Tuesday, August 14, 2007

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு அணுசக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் இணையத்தில் போடப்பட்டுள்ளன. (நல்லதுதான்!) ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அதன்மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் இரண்டும் கேட்கின்றன.

முதலில் இந்த ஒப்பந்தம் பற்றி இரண்டு நாடுகளின் பார்வையிலும் (அந்த நாட்டின் கட்சிகள் பார்வையில் அல்ல) பார்த்துவிடலாம்.

இந்தியாவின் பார்வையில்:

* இந்திய அணுசக்தி ஆராய்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அணுசக்தி வழியாக மின்சாரம் தயாரிப்பில் ஓரளவுக்கு நாம் வெற்றிபெற்றிருந்தாலும் நமது இலக்காக நாம் தீர்மானித்திருந்ததில் குறைவான அளவையே அடைந்திருக்கிறோம். மேற்கொண்டு அந்நியத் தொழில்நுட்பம், உதவி இல்லாமல் முன்னேறுவது எளிதல்ல. வெறும் தேசியவாதம், பழம்பெருமை பேசுவது பயன் தராது.

* இந்தியாவுக்குத் தேவையான அணுசக்தி எரிபொருள் வெளி நாடுகளிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தை வைத்து மின்சாரம் தயாரிப்பது இன்றளவுக்கு நடைமுறைச் சாத்தியத்தில் இல்லை.

* மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போகும். எனவே அணு மின்சாரத்தின் விலை பெட்ரோலிய, நிலக்கரி மின்சாரத்தில் விலையைவிடக் குறைவாக இருக்கக்கூடிய காலம் சீக்கிரமே வரும்.

* கடைசியாக அணுகுண்டுச் சோதனைக்குப் பிறகு அணு ஆயுத நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்து, dual use தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தராமல் வைத்திருந்தனர். அந்த நிலையை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது.

* அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் பிற அணு ஆயுத நாடுகளுடன் அமைதிக்கான அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்துகொள்வது எளிதாக இருக்காது. அதேபோல நம்முடைய சொந்த அணு உலைகளுக்கும் nuclear supplies group (NSG) நாடுகளிடமிருந்து அணு எரிபொருளைப் பெறுவது சாத்தியமில்லை. எனவே அமெரிக்காவுடன் எவ்வளவுதான் பிரச்னைகள் வந்தாலும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம். பிறகு ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் கொஞ்சம் நமக்குச் சாதகமான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம்.

* முடிந்தவரை அணு ஆயுதங்கள், அணுகுண்டுச் சோதனை ஆகியவற்றில் அந்நியத் தலையீடு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவைதான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் பார்வையில்:

* இந்தியா முக்கியமான நாடு, மிக வேகமாக வளரும் நாடு. ஆனால் அதே சமயம் உலகில் அணு ஆயுதப் பரவல் இருக்கக்கூடாது என்று நாம் நினைத்திருந்த நேரத்தில் அணுகுண்டுச் சோதனை செய்து நம்மைக் கேலி செய்தவர்கள். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பவர்கள்.

* இந்தியாவுக்கு நாம் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையும் எரிபொருளையும் கொடுத்தால் அவை எந்த விதத்திலும் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுக்கக் கூடாது. எந்த விதத்திலும் அந்த எரிபொருளைக் கொண்டு இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்கி ஆசியாவைப் பிரச்னையில் ஆழ்த்திவிடக்கூடாது.

* நாம் இவ்வளவு தூரம் இறங்கிவந்து இந்தியாவுடன் உறவுகொண்டாடுகிறோம். ஆனால் இவர்களோ இரான் போன்ற அமெரிக்க எதிர்களுடன் கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். நாம் இந்தியாவுக்கு உதவிசெய்தால் அவர்களும் பதிலுக்கு நம்முடைய அயலுறவுக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும்.

