Tuesday, May 10, 2011

இலவசங்கள், மானியங்கள்

சென்ற வாரம் ஞாயிறு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா, நானா நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிய விவாதம். சிலர் பார்த்திருப்பிர்கள். தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

என் கருத்து:

* இலவசங்கள் மிக மிக ஆபத்தானவை.

* உணவு மட்டும்தான், அதுகூட ஒருவித மனிதாபிமானத்தின்படி, இலவசமாக அல்லது மானியத்தில் வழங்கப்படவேண்டும். அதைக்கூட ‘உரிமை’ என்ற பெயரில், ‘நான் இந்த நாட்டில் குடிமகன், எனக்கு இந்த நாட்டு அரசு உணவு கொடுத்தே ஆகவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இருக்குமாறு செய்யக்கூடாது. அவரவர் உழைத்து உண்பதே சரியானது. ஆனால் வயதானோர், சிறு குழந்தைகள், உடல்/மன நலமற்றோர், ஆதரவற்ற அதே நேரம் உழைக்கும் திறனற்றவர்கள் போன்றோருக்கு மட்டும்தான் உணவு வழங்கப்படுதல் வேண்டும். ஏழைகள் என்று குறிப்பாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு உணவுக்கான மானியங்கள் தரப்படலாம். அதுவும் மிகக் கவனமாக, நேரடி மானியமாக இருத்தல் நல்லது.

* அப்படியானால் கல்வி? அப்படியானால் மருத்துவம்?

* என் கணிப்பில் இவற்றுக்கும் சேர்த்து இலவசங்கள் தரப்படவே கூடாது. இலவசத்துக்கு எதிராகப் பேசியவர்கள்கூட உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு இலவசங்களும் மானியங்களும் தரப்படலாம் என்றார்கள். ஆனால் இங்குதான் ஒருவித recklessness வந்துவிடுகிறது. அரசு கல்விக்கூடங்கள் நடத்தினாலும் அதற்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும். அப்படியானால் பணம் கட்டமுடியாத ஏழைகளுக்கு? அவர்களிடம் deferred payment என்ற வகையிலாவது வசூலிக்கப்படவேண்டும்.

* எங்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையோ, அங்கு இரண்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒன்று தரமான சேவை அல்லது பொருள்கள் கிடைக்காது. (உ.ம்: இலவசக் கல்வி தரும் பள்ளிகளில் கல்வியின் தரம்.) இரண்டு, ஏகப்பட்ட பொருள்/சேவை வீணாகும். ஏழை, பணக்காரன் வித்தியாசமே இங்கு கிடையாது. இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். சென்னையில் பணக்காரர்களின் வீடுகளுக்கு flat rate கட்டணத்தில் குழாய் வழியாக நீர் கிடைக்கிறது. உண்மையில் மீட்டர் வைக்கப்பட்டு, மீட்டர் கணக்குக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் மெட்ரோ வாட்டர் அப்படிச் செய்வதில்லை. தண்ணீர் நன்றாக வரும்போது எங்கள் வீடுகளில் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் ஒரு நாள் தண்ணீர் வராமல் போனதும் நாங்கள் மெட்ரோ வாட்டர் லாரிமூலம் 9,000 லிட்டருக்கு ரூ. 600 என்று காசு கொடுத்து நீர் வரவழைத்தால் உடனே அத்தனை பேரும் தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்துவது பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்தடுத்து டாங்கர் வாங்குவதற்கு உடனே ஒப்புதல் தரமாட்டார்கள். எப்படியாவது ‘நிலத்தடி நீரை’ பயன்படுத்தமுடியுமா என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். மீட்டர் போட்டு அதற்கேற்ப வசூலிக்க ஆரம்பித்தால் இதே ஒழுங்கு அங்கேயும் வந்துவிடும். அடுத்த தெருவில் ஏழைகள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் டாங்கரில்தான் தரப்படுகிறது. ஒரு வீட்டுக்கு இத்தனை குடங்கள் என்பதுதான் கணக்கு. இலவசமாகத் தரவேண்டும் என்பதுதான் கணக்கு; ஆனால் குடத்துக்கு இத்தனை காசு என்று சிலர் ஓரத்தில் நின்று வசூல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கு தண்ணீர் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், குறைவு என்றாலும் ஒவ்வொரு குடமும் காசு!

* யார்தான் உரிமையாளர் என்று தெளிவாக இல்லாத பொதுச்சொத்துகள் என்றுமே பாழாகத்தான் போகும். இதைத்தான் Tragedy of the Commons என்று கட்டற்ற சந்தை ஆதரவாளர்கள் சொல்வார்கள். 9 அபார்ட்மெண்ட்கள் இருக்கும் எங்கள் கட்டடத்திலேயே பொதுச்சொத்துகள் வீணாவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய நாட்டில் இதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்!

* இலவசங்கள் அல்லது மானியங்களில் மற்றொரு மிகப்பெரிய பிரச்னையும் உள்ளது. Moral Hazard என்று இதனைச் சொல்வோம். நீங்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களுக்கு தண்டனை கிடைக்காது என்றால் நீங்கள் reckless ஆக மட்டுமே நடந்துகொள்வீர்கள். கல்வி இலவசம், உணவு இலவசம், மருத்துவ வசதி இலவசம் என்று எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது என்றால் திண்ணையில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு, தன்னிஷ்டத்துக்குக் குழந்தைகளைப் பெற்று மக்கள் தொகையை அதிகப்படுத்துக்கொண்டுதான் மக்கள் இருப்பர். தன்னுடைய மக்கள் வளமாக இருக்கவேண்டும் என்பதற்காக வேண்டிய பல உதவிகளை ஓர் அரசு செய்யத்தான் வேண்டும். ஆனால் அதற்கென ஒரு cost உள்ளது; அந்தச் செலவை மக்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் அரசுகள் விதிக்கவேண்டும். இல்லாவிட்டால் ‘ஊரான் நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்றுதான் ஆகும். நம் அரசுகள் இலவசங்களை வாரி வழங்கும்போது இவை பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.

* மெலிதான அரசு என்பதுதான் என் கொள்கை. பல்வேறு விஷயங்களை சந்தைதான் தீர்மானிக்கவேண்டும். சந்தை சரியாக, நியாயமாகச் செயல்படுகிறதா என்பதை மட்டுமே அரசுகள் கவனித்துக்கொள்ளவேண்டும். எதையெடுத்தாலும் அரசுதான் செய்துதரவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தன்முனைப்பையும் நியாயமான வளர்ச்சியையும் கெடுத்துவிடும். அதனால் நாட்டுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல.

