Tuesday, April 18, 2006

அரிசி மான்யம் redux

ஜெயலலிதா நேற்று ஆண்டிப்பட்டியில் "Buy 10 kg for Rs. 3.50 per kg, Get 10 kg free" என்று சூப்பர் மார்க்கெட் புரோமோஷனல் விளம்பர பாணியில் தூள் கிளப்பியுள்ளார். அதுவும் 1.88 கோடி ரேஷன் கார்டுகளுக்கும் பொதுவாக. வறுமைக்கோட்டுக்குக் கீழே, மேலே என்றெல்லாம் எந்தப் பிரிவினையும் இல்லை.

ஆக, கருணாநிதி கிலோ அரிசி ரூ. 2க்கு என்றால் அம்மையார் கிலோ அரிசி ரூ. 1.75க்கு என்கிறார். விஜயகாந்தோ "No conditions! 15 கிலோ அரிசி இலவசம்" என்கிறார். ஆனால் ஏழைகளுக்கு என்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழே என்று நாமாக முடிவு செய்துகொள்வோம்.

கருணாநிதியாவது ஏதோ கணக்கு காட்டுகிறார் - செலவு இவ்வளவு, அவ்வளவு ஆகும் என்று. ஜெயலலிதாவுக்கோ விஜயகாந்துக்கோ அந்தக் கவலைகூட இல்லை. சும்மா, வாய் வார்த்தை போதும்.

விஜயகாந்தின் அரிசி வாக்குறுதியை நிறைவேற்ற ஆகும் மான்யச் செலவு (வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் மாதம் 15 கிலோ அரிசி இலவசம்): ரூ. 500 கோடி.
வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு இப்பொழுது இருக்கும் மான்யம் (அதாவது மாதம் 20 கிலோ, ரூ. 3.50 கிலோவுக்கு) தொடருமானால் அதற்காகும் அதிகச் செலவு: ரூ. 1,800 கோடி.
இப்பொழுது பட்ஜெட்டில் ஏற்கெனவே உள்ளது: ரூ. 1,500 கோடி.
மேற்கொண்டு தேவை: ரூ. 800 கோடி

கருணாநிதியின் வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையாகும் பணம்: ரூ. 2,800 கோடி
இப்பொழுது பட்ஜெட்டில் உள்ள ரூ. 1,500 கோடியை விட அதிகம் தேவை: ரூ. 1,300 கோடி

ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையாகும் பணம்: ரூ. 2,900 கோடி
பட்ஜெட்டில் உள்ளதை விட அதிகம் தேவை: ரூ. 1,400 கோடி

9 comments:

  1. இப்படி நீங்கள் விலாவாரியாக புள்ளிவிவரம் தந்து எழுதினாலும் ஜெயலலிதாவைத்தான் ஆதரிக்கின்றனர் பார்ப்பனர்கள். இங்கே உங்கள் ஜோக்கில் பெரிய ஜோக் ஜெயா ஜோக்தான்.

    ReplyDelete
  2. இதை எல்லாம் காதில் கேட்டாவது சந்தோஷ பட்டுப்போம்.

    ReplyDelete
  3. அப்போ அம்மாவுக்கு அய்யா பரவாயில்லன்னு சொல்லுங்க

    ReplyDelete
  4. >> கருணாநிதியாவது ஏதோ கணக்கு காட்டுகிறார் - செலவு இவ்வளவு, அவ்வளவு ஆகும் என்று. >>

    கலைஞர் நேரடி நெல் கொள்முதலை தமிழக அரசே செய்வதைப் பற்றி - தான் ஆட்சிக்கு வந்தால் கொள்கை முடிவு எடுத்து - அதன்படி பொது விநியோக அரிசியின் 'அடக்க விலையை'க் குறைக்க முடியும் - என்று விளக்க்கியதை இங்கு குறிப்பிட விருப்புகிறேன்.

    'ஏதோ கணக்கு' என்று வேறு யாரும் சொல்லியிருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், கூடுதல் மானியம் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களை ஏப்ரல் 5 ஆம் நாளிலேயே - தனது முதல் தேர்தல் பொதுக்கூட்டத்திலேயே (புரசை) - கலைஞர் எடுத்துச் சொல்லிவிட்டார்.

    அதிலெ உள்ள குறைபாடு என்ன - என்பதை விளக்காமல் - வாய்புளிததோ மாங்காய் புளித்ததோ என்று கமெண்ட் விடுகிறார்கள் அம்மாவும், கோபால்சாமியாரும்.