இவைதவிர அமெரிக்காவுக்கே இயல்பான சில அரசியல் அமைப்புச் சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று செனேட்டின் (legislature) அதிகாரம், அதிக அளவுக்கு குடியரசுத் தலைவரை (executive) கட்டுப்படுத்தும். அதனால்தான் அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பதை அறிந்தவுடன் செனேட்டில் கொண்டுவரப்பட்ட ஹைட் சட்டம் (Hyde Act). இந்தச் சட்டம் அமெரிக்க-இந்திய அணுசக்தி உறவு ஏற்பட்டால் எப்படியெல்லாம் அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தப்படும் என்பதை வலியுறுத்துகிறது.

இதைப்போன்ற சட்டதிட்டங்கள் இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திடம் கிடையாது. மத்திய கேபினெட் (executive) முடிவெடுத்தால் போதும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சியையே கவிழ்க்கவேண்டும். அதைச் செய்ய கம்யூனிஸ்டுகள் விரும்ப மாட்டார்கள்.

இப்பொழுது இந்திய அரசியல் கட்சிகள் சார்பிலும் அணு விஞ்ஞானிகள் சார்பிலும் இந்திய தொழில்துறையின் சார்பிலும் இருந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்போம்.

* கம்யூனிஸ்டுகள்: ஒப்பந்தத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார்கள். ஒரே காரணம் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பதால்தான். அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் என்றால் கம்யூனிஸ எதிர்ப்பு, எனவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவேண்டும்.

இந்த ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்குத் தீமை என்று கம்யூனிஸ்டுகளால் சரியாகச் சொல்லவே முடியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கையாளாக மாறிவிடும் என்றே சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அல்லது உள்நாட்டுக் கொள்கையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.

* பாஜக: நாம் ஓர் எதிர்க்கட்சி. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எனவே காங்கிரஸை நன்றாகத் திண்டாட வைப்போம் என்ற ஒரே காரணுத்துக்காக பாஜக இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறது. ஹைட் சட்டம் பெரும் பிரச்னை என்று கிளப்புகிறார்கள். ஆனால் பாஜகவே ஆட்சியில் இருந்தால் இதனைவிடப் பிரமாதமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது.

* சமாஜ்வாதி, ஜெயலலிதா முதலான மூன்றாவது அணியினர்: பெரிய காமெடியன்கள். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். சும்மா, நாமும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சத்தம் போடுகிறார்கள்.

* முன்னர் குற்றம் சொல்லிய அணு விஞ்ஞானிகள் பலரும் இப்போது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

* தொழில்துறை: தனியார் மின்சார நிறுவனங்கள் பலவும் இப்பொழுது அணு மின்சாரம் தயாரிப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் (அல்லது பிரான்சு நிறுவனங்கள்) சிலவற்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவர்கள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள்.

===

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு பல இக்கட்டுகள் உள்ளன. முதலாவது சீனா உள்பட பிற அணு ஆயுத நாடுகளின் ஆசீர்வாதம் இந்தியாவுக்குத் தேவை. பிறகு NSG-யின் ஆதரவு தேவை.

இந்த ஒப்பந்தத்தைத் திறம்படச் செய்து முடித்த மன்மோகன் சிங் பாராட்டுக்குரியவர்.

கம்யூனிஸ்டுகள் சும்மா பயம் காட்டுகிறார்களே தவிர இந்த ஒப்பந்தத்தைத் தடை செய்ய அவர்களால் முடியாது. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கவும்வர்கள் விரும்ப மாட்டார்கள். திடீரென ஒரு தேர்தல் இன்று நடந்தால் அதில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உண்டு.