46 comments:

 1. பத்ரி,

  நீங்க பிரேசில், அர்ஜண்டைனா அல்லது ரியல் மாட்றிட், பார்சிலோனா, ஏசி மிலான் மாதிரி கிளப்புகளில் கால்பந்து விளையாடப் போகலாம். செமையா சேம் சைட் கோல் அடிச்சீங்க. ராமசாமி நொந்து போய்விட்டார். மற்றொன்று, One of the guests said that the trickle down effect did not come to fruition, but he carefully avoided saying why it did not take effect. Well, it was due to plain corruption. The massive projetcs of the 60s needed at least a decade for the trickle down effect to take shape but by then corruption had come to various areas of government. Once Rajiv Gandhi was on record saying that for every rupee spent on welfare schemes only 16 paise reached the beneficiary. This was nearly 23 years ago. Now, I guess that figure is less than 10 paise for every rupee spent. அப்பறம் trickle down ஆவது மண்ணாவது. ஆனால், சொம்படி கெஸ்ட் நான் முன்னே கூறியதை உறுதி செய்தார். அதாவது நம்ம ஊரில் % வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற கணக்கெல்லாம் ஒரு குன்சாகத்தான் சொல்லப் படுகிறது என்பது.

  ReplyDelete
 2. நல்ல கருத்துக்கள். அரசு இதை கவனத்தில் சரியாக கொள்ள வேண்டும். நீங்களே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாமே! நன்றி!

  ReplyDelete
 3. ஆமாம். ஆமாம்.

  கல்வியானாலும் விற்கப்பட வேண்டும்.

  ஆனால், சாமியார்கள் அதுவும் இந்து சாமியார்கள் தரும் யோகப் பயிற்சிகள் மட்டும் இலவசமாகத் தரப்பட வேண்டும்.

  இந்து சாமியார்கள் காற்றைக் குடித்துக்கொண்டு மட்டுமே பிழைக்க வேண்டும்.

  வேலை வாய்ப்பு தரக்கூடிய துறைகளைப் பயிற்றுவிக்கும் கல்விநிலையங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற நிலை மாறி, கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை வரவேண்டும்.

  ஏழைக் குழந்தைகள் ஏதேனும் கூலிவேலைக்குத் தகுந்த படிப்பு மட்டுமே படித்தால், அதுவும் அவர்கள் அப்பன் ஆயி இருக்கும் குடிசையை விற்றுப் படிக்க வைத்தால் மட்டுமே அந்தப் படிப்பும் தரப்படவேண்டும். அதுவும் சிறுபான்மையினர் என்ற பெயரில் அரசாங்கத்திற்குக் கணக்குக் காட்டத் தேவையில்லாத மத அமைப்புகளுக்கு மதம் மாறி படித்துக் கொள்ளலாம்.

  வாழ்க செக்யூலரிசம்.

  ReplyDelete
 4. இலவசங்களும் மானியங்களும் சோசியலிச அரசின் கொள்கைகளாகவே பார்க்கமுடியும்.

  எல்லோரும் சோம்பேறிப் பிச்சைக்காரர்களாக இருந்தாலொழிய இலவசங்கள் கொடுப்பதில் அர்த்தமில்லை. எல்லோரையும் சோம்பேறிப் பிச்சைக்காரர்களாக ஆக்க வேண்டுமானால் இலவசங்கள் கொடுக்கப்படலாம். அது தான் நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

  Socialism, while presented as a means of assuring equality, does so through “restraint and servitude”, while “democracy seeks equality in liberty
  -F.A. Hayek.

  ReplyDelete
 5. தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் எப்பொழுதுமே மக்களை மேம்படுத்த முனைவதே இல்லை . அவர்கள் மக்களை முன்னேற்றாமல் சோம்பேரிகளாகவே வைத்து அரசியல் நடத்தவே செய்கின்றனர். உதாரணமாக ஹிந்தி எதிர்ப்பு என்று மக்களை ஏமாற்றி அவர்களை ஹிந்தி படிக்க விடாமல் செய்து தன்னுடைய பிள்ளைகளை மட்டும் ஹிந்தி படிக்க வைத்து டெல்லிக்கு அனுப்புவது. மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சால சிறந்தது என்பது பழமொழி இன்று அரசியல் வாதிகள் மக்களுக்கு மீனை தந்து மக்களை சோம்பேரிகளாகவே வைத்து அரசியல் நடத்தவே செய்கின்றனர்.

  ReplyDelete
 6. i agree with your points on water,Tragedy of commons,moral hazards.

  i disagree with your core government system.I feel it is not much practial in the present situation.

  எந்த அளவிற்கு இலவசம் வழங்கப்பட வேண்டும் என்பதை மேடையில் சொல்லி இருக்கலாமே !! I felt a biased nature in your speech while watching.Thanks for the explanation of your ideas in this post.

  ReplyDelete
 7. Thanks for writing this.

  Vijay TV off-late has become a propaganda machinary for the ruling DMK thru this program. They do it in a very subtle and intelligent manner. They delibrately choose to promote one side of the topic (rather propoganda) and choose a weak folks for the side that is against their agenda. I have heard it from few friends of mine who tried to participate in it before and got it confirmed thru N.Murugan (retd IAS) when he tweeted about a DMK bigwig sponsoring for freebie side in this debate.

  Waiting to see when Amma takes over :-))

  - Shanks

  ReplyDelete
 8. பார்த்தேன். பார்த்தவுடன் கோபியோ அல்லது யாராவது இந்த 2 பாயிண்ட்களை கேட்பார்கள் என்று தோன்றியது.
  1 . பெர்சனலாக கேட்கிறேன் என்று என்ன வேண்டாம்.
  எவ்வளவோ மானியத்தில் தரப்படும் தரமான IIT கல்வியை தானே நீங்கள் பெற்றீர்கள். அது உங்களுக்கு பலனளித்தது தானே.
  சரி இந்தியா வெல்ஃபேர் ஸ்டேட் கொடுத்தது, பெற்றுக்கொண்டீர்கள்.
  பிறகு அமெரிக்க கார்னெல் பல்கலையிலும் assistantship , scholarship எதாவது இன்றி உங்களால் PhD செய்திருக்க முடியுமா? உங்களுக்கு பலனளித்த ஒரு இலவசம்/மானியம் (in whatever term you may call it) ஏன் மற்றவர்களுக்கு வேண்டாம் என்கிறீர்கள்.

  2 . ஊர்ப்பெரியவர்கள் 10 பேர் சேர்ந்து இல்லாத கிராமத்தார்களுக்கு உதவி, கல்வி, ரோடு எல்லாம் செய்யவேண்டும் என்கிறீர்கள். "நாட்டாமை" "எஜமான்" போன்ற படங்கள் காட்டும் நிலப்பிரபுவத்துக்கும் , நீங்கள் சொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

