Thursday, February 19, 2009

கருத்துக் கணிப்பு தடை

இந்தியா முதிர்ச்சி அடையாத ஒரு நாடு என்பதை நன்கு நிரூபிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் ஓர் அபத்தமான ஆணையை முன்வைத்துள்ளது. இதன்படி, தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடியும்வரை, கருத்துக் கணிப்பு, எக்ஸிட் கணிப்பு ஆகியவற்றை அச்சு ஊடகங்களிலோ, மின்னணு ஊடகங்களிலோ பதிப்பிக்கக்கூடாது.

இது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நான் கலந்துகொண்டதைப் பற்றி எழுதியுள்ளேன். இந்த ஆணையை நான் எதிர்க்கிறேன். இந்த ஆணை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உரிமைகளுக்கு எதிரானது என்று கருதுகிறேன்.

இந்த ஆணையை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று நான் கருதுகிறேன். (ஆனால் உச்ச நீதிமன்றத்தின் கருத்து வேறு விதமாக உள்ளது!) இந்த ஆணையை எதிர்த்து ஊடகங்கள் நீதிமன்றத்துக்குப் போகும் என்று நம்புகிறேன்.

அப்படி நீதிமன்றங்கள் விரைவில் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறும்வண்ணம் இணைய வலைப்பதிவுகளில் கருத்துக் கணிப்புகளை நடத்தி, முடிவுகளை வெளியிட்டு, நமது உரிமைகளை நாம் நிலை நாட்டவேண்டும்.

7 comments:

 1. எக்செலண்ட். இதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

  கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து வெளியிடப்படும் விளம்பரங்களையும், செய்திகளையும் எது செய்தி, எது விளம்பரம் என்று இனம் பிரித்துப் பார்க்கும் முதிர்ச்சி இன்னமும் அடையாத நாடு இந்தியா என்பதால், தேர்தல் ஆணையம் இப்படி முடிவெடுத்துள்ளது என்றே நினைக்கிறேன். அதிலும் கூட, கருத்துக் கணிப்பு நடத்தத் தடை இல்லை, ஆனால், அந்த முடிவுகளை ஊடகங்களில், பிரசுரிக்க / ஒலிபரப்ப / ஒளிபரப்பத் தடை என்கிற போது, தேர்தல் ஆணையத்தின் ஆணை, நியாயமாகவே உள்ளது.

  மூளைச்சலவை செய்வது போல, தங்களுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்பு நடத்தி, அதை தொடர்ந்து விளம்பரங்கள் செய்து, குறைந்த பட்சம் சில விழுக்காடு மக்கள் மனதையாவது திசை திருப்பிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அரசியல் சார்புடைய பெரு ஊடகங்கள் அனைத்துக்கும், வெச்சாச்சு ஆப்பு.

  ReplyDelete
 2. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

  ஆனால்..........

  எதன் பொருட்டு தேர்தல் ஆணையம் இம்முடிவை வெளியிட்டது?

  நடுநிலையில்லாத கருத்துக்கணிப்புகளாலா?

  இரண்டு ஆண்டுகளுக்கு முன் இது குறித்த வழக்கில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கமுடியும் என உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்களாம்.

  ReplyDelete
 3. ummm...I'm not sure if the order is as stringent as you make it out to be. It prohibits publication of such results for a period starting 48 hours before the first day, till the closing of the polls on the last day of the elections (in multiple phases). Anybody can publish opinion poll results prior to the 48 hour time before the poll starts.

  Guess is, the commission is concerned about the effects of last minute opinion polls since errors/misrepresentations in these cannot be sufficiently exposed to the public in the short window before the poll.

  (In US, media has a self-imposed moratorium on publishing exit poll figures till all polls close in a state)

  Neither as stupid nor as draconian as your post makes it out to be. Please correct me if I'm wrong.

  ReplyDelete
 4. ஸ்ரீகாந்த்: எனக்கு இதில் உள்ள பெரிய பிரச்னை - தேர்தல் கமிஷன் ஆணைதான். இந்திய ஊடகங்கள் ஒன்று சேர்ந்து தாங்களாக முடிவெடுத்து, எக்ஸிட் கணிப்பை வெளியிட மாட்டோம் என்று சொன்னால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தேர்தல் கமிஷனிடம் இதுபோன்ற அதிகாரங்கள் வர வர, அவர்கள் சர்வாதிகாரத்தன்மை அதிகமாகிவிடும். அதைத்தான் நான் பிரச்னையாகக் கருதுகிறேன்.

  அதிலும் அமெரிக்க அதிபர் தேர்தல் முறை போலல்ல இந்திய நாடாளுமன்றத் தேர்தல். இங்கே இனி வரும் காலங்களில் எப்போதும் ஒரு கட்டத் தேர்தல் நடைபெறாது. ஐந்து கட்டங்களாக, மூன்று வாரங்கள் நடைபெறும் காலகட்டத்தில் கடைசிக் கட்டம் முடியும்வரை எக்ஸிட் கணிப்பை வெளியிடக்கூடாது என்று சொல்வது அபத்தமல்லவா?

  அடுத்த நாள் எப்படியும் தேர்தல் நிஜ முடிவுகளே வந்துவிடும்; நீ எதற்கு எக்ஸிட் கணிப்பு முடிவுகளைத் தரவேண்டும் என்ற எண்ணமே இங்கு மேலோங்குகிறது.

  எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை வரையறுக்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்திடம் இருக்கக்கூடாது என்பதுதான் என் முதன்மைக் கருத்து. உச்ச நீதிமன்றமே இதனை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தட்டில் வைத்து வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை.

  ReplyDelete
 5. பத்ரி: இந்த "slippery slope" வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது தான். நாளைக்கு டி.என்.சேஷனுக்கு தாத்தா போல் ஒரு ஆதிசேஷன் வந்தால் இந்த ஆணையைப் பின்பற்றி அவர் என்ன செய்வார் என்று சொல்வதற்கில்லை என்பது உண்மை.

  ReplyDelete
 6. பத்ரி: சும்மா லூஸ்ல விடுங்க சார்... இந்தியாவில் ஜனநாயகம் என்பதே ஒரு கேலிக்கூத்துதான். இந்தியா என்பது ஒரு நாடு இல்லை. அதை ஒரு நாடாகக் கருதியது வெள்ளைக்காரனின் பார்வை. அதனால் நடக்கும் கூத்துக்களில் ஒன்று கூடியிருக்கிறது. அவ்வளவுதான்.

  ReplyDelete
 7. இந்தியா ஒரு நாடாக தெரியாமல் போனது நாட்டின் தவறல்ல. உங்களைப் போன்ற பெயரில்லாதவர்களின் தவறுதான். நல்ல நாடாக இருந்ததால்தான் வெள்ளைக்காரன் கொள்ளையடிக்க வந்தான்.
  அவர்களால்தான் நாம் பாழடைந்து உள்ளோம். ஏதோ ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் தான் ஜனநாயகத்தை கட்டிகாப்பதாக நினைப்பு உங்களுக்கெல்லாம். எல்லா நாட்டிலும் எல்லா இழவுகளும் நடக்கத்தான் செய்கிறது.
  "கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடீ"

  ReplyDelete