===

சுட்டிகள்:

1. 123 ஒப்பந்தம்
2. ஹைட் சட்டம்
3. ஹைட் சட்டம் பற்றிய ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை
4. பாஜகவின் எதிர்ப்பு
5. கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு
6. பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் வாசித்தது

7. அணு ஆற்றல் ஒப்பந்தம் தொடர்பான விவாதம்

5 comments:

  1. //பாஜக: நாம் ஓர் எதிர்க்கட்சி. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எனவே காங்கிரஸை நன்றாகத் திண்டாட வைப்போம்... பாஜகவே ஆட்சியில் இருந்தால் இதனைவிடப் பிரமாதமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது./// True

    // சமாஜ்வாதி, ஜெயலலிதா முதலான மூன்றாவது அணியினர்: பெரிய காமெடியன்கள். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். சும்மா, நாமும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சத்தம் போடுகிறார்கள்.// Ha.. ha ..ha Very true

    //இந்த ஒப்பந்தத்தைத் திறம்படச் செய்து முடித்த மன்மோகன் சிங் பாராட்டுக்குரியவர்.// Salute to him

    //திடீரென ஒரு தேர்தல் இன்று நடந்தால் அதில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உண்டு.// doubtful .....

    ReplyDelete

  2. கம்யூனிஸ்டுகள்: ஒப்பந்தத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார்கள். ஒரே காரணம் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பதால்தான். அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் என்றால் கம்யூனிஸ எதிர்ப்பு, எனவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவேண்டும்.

    இந்த ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்குத் தீமை என்று கம்யூனிஸ்டுகளால் சரியாகச் சொல்லவே முடியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கையாளாக மாறிவிடும் என்றே சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அல்லது உள்நாட்டுக் கொள்கையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.


    திரு. பத்திரி அணு சக்தி குறித்த தங்களது பதிவு ஆரம்ப புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும். அதே சமயம் உங்களது அரசியல் பார்வை ஒரு சார்பாக உள்ளதை காண முடிகிறது. குறிப்பாக இடதுசாரிகள் குறித்த நிர்ணயிப்பு.

    கம்யூனிஸ்ட்டுகள் அமெரிக்கா என்பதனாலேயே எதிர்க்கிறோம் என்றால் இது இவ்வளவு பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்திருக்காது. அதை நீங்கள் உட்பட யாரும் கண்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்திய ஒரு ஜனநாயக நாடு என்ற முறையில் எந்த நாட்டுடன் வேண்டுமானாலும் - வர்த்தக மற்றும் கலாச்சார. கல்வி. தொழில்நுட்ப உடன்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் எந்த உடன்பாடாக இருந்தாலும் அது இரு நாடுகளுக்கும் ஒரு சமத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

    அப்படித்தான் இந்த அணு சக்தி விவகாரத்திலும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மூன்று பிரச்சனைகளை முன்வைக்கிறோம்.

    1. அணு சக்தி உடன்பாடு என்பதை தனித்து பார்க்க முடியாது. அது ஏற்கனவே நாம் செய்து கொண்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு - கூட்டு இராணுவ நடவடிக்கை உடன்பாடு ஆகியவற்றோடுதான் இணைத்து பார்க்க வேண்டும்.

    2. 123 உடன்பாடு என்பதும் ஹைடு சட்டம் என்பதும் இந்த உடன்பாட்டில் மிக முக்கியமான அம்சம். அதாவது கட்டுப்பாட்டை அமெரிக்காதான் கையில் வைத்துள்ளது. ஏதாவது ஒரு காரணம் கூறி நம்மை அணு சக்தி விசயத்தில் தனிமைப்படுத்துவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் இந்த சட்டங்களுக்குள் உள்ளடங்கியுள்ளது. இந்த காரணத்தால்தான் இந்த உடன்பாட்i ஆரம்பம் முதற் கொண்டே இடதுசாரிகள் எதிர்த்து வருகிறோம்.

    3. அமெரிக்கா அணுசக்தி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் கடந்த காலத்தில் நம்மை காலை வாரி விட்ட நாடு என்பதையும் நாம் மறக்க கூடாது. தாராப்பூர் அணு உலையை அம்போவென்று தவிக்க விட்ட நாடு அமெரிக்கா. எனவே இன்றைக்கு ஏற்பட்டுள்ள உடன்பாடு என்பது அமெரிக்க நலன்களை மேலும் பலுப்படுத்துவதற்கு பயன்படுமே ஒழிய நம்முடைய ஆதாரங்களை வளப்படுத்த பயன்படாது என்பதுதான் இடதுசாரிகள் கூறும் அடிப்படையான காரணங்கள்.