  ReplyDelete
 9. இட்டிலிக்கடை சரத்பாபுவின் சிந்தனை தட்டைத்தனம் (shallowness ?) எக்ஸ்போஸ் செய்யப்பட்ட விதத்தில் இந்த நீயா நானா சிறப்பு. "நான் இதுவரைக்கும் 10 லட்சம் பில்லைகளை.. (ளை இல்லை)" என்று ஆரம்பிக்கும்போதெல்லாம் தட்டி உட்கார வைக்கப்பட்டதை ரசித்தேன். அது மட்டுமன்றி சாதுவாக அமர்ந்திருந்த சொக்கர், செந்தமிழன், இமையம் போன்றோர் பிய்த்து உதறினதையும் மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 10. பத்ரி..
  உங்களுடைய கொழுப்பெடுத்த கொக்கரிப்பைப் பார்த்துத் தொலைத்தேன். மண்ணாங்கட்டி. மருத்துவத்துக்காவது deferred payment என்ற கருத்தை ஒப்புக்கொள்ளலாம். கல்வியையும் மெட்ரோ வாட்டர் தண்ணீரையும் ஒப்பிடுகிறீரே? அடுக்குமா? சரியான பாடத்திட்டத்துக்குள் கொண்டுவந்து ஆசிரியர்களுக்கு சரியான தேர்வுமுறை, பயிற்சி சம்பளம் எல்லாம் கொடுத்து தனியார் பள்ளிகளை இழுத்துமூடி சரியாக நடாத்தினால் அருமையான இலவசக்கல்வி Scheme கொண்டுவரலாம் எந்த அரசும். கறுமம் கல்வியைப் போய் commodity ஆக்கினால் இல்லாதவன் பிள்ளை கல்லாமலே இருக்கும். தனியார் பள்ளிக்கூடங்கள் என்கிற பெயரில் எத்தனை கொள்ளை நடக்கிறது தெரியுமா? கல்விக்குக் கட்டணம் வாங்கவேகூடாது. கல்வியைச் சந்தைப்பொருளாக்கச் சொல்லிக்கூவும் உம்மைமாதிரி ஆட்கள்தான் உண்மையில் சமூகவிரோதிகள்... வாழ்க நீவிர் வாழ்க உம் சுற்றம். மற்ற எல்லாரும் நாசமாப் போங்கடா..

  ReplyDelete
 11. நடராஜ்: பொதுவாக ஒரு கொள்கையை முன்வைக்க வரும்போதெல்லாம் ‘நீ என்ன செய்தாய்? இதைச் சொல்ல உனக்கு என்ன வாய் இருக்கிறது?’ என்று கேள்விகள் எழுகின்றன. கொள்கை என்பது இவற்றைத் தாண்டி முன்வைக்கப்படுவது. நான் என் வாழ்க்கையில் நிறைய பொய் பேசியிருக்கிறேன். ஆனால் உண்மை பேசுவது அவசியம், தேவை என்ற ஆதர்சத்தை இப்போதும் நம்புகிறேன். உண்மை பேசுவதை அதிகமாக்கவும் பொய் பேசுவதைக் குறைக்கவும் முயற்சி எடுக்கிறேன் (என்று நம்புகிறேன்). நீதான் பொய் பேசிவிட்டாயே, இனி ஏன் பிறர் மட்டும் உண்மை பேசவேண்டும் என்று கேட்கிறாய், பொத்திக்கொண்டு ஓடு என்பீர்களா?

  ஐஐடி எனக்கு அளித்தது இலவசக் கல்வி அல்ல. மானியக் கல்வி. அதற்குக் கட்டணம் இருந்தால் கொடுத்திருப்பேன். முடியாவிட்டால் எங்காவது ஓர் ஓரத்தில் எதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்திருப்பேன். அல்லது (இந்திரா பார்த்தசாரதி மன்னிக்க!) பிஏ தமிழ் படித்திருப்பேன்! ஐஐடி கட்டணத்தை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளனர். மேலும் அதிகரிக்கவேண்டுமானால் செய்யலாம், தவறில்லை.

  அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் எனக்கு சும்மா பணம் கொடுக்கவில்லை. முதல் ஆண்டு அந்தப் பல்கலைக்கழகம் நான் அங்கே படிக்கவேண்டும் என்று வேண்டி விரும்பிப் பணம் கொடுத்தது. இல்லாவிட்டால் வேறு பல்கலைக்கழகத்துக்குப் போயிருப்பேன். அடுத்த இரண்டாண்டுகள் ஐபிஎம் நிறுவனத்துக்காக ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி செய்ய ரிசர்ச் உதவித்தொகை கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த ஆராய்ச்சி முடிவுகளை அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த இரண்டாண்டுகள் இளநிலை மாணவர்களுக்கு படிப்பு சொல்லித்தரும் டீச்சிங் அசிஸ்டண்ட்ஷிப் வேலை. பாடம் நடத்தினேன், சம்பளம் கொடுத்தார்கள்.

  ஆக, வேலை செய்யவைத்து, அதற்கு ஏற்ற சம்பளம் தருகிறார்கள். தண்டச்சோறு அல்ல.

  ஏழைகள் படிக்கக்கூடாது என்பதில்லை. தம் பிள்ளைகள் படிக்க, பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்க வழியற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் அரசு, தேவைப்படும் உதவிகளைச் செய்துகொடுத்து, பணத்தைப் பின்னர் வசூலிக்கவேண்டும். இலவசம் என்பதில்தான் சிக்கலே வருகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கொடுக்கும் சப்சிடி கட்டாயமாக நிறுத்தப்படவேண்டும். நாட்டில் 100 மாணவர்களுக்கு 13 மாணவர்கள்தான் கல்லூரிப் பக்கமே வருகிறார்கள். இவர்களுக்காக நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சப்சிடி கொடுப்பது அநியாயம். அவரவர் சொந்தக் காசில்தான் படிக்கவேண்டும்.

  நிஜமாகவே மனிதவளம் தமக்குத் தேவை என்று நிறுவனங்கள் கருதினால் அவை தாமாகவே பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மேல்படிப்புக்கான ஸ்காலர்ஷிப் தரும். அது ஆதாயம் கருதித் தரப்படும் தொகை. அதற்கேற்றபடி அந்த மாணவர்கள் கல்விக்குப் பின் அந்த நிறுவனத்தில் சில காலம் வேலை செய்யவேண்டியிருக்கும்.

  ReplyDelete
 12. பத்ரி, உங்களை எடுத்துக்கொண்டது ஒரு காண்டக்ஸ்ட்-க்காக..எப்படி உங்கள் மொத்த பாயிண்ட்களும் ஒரு கிரீஸ் 'ஓட்டாண்டி' உதாரணத்தில் வந்து குவிந்ததோ அது போல்.

  உங்கள் அறிவு, திறமை, வேலைக்கு தான் சீட் குடுத்தார்கள், காசு கொடுத்தார்கள், ஃபீஸ் குறைத்தார்கள்... சந்தேகமில்லை. TA , RA , subsidized fees , scholarship etc etc போன்ற avenues உருவாக்கப்பட்டதே affordability காக தானே..ராமானுஜம் கும்பகோணத்தில் ஏதேனும் ஒரு பண்டாபிசில் கணக்காளராக வாழ்க்கையில் கரைந்து போவதற்கும், 'கணிதமேதை'யாக அறியப்பட்டதற்கும் ஒரே வித்தியாசம், அவருக்கு அதற்கான (இங்கிலாந்து செல்லும், ரிசர்ச் இன்னபிற) வாய்ப்பு, affordability யாரோ ஒரு புண்ணியவானால்/அமைப்பால் வாய்த்தது தானே காரணம்...