    இதுபற்றிய ப.சிதம்பரத்தின் விளக்கங்கள் விரிவாக தெளிவாக உள்ளன. என் இந்தப் பதிவில் அதைத் தந்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. neo: கலைஞர் நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்வது ஒன்றும் புதிதல்ல. இப்பொழுது தமிழக அரசு முடிந்தவரையில் அதைத்தான் செய்து வருகிறது. ஆனால் நெல்லைக் கொள்முதல் செய்யும்போது அடிமட்ட விலைக்கு விற்க ஏன் தமிழக விவசாயிகள் ஒப்புக்கொள்ளவேண்டும்? வெளி மார்க்கெட்டில் அதைவிட அதிக விலைபோகும்போது கிலோ அரிசி ரூ.5க்கும் கீழே கொடுக்க (அதாவது மத்திய அரசின் விலையைவிடக் குறைவாக) அதனை விற்க சம்மதிக்கும் தமிழக விவசாயி பைத்தியக்காரன் ஆவான்! மத்திய அரசு விலையைவிடக் குறைந்தவிலையில் தமிழக அரசால் அரிசியைக் கொள்முதல் செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் மத்திய அரசே - சிதம்பரம் சொன்னது போல - மான்யம் கொடுத்து விலையைக் குறைத்தே விற்கிறது.

    வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தால் ஒருவேளை விலை குறைய வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் அதைச் செய்ய இந்திய விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். வேண்டுமென்றால் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்.

    கூடுதல் மான்யம் பற்றிய புள்ளிவிவரங்கள் கலைஞர் கொடுத்தது தவறானவை என்று நான் என் முதல் பதிவிலேயே விளக்கியுள்ளேன். ரூ. 540 கோடி அதிகம் தேவை என்று சொல்வது தவறு. அதற்கு மேல் ஆகும். அதை நான் முழுமையாக விளக்கியுள்ளேன்.

    இதனால் நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவில்லை. அவரது கணக்கு முற்றிலும் கோளாரானது.

    சிதம்பரம் எந்த விளக்கத்தையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. வைகோவுக்கு பதில் சவால்தான் விட்டுள்ளார்.

    வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மான்யத்தை நான் எதிர்க்கிறேன். இது தவறான வழிமுறை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அதிக மான்யமும், மேலே உள்ளவர்களுக்கு மான்யம் எதும் இல்லாமலோ அல்லது மிகக் குறைவான மான்யமோ வைத்து விற்பதுதான் சரியான வழி.

    உதாரணம்: வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி கூடப் பரவாயில்லை.(விஜயகாந்த் சொன்னது போல)

    வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு கிலோ அரிசி ரூ. 7 என்று வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ReplyDelete
  6. 1. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 2/- ரூபாயில் (அதாவது மானியத்தில்) அரிசி வழங்குவது தேவையில்லை - என்ற உங்கள் கருத்தில் நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறேன்.

    2. >> நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்வது ஒன்றும் புதிதல்ல. இப்பொழுது தமிழக அரசு முடிந்தவரையில் அதைத்தான் செய்து வருகிறது. >>

    இப்படிச் சொல்கிற நீங்கள் - இதற்கு முந்தைய பதிவில் வறுமைக்கோட்டுக்கு மேலெ உள்ள (1.88 கோடி - 50 லட்சம் = 1.38 கோடி) அட்டைதாரர்களுக்கான அரிசி மான்யத்தக் கணக்கிடுகையில் என்ன விலை போட்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள் - ரூ 9.15/- அதாவ்து மத்திய அரசிடமிருந்தே அந்த நெல்லை முழுவது தமிழகம் வாங்குவதாக assume செய்துள்ளீர்கள்.

    இது ஏன் என்று புரியவில்லை. அதாவ்து எத்தனை கோடி கிலோ அரிசியை தமிழக அரசு "நேரடியாகக் கொள்முதல்" செய்கிறது என்பதற்கு உங்கள் முந்தைய பதிவில் விளக்கமில்லை

    அதனால்தான் உங்கள் கணக்கீட்டில் மானியத் தொகை அத்தனை கூடுதலாக வருகிறது.

    அதாவ்து உங்களின் முந்தைய மானிய மதிப்பீடு - தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதலைக் கணக்கில் கொள்ளவில்லை.

