Thursday, July 09, 2009

ஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்

சீனாவில் இரண்டு முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் உள்ளனர். உய்குர் இனத்தவர் மத்திய ஆசியா பகுதியை ஒட்டிய சீன மாகாணமான ஷின்ஜியாங்கில் வசிக்கின்றனர். இரண்டாவது குழு, ஹுவி எனப்படும் பல பழங்குடிகளை அடக்கியது. நிங்ஷா, கான்சு, கிங்காய், ஷின்ஜியாங், ஹெனான் போன்ற மாகாணங்களில் இவர்கள் உள்ளனர்.

சீனாவின் பெரும்பான்மை இனம், ஹான் சீனர்கள் எனப்படுவோர்.

ஹான் vs ஹுவி; ஹான் vs உய்குர் பிரச்னைகள் எப்போதும் இருந்தவண்ணம் உள்ளன. இப்போது உய்குர் இனத்தோர் உள்ள மாகாணத்தில் ஹான் சீனர்களுக்கும் உய்குர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து, கலவரம் ஏற்பட்டு, 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2004-ல் ஹெனான் மாகாணத்தில் ஹுவி-ஹான் சண்டை காரணமாகப் பலர் உயிரிழந்தனர்.

பல்லவி அய்யரின் Smoke and Mirrors (தமிழாக்கம் - சீனா: விலகும் திரை) புத்தகத்தில் ஹான் - ஹுவி தொடர்பாக அவர் எழுதியதிலிருந்து சில பகுதிகள் இதோ, உங்களுக்காக. படிக்கும்போது ஏதோ இந்தியாவைப் பற்றிப் படிப்பது போல இருந்தது.

***

ஹுவிக்கள்தான் உலகத்து முஸ்லிம்களிலேயே குறைந்த ஆசாரவாதிகள் என்று கருதப்பட்டார்கள். அவர்களில் பலர் குடிப்பதுண்டு; புகைப்பதுண்டு. யாரும் தாடி வளர்ப்பதில்லை. பெண்கள் பர்தா அணிவது மிகவும் அபூர்வம்.

ஆனால் தொழில் கட்டாயங்களினால் என்றைக்கு அவர்கள் வெளியே கிளம்பினார்களோ, அன்றைக்கே அவர்களின் தனிமையும் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் வாழ்க்கையில் கடுமையான இஸ்லாமிய சட்ட திட்டங்கள் நுழைய ஆரம்பித்தன. நிங்ஷாவின் மசூதிகளில் மக்கள் தினம் ஐந்து வேளை தொழுகை நடத்த வந்தார்கள். பெண்கள் தலையை மூடும் துணியை அணிய ஆரம்பித்தார்கள். ஆண்கள் நடுவே அரிதாக இருந்த குல்லாய், இப்போது அதிகத் தலைகளில் ஏறி உட்கார்ந்துகொண்டது.

2005-ல் சீனாவிலிருந்து 8,000 முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை சென்றார்கள் என்றார் மா. நூற்றுக்கணக்கான ஹுவி மாணவர்கள் மேற்படிப்புக்காக பாகிஸ்தான், சிரியா, சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்றார்கள்.

...

பல மசூதிகளில் பலருடன் பேசினேன். இஸ்லாமிய உலகத்தின் பொதுவான பிரச்னைகள் பற்றி அவர்களுக்கு நேரிடையாகக் கவலை இருந்தது. தாய் ஜி மசூதியின் பெண் இமாம் யாங், ‘முஸ்லிம்கள் எல்லோருக்கும் கெட்ட பெயர் வாங்கித் தருவது இந்த அமெரிக்காதான்’ என்று ஆவேசமாகச் சொன்னார். கோபத்தில் அவரது உடம்பு நடுங்கியது. ‘அமைதியை விரும்பும் மதம் எங்களுடையது’ என்றார். வகுப்பில் இருந்த ஐம்பது பெண்களும் தலையை ஆட்டி ஆமோதித்தார்கள். ‘இருந்தும் எங்களைப் பற்றி என்னென்ன பொய்யெல்லாம் பரப்புகிறார்கள் பாருங்கள்’ என்று கசப்புடன் அவர் சொல்ல, வகுப்பே சத்தமாக அவரை ஆதரித்தது.