  ReplyDelete
 13. On a totally different note, சரத்பாபு கொண்டாடப்படும் போதெல்லாம் "அடப்பாவிகளா, பத்ரி போன்ற நிஜ entrepreneurial சாதனையாளர்கள் இருக்கிற ஊர்ல இவர கொண்டாடுறீங்களே" என்று தோன்றும். உங்கள் இருவரையும் ஒரே தளத்தில் பார்த்ததில் உங்களிருவருக்குள் விவாதம் ஏதோ பொறி பறக்கும் என்று நானாகவே கற்பனை செய்து கொண்டேன். ட்விட்டரில் வேறு யாரோ "பத்ரி, சரத் தலையில் ஓங்கி கொட்டுங்கள்" என்றதாக ஞாபகம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் பாட்டுக்கு சட்டசபைக்கு வந்து கையெழுத்து போட்டு செல்லும் ஜெயலலிதா, கலைஞர் போல் சப்பென்று போய்விட்டது. :)

  ஆமா, உங்கள் தரப்பு தெரிந்தும் அந்த சைடில் உட்கார வைத்தார்களா என்ன? கொஞ்சம் பின்னணி தகவல்கள் கொடுத்தல் தேவலை..

  ReplyDelete
 14. "உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கொடுக்கும் சப்சிடி கட்டாயமாக நிறுத்தப்படவேண்டும். நாட்டில் 100 மாணவர்களுக்கு 13 மாணவர்கள்தான் கல்லூரிப் பக்கமே வருகிறார்கள். இவர்களுக்காக நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சப்சிடி கொடுப்பது அநியாயம். அவரவர் சொந்தக் காசில்தான் படிக்கவேண்டும்"

  இப்படி ஒரு அபத்தமான கருத்தை உங்களிடம்மிருந்து நான் எதிர்ப்பார்க்கவே இல்லை!!.

  ReplyDelete
 15. //
  ராமானுஜம் கும்பகோணத்தில் ஏதேனும் ஒரு பண்டாபிசில் கணக்காளராக வாழ்க்கையில் கரைந்து போவதற்கும், 'கணிதமேதை'யாக அறியப்பட்டதற்கும் ஒரே வித்தியாசம், அவருக்கு அதற்கான (இங்கிலாந்து செல்லும், ரிசர்ச் இன்னபிற) வாய்ப்பு, affordability யாரோ ஒரு புண்ணியவானால்/அமைப்பால் வாய்த்தது தானே காரணம்...
  //

  அது யாராவது புன்னியவானாக இருப்பது தான் நல்லது (private individual). அரசு அப்படி புன்னியம் தேடிக்கொள்ள எந்த அவசியமும் இல்லை என்பதே பத்ரி போன்றவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் போய் ஏ.சி. மிலானில் சேர்ந்துகொள்ளுங்கள் நல்லவே சேம்சைடு கோல் அடிக்கிறீர்கள்.

  ReplyDelete
 16. //
  நிஜமாகவே மனிதவளம் தமக்குத் தேவை என்று நிறுவனங்கள் கருதினால் அவை தாமாகவே பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மேல்படிப்புக்கான ஸ்காலர்ஷிப் தரும். அது ஆதாயம் கருதித் தரப்படும் தொகை. அதற்கேற்றபடி அந்த மாணவர்கள் கல்விக்குப் பின் அந்த நிறுவனத்தில் சில காலம் வேலை செய்யவேண்டியிருக்கும்.
  //

  நிறுவனங்களும், தனிமனிதர்களுக் ஆதாயம் கருதி ஊக்கத்தொகை தந்தால் தப்பில்லை. அரசு மட்டும் ஆதாயமே கருதாமல் ஊக்கத்தொகை மட்டும் தந்துகொண்டே இருக்கவேண்டும் என்று சில ஜோல்னா பையன்கள் அபத்தமாக கூறுகிறார்களே...கேட்டால் சமூகநீதியாம். பொடலங்காய் சமூகநீதி. அப்படி அபத்தமாக கூறுவதுமில்லாமல் சொந்தக்காசில் படிங்கடா என்று சொன்னால் அது அபத்தமாம். மண்டையில் மசாலா இருந்தால் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இல்லாட்டி சொந்தக்காசில் படி முன்னேறு, யார் தடுத்தார்கள் ?
  என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். கேக்குறவன் கேணையா இருந்தா......

  ReplyDelete
 17. பத்ரி,

  பல விஷயங்களைப் பெரும்பாலான சூழ்நிலைகளில் இலவசமாகக் கொடுக்கக் கூடாது. அதே சமயம் சில விஷயங்கள் எந்தச் சூழ்நிலையிலும் விற்கப்படக் கூடாது.

  விலை வைப்பதுதான் ஒரு விஷயத்திற்கு மதிப்பைத் தரும் என்பது கேப்பிட்டலிஸத்தின் தவறான புரிதல்.

  இன்னும் சில வருடங்கள் கழித்து இது உங்களுக்குப் புரியலாம் பத்ரி. ஆனால், அப்போது காற்றை சுவாசிக்கக் கட்டணம் கேட்கப்படும்.

  அப்போது இந்துத்துவம் என்பது கெட்ட வார்த்தையாக இருக்காது. அவசியமான புரட்சியாகத் தெரியலாம்.

  .

  ReplyDelete
 18. //...இலவசங்களும் மானியங்களும் சோசியலிச அரசின் கொள்கைகளாகவே பார்க்கமுடியும்...//

  அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை வஜ்ரா சார். பெரும்பாலான யூரோப்பிய நாடுகள் கேப்பிட்டலிச நாடுகளே. முக்கியமாக மேற்கு யூரோப்பிய நாடுகள். அங்கெல்லாம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்கள் முற்றிலும் இலவசமே.

  அத்தகைய கேப்பிட்டலிஸம் நல்லதே செய்யும். செய்கிறது.

  பத்ரி சார் பள்ளிக்கூடம் கட்ட முடிவு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். :)

  பள்ளிகளை வியாபாரமாக்க முடியும் என்று முதன் முதலில் இந்தியாவில் காட்டிய கிறுத்துவ அமைப்புகளுக்கு, அந்தப் பள்ளித் திறப்புவிழாவிற்குக் கட்டாயமாக பத்ரி இன்விட்டேஷன் அனுப்புவார் என்று நம்புகிறேன். :)

  .

  ReplyDelete
 19. அய்யா பத்ரிநாத்தாரே .... அய்.அய்.டியில் அரசு நிர்ணயித்த தொகையில் படித்தீர்கள் ரைட்டு .... இப்ப அந்த மானியம் தரப்படக்கூடாது என்று விவாதம் செய்கிறீர்கள். சரி, அன்று பெற்ற மானியத்தின் இப்போதைய மதிப்பு கணக்கு செய்து அய்.அய்.டிக்கு திருப்பிக்கொடுக்கலாமே? ?

  ReplyDelete
 20. சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்று இந்தப் பதிவில் ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

  விலை வைப்பது இரு காரணங்களுக்காக. ஒன்று, அந்தச் சேவையை அல்லது பொருளை அனைவருக்கும் தர விரும்புவோருக்கு ஓர் ஊக்கம் தரவேண்டும் என்பதற்காக; அதாவது லாபம் வேண்டும். கல்வி வழங்குனர்களுக்கும் லாபம் செல்லவேண்டும். உணவு வழங்குபவர்களுக்கும் லாபம் செல்லவேண்டும். மருத்துவச் சேவை வழங்குவோருக்கும் லாபம் வேண்டும்.

