Thursday, May 05, 2011

பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011

15-வது மக்களவை சிறந்த சாதனையாளர்கள்

1. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் (பாஜக, சந்திரபுர், மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 70 விவாதங்கள், 17 தனி நபர் மசோதாக்கள், 499 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.

2. ஆனந்தராவ் அட்சுல் (சிவசேனை, அமராவதி, மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 23 விவாதங்கள், 3 தனி நபர் மசோதாக்கள், 545 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார். (14-வது மக்களவையில் மொத்தமாக 1,333 கேள்விகளை எழுப்பி முதலிடத்தில் இருந்தாராம்.)

3. எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ், திருநெல்வேலி, தமிழ்நாடு): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 60 விவாதங்கள், 0 தனி நபர் மசோதாக்கள், 472 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.

வெளியில் தெரியாத சாதனையாளர்கள் - சமூகப் பங்களிப்புக்காக

1. மனம் மலரட்டும்: 1999 முதல் நடந்துவரும் அறக்கட்டளை. சரவணன் என்பவர் தலைமையில். கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர உதவி புரிந்துவருகிறது. பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தனிப் பயிற்சி கொடுக்கப்பட்டு இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்துள்ளனர். இதுவரையில் சுமார் 1,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சுமார் 70 பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். இப்போதைக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 250 கிராமங்களில் 1,200 மாணவர்களுக்கு 10, 12-ம் வகுப்புகளுக்கான சிறப்புப் பயிற்சி நடத்துகிறார்கள்.

[சரவணனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பயிற்சி நடத்தும் மாணவர் குழுக்களிடம் திருப்பத்தூரில் நான் உரையாடியுள்ளேன். ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு தனிப் பயிற்சி அளிப்பதில் இப்போது ஈடுபட்டுள்ளார். இவரது தொண்டார்வ நிறுவனம், வருமான வரி விலக்கு பெற்றது. பழங்குடி மற்றும் இதர கிராம மாணவர்களுக்கான கல்விக்கு பொதுமக்களிடமிருந்து நிதியுதவி தேவைப்படுகிறது. அது தொடர்பாகத் தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.]

2. Build Future India: அயலக இந்தியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம். மணி என்பவர் தலைமையில் நடக்கிறது. 60 பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகங்கள் ஆகியவற்றை வழங்குகிறார்கள். தென் தமிழ்நாட்டில் 6 பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக நடத்தும் பணியில் இருக்கிறார்கள். ஆலத்தூர் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் அரசு அமைப்புகளுடன் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில் இதுவரை 180 கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். மரம் நடுவதில் ஈடுபடுகின்றனர்.

3. அரவிந்த் தியாகராஜன்: கண்டுபிடிப்பாளர். 30 வயதுக்குள் 40 காப்புரிமங்கள் (Patents) பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் உந்தப்பட்டு, ஒரு கண்டுபிடிப்பாளராகத் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துவருகிறார். (மறைந்த) சத்ய சாயி பாபாவை இவர் சந்தித்தபோது, இவரை இந்தியாவிலேயே இருக்குமாறு சாயி பாபா கேட்டுக்கொண்டாராம். அதன் விளைவாக பட்டப் படிப்புக்குப் பின் அமெரிக்காவில் தனக்குக் கிடைத்த வேலையை உதறிவிட்டு இந்தியாவில் தன் பணியை இவர் தொடர்கிறார். கடைசியாக இவர் கண்டுபிடித்தது ஸ்டெதாஸ்கோப் போன்ற ஒரு கருவி - இதனைக் கொண்டு இதய ஓசைகளைக் கேட்டறியலாமாம். இதன்மூலம் செலவேதும் இல்லாமலேயே இதய நோய்களைக் கணிக்க முடியுமாம்.

***

இந்த ஆறு பேருக்கும் விருதுகள் சென்னையில் (எங்கு என்று தெரியவில்லை) சனிக்கிழமை 7 மே 2011 அன்று வழங்கப்படும்.

2 comments:

  1. விருது வழங்கும் விழாவுக்குச் செல்ல விரும்புபவர்கள், பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசனை
    91766 50273 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது prpoint@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். நன்றி.

    ReplyDelete
  2. அம்பேத்கார் சோசியலிசத்தை இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தவில்லை. காலஞ்சென்ற இந்திரா காந்தி செய்தார். அம்பேத்கார் நிச்சயம் அதிகாரக் குவிப்பு கொடுக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்பது மட்டும் திண்ணமாகத் தெரிகிறது.

    ReplyDelete