    3. கலைஞர் என்ன சொல்கிறார் - பொது விநியோகத் திட்டத்தில் அரிசி வாங்குவோர் எண்ணிக்கை 1.50 கோடி என்றுதான் சொல்கிறார் - இங்கே

    ஆக ஒரு மாதத்தில் கூடுதலாக மானியச் செலவு :

    + 1.50 கோடி குடும்ப அட்டைதாரர்கள்

    + ஒவ்வொருவருக்கும் மாதம் 20 கிலோ அரிசி.

    + 1.50 * 20 கிலோ = 30 கோடி கிலோ.

    30 கோடி * ரூ 1.50/- = 45 கோடி (இப்போது வேண்டுவத விட கூடுதல் மானியத் தேவை)

    ஆக ஒரு வருடத்துக்கு :

    45 * 15 = 540 கோடி கூடுதல் மானியத் தேவை உள்ளது.

    இதுதான் கலைஞரின் கணக்கு.

    4. அதாவது - இப்போது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும், மேலே உள்ளவர்களுக்கும் - பொதுவான விலையான ரூ 3.50/- இலேயே அரிசி பொது விநியோகத்துறையில் வழங்ககப்படுகிறது; எனவே இப்போது ரூ 2/- க்குப் போட்டால் எல்லோருக்குமே பொதுவாக 1.50 தான் கூடுதல் விலை (1 கிலோவுக்கு) என்பதுதான் நிலையாக இருப்பதாகத் தெரிகிரது.

    இப்போது BPL மற்றும் APL என இரு விதமான விலையிலா அரிசி வழங்கப்படுகிறது? Existing system does not discriminate BPL & APL rice subsidies i suppose.

    எனவேதான் இந்த 2/- விலையில் போடும்போது 540 கோடிதான் கூடுதல் மானியச் செலவு என கலைஞர் சொலுகிறார்.

    ஒருவேளை the actual number of people who 'actually' get rice throu PDS is 1.5 crore ration cards என்பதுதான் புள்ளிவிவரமா? என்று சரியாகத் தெரியவில்லை.

    ஆக Both BPL & APL ration card holders get rice for 3.50 NOW என்பது உண்மையானால், 2/- க்கு அரிசி விலையைக் குறைத்தால் கூடுதல் மானியம் 540 கோடிதானே?

    ReplyDelete
  7. >> மத்திய அரசு விலையைவிடக் குறைந்தவிலையில் தமிழக அரசால் அரிசியைக் கொள்முதல் செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை. >>

    இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. லேசாக விளக்குங்கள். மத்திய அரசு கொள்முதல் செய்து - தன் கிடங்குகளில் வைத்து - அதிலே பல வீணடிப்புகள் நிகழ்ந்து - பிறகு மாநில அரசுகளுக்கு தருவதைக் காட்டிலும் - மாநில அரசே தன்னுடைய பொது விநியோகத்துறை மூலம் இதைச் செய்ய இயலாதா - வேளாண்துறையின் ஒருங்கிணைப்பின் மூலம்?

    Logistics என்கிற விஷயத்துக்கு ஆகிற செலவினமாவது குறையாதா?

    அப்படிச் செய்தால் அதில் என்ன தவறுகள் நிகழக்கூடும்? மேலும் மத்திய அரசின் வேளாண் மற்றும் பொது விநியோகத்துறையின் உதவியினால் - மாநில அரசின் நேரடிக் கொள்முதல் streamline செய்ய உதவி மற்றும் ஆலோசனைகள் தர இயலாதா?

    ReplyDelete
  8. Why should farmers sell at a rate lower than the market rate.Central govt buys through FCI and then distributes it to states.States also buy from farmers.Centre sells
    at a subsidised rate to states for
    distribution through PDS.Now if the state wants to sell at a lower rate whether less than the rate at which centre sold or the rate at which it bought from market it ha to incur additional expenditure.
    Cente will not bear this.But when the difference between open market price and price at which state sells through PDS a portion of the
    rice will end up in open market
    instead of being consumed.More the
    price difference more will be the
    quantum of such diversions. This
    will result in more corruption and
    mismanagement in the PDS.Studies show that PDS suffer from many problems including quality of rice and food grains being sold, and,
    rampant diversion from PDS.These facts are ignored by political parties.