  இரண்டாவது, விலை இருந்தால்தால் நுகர்வோர் தம் உரிமைகளுக்காகப் போராடுவர். நாலு கேள்விகளைக் கேட்பர். மோசமான சேவை என்றால் சந்திக்கு இழுத்து மானத்தை வாங்குவர்.

  லாப நோக்கில் ஒரு சேவையைத் தரும்போது சேவை வழங்குவோர் ரத்த உறிஞ்சி அட்டைகளாக மட்டுமே நடந்துகொள்வார்கள் என்று நினைப்பது இந்தியாவின் எண்ணற்ற தொழில்முனைவோரையும் நியாயமாகத் தொழில் செய்வோரையும் கேலி செய்வதாக அமையும்.

  ***

  மற்றபடி முழுமையான சேவை நோக்கில் கட்டணம் ஏதும் இன்றி யாரேனும் உணவு வழங்கல், கல்வி வழங்கல், மருத்துவம் வழங்கல் ஆகியவற்றைச் செய்தால் அதனை நான் நிச்சயமாக வரவேற்கிறேன். அவர்களுக்கு என்னால் முடிந்த பொருள் உதவியையும் தரத் தயாராக இருக்கிறேன்.

  ReplyDelete
 21. அனானி: நிச்சயமாக ஐஐடிக்கு மட்டுமல்ல, நான் கல்வி பயின்ற சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளி, நாகப்பட்டினம், தேசிய மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம் இரண்டுக்கும் பணத்தைத் திருப்பித்தரத் தயாராக உள்ளேன். அரசோ, கல்வி நிலையங்களோ கேட்காவிட்டாலும்கூட இதனை நான் நன்கொடையாகச் செய்கிறேன். இதுபற்றி பின்னர் அறிவிக்கிறேன்.

  ReplyDelete
 22. I& my friends here do not agree with you Badri.
  You resemble CHO's view.

  Immmm... it take more time to wipe out these thoughts. Let us wait till..

  Senthil
  Kuwait

  ReplyDelete
 23. சுழியம்,

  பெரும்பாலான மேற்கு ஐரோப்பா நாடுகளில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவது உண்மை தான். மறுக்கவில்லை. அங்கெல்லாம் 100க்கு 99% அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழியாக இருப்பதில்லை. எப்பொழுது ஊழல் இல்லாத அரசு இங்கும் அமையுமோ அன்றே கல்வி, மருத்துவம் இரண்டையும் இலவசமாக்கிவிடலாம்.

  அந்த நாட்டில் அப்படி செய்கிறார்கள். இந்த நாட்டில் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்து காப்பியடித்து செய்வதைவிட நம் நாட்டுக்கு எது ஒத்துவரும் என்பதையல்லவா நாம் பார்க்கவேண்டும், செய்யவேண்டும் ? காப்பிடலிசம் தான் சர்வரோக நிவாரணி என்று நாம் நம்பவில்லை. அதேபோல் சோசியலிசம் தான் ஒரே தீர்வு என்று நீங்களும் நம்பவில்லை என்றே நினைக்கிறேன். இலவசங்களும் மானியங்களும் கோட்டாக்களும் சோசியலிச அரசின் செயல்களே.

  ReplyDelete
 24. //
  சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்று இந்தப் பதிவில் ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
  //


  "When it was conventional political expediency to decry entrepreneurship, we championed their cause."
  -A. B. Vajpayee.

  ஏப்ரல் 28. 1998 அன்று வாஜ்பாயி CII க்கு ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டிருந்தால் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.

  அதன் எழுத்துவடிவம் இங்கே: http://broadmind.nationalinterest.in/2011/05/ab-vajpayee-cii-speech-april-1998/

  ReplyDelete
 25. @ the guy who thought Sarath is xposed..

  Buy cutting and editing a speech you can make anyone look bad if you wanted to. Vijay TV and Neeya Naana team exactly did that and their agenda is to lift sombu for freebies (with one side sponsored by DMK)

  - Shanks

  ReplyDelete
 26. Just now saw the video from techsatish.

  I don't know why Badri was put up on the "for freebies" side. Vijay TV had very little intelligent faces on "against freebies" side. Nobody (actually nobody) was accepting what Badri said.

  People from both sides are against badri's views. This is strange. I completely agree with badri as Decentralized governance is what delivers. Only then the interest of the governed and the government will be the same.

  Even in most Western countries which are perceived as "Welfare state", governance is very much decentralized. Village level local level elections decide the quality of life, education and infrastructure facilities.

  For example, in Germany, France, or Sweden (The proverbial welfare states) roads are not laid by national highways authority or some central authority. Its always the village/town district/arrondisment administration that takes care of roads, cleaning garbage, public amenities, water, electricity, parks, etc., National highway authority will lay Highways that connect the nation from top to bottom.

  ReplyDelete
 27. //என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். //

  அப்படின்னா கடல்ல போய் குதி .

  ReplyDelete
 28. Gopi delibrately heckled Sarath and others for not knowing A.Ramasami. In yet another program he did the same thing when some of the participants not knowing Kalyani.

  ReplyDelete
 29. //
  //என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். //

  அப்படின்னா கடல்ல போய் குதி .
  //

  ஓசியில வாங்கித்திங்கனும்ன்னு நினக்கிறவனுக்கு இவ்வளவு கோபம் வருதாக்கும் ?

  ReplyDelete
 30. பெரும்பாலான யூரோப்பிய நாடுகள் கேப்பிட்டலிச நாடுகளே. முக்கியமாக மேற்கு யூரோப்பிய நாடுகள். அங்கெல்லாம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்கள் முற்றிலும் இலவசமே//////

  1) இது முற்றிலும் தவறு, மருத்துவத்திற்கென்று ஒரு பகுதி உங்கள் மாதவருமானத்தில் பிடித்துக்கொள்ள்ப்படும் (Health insurance is mandatory for everyone who is earning, housewife and children will also be included with husband) மற்றும், உங்கள் காப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ள மிககுறைந்தபட்ச அளவேயானால் சில வியாதிகளுக்கு மருத்துவம் கிடையாது. உ.ம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம், ஆனால் ஏதாவது நோய் எதிர்கால்த்தில் வருமா என்றறிய (down syndrome) featal chromosome (NT-test)and test for toxoplasmosis, போன்றவற்றிற்கு காப்பீடு கிடையாது. தலைக்கவசம் இல்லாமல் மிதிவண்டியில் செல்லும் பொழுது நடைபெறும் விபத்திற்க்கு காப்பீடு கிடையாது (Europe Mr. Watson !!) (இந்த அறிவியல்பூர்வமான கொள்ளை வேறு கிளைக் கதை) சுருக்கமாக, மருத்துவம் இலவசமில்லை atleast in UK, Germany, France, Italy, Swiss, Norway, Swedon, Austria, Belgium, Czech Republic.

  2)கல்வி, பள்ளிகளில் இலவசம். பல்கலைகழகங்களில் கிடையாது. சிலநாடுகளில் எங்கப்பாருக்கு நான் மூணாவது பிள்ளையென்றால் கட்டணம் கிடையாது.

