
    Office to home (for lunch): 2 km
    Home to school/school to home (to drop daughter): 6 km
    Home to office/Office to home: 4.5 km (because of one way detours etc.)

    Normal day travel: 17.5 km or 18 km.

    I can run two full days in this mode, before having to charge. Alternately, I will charge every day, to be on the safe side.

    It is just that in my case, everything is relatively close by. This could be the case of several people.

    ReplyDelete
  16. Hi,

    Any reasons to choose this model over Hero Electric Maxi model?

    I was told for Hero Maxi no registration/license required?!

    ReplyDelete
  17. agp: I depended on referrals. Since all these bikes are not that well distributed, I asked those of my friends who bought different brands and asked them for their opinions.

    Registration vs no-registration:

    If the motor capacity crosses 500 Watts, then registration is required, and license is required to ride. (This is similar to 50 cc bikes.) If lower than 500 Watts (or lower than 50 cc), then no need for either.

    However, with lower than 500 Watts, the max output power will be low, and the speed will be low. The same Ultra has a lower powered motor too.

    ReplyDelete
  18. பத்ரி,
    தற்போது பேட்டரி எவ்வளவு விலை?

    ஒரு மாதம் கழித்து மைலேஜ் விவரம் தெரிவித்து ஒரு பதிவு போடுங்க.

    சத்தியா.

    ReplyDelete
  19. கொஞ்சம் நாள் முன்னாடியே சொல்லி இருக்கக்கூடாதா..? :(

    ஹோண்டா ஏவியேட்டர் நாளை எனக்கு கிடைத்து விடும். இதையும் பார்த்து இருப்பேனே..

    ReplyDelete
  20. Bravo Badri, for setting such a wonderful example!

    ReplyDelete
  21. வணக்கம் திரு.பத்ரி.
    I bought Ultra's other model, the one requires registration and license over a month back and so far the experience has been mixed. To go local shopping and near-by it is very convenient. The charge indicator is unreliable, with in a minute after showing half-full it goes to zero and then it will run for 5KM/HR speed with a stop-start motion. This happened when I didnt charge for more than 10 days - I didn't run it either, but I suppose the battery drains with time. But if you charge for few days once you should be fine.

    ReplyDelete
  22. பிளாக் எழுதுபவர்கள் பலர் ஊர்வம்பு பேசுகிறார்கள். உருப்படியாக எதையும் சொல்வதில்லை. அவர்களது மேதாவித்தனம்தான் வெளிப்படுகிறது. உங்கள் பிளாக் அப்படியில்லை. அறிவுபூர்வமாக இருக்கிறது. ISBN, சிறப்புப் பொருளாதார மண்டலம், பதிப்புத் துறை, கணினி, மென்பொருள், பங்குச்சந்தை, அணு ஒப்பந்தம், மின்சார ஸ்கூட்டர் என்று பல விஷயங்களை வாசகர்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்குகிறீர்கள்.

    நன்றி. வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள்: நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  23. வெங்கடரங்கன்: நான் வண்டியை எடுத்த முதல் நாளே மின்சாரம் முழுதும் வெளியேறிவிட்டால் என்ன ஆகும் என்ற சோதனையைச் செய்தேன். முழுவதுமாக drain ஆனதும், நீங்கள் சொல்வதுமாதிரி start-stop, start-stop என்று திக்கித் திக்கிப் பயணிக்கும். கிட்டத்தட்ட மூன்று வாரமாக இப்போது பயன்படுத்துகிறேன். என் மனைவியும் அதைப் பயன்படுத்துகிறார்.

    20-25 கி.மீ ஓட்டியபிறகு ஒரு முழு சார்ஜ் செய்துவிடுகிறோம். அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை சார்ஜ் செய்துவிடுகிறோம். இதனால் வண்டியை நிம்மதியாகப் பயன்படுத்தமுடிகிறது.

    நிஜமாகவே, இந்த வண்டி மிகவும் பயனுள்ளது என்ற கருத்துக்கு வந்திருக்கிறேன்.

    குறைந்தது மூன்று மாதங்களாவது வைத்திருந்து பார்த்துத்தான் மேற்கொண்டு சொல்லமுடியும்.