    இது தவிர. அமெரிக்காவின் அடியாளக நம்மையும் நேச சக்தியாக பயன்படுத்தும். குறிப்பாக ஈராக் - ஆப்கான் - ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிரகாவும் எதிர்காலத்தில் அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களது அடாவடிகளுக்கு நம்மையும் துணைக்கு அழைப்பார்கள். அதற்கு நாம் ஒத்து ஊத வேண்டியிருக்கும்.

    மேலும் இந்தியாவில் உள்ள ஜனநாயக முறைப்படி பார்த்தால் கூட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உடன்பாட்டை முற்றிலுமாக நிராகரிக்ககூடிய நிலையில் இதனை ஏற்பதற்கு என்ன அடிப்படை உள்ளது. இதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

    இறுதியாக உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர் கொள்ளவே அமெரிக்கா நம்மை பயன்படுத்த துடிகிக்கிறது. அது தவிர தங்களுடைய ஆயுத வியாபார வலையில் சிக்க வைக்கவும் - ஆசிய பகுதியை ஒரு அமைதியிழந்த பகுதியாக மாற்றுவதற்கான ஏற்பாடக அமெரிக்கா இதனை பயன்படுத்துகிறது. அணு பூச்சாண்டி காட்டி... மற்ற நாடுகளை இந்த வழியில் செல்லத் தூண்டுகிறது.

    இது தவிர அவர்களோடு நாம் கூட்டு சேருவதால் நம்முடைய சொந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைவுக்கு உள்ளாக நேரிடும். இது நமக்கு நாமோ விதித்துக் கொண்டுள்ள தண்டனையாக முடியும்.

    எனவேதான் இடதுசாரிகள் இதனை அரசியல் - இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக பார்த்தால் கூட இதனை ஏற்க முடியாது என்று உறுதியாக தெரிவித்து வருகிறார்கள்.

    ReplyDelete
  3. இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மூன்று பிரச்சனைகளை முன்வைக்கிறோம்.

    1. அணு சக்தி உடன்பாடு என்பதை தனித்து பார்க்க முடியாது. அது ஏற்கனவே நாம் செய்து கொண்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு - கூட்டு இராணுவ நடவடிக்கை உடன்பாடு ஆகியவற்றோடுதான் இணைத்து பார்க்க வேண்டும்.


    இந்த உடன்பாடு வேறு எதனோடும் இணைந்ததாகத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் இருக்குமானால் அதனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி நாடாளுமன்றத்துக்கு உண்டு. அதற்கும் மேலாக இடதுசாரித் தலைமை நேரடியாகவே மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் பிரணாப் முகர்ஜியையும் பிடித்து வைத்து விசாரிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர்.

    2. 123 உடன்பாடு என்பதும் ஹைடு சட்டம் என்பதும் இந்த உடன்பாட்டில் மிக முக்கியமான அம்சம். அதாவது கட்டுப்பாட்டை அமெரிக்காதான் கையில் வைத்துள்ளது. ஏதாவது ஒரு காரணம் கூறி நம்மை அணு சக்தி விசயத்தில் தனிமைப்படுத்துவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் இந்த சட்டங்களுக்குள் உள்ளடங்கியுள்ளது. இந்த காரணத்தால்தான் இந்த உடன்பாட்i ஆரம்பம் முதற் கொண்டே இடதுசாரிகள் எதிர்த்து வருகிறோம்.

    இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்கா தன் கையில் கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்பது உண்மைதான். ஏனெனில் நாம்தான் கேட்கும் நிலையில் உள்ளோம்; அவர்கள் கொடுக்கும் நிலையில் உள்ளனர். ஒரு காலத்தில் நாம் சாப்பிடும் கோதுமையையே அவர்களிடமிருந்து கெஞ்சி பிச்சையாக வாங்கியிருக்கிறோம். ஆனால் அதே நிலைமை எப்பொழுதும் நீடித்திருப்பதில்லை. அதேபோல இந்த நேரத்தில் நம்மிடம் அணு எரிபொருளும் தேவையான அளவு இல்லை; தொழில்நுட்பமும் பின்னடைந்த நிலையில்தான் உள்ளது என்ற நிலையில் அவர்களிடம் கையேந்துவது தவறில்லை என்றே நினைக்கிறேன்.
    அமெரிக்கா ஒத்துழைக்க வருகிறார்கள் என்றவுடனேயே ஆஸ்திரேலியா நமக்கு யுரேனியம் தர ஒப்புக்கொண்டு வருகிறார்கள் பார்த்தீர்களா? எனவே அமெரிக்க ஒப்பந்தத்தை மட்டும் முடித்தால் போதும். அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்பத்தையும் பெறவேண்டாம்; எரிபொருளையும் பெறவேண்டாம். எரிபொருளை ஆஸ்திரேலியாவிடமிருந்தும் தொழில்நுட்பத்தை ரஷ்யா, பிரான்சிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். இது வெறும் 'டாக்டிகல் மூவ்' என்று வைத்துக்கொள்வோம்.

    ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்றால் ஆஸ்திரேலியாவால் நம்மிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. அமெரிக்கா அதை எப்படியாவது தடுத்துவிடும். இது நன்கு தெரிந்ததே. இதை விட்டுவிட்டு அமெரிக்காவுடன் சண்டை போட்டால், நமக்கு ஏதேனும் நன்மை உண்டா? சீனா நமக்கு அணு எரிபொருளும் தொழில்நுட்பமும் தரத் தயாராக உள்ளதா? இல்லைதானே?

    3. அமெரிக்கா அணுசக்தி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் கடந்த காலத்தில் நம்மை காலை வாரி விட்ட நாடு என்பதையும் நாம் மறக்க கூடாது. தாராப்பூர் அணு உலையை அம்போவென்று தவிக்க விட்ட நாடு அமெரிக்கா. எனவே இன்றைக்கு ஏற்பட்டுள்ள உடன்பாடு என்பது அமெரிக்க நலன்களை மேலும் பலுப்படுத்துவதற்கு பயன்படுமே ஒழிய நம்முடைய ஆதாரங்களை வளப்படுத்த பயன்படாது என்பதுதான் இடதுசாரிகள் கூறும் அடிப்படையான காரணங்கள்.

    அமெரிக்கா மீண்டும் நாளை நம் காலை வாரிவிடலாம்! இதைத் தெரிந்துகொண்டேதான் நாம் அவர்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதில் ராஜதந்திரம் அடங்கியுள்ளது. நாளை யார் அமெரிக்க அதிபராக வரப்போகிறாரோ, அவரது அயலுறவுக் கொள்கை என்னவாக உள்ளதோ அதற்கு ஏற்றாற்போலத்தான் அவர்கள் நடந்துகொள்ளப்போகிறார்கள். அதனால் என்ன? நாம் வலுவடைய வலுவடைய, அவர்கள் நம்மிடம் கேவலமாக நடந்துகொள்ள சற்றே யோசிப்பார்கள்.

    அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்பது அந்த கிளப்புக்குள் நுழைந்து இடம் பிடிப்பதற்குச் சமம். அதன்பின் பிற அணுத்தொழில்நுட்ப நாடுகளுடன் நாம் எவ்வளவு நன்றாக உறவை வைத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.

    இது தவிர. அமெரிக்காவின் அடியாளக நம்மையும் நேச சக்தியாக பயன்படுத்தும். குறிப்பாக ஈராக் - ஆப்கான் - ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிரகாவும் எதிர்காலத்தில் அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களது அடாவடிகளுக்கு நம்மையும் துணைக்கு அழைப்பார்கள். அதற்கு நாம் ஒத்து ஊத வேண்டியிருக்கும்.