  இந்த point எழுதியதால் நான் பத்ரிக்கு support கிடையாது

  ReplyDelete
 31. Market will not provide education for poor, nor will provide health care for poor.Market will not provide vaccination on a massive scale unless it sees a profit in it.But the profit there may not be worth the effort and money.
  So should state say no to interventions like mass vaccination and leave the market to decide
  on life and death issues.Vaccination will save lives and state cannot act like a business person in this.
  Higher education should be made affordable and subsidising that is necessary when those who need it cant afford it.
  Had the govt. decided to recover the full cost of providing education by IITs and insisted that there would be no subsidies of any kind with 100% cost recovery and only loans would be
  available for those who cant to pay how many of you of the previous generations which enjoyed the state's generous support including subsidy would have been able to get B.Techs,M.Techs and Phds. Your parents would have found it difficult to get loans as banks would have refused to give loan in the absence of security or acceptable guarantor. Or they would have to sell or mortage assets and/or go for loan from finaciers. So what options would have been there for them.
  You want to kick away the ladder since you longer need it.But you in this post you not only
  want to justify that but also argue that now there should be no ladder.You have enjoyed a benefit and now you want that others born after your generation should be deprived of this benefit.This is plain selfishness and hypocrisy.

  In USA too many state universities are supported with funding from govt. Although there has been drastic cuts in funding, still state supports
  them with financial support.In UK and Europe the higher education system is still supported by states.In all this there is an element of subsidy or partial financial support.You need to understand one thing- in no country 100% free market philosophy is practised as govt. policy.
  Milton Friedman school of economics is not followed in USA where it is big business that benefits massively from tax breaks and other schemes of the govt. You are either arguing for the sake of arguing or you are a free market fundamentalist who is yet to understand the real world.

  ReplyDelete
 32. சொன்னதெல்லாம் சரிதான். ஆனா பூனைக்கு மணி கட்டப்போவது யார், நம் மாக்களா, ம் நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கி கொள்ளும் கல்விதானே போதிக்க பட்டுள்ளது , பிறகு இதற்க்கெல்லாம் நேரம் நம் மக்களுக்கு ஏது, உண்மையான மக்கள் தலைவனுக்காக ஏங்கி கொண்டுள்ளது தமிழகம்

  ReplyDelete
 33. "" ** நாட்டில் 100 மாணவர்களுக்கு 13 மாணவர்கள்தான் கல்லூரிப் பக்கமே வருகிறார்கள். இவர்களுக்காக நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சப்சிடி கொடுப்பது அநியாயம். ** ""

  பத்ரி அவர்களே,

  காஷ்மீர்ல் பாதுகாப்புகாக நான் ஏன் வரி செலூத்த வேண்டும் ......? காஷ்மீர் மாக்களிடமே வசூளிக்கட்டும்...
  தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும்பொது, ராணுவ பட்ஜெட்டுக்கு ஏன் என் வரி பணம் செலவிட வேண்டும் .....?

  நீங்கள் சொல்வது போல அரசின் அனைத்தும் செயல்பாடுகளுக்கும் ஒரு cost உண்டு....
  அப்படி ஆனால் அரசு என்னக்கு செய்யும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு என்ன cost ஆகிறதோ அதை மட்டும் அரசு என்னிடம் வசூளிக்கட்டும்......
  ஏதற்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என இத்தனை வரிகள் .........
  நான் எதர்க்கு வேறு ஒருவருக்கு செய்யப்படும் அடிப்படை வசதி,பாதுகாப்பு போன்றவற்றிக்கு வரி செலுத்த வேண்டும்....????

  இது அநியாயம் இல்லையா.......!!!!

  "மெலிதான அரசு என்பதுதான் உங்கள் கொள்கை" என்றல்......

  இவ்வாறு cost மட்டும் வசூல் செய்யும் அரசு மட்டுமே மெலிதான அரசாக இறுக்க முடியும்....

  இனி இலவசங்கள் மற்றும் மானியங்கள் பற்றி வருகிறேன்......


  இலவசங்கள் மற்றும் மானியங்கள் இரண்டாக வரையரக்க வேண்டும்....

  நாட்டின் வளர்சிக்கானது
  கட்சி வளர்சிக்கானது

  நாட்டின் வளர்ச்சிக்கான இலவசங்கள் மற்றும் மானியங்கள்

  கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம் போன்றவற்றிக்கு கொடுக்கபடும் இலவசங்கள் மற்றும் மானியங்கள்.....

  பெரிதும் நாட்டின் வளர்ச்சிக்கே உதவும்....

  கல்வி கூட ஒரு கட்டணத்துடன் தான் வழங்கப்பட வேண்டும் என்றால்... பெற்றோர்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றால்.....

  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, கல்வி அறிவு இல்லாத, பொறுப்பற்ற பெற்றோரின் குழந்தைகளின் நிலை என்ன...????

  ???? ஆம் கேள்விகுறிதான் ?????

  அந்த குழந்தைகளும் வளர்ந்து மீண்டும் பொறுப்பற்ற பெற்றோராக தான் ஆவார்கள்..... சமூக மாற்றம், வளர்ச்சி இல்லாமல் போய்விடும்..

  சமூக மாற்றம், மனிதவள மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சி கல்வி சார்ந்தே இருக்கும்.

  அதனால் கல்விக்கு கொடுக்கபடும் இலவசங்கள் மற்றும் மானியங்கள் அநியாயம் ஆகாது...

  உங்கள் வரி பணம் சமூக மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கே உதவி இருக்கிறது ...

  சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இலவசம் இல்லை என்றால்...
  அன்றாடம் வாயிற்று பிளைபிற்கே போராடும் மக்கள் எப்படி பிழைப்பது....?

  இன்று தனியார் மருத்துவமனைகள் பல நடுத்தர வர்கதினரே சிகிச்சை பெறமுடியாத அளவிற்கு கட்டணம் வசூலிக்கின்றன. பின் ஏழைகளின் நிலை என்ன ஆவது...??

  அமெரிக்க போன்ற தனியுடைமையை போற்றும் நாடுகளே Social Security Measure என்ற பெயரில் இலவசமாக மருத்துவ வசதிகள் அளிக்கின்றன.

  அரசு கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம் போன்றவற்றிக்கு கொடுக்கபடும் இலவசங்கள் மற்றும் மானியங்கள் நாட்டின் வளர்ச்சிக்கே....

  கட்சி வளர்ச்சிக்கான இலவசங்கள் மற்றும் மானியங்கள்

  அரசு எந்தவித வளர்ச்சியும் ஏற்படுத்தாத , இலவசங்கள் மற்றும் மானியங்கள் வழங்குவது வாக்கு வங்கியை குறிவைத்தே...

  உதாரணமாக இலவச கலர் டிவி, அடுப்பு, வீடு, மின்சாரம்(விவசாயம் அல்லாது), மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, போன்றவை...

  இந்த இலவசங்கள் நாட்டிற்கு எந்தவித வளர்ச்சியையும் தரபோவது இல்லை.

  கட்சியின் ஒட்டு வங்கி கூட வளர்ச்சி பெறவில்லை.... (2011 தேர்தல் முடிவுகள் சாட்சி)

  "ஆகா நாட்டின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் இலவசங்கள் மற்றும் மானியங்களை இவற்ற்றோடு ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல"

  தங்கள் கருத்துக்கள் capitalism சிந்தனை மேலோங்கி இருக்கின்றன.