    ReplyDelete
  24. Do you think that this electric vehicle reduces pollution and there by global warming?

    ReplyDelete
  25. Vajra: Electric scooter produces no smoke at all. In addition, it also cuts down noise pollution drastically. It will help in lowered global warming.

    As Arul mentioned earlier, there will be an issue of dealing with disposal of batteries.

    ReplyDelete
  26. I am sorry to say that you are wrong on this. Electric vehicles that run on electricity which is produced by Thermal and Nuclear power stations do not contribute significantly to reduce pollution and global warming. They also contribute their fair share of smoke and soot not from their silencers but from the chimneys of thermal power station near by.

    ReplyDelete
  27. என்னிடம் இருப்பது YO Speed 750 Watts. Rs 36000 on road. இருவர் பயணிப்பதற்கானது. முழு சார்ஜ் 25 கிமீ பிறகு மைசூரின் மேட்டுபாங்கான சாலையில் திணற ஆரம்பிக்கிறது. சென்னையானால் 40 கிமீ வரை தாக்குப்பிடிக்கும்.

    பாட்டரி திறன் 33 AH. நான் கண்ட வரையில் சந்தையில் மிக அதிக பாட்டரி திறன் இது தான்.

    பாட்டரி 20000 கிமீ வரை உழைக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் 12000 கிமீ உழைத்தாலே பாட்டரி விலையை(ரூ 8000) எடுத்துவிடலாம் என்பது என் கணிப்பு. கண்டிப்பாக இந்த தொழில்நுட்பம் விரைவில் முன்னேற்றம் காணும்.

    ReplyDelete
  28. Recently I purchased a ULTRA Marathon model(which doesn't require regn/licence).I was able to cover 80 km without recharging and still some 1/4 level is available. May be another 10 km we can cover.The max speed at full battery power is 28 km and it reduces as battery power reduces.Charging is not a problem. With in 6 hours full charge is reached. Even with low power motor 2 person can travel. But speed and mileage may come down. But the biggest problem seems to be the shock absorbers.The jerk is too much and the ride is not very comfort.

    Mani Trichy

    ReplyDelete
  29. NHM நிறுவனத்தின் இயக்குனர், cricinfo ன் co-founder நீங்கள் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்றீர்களா??? நம்ப முடியவில்லைஐஐஐஐ!!! உங்ககிட்ட BMW, Mercedesல்லாம் இல்லையா????

    ReplyDelete
  30. mr.badri, vandiku charge epdi panrathu. battery thaniya eduthu charge panna mudiyuma.

    ReplyDelete
  31. Dear Badri

    If time permits, please reply.
    I am planning to buy a electric scooter.
    If we do not overburden it and handle it smoothly (well within the permissible limits), then is it working fine for this long time (I believe you have been using it for 5-1/2 years and hence the request!)

    Regards
    Venkat

    P.S. It is not possible to find the year of the comments. Only date, month & time are visible. Please correct it.

    ReplyDelete
  32. Hi, I have changed my opinion on electric bikes a bit. The cost of the battery replacement is quite high. If you can find a bike seller who gives some guarantees and price protection on the batteries, then go for electric bikes, otherwise, wait for the technology to get better.

    ReplyDelete
  33. Hi Mr, Badri,

    I am planning to buy electronic scooter. Do you have any suggestions over model? Hope you have been using the scooter for more than 6 years. How is your experience ? How long we can expect the battery life?

    ReplyDelete
  34. மேலே உள்ள ஸ்கூட்டரைத் தலைமுழுகிவிட்டு டிசம்பர் 2014-ல் ஹீரோ ஆப்டிமா+ என்ற மின்னியக்க ஸ்கூட்டரை வாங்கியுள்ளேன். வெய்யில் குறைவாக இருக்கும்போது சைக்கிளிலும் வெய்யில் அதிகமாக இருக்கும்போது இந்த வண்டியிலும் பயணம் செய்கிறேன். http://heroelectric.in/optima-plus-2/?view-product=y என்ற பக்கத்தில் மேலும் தகவல்கள் கிடைக்கும். பேட்டரி பயன்பாடு பற்றி ஓராண்டு கழித்துத்தான் சொல்ல முடியும்.

    ReplyDelete