    ReplyDelete
  9. விவசாயிகள் எப்பொழுதுமே தங்களது விளைச்சலுக்கு எவ்வளவு அதிக விலை கிடைக்குமோ அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். பொதுச்சந்தைக்கு விளைச்சலை எடுத்துக்கொண்டு போனால் அவர்களுக்கு அதிக விலை கிடைக்கலாம்; குறைந்த விலையும் கிடைக்கலாம். பல நேரங்களில் நல்ல விலை கிடைப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கவேண்டும். அதிகம் விளைவிக்கும் பெரிய விவசாயிகளுக்கு சந்தையில் எப்பொழுதுமே நல்ல விலை கிடைக்கும். நன்றாக நெட்வொர்க் செய்துள்ள, போக்குவரத்து வசதியுள்ள விவசாயி, யாரிடம் விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதைப் புரிந்து அவர்களிடம் சென்று விற்று வருமானத்தை அதிகமாக்கிக் கொள்வார்.

    ஆனால் சிறு விவசாயிகளால் இதெல்லாம் முடியாது. அவர்கள் ஏமாந்துபோகக்கூடாது என்பதால்தான் அரசுகளே அவர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. அரசின் முதல்நோக்கம் இங்கு விவசாயிகளின் நன்மைதான். இதற்காகத்தான் முக்கியமாக Food Corporation of India உருவாக்கப்பட்டது. இப்படிக் கொள்முதல் செய்த அரிசியையோ, கோதுமையையோ மாநில அரசுகளின் நியாயவிலை விநியோகத்துக்கு FCI விற்கிறது. இதைத்தவிர FCI-ன் மற்றொரு முக்கிய நோக்கம் buffer stocks வைத்துக்கொள்வது. திடீரென்று விளைச்சல் குறைந்தால் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க இது முக்கியம்.

    FCI கொள்முதல் செய்யும் விலையைக் கூட்ட எப்பொழுதுமே விவசாயிகளின் சங்கங்கள் வற்புறுத்திக்கொண்டிருக்கின்றன. அரிசி, கோதுமை, கரும்பு என்று எல்லாவற்றுக்கும் அவ்வப்போது விலை அதிகரிக்கப்பட்டே வந்துள்ளன. வெங்காயம் விலை குறைந்து பொதுச்சந்தையில் அதலபாதாளத்துக்குப் போனதால் சமீபத்தில் சரத் பவார் மீது வெங்காயத் தாக்குதல் செய்தனர் விவசாயிகள்.

    அதனால் மத்திய அரசின் கொள்முதல் விலையைவிடக் குறைத்து வாங்குவது ஒருவகையில் விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் ஆகிவிடும். சில தனியார்கள் அதனைச் செய்யலாம். ஆனால் மாநில அரசு அவ்வாறு செய்தால் விவசாயிகள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    விவசாயிகளுக்கு மான்யம் என்று தனியாக வரியிலிருந்து பெற்றுத்தருவதைவிட, அவர்களுக்கு சரியான (சற்றே அதிகமான) விலையைத் தருவதே சிறந்தது.

    இரண்டாவது - ரவி ஸ்ரீனிவாஸ் சொன்னதுபோல மத்திய அரசோ தனியாரோ அதிக விலை கொடுக்கும்போது ஏன் ஒரு விவசாயி மாநில அரசு தரும் குறைந்த விலையை ஏற்றுக்கொள்ளப்போகிறார்?

    அடுத்து, மாநில அரசால் FCI-ஐ விடச் சிறப்பாக தானியங்களைக் கொள்முதல் செய்து காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் FCI பல வருடங்களாக தனது கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளது. மாநில அரசு இதற்கென தனியாக ஒரு vehicle-ஐ உருவாக்க வேண்டும். இதுவரையில் மாநில அரசு எவ்வாறு இந்தத் துறையில் பணியாற்றியுள்ளது என்பது பற்றி முழு விவரங்கள் என்னிடம் இப்போது இல்லை; ஆனால் சீக்கிரம் கிடைத்துவிடும். அதன்பிறகு அதைப்பற்றி எழுதுகிறேன்.

    அடுத்து, கருணாநிதியின் கணக்கு. மேலோட்டமாகப் பார்க்கும்போது நீங்கள் சொன்ன ரூ. 540 கோடி கணக்கு சரியாகத் தோன்றும். ஆனால் அதில் சில பிரச்னைகள் உள்ளன.

