Friday, December 21, 2007

தொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்

ஒவ்வோர் ஆண்டும், புத்தகக் கண்காட்சிக்காக, இலக்கிய வரிசையில் பெரும் தொகுப்புகள் ஒன்று அல்லது இரண்டை வெளியிடுவது கிழக்கின் வழக்கம்.

2005 கண்காட்சிக்கு அசோகமித்திரனின் கட்டுரைகளின் முழுத்தொகுப்பாக (ஒன்று | இரண்டு) கெட்டி அட்டை - சுமார் 1900 பக்கங்கள் - புத்தகங்களை வெளியிட்டோம். 2006-ல் ஆதவன், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்புகள். 2007-ல் இரா.முருகன் சிறுகதைத் தொகுப்பு, ஹோமரின் இலியட் என்னும் இதிஹாசத்தின் நாகூர் ரூமியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அந்த வரிசையில் இந்த ஆண்டு, இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டுவருகிறோம்.

ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களின் முழுத்தொகுப்பு. இதில் அவர் எழுதிய 15 நாடகங்கள் உள்ளன: மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால யந்திரங்கள், நந்தன் கதை, கொங்கைத் தீ, ஔரங்கசீப், ராமாநுஜர், இறுதி ஆட்டம், சூறாவளி, பசி, கோயில், தர்மம், நட்டக்கல், புனரபி ஜனனம், புனரபி மரணம், வீடு.

முன்னுரையில் இந்திரா பார்த்தசாரதி சொல்வதிலிருந்து ஒரு சிறு துண்டு இங்கே:
தில்லியில் அப்பொழுது ‘Enact’ என்ற ஒரு பத்திரிகையை ராஜேந்திர பால் என்பவர் நாடகத்துக்கென்றே நடத்தி வந்தார். இவரால்தான், இவர் நடத்தி வந்த பத்திரிகையால்தான், இன்று அகில இந்திய நாடக உலகில் அறியப்படுகின்ற மோஹன் ராகேஷ், விஜய் டெண்டுல்கர், கிரிஷ் கர்னார்ட், பாதல் சர்க்கார் முதலியவர்கள் பிரபலமானார்கள். ‘Enact’ ல், இவர்களுடைய நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிரசுரமாகின. ‘போர்வை போர்த்திய உடல்கள்’ இப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது. மொழி பெயர்த்தவர் என்.எஸ்.ஜகன்னாதன். இதைத் தொடர்ந்து நான் எழுதிய பல நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘Enact’ ல் வெளிவந்தன. இவை ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மொழிபெயர்ப்பாகி மேடை ஏறின. தில்லியிலும், பிற இடங்களிலும், நான் நாவலாசிரியன் என்பதைக் காட்டிலும், நாடக ஆசிரியனாக அறியப்பட்டதற்கு இதுவே காரணம். ‘நந்தன் கதையும்,’ ‘ஔரங்கசீப்’பும் தமிழில் மேடை ஏறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஹிந்தியில் அரங்கமேறின.

நாடகம் எழுதுவதை நான் மிகவும் விரும்புகின்றேன். ஆனால் என் பல நாடகங்கள் தமிழ் நாட்டில், நான் எழுதிய மொழியில், மேடையேறவில்லை என்ற குறை எனக்கு உண்டு.
மற்றொரு கெட்டி அட்டைப் புத்தகம், யுவன் சந்திரசேகரின் 37 சிறுகதைகளின் தொகுப்பு. அவரது முன்னுரையிலிருந்து சிறு பகுதி.
அப்பா, பகல் கனவுன்னா என்னப்பா?

அப்பா சொன்னார்: கனவுன்னா, தூங்கும்போது வரும். பகல் கனவு முழிச்சிண்டிருக்கும்போது வரும்.

வளர்ந்து வரும் பாதையில் நானாகச் சில வித்தியாசங்கள் தெரிந்துகொண்டேன். உளவியலாளர்கள் சொல்லும் கனத்த வித்தியாசம், பகற்கனவு மேல்மன ஆசைகள் உண்டாக்கும் சித்திரம்; கனவு ஆழ்மன விழைவுகளும் நிராசைகளும் உருவாக்குவது.

தவிர, யாருக்கும் தெரியுமே, கனவு தானாக வருவது. பகற்கனவு நாமாக உண்டாக்கிக்கொள்வது.

எனக்கு முக்கியமானதாகப் படும் இன்னொரு விஷயம், பகற்கனவை விட்ட இடத்திலிருந்து தொடர முடியும். கனவை அவ்வாறு தொடர்வதற்கில்லை. குறுக்கீடுகள் எதுவும் பகற் கனவைக் குலைப்பதில்லை.

எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த ஒரு புலமாகத் தோன்றுகிறது. என்ன எழுதவேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடுதான் கருக்கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது.

கடந்த எட்டு வருடங்களில் நான் தொடர்ந்து கண்டுவந்த கனவுகள் மற்றும் பகற்கனவுகளின் ஒரு பகுதிதான் இந்தத் தொகுப்பாக நிகழ்ந்திருக்கிறது.

பெரும்பாலான கதைகள் கிருஷ்ணன் என்ற மையக் கதாபாத்திரத்தின் வழியாகச் சொல்லப்பட்டவை. தன்மை ஒருமையில் கதை சொல்வதன் வசதி கருதி அவ்வாறு எழுதினேன். எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் கதையுடன் ஒருவித உணர்வுநெருக்கம் தன்னியல்பாகவே உருவாவதற்கும் தோதுவாக இருக்கும் என்று. பிழைதிருத்துவதற்காக இவற்றை மொத்தமாகப் படிக்கும்போது, கிருஷ்ணனின் வயது முதல் அவனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவன் எதிர்கொண்ட தருணங்கள், புறச் சூழல் இவற்றில் பலவிதமான தகவல் குளறுபடிகள் இருப்பதைக் கவனிக்க முடிந்தது. எல்லாக் கதைகளையும் கிருஷ்ணன் வழியாகச் சொல்வது ஒரு முன் தீர்மானத்தின்படி நடந்தது அல்ல என்பதாலும், இவை எல்லாமே தனித்தனிக் கதைகள் என்பதாலும் இவ்வாறு நேர்ந்துவிட்டிருக்கிறது.

தவிர, இவை புனைகதைகள்தாம்; என்னுடைய தன் வரலாறோ, கிருஷ்ணன் என்ற அசலான நபரின் வரலாறோ அல்ல என்பதால்,மேற்படி முரண்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
முந்தைய பதிவு: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்

No comments:

Post a Comment