...

நிங்ஷாவின் அரசு அதிகாரி ஒருவர் நீண்ட புகார்ப் பட்டியல் படித்தார். ‘முன்னேயெல்லாம் ஹுவிக்களும் எங்களைப் போலத்தான் வாழ்ந்தார்கள். பன்றி சாப்பிட மாட்டார்கள்; அதுதான் ஒரே வித்தியாசம். இப்போதெல்லாம் அவர்கள் தாங்கள் ஏதோ தனியாகப் பிறந்து வந்திருப்பதாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். என்னமோ வெளிநாட்டுக்காரர்கள் மாதிரியல்லவா அலட்டிக் கொள்கிறார்கள்!’ ஹுவி - ஹான் இனங்களுக்கிடையே நடந்த சின்னச் சின்னப் பிரச்னைகள் பெரிய தகராறில் முடிந்ததும் உண்டு.

2004-ல் இப்படித்தான் ஹெனான் மாகாணத்தில் ஒரு சாலை விபத்தில் ஆரம்பித்த சண்டை, ராணுவ ஆட்சி அறிவிப்பது வரை போய்விட்டது! ஒரு ஹுவி டிரைவர் வண்டி ஓட்டும்போது ஹான் பெண்ணை இடித்துவிட்டான். மோதியதற்கு நஷ்ட ஈடு தரமாட்டேன் என்று வாய்ச் சண்டையில் தொடங்கி, விரைவிலேயே கைச்சண்டையாகி, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் போர்க்களத்தில் இறங்கிவிட்டார்கள். அப்போது நடந்த கலவரத்தில் பலர் உயிரிழக்க நேர்ந்தது.

ஏற்கெனவே இருந்த டென்ஷன் போதாது என்று, அரசாங்கத்தின் திட்டங்களும் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றின. ஹுவிக்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளைக் கொடுத்தது. உதாரணமாக, ஒற்றைக் குழந்தைச் சட்டம் ஹுவிக்களுக்குக் கிடையாது. (அவர்களில் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களுக்கு மட்டும் எப்போதும்போல ஒரே குழந்தைதான் அனுமதி.) பல்கலைக்கழகங்களிலும் அரசாங்க வேலைகளிலும் ஹுவிக்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.

ஹுவிக்கள் தங்கள் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தினார்கள். ‘கோட்டா இருக்கும்போதே எங்களில் ஒரு சிறிய பகுதிக்குத்தான் அது பயன்பட்டிருக்கிறது. எங்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் வறுமையில்தான் வாடுகிறோம்’ என்று சுட்டிக் காட்டினார்கள். உண்மையிலேயே ஹுவிக்களுக்கு அதிகம் வசதி வாய்ப்புக்கள் இல்லை. ஏதோ கடை வைத்திருப்பார்கள், அல்லது ‘முஸ்லிம் சாப்பாட்டு ஹோட்டல்’ நடத்துவார்கள். ஆனால் ‘இவர்களுக்கு மட்டும் என்ன சலுகை’ என்று ஹான்களுக்கு ஒரே எரிச்சல். நிங்ஷா பின்தங்கிய பிரதேசமாக இருந்ததால் வேலை வாய்ப்புக்களுக்கு எப்போதுமே கடும் போட்டிதான்.

...

என் பயணத்தின் இரண்டாம் நாள், மா கொஞ்சம் அப்பால் போயிருந்தபோதுதான் லியுவின் உண்மையான முகம் வெளிப்பட்டது. முதலில் எச்சரிக்கையாகப் பேச ஆரம்பித்தவர், வரவர உற்சாகம் அதிகரித்து, நிங்ஷாவின் முஸ்லிம்கள் பற்றி வெளிப்படையாகவே பல தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘ஹுவி முஸ்லிம்களுக்கு இங்கே நல்ல பெயரே கிடையாது தெரியுமோ? அவர்களுக்கும் நேர்மைக்கும் ரொம்பத் தூரம்!’ என்றார். ‘ஹான் சமூகத்தை சேர்ந்த டிரைவர்கள் ஹுவி ஏரியாவில் கார் ஓட்டக் கூடத் தயங்குவார்கள்’ என்று புதிர் போட்டார். ‘ஏன்?’ என்றேன். ‘தப்பித் தவறி ஒரு ஹுவியை இடித்துவிட்டால் போச்சு; அவர்களுடைய முழு சமுதாயமே திரண்டு வந்துவிடும். டிரைவரை அடித்தே கொன்றுவிடுவார்கள்!’ என்றார். ஆச்சரியம்தான். 2004-ல் நடந்த கலவரத்துக்குக் காரணம், இதற்கு நேர்மாறான விபத்து. அங்கே இடித்தவர் ஹுவி டிரைவர்; இடிபட்டவர்தான் ஹான்.