    1. மொத்த ரேஷன் கார்டுகள் 1.88 கோடி. 1.5 கோடி இல்லை. அது கூடப் பரவாயில்லை. சிறு பிழைதான்.
    2. அரிசி விலை குறையும்போது consumption அதிகரிக்கும். இரண்டு காரணங்களுக்காக. சாப்பிடுவதும் அதிகரிக்கும்; ரவி சொல்வதுபோல கள்ளச்சந்தையில் விற்பதும் அதிகரிக்கும். இப்பொழுது வருடத்துக்கு 240 கிலோ அரிசி ஒரு ரேஷன் கார்டுக்கு என்று இருந்தாலும் வாங்குவது 170 கிலோதான் (என்று என் முதல் பதிவிலேயே சொல்லியிருந்தேன்.) ஆனால் விலை குறைவால், 240 கிலோவும் வாங்க நேரிடலாம். கொடுக்க முடியாது என்று ரேஷன் கடையில் சொல்ல முடியாது! எனவே இந்த கார்டுக்கு 70 கிலோ அரிசி அதிகத்துக்கு சேர்த்து இதன்மீதான மான்யத்தையும் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த்தால் தேவை 1,000 கோடிக்கு மேல் என்று என் கணக்கில் குறிப்பிட்டிருந்தேன்.

    நான் மீண்டும் சொலவ்து இதுதான். வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு அரிசி - இலவசமோ, மிகக்குறைந்த விலையிலோ கொடுப்பது என்பது அவரகளது வரிப்பணத்தில் இருந்தே எடுத்து அவர்களுக்கே கருணை காண்பிப்பதுபோல. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. இந்தக் காரணத்தால்தான் மத்திய அரசுமே APL கார்டுகளுக்கு மான்யம் தருவதில்லை. சிதம்பரம் ஏன் அதைச் செய்யவில்லை என்று யோசித்துப் பாருங்கள். இங்கே வந்து கருணாநிதியின் முயற்சிக்கு ஆதரவு தருவதுபோல அவர் நடந்துகொள்கிறார்.

    இன்னொன்று வேண்டுமானால் செய்யலாம். மொத்தம் மூன்று குழுக்களாக ரேஷன் கார்டுகளைப் பிரிக்கலாம்.

    1. வறுமைக்கோட்டுக்குக் கீழே - அதாவது ஆண்டு வருமானம் ரூ. 24,000க்குக் கீழே.
    2. வறுமைக்கோட்டுக்கு மேலே - ஆனால் ஆண்டு வருமானம் ரூ. 60,000க்குக் கீழே.
    3. ஆண்டு வருமானம் ரூ. 60,000க்கும் மேலே.

    இதில் மூன்றாவது கூட்டத்தில் வருபவர்களுக்கு எந்த மான்யமும் தரக்கூடாது. முதல் குழுவில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச மான்யம், இலவசம் எல்லாமே தரலாம். இரண்டாவது குழுவில் உள்ளவர்களுக்கு ஓரளவுக்கு மான்யம் தரலாம்.

    ஏனெனில் ஒவ்வொரு ரூபாய் அரசு வருமானத்துக்கும் ஆயிரம் செலவுகள் உள்ளன. பள்ளிக்கூடம் கட்டலாம், மருத்துவமனைகள் கட்டலாம், சாலைகள் போடலாம்... அதைவிடுத்து மாதம் ரூ. 10,000 சம்பாதிக்கும் வீடுகளுக்கும் அரிசி கிலோ ரூ.2 க்கு (அல்லது ரூ. 1.75க்கு) தருகிறேன் என்றால் முட்டாள்தனமாக உள்ளது.

    ரவி சொல்வதுபோல ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் நிறைய பிரச்னைகள் இருக்கும். பக்கத்து மாநிலங்களுக்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படும். ஏனெனில் அங்கு ரேஷன் அரிசிகூட தமிழக விலையை விட அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம். பொதுமக்களே தமக்கு மாதம் 20 கிலோ வேண்டாம், 10 போதும் என்றாலும்கூட 20ஐ வாங்கி அதை அதிக விலைக்கு விற்கத்தான் முயற்சி செய்வார்கள். இதையெல்லாம் தடுக்காவிட்டால் அரசின் பணம்தான் - நமது பணம்தான் - வீணாகிப் போகும். எனவே மான்யம் பெறுபவர்களின் அளவைக் குறைத்தால்தான் இப்படிப் பணம் வீணாவதை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும்கூட குறைக்கவாவது முடியும்.

    ReplyDelete