  தங்கள் அமெரிக்க வாழ்கை இந்த தாகத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

  இலவச கல்வியினால் நாட்டிற்கு என்ன பாதகம் நிகழ்ந்து விட்டதாக நீங்கள் காருத்துகிறீர்கள்...?

  ஒரு அரசு வியாபார நிறுவனம் போல இயங்க முடியாது. நிர்வாகம், ஆட்சி தாண்டி அரசிற்கு சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்பதை ஏற்று கொள்ளதான் வேண்டும்.

  ஆகிலேய அரசு கூட ஆட்சி மட்டும் தான் தங்கள் கடமை என்று நினைத்து இருந்தால் இன்று, ஆனைவரும் கல்வி பெற முடியாது (கட்டணம் கொடுத்து கூட), தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் என்று எந்த சமூக மாற்றமும் இல்லாமல் போயிருக்கும்.

  ஆகா ஒரு வல்லரசு வேண்டுமானால் மெலிதான அரசாக இருக்கலாம். ஓர் நல்லரசு இருக்க முடியாது.

  ஒரு பாமரன் வாங்கும் தீ பெட்டிக்கு கூட வரி வசூல் செய்யும் அரசு. எந்த வளர்ச்சி நலத்திட்டதிலும் செலவு செய்யவில்லை என்றால் இத்தனை வரி எதற்கு. வரி முடங்கி மேலும் ஊழல், கருப்பு பணம் தான் பெருகும்.

  ஆகா இலவசங்கள் மற்றும் மானியங்களை அவசியமே. அவை வளர்சிக்கா அல்லது வாக்குக்கா என்பதே கருத்தில் கொள்ள வேண்டியது.

  நன்றி.....!!!!

  ReplyDelete
 34. I saw the following in a blog.I think I agree with this...

  "Charity is injurious unless it helps the recipient to become independent of it." - John D. Rockefeller

  ReplyDelete
 35. very good post.i fully agree with you.but people
  are very much used to it and insist for the same.
  what to do?

  ReplyDelete
 36. //
  ஒரு பாமரன் வாங்கும் தீ பெட்டிக்கு கூட வரி வசூல் செய்யும் அரசு. எந்த வளர்ச்சி நலத்திட்டதிலும் செலவு செய்யவில்லை என்றால் இத்தனை வரி எதற்கு.
  //

  வரிகள் இப்படி பாமரர்களிடமிருந்து சுரண்டப்பட்டு இலவசங்கள் மூலம் திரும்ப அவர்களுக்கே சென்றடைகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா ?

  ஏன் இத்தனை வரி என்ற கேள்வி மிகவும் சரியான கேள்வி.

  ReplyDelete
 37. முக்கியமாக மேற்கு யூரோப்பிய நாடுகள். அங்கெல்லாம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்கள் முற்றிலும் இலவசமே.//////
  முற்றிலும் தவறு, உங்களில் சம்பளத்தில் ஒரு பங்கு மருத்துவ காப்பீட்டிற்காக பிடித்துக கொள்ளப் படுகின்றது. காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிறைய தில்லாலங்கடி விதிகள் எல்லாம் காப்பீட்டில் இருக்கு. நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பது நிரணயிக்கப் பட்டுள்ள மிககுறைந்தப்பட்ச காப்பீடாக இருக்கும்பொழுது, நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், சில நவீன பரிசோதனைகளுக்கு காப்பீடு கிடையாது (ex, NT chromosomal test for feautes, test for toxoplasmosis). தலைக்கவசம் அணியாமல் (special helmet) மிதிவண்டியில் செல்லும் பொழுது விபத்து நடந்தால் காப்பீடு கிடையாது (This is Europe Mr. Watson !) காப்பீடு கொடுக்கும் கம்பெனி அராஜகம் கிளைக் கதை. ஜெர்மனி, UK, பிரான்ஷ், Swiss, செக் குடியரசு, ஸிவீடன் - இப்படித்தான்

  2.பள்ளிக்கல்வி இலவசம், பல்கழைகழங்களில் அல்ல. ஜெர்மனியில், உங்க அப்பாருக்கும் நீங்க 3 புள்ளனா, பல்கழைகழகங்களில் இலவசம்.

  இவ்வாறு, நம்மூரு வேம்பாருக்கு பொருந்தாத விதிகள் மட்டுமே உள்ள Europe -பினை எவ்வகையிலும் பொருத்திபார்க்க முடியாது. பத்ரி, என்ன செய்யவேண்டுமென்று, சொல்லிகிட்டே இருக்கவேண்டியதில்லை அதுதான் ஜனநாயமென்றாலும்.

  ReplyDelete
 38. //
  //என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். //

  அப்படின்னா கடல்ல போய் குதி .
  //

  ஓசியில வாங்கித்திங்கணும்னு நினைக்கிறவனுக்கு ரோசத்தப் பாரு...உனக்கெல்லாம் எதுக்கு ரோசம்...?

  ReplyDelete
 39. =======
  Welcome to the New Ministry: What kind of Government I look forward to:
  1) That it should do Least governance. But must do that bit, very effectively. Concentrate and spend money on Social Infrastructure at all times, whether it rains or sunny:
  2) Good roads, zero traffic jams, safety for pedestrians, enforce compliance on all road rules
  a) Increase A/C buses, with a target to cut private car usage at least by 40%
  b) Increase good coaches (mini or whatever) that ply "point to point", with a target to reduce 40% usage of 2 wheeler/ share autos etc
  c) The targets will demand a good deployment of excellent services from Buses and those who manage
  3) Good Health care: Hospitals run by Govt must be a user-friendly.
  a) Private hospitals must truly see the Govt. Hospitals as their “No. 1” BIG COMPETITOR.
  b) Even those who go to private hospitals should be willing to pay and use Govt. Hospitals
  c) Staff, equipment and administration must be aligned to that single ‘vision’.
  d) Clean water available at all places, always - target: at least 40% cut in water packets/ bubble cans.
  e) Zero adulteration in food and beverages
  4) Ditto with Educational Institutions.

  5) Stop free power supply. If a tiller actually owns the land (no benamis please) and subject to a slab rate system, levy and collect charges for power consumed.
  a) Target 98% ‘uptime’ (only 2% outage = 28.8 Mts powercut only on any given day, that too in exceptional cases)
  b) Target 100% quality power. Means ZERO% voltage fluctuation
  c) Target 40% reduction in use of generators / inverters etc.
  d) No bail, but only JAIL to anyone stealing power.
  e) Applicable, uniformly to household/ commercial organisations
  6) eServices for every Government interface with public. Target: 99.5% uptime.
  7) Transparency, fairness and justice for all in every Government related activity. Target: VISIBILTY.
  8) Treat Film Industry just like any other business in the state. No special concession to them.
  And, I heard our new Chief Minister likes number 9. Therefore, the final item
  9) Give good pay, really good pay to MLAs/ Govt staff / Municipal staff… the whole lot.

  • BUT NIL PERQUISITES, please.
  • Let them know how an ordinary citizen earns, pays taxes and pays for every single facility he desires.