    இதை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையே இல்லை. முடியாது என்று நிர்தாட்சண்யமாக நிராகரித்துவிட்டால் போதும். அப்படிச் செய்தால் நான் கொடுத்த அணு எரிபொருளைத் திரும்பத் தா என்று அவர்கள் கேட்க முடியாது. கேட்டாலும் நாம் ஒப்பந்தப் பிரகாரம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிடலாம். மேற்கொண்டு தொழில்நுட்பத்தை அவர்கள் தராமல் இருக்கலாம், அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

    மேலும் இந்தியாவில் உள்ள ஜனநாயக முறைப்படி பார்த்தால் கூட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உடன்பாட்டை முற்றிலுமாக நிராகரிக்ககூடிய நிலையில் இதனை ஏற்பதற்கு என்ன அடிப்படை உள்ளது. இதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெற்றுத்தான் இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லப்படவில்லை. மாற்றவேண்டுமானால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தங்களை உறுப்பினர்கள் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். (இப்பொழுதிருக்கும் நிலைமை சரி, அல்லது தவறு என்று நான் கருத்து சொல்லவில்லை.)

    எனவே இப்போதைக்கு எந்த நாட்டுடனும் எந்த மாதிரியான ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளக்கூடிய அதிகாரம் இந்தியப் பிரதமருக்கும் அவரது கேபினெட்டுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதை மீறி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தவேண்டும் என்றால் உடனடியாக இந்த அர்சைக் கவிழ்ப்பதைத் தவிர வேறு வழி இடதுசாரிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

    இறுதியாக உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர் கொள்ளவே அமெரிக்கா நம்மை பயன்படுத்த துடிகிக்கிறது. அது தவிர தங்களுடைய ஆயுத வியாபார வலையில் சிக்க வைக்கவும் - ஆசிய பகுதியை ஒரு அமைதியிழந்த பகுதியாக மாற்றுவதற்கான ஏற்பாடக அமெரிக்கா இதனை பயன்படுத்துகிறது. அணு பூச்சாண்டி காட்டி... மற்ற நாடுகளை இந்த வழியில் செல்லத் தூண்டுகிறது.

    இருக்கலாம். ஆனால் இந்த ஒப்பந்தம் அணு மின்சாரத்துக்கானது. அணு ஆயுதத்துக்கானதோ அல்லது பிற ஆயுதங்களை விற்பதற்கானதோ அன்று. ஒவ்வொரு நாட்டுக்கும் பல குறிக்கோள்கள் இருக்கலாம். ஆனால் நம் நாட்டின் குறிக்கோள்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நாம் நடக்கிறோமா என்பதை மட்டுமே இங்கு ஆராயவேண்டும்.

    இது தவிர அவர்களோடு நாம் கூட்டு சேருவதால் நம்முடைய சொந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைவுக்கு உள்ளாக நேரிடும். இது நமக்கு நாமோ விதித்துக் கொண்டுள்ள தண்டனையாக முடியும்.

    இது உண்மை கிடையாது. நமது அணு ஆராய்ச்சிகள் தொடரலாம். அதை யாரும் தடுத்து நிறுத்தப் போவதில்லை. எந்த சட்டத்தின்/ஒப்பந்தத்தின் ஷரத்தில் இந்தியா மேற்கொண்டு சில தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது என்று தெரிவியுங்கள்.

    ReplyDelete
  4. அன்புள்ள பத்ரி,

    நல்ல கட்டுரைக்கும் தெளிவான அலசலுக்கும் என் நன்றிகள்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  5. மிகத் தெளிவாக அலசப்பட்டிருக்கிறது. பின்னூட்டத்துக்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தோடு படிக்கையில் முழுமையாக இருக்கிறது. அவரவர் இஷ்டத்துக்கு அரசியலாக்குகிற குழப்பமான விஷயங்களை தொடர்ந்து எண்ணமாக்குங்கள். நன்றி.

    ReplyDelete