கடைசியாக லியு சொன்னதை வைத்துப் பார்த்தால், நிங்ஷாவின் இனப் பிரச்னை, பத்திரிகைகளில் சொல்லப்படுவதைவிட மிகவும் தீவிரமாக இருக்கும் போலிருந்தது. ‘இப்போதெல்லாம் நிங்ஷாவில் உள்ள ஒவ்வோர் அரசு அதிகாரிக்கும் இந்த ஹுவிக்களை சமாளிப்பதற்கே பொழுது சரியாக இருக்கிறது’ என்றார் லியு. இது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

***

மேற்கொண்டு இதைப்பற்றியும், மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் வாங்கவேண்டிய புத்தகம்: சீனா: விலகும் திரை, பல்லவி அய்யர், தமிழில் ராமன் ராஜா

4 comments:

 1. இருக்கும் சூட்டை பயன்படுத்தி புத்தகம் விற்கும் உங்களது திறமையை என்னவென்று பாராட்ட!

  சினாவிலும், இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்றால், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரா!?
  தனிநாடு கேட்டா அப்படி தானோ!?

  ReplyDelete
 2. தெற்காசியா வட இந்தியர்களுக்கும், கிழக்காசியா ஹான் சீனர்களுக்கும் அடங்கவேண்டியது புவியரசியல் கட்டாயம். இதைத்தெரிந்தே எதிர் நீச்சல் போடுபவர்கள் முட்டாள்கள்.

  ReplyDelete
 3. முஸ்லிம்கள் பற்றிய செய்தி என்றாலே பத்ரி அண்ணாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி சப்போர்ட்டாக எழுதுவது போல் காட்டி கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் முஸ்லிம்கள் மீது வெறுப்பு வருமாறு சமர்த்தாக பார்த்து கொள்வார் நம் பத்ரி அண்ணன்

  ReplyDelete
 4. தீவிரவியாதிSat Jul 11, 05:40:00 PM GMT+5:30

  தேசியஇனங்களின் நியாயமான உரிமைகளைப் பறிக்க இந்த ”சிறுபான்மையினர்” பட்டம் மிகவும் உதவிகரமானது.

  தமிழர்கள் இந்தியாவிலோ இலங்கையிலோ சிறுபான்மையினரில்லை. அவர்கள் எப்போதும் அவர்களுடைய நிலப்பரப்பில் பெரும்பான்மையினராகவே வாழ்ந்துவந்துள்ளனர்.

  ஆதிக்கவெறி பிடித்த இக்கும்பல்கள் தேசியவாதத்தின் பெயரில் மற்றவரின் நிலவளங்களைப்பறித்தல், தம் கலாச்சாரத்தை அடுத்தவரின் மேல் திணித்தல், அவர்களுடைய மண்ணிலேயே அவர்களை அவமானப்படுத்துதல் போன்றவற்றைச்செய்து வருகின்றன. உலகம் இவற்றை ‘போலிஜனநாயகத்தின்‘ பேரில் அனுமதித்து வருகிறது.

  ஆசியஒன்றியம் ஒன்று உருவாகி, ஆசியாவில் ஹிந்துஸ்தானிகள் மைனாரிட்டி என்று கூறி ‘அடக்கஒடுக்கமாக' நடந்து கொள்ளவேண்டும் என்றால் ஒத்துக்கொள்வார்களா ?

  'பெரும்பான்மை' ஆதிக்கவெறியே 'சிறுபான்மை' தீவிரவாதத்துக்குக் காரணம்.

  ReplyDelete