  In addition,
  • Publish their eMail ids and Mobile Numbers.
  • Set a target that every single mail addressed to them is responded fully &properly within 3 days.
  • Set in a procedure to ensure that defaulters are punished.

  ReplyDelete
 40. It is easy to define what a government should do. But, what is required is a list of things Government should not do at any cost.

  ReplyDelete
 41. //....சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்று இந்தப் பதிவில் ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...//

  பத்ரி,

  இந்துத்துவப் பொருளாதாரம் என்பது அமெரிக்கக் கேப்பிட்டலிஸத்திற்கு மாற்றான ஒன்றாக இருப்பதால் அதற்கு ஜெய் போடுகிறேன்.

  இந்துத்துவப் பொருளாதாரம் என்பது தனிநபர் வளத்திற்கு ஆதரவாக இருக்கிறது. அந்த வகையில் அது கேப்பிட்டலிஸம் போலத் தெரியலாம். ஆனால், அந்தத் தனிநபர் வளம் இயற்கையோடு இயைந்த “வளம்குன்றா வளர்ச்சி” என்பதன் அடிப்படையில் இருப்பதால், அது சமூகம் முழுமைக்கும் பயன்படும் வகையில் அமைந்து விடுகிறது.

  மேலும், இந்துத்துவப் பொருளாதாரத்தில் வளமை என்பது அடித்தளத்தில் உருவாக்கப்பட்டு, அடித்தளங்களில் நுகரப்படுவதாக இருக்கிறது. டி-செண்ட்ரலைஸ்ட் எக்கானமி. அது கார்ப்பரேட்டுகளினால் மேலிருந்து கீழே உருவாக்கப்படுவதில்லை.

  நான்கு வர்ணங்கள் என்பவையே கூட தனிநபர் பொருளாதார வளர்ச்சி, மொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட வடிவமைப்பே.

  இங்கே மொத்த சமூகத்திற்கும் தேவையானவை இலவசம். தனிமனிதத் தேவைகள் மட்டுமே விற்கப்படும்.

  எந்த சமூகத்தில் இலவசங்கள் அதிகமோ, அந்த சமூகமே வளமான சமூகம்.

  தனிமனித லாபம் எதிர்பாராமல் செய்யப்படுவதே இலவசம்.

  .

  ReplyDelete
 42. //
  உங்களில் சம்பளத்தில் ஒரு பங்கு மருத்துவ காப்பீட்டிற்காக பிடித்துக கொள்ளப் படுகின்றது. காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  //

  இது உண்மை. கடந்த இரண்டாடுகாலமாக ஐரோப்பாவில் வசிக்கும் எனக்கு சம்பளத்தில் 22% காப்பீடுத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்ட பின்னரே எனக்குக் கிடைக்கிறது. இந்த தண்டக் காப்பீட்டினால் எனக்கு என்ன பிரயோசனம்? எனக்கு நோவு வந்தால் டாக்டர் கட்டணம் இலவசம், மருந்து மாத்திரை என்றால் அதில் 10% முதல் 100% வரை பணத்தை நான் தான் கொடுக்கணும் அது முற்றிலும் இலவசமல்ல. இங்கிருந்து நான் இந்தியாவில் குடிபுகுந்தால் இந்தப்பணம் அவ்வளவு தான். இந்த கட்டாயக் காப்பீட்டினால் பயனைடைவோர் காப்பீட்டு நிறுவன பெருமுதலாழிகள் அல்லது அந்நாட்டு அரசாங்கத் துறை மட்டுமே.

  //
  பள்ளிக்கல்வி இலவசம், பல்கழைகழங்களில் அல்ல. ஜெர்மனியில், உங்க அப்பாருக்கும் நீங்க 3 புள்ளனா, பல்கழைகழகங்களில் இலவசம்.
  //

  உண்மை. பள்ளிக்கல்வி இலவசம் தான். ஒரு கல்விமுறை, ஒரே கல்வி முறை தான் நாடு முழுவதும். நம்மால் குறைந்தது ஒரே மாநிலத்தில் ஒரே கல்வி முறையை அமலாக்க முடியவில்லை...இலவசத்தைப்பற்றி என்ன பேச்சு வேண்டிகெடக்கு?

  அந்த இலவசத்துக்குத் தான் தகுந்தார்ப்போல் சம்பளத்தில் இன்னபிற வரி என்று ஒரு சதவிகிதத்தைப் பிடித்தம் செய்துகொள்கிறார்களே!

  பல்கலைக்கழகங்களில் கல்வி மானியம் கிடையாது. பெருமுதலாளிகள் ஊக்கத்தொகை, உதவித்தொகை வழங்குவார்கள் அதைப்பெற எந்த ரிசர்வேஷமுனில்லாத போட்டி இருக்கிறது. அதைப்பெற்றால் நிம்மதியான படிப்பு, இல்லாட்டி பெட்ரோல் பங், ஸ்டார்பக்ஸ், மக்டொனால்ட்ஸ் என்று வேலை பார்த்துப்படிக்கணும்.

  ReplyDelete
 43. சங்கர், மேலே நான் சொல்லவந்தது, Europe -ல் (பல்கலைகழகக்) கல்வி, மருத்துவம் இலவசம் இல்லையென்றுதான்.

  ReplyDelete
 44. அடிக்கடி தமிழ் நாட்டில் சோசியலிசம் பேசும் சிலர் ஐரோப்பாவை ஒப்பிட்டுப் பேசுகின்றனர். அதற்கு மேற்படி அனானி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். சுவீடன், டென்மார்க், பிரான்சு நாடுகளை தமிழ்நாட்டு/இந்திய இலவசங்கள்/மானியங்களுடன் ஒப்பிடும் அறிவாளிகள் பதில் ஏதும் சொல்ல முடியாமல் "கடலில் போய் குதித்துவிட்டார்கள்" போலும்!! உங்களை கட்டுமரமாக இருந்து கருணாநிதி காப்பாற்றட்டும்.

  ReplyDelete
 45. வஜ்ரா,

  கடலில் குதித்த அனானி யார் என்று தெரியவில்லை ! :)

  தமிழ் நாட்டில் தரப்படும் இலவசங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவை இலவசங்களே இல்லை.

  இலவசங்கள் per se என்று பார்த்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தரப்படும் வகை இலவசங்கள் அவசியமே என்பதுதான் என் வாதம்.

  அரசு தனக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் இருந்துதான் இவற்றைச் செய்ய முடியும். இவற்றைச் செய்வதற்குத்தான் வரிப் பணம்.

  அமெரிக்க வகை கேப்பிட்டலிஸம் நல்லதல்ல. (அத்தகைய கேப்பிட்டலிஸத்தையே பத்ரி ஆதரிக்கிறார்.)

  டேவிட் மூர் எடுத்த ஸிக்கோ எனும் டாக்குமண்டரி பாருங்கள். முடிந்தால் அப்படியே அவருடைய “கேப்பிட்டலிஸம் - எ லவ் ஸ்டோரி”.

  ReplyDelete
 46. There are parents who only send their children to school because it is free and free afternoon meal. I have seen them and studied with them. If you push a cost component on them, I don't know how they react.

  ReplyDelete